Published:Updated:

முத்துப்பேட்டை - ஏரிக்கு நடுவே காடு... கும்பகோணம் பக்கத்துல ஒரு பிச்சாவரம்! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 11

முத்துப்பேட்டை - ஏரிக்கு நடுவே காடு... கும்பகோணம் பக்கத்துல ஒரு பிச்சாவரம்! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 11
முத்துப்பேட்டை - ஏரிக்கு நடுவே காடு... கும்பகோணம் பக்கத்துல ஒரு பிச்சாவரம்! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 11

சில காம்ப்ளிகேட்டட் ஆன விஷயங்கள் சிக்கலில் மாட்ட வைத்தாலும், இன்ட்ரஸ்டிங்காக இருக்கும். உதாரணத்துக்கு, அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா...? வேலையா, காதலியா...? அதுபோல் இந்த முறை எனக்கு ஒரு சிக்கலான டாஸ்க் இருந்தது. 

‘போட்டிங்கா? ட்ரெக்கிங்கா?’ இரண்டுமே எனக்குப் பிடிக்கும்தான். டாஸ் போட்டுப் பார்த்தேன். ‘போட்டிங்’ என்று வந்தது. ஆனால், இந்த டூர் முடிந்த பிறகுதான் தெரிந்தது - நான் ஒரே நேரத்தில் ரெண்டு லட்டும் தின்றிருக்கிறேன். அதாவது, போட்டிங்கிலேயே ட்ரெக்கிங்கும் செய்துவிட்டு வந்திருக்கிறேன். இதற்கு முத்துப்பேட்டைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சென்னையில் இருப்பவர்களுக்கு போட்டிங்குக்கு வதவதவென ஆப்ஷன்கள் கிடையாது. ‘கழுதை கெட்டால் குட்டிச் சுவர்’ அல்லது ‘சிங்கம் கெட்டால் குகை’ என்பதுபோல், முட்டுக்காட்டுக்கோ, பாண்டிச்சேரிக்கோதான் போக வேண்டும். அதையும் தாண்டி பிச்சாவரம் இருக்கிறது. ஆனால், ஒரு நாள் என்பது ரொம்பவும் டைட் ஷெட்யூல் ஆகிவிடலாம். சென்னைக்காரர்களுக்கு ஓகே! இதுவே கொஞ்சம் தள்ளி தஞ்சை, திருவாரூர் போன்ற தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் ‘பொள்ளாச்சி போயிட்டு ரிட்டர்ன் வரும்போது புளியம்பட்டி’ ஸ்டைலில்தான் பயணிக்க வேண்டும்.

பிச்சாவரம்போலவே கும்பகோணம், பட்டுக்கோட்டை பக்கத்தில் ஓர் அலையாத்திக் காடு இருக்கிறது. பெயர் - முத்துப்பேட்டை. உங்கள் குழந்தைகள் யாராவது, ‘அப்பா, ஷீ ஷோர்ல ஃபிஷ் பார்க்கப் போலாம்ப்பா’ என்றாலோ, ‘போட்டிங் போலாம்’ என்றாலோ இரண்டுக்குமே முத்துப்பேட்டையில் விடை இருக்கிறது. சொல்லப் போனால் இது பிச்சாவரத்தைவிட மிகப் பெரிய லகூன் ஏரி. தமிழில் அலையாத்திக் காடுகள் கொண்ட ஏரி. ‘பிச்சாவரம்தான் எல்லா படங்கள்லேயும் வருதே... கொஞ்சம் யூனிக்கா தெரியணும்’ என்று என்னை மாதிரி ‘பேராண்மை’ படக்குழுவினர் யோசித்திருக்கலாம். அதனால்தான் ‘பேராண்மை’ படத்தின் பாதி ஷெட்யூலை முத்துப்பேட்டை லகூனில் முடித்திருக்கிறார் அந்தப் பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். கூகுளின் அறிக்கையைப் படித்ததும் ரொம்பவும் ஆர்வமாகி விட்டேன்.

