Published:Updated:

விளம்பரம்... பின்னர் சினிமா... ட்ரெண்ட்டை மாற்றும் வெர்ட்டிக்கல் வீடியோக்கள்! #verticalVideos

விளம்பரம்... பின்னர் சினிமா... ட்ரெண்ட்டை மாற்றும் வெர்ட்டிக்கல் வீடியோக்கள்! #verticalVideos
விளம்பரம்... பின்னர் சினிமா... ட்ரெண்ட்டை மாற்றும் வெர்ட்டிக்கல் வீடியோக்கள்! #verticalVideos

(இந்தக் கட்டுரையை டெஸ்க்டாப்பில் படிப்பவர் எனில், சுவாரஸ்யமான அனுபவத்திற்காக ஒருமுறை மொபைலில் படியுங்கள்.)

"How Many languages does priyanka chopra speak?"

இந்தக் கேள்வியை மொபைல் பிரவுசரில் கூகுள் செய்து பாருங்களேன். உங்கள் கேள்விக்கு உடனே பிரியங்கா சோப்ராவே வந்து பதில் சொல்வார். ஆம், அவர் பதில் சொல்லும் வீடியோ ஒன்று கூகுளில் தோன்றும். அதனை க்ளிக்கினால் இதற்கான பதிலைக் கேட்கலாம். 

இந்தக் கேள்வி மட்டுமன்றி பிரியங்கா சோப்ரா தொடர்பான இன்னும் சில கேள்விகளுக்கும் இதேபோல வீடியோ பதில்கள் கிடைக்கும். பிரபலங்கள் தொடர்பாக கூகுளில் அடிக்கப்படும் கேட்கப்படும் கேள்விகளுக்கு இப்படி பதில் சொல்லும் முறையை சமீபத்தில்தான் அறிமுகம் செய்தது கூகுள். இந்த வீடியோவில் இதைத்தாண்டி இன்னொரு சிறப்பம்சமும் இருக்கிறது. இவை அனைத்தும் வெர்ட்டிக்கல் வீடியோக்கள் (Vertical Videos) என்பதுதான் அது. 

சோஷியல் மீடியா தொடங்கி வைத்த புது ட்ரெண்ட்

பத்து ஆண்டுகளுக்குள் முன்பு எந்த இளைஞரிடமாவது 'செல்ஃபி என்றால் என்ன?' என்று கேட்டிருந்தால் நிச்சயம் அவர் பதில் சொல்லியிருக்க மாட்டார். ஆனால், இன்று கதையே வேறு. இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்தியவை மொபைலின் ஃபிரன்ட் கேமராக்கள்.  மொபைலின் ரியர் கேமராவை விடவும் அதிக பிக்ஸல்கள் கொண்ட முன்பக்க கேமராக்கள் பல மொபைல்களில் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இதேபோலத்தான் வெர்ட்டிக்கல் வீடியோக்களும். சமீப காலமாக வைரலாகி வருகின்றன. 

இன்று யூ-டியூபில் ஒரு வீடியோவை நாம் எப்படி பார்க்கிறோம்? வீடியோ ஓடத்தொடங்கியதுமே 'Full screen' ஐகானை தேர்வு செய்து மொபைலை பக்கவாட்டில் திருப்பி கிடைமட்டமாக (Horizontal) வைத்துப் பார்ப்போம். அப்போதுதான் வீடியோ முழுமையாகத் தெரியும். ஃபேஸ்புக்கிலும் இதே நிலைதான். இந்த வீடியோக்கள் அனைத்துமே 16:9 ரேஷியோவில் இருப்பவை. இவற்றை இப்படித்தான் பார்க்க முடியும். ஆனால், வெர்ட்டிக்கல் வீடியோக்களின் கதையே வேறு. இவற்றை நீங்கள் மொபைலை சாய்க்காமல், நேராக வைத்தே பார்க்கமுடியும். உதாரணமாக இந்த வீடியோவைப் பாருங்களேன். 

