Published:Updated:

''சீன சாதனையை முறியடிக்கத்தான் நாட்டு விதைகளை வெச்சு விவசாயம்!" - நடிகர் ஆரி

''சீன சாதனையை முறியடிக்கத்தான் நாட்டு விதைகளை வெச்சு விவசாயம்!" - நடிகர் ஆரி
''சீன சாதனையை முறியடிக்கத்தான் நாட்டு விதைகளை வெச்சு விவசாயம்!" - நடிகர் ஆரி

''சீன சாதனையை முறியடிக்கத்தான் நாட்டு விதைகளை வெச்சு விவசாயம்!" - நடிகர் ஆரி

டிகர் ஆரியின் நெடுஞ்சாலை டு ஜல்லிக்கட்டு பயணம், அடுத்ததாக இவரை கின்னஸ் சாதனை வரை கொண்டு சென்றுள்ளது. 2018-ம் ஆண்டு 'மானே தேனே பேயே' மற்றும் 'நாகேஷ் திரையரங்கம்' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஆரியிடம், சமீபத்தில் அவர் புரிந்த கின்னஸ் சாதனை பற்றிக் கேட்டோம். 

"இப்போதான் சினிமாத் துறைக்கு வந்தமாதிரி இருந்துச்சு. அதுக்குள்ளயும் 10 வருடங்கள் கடந்துருச்சு. இன்னும் கொஞ்சம் வருடம் கழிச்சு சொல்லிக்கிற மாதிரியான சில படங்கள் நான் நடிச்சதா இருக்கணும். நான் சினிமா பின்னணியில இருந்து வந்தவன் இல்ல. எல்லார் மாதிரி நானும் பெரிய பெரிய கனவுகளோடதான் சென்னைக்கு வந்தேன். நான் படிச்ச படிப்புக்குப் பெருசா எந்த வேலையும் கிடைக்காது. பத்தாவது ஃபெயிலான நான், என்னோட ஆர்வத்தை ஃபிட்னஸ் டிரெயினிங்ல காட்ட ஆரம்பிச்சேன். சினிமாவுல முதன்முதல்ல எனக்குக் கிடைச்ச வாய்ப்பு சேரனின் 'ஆட்டோகிராஃப்' படம். அதுல நான் 'பாடி ஸ்கல்ப்டர்' (Body Sculpture) ஆக வேலை பார்த்திருக்கேன். அதாவது, படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகளை அந்தந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி மாத்தணும். அதுக்கப்புறம் தாமிரா இயக்கத்துல நடித்த 'ரெட்டச்சுழி' படம் எனக்கு இன்டஸ்ட்ரியில நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. 

ஜல்லிக்கட்டுக்குப் பிறகு நிறைய சமூக சேவைகள்ல தொடர்ந்து ஈடுபடணும்னு நெனச்சேன். அதோட அடுத்தகட்டம்தான் ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் காய்கறிகளை இலவசமா கொடுக்கணும் என்ற முடிவு. காய்கறிகளை தினமும் விலைக்கு வாங்கிக்கொடுக்குறது முடியாத காரியம். அதனால நானே சில மாணவர்களின் உதவியோட 'வீட்டுத்தோட்டம்' ஆரம்பிக்கலாம்னு யோசிச்சேன். 

சீன அரசாங்கம் கடந்த ஆண்டு, 2017 பேரை வெச்சு ஒரே நேரத்துல வீட்டுத்தோட்டம் அமைத்து கின்னஸ் சாதனை படைச்சாங்க. நாட்டு விதைகளை மறுபடியும் விதைக்கணும், விவசாயிகளுக்கு உதவி பண்ணனும், விவசாயம் சார்ந்து இல்லாதவர்களை விவசாயிகளா மாத்தணும் என்ற எண்ணத்துல 'நானும் விவசாயி'ன்ற முகாமை சில நண்பர்களோட கூட்டு சேர்ந்து ஆரம்பிச்சேன். அதன் துவக்கவிழாவுக்கு கமல் சாரைக் கூப்பிட்டு பெரிய லெவல்ல போஸ்டர்களை வெளியிட்டேன். சத்யபாமா யுனிவர்சிட்டி மாணவர்கள் 3000 பேரை 70 பஸ்ல கூட்டிகிட்டு திண்டிவனம் பக்கத்துல இருக்கிற ஒரு சின்ன கிராமத்துல வீட்டுத்தோட்டம் அமைக்கலாம் என்ற முடிவெடுத்தேன். காலையில இருந்து மாலைவரை உழு நிலத்தைச் சுத்தப்படுத்தி எல்லாரும் சேர்ந்து கன்றுகளை நட்டுவைத்தோம். மாணவர்கள் எல்லாருமே இதுக்குப் பயங்கரமா ஒத்துழைச்சாங்க. இதற்கான உழைப்பு ஐந்து மாதங்களா நடந்துட்டு இருந்துச்சு. சினிமாவுல பத்து வருட உழைப்பை மொத்தமா இந்த ஐந்து மாசத்துல காட்டுன மாதிரி இருந்துச்சு. 