இந்த முறை கும்பகோணத்திலிருந்து ஸ்கெட்ச் போட்டேன். ஒரே நாளில் திரும்பி விடலாம் என்றன சில ரிப்போர்ட்கள். புகைப்பட நிபுணரை ஏற்றிக்கொண்டு, டிகிரி காபியோடு என் பயணம் தொடங்கியது. கும்பகோணத்தில் குடிப்பதால் எல்லா காபியும் கும்பகோணம் காபியாகி விடாது என்று நான் உணர்ந்த தருணம் அது. திருநெல்வேலி அல்வா என்று திருவள்ளூரில்கூட விற்கலாம். ஆனால், இருட்டுக்கடை அல்வா திருநெல்வேலியைத் தவிர வேறெங்கும் கிடைக்காது. கும்பகோணத்துக்குப் புதுசாகப் பயணிப்பவர்களுக்காக இதைச் சொல்கிறேன். ஃபில்டர் காபி கடையை ஃபில்டர் செய்தே முடிவெடுங்கள். 

மன்னார்குடியிலிருந்து இரண்டு வழிகள் சொன்னார்கள். பட்டுக்கோட்டை வரை போகாமல், இடதுபுறம் ஒரு சாலை பிரிகிறது. அதுதான் முத்துப்பேட்டைக்கான என்ட்ரன்ஸ். இரண்டரை மணி நேரம்தான் ஆகும் என்று நினைத்தேன். ஆனால், மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. ‘இதுக்குலாம் யார் வரப் போறாங்க’ என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ... செல்லும் வழியில் ஒரு வழிகாட்டிகூட இல்லை. ‘டேக் டைவர்ஷன்’ போட்டு விசாரித்து விசாரித்துத்தான் வந்தோம். 

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது மனிதர்களுக்கு! இடங்களுக்கு அடையாளம் அந்தந்த ஊர் மண்வாசனைதான். கமகமவென மீன் வாசனைதான் முத்துப்பேட்டையின் மண் வாசனை. பஸ் ரூட்டே இல்லாத பக்கா கிராமமும் கிடையாது; ‘எல்லாமே இங்க பார்த்துக்கலாம்’ என்று சொல்லக்கூடிய அளவு பரபரப்பான நகரமும் கிடையாது. நா ஊற வைக்கும் நாலு ஹோட்டல்கள், டீக்கடை பெஞ்ச் தேய்க்கும் பெருசுகள், ஆத்திர அவசரத்துக்குத் தங்க ஒரே ஒரு காட்டேஜ்... இவைதான் முத்துப்பேட்டை.

முக்கியமாக, பரபரவென இயங்கும் மீன் மார்க்கெட்தான் முத்துப்பேட்டையின் அடையாளம். கூடை கூடையாக வெரைட்டியான மீன்களை ஏலம் வாங்கிச் சென்று கொண்டிருந்தனர் வியாபாரிகள். பிடித்து வந்த மீன்களை ஆன்-தி-ஸ்பாட்டில் ஏலத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பரணில் அமர்ந்து ‘தம்’ போட்டுக் கொண்டிருந்தனர் சில ‘மரியான்’ மீனவர்கள். ‘‘நேத்து சாயங்காலம் கடலுக்குள்ள போனோம்; காத்தாலதான் வந்தோம். ராமேஸ்வரம் மீன்பிடிக்காரங்களுக்கு என்னாச்சு?’’ என்றனர் சிலர். ‘‘பட்டுக்கோட்டை, திருவாரூர் பக்கமெல்லாம் மீன் சாப்பிடுறீங்களே... அது நம்ம மீன்தானுங்க’’ என்று நின்று பேசக்கூட நேரம் இல்லாமல் செம பிஸியாக ஏலம் எடுத்துக் கொண்டிருந்தனர் சில வியாபாரிகள். ஒட்டுமொத்த திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு மீன் சப்ளை இங்கிருந்துதான் நடக்கிறது.

மீன் மணத்தோடும், புழுதி வாசனையோடும் மென்மையான அலைகள் தழுவும் ஊராக இருக்கிறது முத்துப்பேட்டை. அதாவது, கடலும் கடல் சார்ந்த இடம் என்று சொல்லலாம். கிழக்கே வங்காள விரிகுடாவையும், தெற்கே காவிரி டெல்டாவையும் ஒட்டி அமைந்திருப்பதுதான் இதன் ஸ்பெஷல். தனியாக இருந்தாலும், முத்துப்பேட்டைக்கு என்று தனித்துவமான ஒரு விஷயம் இருக்கிறது. அது - முத்துப்பேட்டை தர்ஹா. தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்துக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய தர்ஹா இங்குதான் இருக்கிறது. அது தவிர, தமிழ்நாட்டின் மிகப் பெரிய அலையாத்திக் காடுகள் கொண்ட இடம் முத்துப்பேட்டை.