அனிருத் ஆல்பத்தின் டீசரான இந்த வீடியோதான் இந்தியாவின் முதல் வெர்ட்டிக்கல் வீடியோ

வெர்ட்டிக்கல் வீடியோக்கள் பற்றி இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இவை 9:16 ரேஷியோ கொண்டவை. இந்த வீடியோக்களின் ஸ்பெஷல் என்னவென்றால், மொபைலுக்கு மட்டுமே உரித்தான வகையில், அதற்கேற்ற காட்சியமைப்புகளுடன் உருவாக்கப்படுபவை. முதலில் கேமராக்கள் மூலம் படப்பிடிப்பு நடந்தபோது காட்சிகளை விசாலமாகப் படம்பிடிக்கும் முறை மட்டுமே இருந்தது. மொபைல் கேமராக்கள் வந்தபிறகுதான் வெர்ட்டிக்கல் வீடியோக்கள் எடுக்கப்பட்டன. ஆனால் உடனே பிரபலமாகவில்லை. ஸ்னாப்சாட், பெரிஸ்கோப் போன்ற வீடியோவை மையமாகக் கொண்ட சமூகவலைதளங்கள் ட்ரெண்ட் ஆகியதும்தான் இந்த வெர்ட்டிக்கல் வீடியோக்கள் அதிகம் பேசப்பட்டன.

சொல்லியடித்த ஸ்னாப்சாட்

அதுவும் ஸ்னாப்சாட் இந்த வெர்ட்டிக்கல் வீடியோக்களை விளம்பரப்படுத்த நிறைய முயற்சிகளை எடுத்ததும். "நம்மில் பலரும் வீடியோக்கள் பார்க்கும்போது மொபைலை சாய்த்துப் பார்க்கிறோம். ஆனால் அது தவறான முறை" என இதுகுறித்து வகுப்பெல்லாம் எடுத்தார் ஸ்னாப்சாட்டின் சி.இ.ஓ இவான் ஸ்பீகல். அத்துடன் நிற்காமல் வெர்ட்டிக்கல் வீடியோக்கள் மூலம் விளம்பரங்கள் செய்வதற்காக 2015-ம் ஆண்டு 3V மாடல் என்ற ஒன்றையும் கொண்டுவந்தார். Vertical Video views என்பதைத்தான் அந்நிறுவனம் 3V மாடல் என அந்நிறுவனம் பிரபலப்படுத்தியது. இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. சாதாரணமான வீடியோக்களை விடவும் வெர்ட்டிக்கல் வீடியோக்கள் மூலம் விளம்பரங்கள் செய்தால் அதிக வரவேற்பு இருப்பதாகப் பல விளம்பர நிறுவனங்களும் ஒப்புக்கொண்டன. 

ஆனால், வெர்ட்டிக்கல் வீடியோக்கள் இப்படி பிரபலமாவதற்கு ஸ்னாப்சாட் மட்டுமே காரணமில்லை என்கின்றனர் சில டெக்கீஸ். "மொபைல் பயன்படுத்தும் மக்கள் 94 சதவிகித நேரம் அதனை Horizontal-லாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அதுதான் அவர்களுக்கு வசதியும் கூட. இதற்கு ஏற்றபடித்தான் எல்லா ஆப்களும் இருக்கின்றன. ஆனால் வீடியோக்கள் மட்டும்தான் இதற்கு விதிவிலக்காக இருந்தன. வெர்ட்டிக்கல் வீடியோக்கள் தற்போது இதையும் சரிசெய்துவிடும். பெரும்பாலானோர் தங்கள் மொபைலில் 'ஆட்டோ ரொட்டேட்' வசதியை ஆஃப் செய்து வைத்திருப்பர். எனவே ஒவ்வொருமுறையும் Fullscreen ஆப்ஷனைத் தேர்வு செய்வது கடினமாக இருக்கும். ஆனால், இந்த வெர்ட்டிக்கல் வீடியோக்கள் அப்படியே ப்ளே ஆவதுடன் புது அனுபவத்தையும் தருவதால் அனைவரும் விரும்புகின்றனர்" என்பது அவர்கள் வாதம். இதுவும் ஒருவகையில் சரிதான்.