முதல்ல இதை ஈஸியா பண்ணிடலாம்னு நெனச்சேன். ஆனா, நான் பார்த்த நிலத்துல தண்ணி இல்லை. தோட்டம் அமைக்கிற அளவுக்குப் போதுமான நிலமும் கிடைக்கலை. தண்ணி இருக்குற செழிப்பான நிலத்தைக் கண்டுபிடிக்கிறதே எனக்கு மிகப்பெரிய சவாலா இருந்துச்சு. ஒருவழியா நிலத்தைத் தேடிக்கண்டுபிடிச்சு, எல்லா வசதிகளையும் அமைக்கத் தொடங்கியபோது ஊராட்சி ஒன்றியத் தலைவர்கிட்ட அனுமதி வாங்கச் சொல்லியிருந்தாங்க. அது அரசாங்கத்துக்கிட்ட அங்கீகாரம் பெற்று வர்றதுக்கு சில மாத காலங்கள் ஆச்சு. அந்தப் பயிர் வளர்வதைப் படிப்படியாக போட்டோ எடுத்து வேளாண்துறைக்கு அனுப்பணும். அதை அவங்க பரிசோதனை பண்ணி கின்னஸுக்குப் பரிந்துரை செய்வாங்க. 

நிலத்துல வேலை செய்த மாணவர்களைப் பார்த்து எனக்கு ரொம்பப் பரிதாபமா இருந்துச்சு. காலையில இருந்து சாயங்காலம் வரை வெயில்ல நின்னு வேலை பார்த்தாங்க. நிறைய பேர் மயக்கம் போட்டு விழ ஆரம்பிச்சாங்க. 3,000 பேருக்குத் தண்ணி கொண்டுவந்தா, தேவையில்லாம அத்தனை பிளாஸ்டிக் பாட்டில்கள் உருவாகும். அது நிலத்தையும் பாதிக்கும் என்ற நோக்கத்துல லாரியில் தண்ணி சப்பளை பண்ணோம். சாப்பாடும் சிறுதானியங்கள்ல செய்து கொடுத்தோம். டீ, காபி கொடுக்குறதுக்குப் பதில், இளநீர், பானகம் மற்றும் மோர் கொடுத்தோம். மாணவர்களோட சப்போர்ட் இல்லாம காய்கறிகளை உருவாக்கவோ, அதை சப்ளை பண்ணவோ என்னால முடியாது. இதை வருங்காலத்துலேயும் பராமரிக்கணும். அதுதான் எங்களுக்கு இருக்கிற மிகப்பெரிய சவால். 

சமூகவலைத்தளங்கள்ல மூழ்கிக் கிடக்கிற மாணவர் சமுதாயம், இந்த மாதிரி சமூக சேவைகளுக்கு முன்வர மாட்டாங்கனு நெனச்சேன். ஜல்லிக்கட்டுல இருந்து இப்போ வரைக்கும் எந்தப் பிரச்னைனாலும் மாணவர்கள் கைகொடுக்குறது நம்ம மண்ணுக்குக் கிடைத்த பெரும் உறுதுணை. இந்தச் சாதனை அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்று இந்த மாதம் கடைசியில கின்னஸ் சாதனைப் புத்தகத்துல இடம்பெற இருக்கு. இது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலுக்குக் காத்திருங்க" என்று முடித்தார் ஆரி.  

அடுத்த கட்டுரைக்கு