‘‘முத்துப்பேட்டையில் காலை அல்லது மாலை போட்டிங் செய்வதுதான் செம ரம்மியமாக இருக்கும்!’’ என்று ஏற்கெனவே நம்மிடம் சொல்லியிருந்தார் வனச்சரக அதிகாரி. நான் சாயங்காலத்தைத் தேர்ந்தெடுத்திருந்தேன். பிச்சாவரம்போல் அடிபிடிகள் இல்லை. பிரபலமாகாத இடம் என்பதால், என்னைப்போல் ஒன்றிரண்டு பேர்தான் வந்திருந்தனர். ‘‘அதனால் பெரிதாக படகுகள் இங்கே  கிடையாது. தேவையான அளவு மட்டும்தான் ஏற்பாடு செய்வோம்’’ என்றார்கள் அதிகாரிகள். சுற்றுலாவாசிகளுக்கு ஒரு தடவை போட்டிங் சென்று வர 650 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். படகுச் சவாரிக்கு இரண்டு மணி நேரம் ஆகலாம் என்றார்கள். சொல்லி வைத்தாற்போல் இரண்டே இரண்டு படகுகள் மட்டும்தான் அலையாடிக்கொண்டிருந்தன.

தண்ணீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் எல்லாம் எடுத்துவர அறிவுறுத்துகிறார்கள். முத்துப்பேட்டையைப் பற்றித் தெரிந்திருந்த சிலர், சமையல் ஏற்பாடுகளெல்லாம் செய்து போட்டில் ஏறினர். முத்துப்பேட்டை லகூனுக்குப் பக்கத்தில் சமையல் ஆப்ஷனும் உண்டு. மீன், நண்டு போன்றவற்றை வாங்கிக் கொடுத்தால் போதும். சமைத்துத் தர ஆட்கள் இருக்கிறார்கள். 

படகு நகர ஆரம்பித்ததும்தான் தெரிந்தது - முத்துப்பேட்டை லகூனின் ரம்மியமான பேரழகு. குழந்தைகள் சும்மா தூங்கினாலே அழகு; அதிலும் அம்மா மடியில் தூங்கினால் அதைவிடப் பேரழகாக இருக்குமே! சுற்றிலும் தண்ணீர் என்பதே ஒருவிதமான அழகு. அதிலும் அலையாத்திக் காடுகளின் அரவணைப்பில் அலையடிக்கும் ஏரி - செம ரம்மியமாக இருந்தது. ‘‘என்னது, ஜிமிக்கி கம்மல் மலையாளப் பாட்டா? மூணார், கேரளாவிலா இருக்கு?’’ என்று ஆச்சர்யப்படுவதுபோல், 'தமிழ்நாட்டிலா இப்படி ஒரு அலையாத்திக் காடு இருக்கு' என்று ஆச்சர்யப்படத் தோன்றுகிறது. ‘‘உள்ள போவோம்; இன்னும் செம்மையா இருக்கும்’’ என்று ஆசையைத் தூண்டினார் படகோட்டி. குடிகாரனின் பேச்சு வேண்டுமானால் விடிஞ்சா போகலாம் ; படகோட்டிகளின்பேச்சைச் சந்தேகப்படவே வேண்டியதில்லை. அவர் சொன்னது நிஜம்தான். நேரம் செல்லச் செல்ல... ஏதோ ‘அனகோண்டா’ படத்தில் வரும் காடுகள் போல் திகில் கிளப்புகின்றன. தெருக்களில் சந்து சந்தாகப் புகுந்து கிளம்பும் பைக் பார்ட்டிகள்போல், ஏரிக்குள் சந்து சந்தாகப் புகுந்து புறப்பட்டார் படகோட்டி. ஏரிக்குள் சந்தா? ஆம்! காரணம், இந்த லகூனின் அலையாத்திக் காடுகள். நடுநடுவே படகை முட்டிய கிளைகளைப் புறம்தள்ளிப் படகில் பயணிப்பது ஏதோ அட்வென்ச்சர் ட்ரிப் அடிப்பதுபோலவே இருந்தது. நான் ஏற்கெனவே சொன்னதுபோல், போட்டிங் + ட்ரெக்கிங் ஒரே நேரத்தில் என்ஜாய் பண்ணிக் கொண்டிருந்தேன்.