ஃபேஸ்புக் டு யூ-டியூப் அப்டேட்ஸ்

இந்த வெர்ட்டிக்கல் வீடியோக்கள் விளம்பர உலகில் ஹிட் அடிக்கவே செய்தி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் எனப் பலரும் வெர்ட்டிக்கல் வீடியோக்களை உருவாக்கத்தொடங்கினர். எனவே ஃபேஸ்புக், யூ-டியூப் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே இவற்றை சப்போர்ட் செய்யும் வகையில் தங்கள் ஆப்களை அப்டேட் செய்தன. மேலே பார்த்த அனிருத் வீடியோவை அதனால்தான் உங்களால் யூ-டியூபில் பார்க்கமுடிகிறது. கூகுளில் பிரியங்கா சோப்ரா வந்து பதில் சொன்னதும் இப்படித்தான்.

தற்போது சாதாரணமாகப் படம்பிடிக்கும் வீடியோக்களையே நீங்கள் 'vertical' மோடில் பார்த்தால் நடுவில் குட்டியாக வீடியோ ஓடும். மேலும், கீழும் கறுப்பு நிற காலி இடம் தெரியும். ஆனால், வெர்ட்டிக்கல் வீடியோக்கள் திரையை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. எனவே மொபைல் விளம்பரங்களைத் தெளிவாகவும், முழுமையாகவும் தயாரித்துவிட முடிகிறது.

அடுத்து சினிமா?

வெர்ட்டிக்கல் வீடியோக்கள் சினிமா உலகிலும் அடியெடுத்து வைத்துவிட்டன. கடந்த 2014-ம் ஆண்டு வெர்ட்டிக்கல் முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட தனித் திரைப்பட விழாவையே ஆஸ்திரேலியாவில் நடத்தினார்கள். அது ஓரளவு வெற்றிபெறவே 2016-ம் ஆண்டும் வெர்ட்டிக்கல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் (Vertical Film Festival ) நடைபெற்றது. இதில் பலரின் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அப்படியெனில் விரைவில் முன்னணிப் படங்களும் வெர்ட்டிக்கல் வீடியோக்களாகத் தயாரிக்கப்படுமா?

VFF திரைப்பட விழாவுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு படத்தின் ட்ரெய்லர்

வருங்காலத்தில் தயாரிக்கப்படலாம். ஆனால் சினிமாவில் வெர்ட்டிக்கல் வீடியோக்களுக்கு இருக்கும் சில சவால்களைக் கூறுகிறேன். தற்போதைய சாதாரணமான ஒளிப்பதிவு முறையோ, அந்த நுட்பங்களோ இதற்கு பொருந்தாது. இந்த வீடியோக்களை எடிட் செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகளும் அதிகளவில் இல்லை. அடுத்த சிக்கல் திரை. மொபைலில் வேண்டுமானால் இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறலாம். ஆனால், இந்த வீடியோக்களைத் திரையிட பிரத்யேக திரைகள் வேண்டுமே? அதற்கான கருவிகள் வேண்டுமே? மேலே நான் சொன்ன வெர்ட்டிக்கல் திரைப்பட விழாவிலேயே சாதாரண புரஜெக்டர்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் எப்படி? சாய்த்துவைத்து! இருந்தும், இவ்வளவு சிரமங்களுக்கும் மத்தியில் ஏன் இந்த முறையில் படங்களைத் தயாரிக்க வேண்டும்?

"எது எப்படியாக இருப்பினும் இந்தப் படைப்பாளிகள் அனைவருமே சினிமாவில் முன்னோடிகள்தாம். காரணம், கதைசொல்வதற்கு புதியதொரு வடிவத்தை திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள்" என்கின்றனர் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள். இப்படி சினிமாவில் வெர்ட்டிக்கல் வீடியோக்கள் நுழைய நிறைய தடைகள் இருக்கின்றன. ஆனால், இதுதான் வெப் சீரியல்களின் காலமாச்சே? எனவே, வெர்ட்டிக்கல் வெப் சீரியல் வேண்டுமானால் விரைவில் வரலாம்!
 

அடுத்த கட்டுரைக்கு