‘ஏதோ மரக்கிளை ஒண்ணு படகில் தட்டுது; எடுத்துவிட்டு பயணம் தொடரலாம்’ எனும்படியான சாதாரண விஷயம் இல்லை இது. இந்த அலையாத்திக் காடுகளுக்கு ஏகப்பட்ட ஸ்பெஷல்கள் உண்டு. லகூன் என்றால், உப்பு நீர் ஏரி என்று அர்த்தம். அதாவது, கடலிலிருந்து பிரிந்து, அதிக ஆழம் இல்லாமல் பரந்து விரிந்திருக்கும் நீர்ப்பரப்புதான் லகூன். முத்துப்பேட்டை லகூனுக்குப் பெருமை சேர்ப்பதே இந்த அலையாத்திக் காடுகள்தாம். ஆறுகள், கடலில் கலக்கும் இடத்தில் சேறு கலந்து சதுப்பு நிலங்களில்தான் இந்த அலையாத்திக் காடுகள் வளர்கின்றன. அலைகளின் சீற்றத்தைத் தடுப்பதால்தான் இதற்கு அலையாத்திக் காடுகள் என்று பெயர். ‘‘நாங்கள்லாம் சுனாமியிலயே ஸ்விம்மிங் போடுறவய்ங்க’ என்பது நடிகர்களைப் பொறுத்தவரை பஞ்ச் டயலாக்தான். ஆனால், அலையாத்திக் காடுகள், சுனாமிக்கே தண்ணி காட்டும் அற்புத சக்தி கொண்டவை. காரணம், வேர்கள் மூலம் சுவாசிக்கும் தன்மையுடைய அவி, சென்னியா, மெனரனா போன்ற தாவரங்கள் இந்தச் சதுப்பு நிலக்காடுகளில் மட்டும்தான் உள்ளன. சொல்லப்போனால், பிச்சாவரம்போலவே இந்த அலையாத்திக் காடுகள்தான் சுனாமியிலிருந்து முத்துப்பேட்டை அழியாமல் இருப்பதற்கும் காரணம். அலையாத்திக் காடுகளுக்கு மனசார சல்யூட் அடிக்கலாம்.

முத்துப்பேட்டை லகூனில்தான் கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு, பாட்டுவனச்சி ஆறு, கிளைதாங்கி போன்ற எக்கச்சக்க ஆறுகள் இந்த லகூனில் கலக்கின்றன. நீர் நிலைகளில் மிகச் சிக்கலான விஷயம் - திசைகளைக் கண்டறிவது. ‘ஆனந்த விகடனில்’ வரும் ‘வேள்பாரி’ படிப்பவர்களுக்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும். அதில் தேவாங்கு என்றால், இந்தப் படகோட்டிகளுக்கு இந்தக் காடுகள்தான் திசையறியும் கருவி. ‘‘மேக்கால இருக்கிறதுதான் சார் வங்காள விரிகுடா!’’ என்றார் படகோட்டி. பார்ப்பவர்களுக்குத்தான் இது ஏரி; நிஜமாகவே இது கடல். அதனால்தான் இங்கு முதலைகள் போன்ற எந்த உயிரினமும் இல்லை.

"எட்டுத் திக்கும் தண்ணீர்; செம ஆழமா இருக்குமே... லைஃப் ஜாக்கெட்லாம் கிடையாதா’’ என்று நான் திகிலுடன் விசாரித்துக் கொண்டிருந்தபோது, தூரத்தில் நான் பார்த்த காட்சி செம பல்பு. ‘இதைத்தான் நைட்ஃபுல்லா ஒட்டிக்கிட்டிருந்தியா’ எனும் ‘தூள்’ பரவை முனியம்மா பாட்டிபோல், அசால்ட்டாக லகூனை டீல் செய்து கொண்டிருந்தனர் சில மீனவர்கள். நெஞ்சளவு தண்ணீரில் இறங்கி மீன் வலை போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். முத்துப்பேட்டை லகூனின் மொத்த ஆழமே கிட்டத்தட்ட 6 அடிதான் என்று அப்போதுதான் சொன்னார் படகோட்டி. ‘அப்போ தைரியமா இறங்கலாமா’ என்றால், அதுவும் ஆபத்து. காரணம், இங்குள்ள மட்டி என்கிற சிப்பி வகை. ‘‘மட்டிச் சிப்பி, காலையே வெட்டிடும் சார். திருப்பாச்சி அருவாளைவிட செம ஷார்ப்பா இருக்கும்’’ என்று திகிலூட்டினார். இதனால்தான் மீனவர்கள் முழங்கால் வரை ஷூ அணிந்து பாதுகாப்பாக லகூனில் இறங்குகின்றனர். நான் தைரியமாக ஓரிடத்தில் இறங்கி மட்டிச் சிப்பியைக் கையிலெடுத்துப் பார்த்தேன். ஷார்ப்தான். ஒரு மீனவரிடம் விசாரித்தேன். ‘‘இங்கிருந்து கடலுக்குப் போறது கஷ்டம்னு நினைக்கிறவங்க இங்கேயே மீன் பிடிச்சுப்போம். இறால், நண்டு, அப்புறம் குட்டிக் குட்டி கோலா மீனுங்கதான் அதிகம் மாட்டும்’’ என்றார் ஒரு மீனவர்.

திடீரென படகு ஓரிடத்தில் நங்கூரமிட்டு நின்றது. ‘துப்பறிவாளன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வந்த இடம்போலவே இருந்தது. மரப் பலகைகளால் கட்டப்பட்ட ஒரு வெட்டவெளித் திண்ணை. இதற்குப் பெயர் ‘சீஃப் கார்னர்’ என்றார்கள். 1900-களின் நெருக்கத்தில் வெள்ளை சீஃப்களின், அதாவது துரைகளின் ரிலாக்ஸ் பாயின்ட்டாக இது இருந்ததாம். டீக்கடை பெஞ்ச் போல, இது ஏரிக்கு நடுவில் ஒரு ரிலாக்ஸ் பாயின்ட். 

ரிலாக்ஸ் பாயின்ட் ஓரமாகவே 500 மீட்டருக்குப் பலகையால் பாலம் கட்டியிருக்கிறார்கள். காட்டுக்கு நடுவே, கடலுக்கு நடுவே, ஏரிக்கு நடுவே... எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதை ட்ரெக்கிங் என்று சொல்லலாம். கடலுக்கு நடுவே ஒரு காடு வந்ததுபோல் இருந்தது. நண்டுகள், பெயர் தெரியாத குட்டிக் குட்டி உயிரினங்கள், மீன்கள், சிப்பிகள் என்று சைட் சீயிங் பிரமாதமாக இருந்தது. திரும்பவும் படகேற மனமில்லை. வேறு வழியில்லை. ஏறினேன்.

செல்லும் வழியில், ‘‘இங்கேதான் ‘பேராண்மை’ ஷூட்டிங் எடுத்தாங்க!’’ என்று ஓரிடத்தைக் காண்பித்தார் படகோட்டி. ‘‘எல்லோரும் மூக்கைப் பிடிச்சுக்கோங்க’’ என்று திடீரென ஒரு கார்னரில், ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் பசங்க கார்னரிங் பண்ணி வளைப்பதுபோல், படகைத் திருப்பினார். எல்லோரும் மூக்கைப் பிடித்துக்கொண்டோம். ‘‘என்ன இது Bad ஸ்மெல்?’’ என்றேன். அப்புறம்தான் தெரிந்தது - அது Bat ஸ்மெல். அதாவது, வௌவால்கள். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கில் வௌவால்கள், விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளங்கள்போல் தலைகீழாகத் தவமிருந்து கொண்டிருந்தன. இந்த இடம் வௌவால்களுக்கான பிரதேசம் என்றார் படகோட்டி. இது மட்டுமில்லாமல் பருந்துகள், நீர்க்காகங்கள், காட்டுப் பூனைகள் என்று எக்கச்சக்க விலங்கினங்கள் உண்டு. 

நவம்பர் முதல் ஜனவரி வரை முத்துப்பேட்டை டூரிஸ்ட்டுக்கு செம சாய்ஸ். காரணம் - சைபீரியா, மத்திய ஆசியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து வரும் பறவைகள் விசா இல்லாமல் முத்துப்பேட்டையில் வந்து ரிலாக்ஸ் செய்கின்றன. ‘‘சில நேரங்கள்ல பறவைகள் சரணாலயத்துக்கு வந்துட்டோமோனு சந்தேகமே வந்துடும்’’ என்றார் படகோட்டி. மொத்தம் 12,000 ஏக்கர், 20 கி.மீ வேகத்தில் படகுப் பயணம். எந்தத் தண்ணீரையும் மிச்சம்வைக்காமல் மொத்த ஏரியையும் சுற்றியாகிவிட்டது. இப்போது படகு விட்டிறங்க மனமே இல்லை. வேறு வழியில்லை; இறங்கினோம். ஆனால் இன்னும் முத்துப்பேட்டை லகூனின் பேரழகு, மனம் விட்டிறங்கவில்லை.

மற்ற பாகங்கள்