Published:Updated:

`உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் உண்ணா நோன்பு!’ - கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்! #LentDays

`உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் உண்ணா நோன்பு!’ -  கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்! #LentDays
`உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் உண்ணா நோன்பு!’ - கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்! #LentDays

கிறிஸ்தவர்களின் தவக்காலம், வருகிற 14-ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. 'சாம்பல் புதன்' அல்லது 'விபூதி புதன்' எனப்படும் நிகழ்வில் தொடங்கி, 40 நாள்களுக்கு மேல் நீடிக்கும் இந்த நாள்களை இறை ஆர்வலர்கள், புனித நாள்களாகக் கருதுகிறார்கள். 
தவக்காலம்... இறைவனை மனிதன் அதிகமாகவும் ஆழமாகவும் தேடும் காலம். இந்த  நாள்களில் மனக்கட்டுப்பாட்டுடன் தவ முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும். அதாவது கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தவும், இறைவனோடு ஒன்றாகத்  தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளவும் இந்த நோன்பு உதவியாக இருக்கும்.


கிறிஸ்தவர்களின் புனித நூலான, 'பைபிள்' எனப்படும் வேதாகமத்தை இந்த நாள்களில் அவசியம் ஒவ்வொரு நாளும் வாசிக்க வேண்டும்.; தவக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வழிபாடுகளில் பங்கேற்கவேண்டும்.

புனித வெள்ளி நாளில் இயேசு கிறிஸ்து பட்ட கஷ்டங்களை பைபிளில் வாசித்துத் தியானிக்க வேண்டும்; வெள்ளிக்கிழமைகளில் 'ஒரு சந்தி' எனப்படும் ஒருவேளை உணவு உண்ணாமல் இருப்பது, 'சிலுவைப் பாதை' எனப்படும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்பது; இறைச்சி உணவுகள் மற்றும் மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீயப் பழக்கங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்காமல் இருக்க வேண்டும். 
தினந்தோறும் ஜெபமாலை சொல்ல வேண்டும். 'இயேசுவே என்மேல் இரக்கமாயிரும், இயேசுவே, நான் பாவி. இயேசுவே, உம் ரத்தம் என்னை கழுவட்டும், உம் பாடுகள் என்னைத் தேற்றட்டும்' என்று சொல்லி ஜெபிக்க வேண்டும்.

உடல்நலம் குன்றியவர்கள், மிகுந்த கஷ்டத்தில் இருப்பவர்கள் இயேசு கிறிஸ்து பட்ட கஷ்டங்களை நினைத்து, ஆறுதலும் நம்பிக்கையும் பெற வேண்டும்.  தாங்கள் செய்த பாவங்களை, இறைவனிடம்  அறிக்கை செய்து மன்னிப்பு கேட்க வேண்டும். கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல், ஆன்மிக வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்காமல், தேவையற்ற புத்தகங்களை வாசிக்காமல் மனதை இறைவன்பால் ஒருநிலைப்படுத்த வேண்டும்.

தங்களுக்குக் கிடைக்கும் அடிப்படைச் சம்பளத்தில், பத்தில் ஒரு பகுதியை இறைப் பணிக்குச் செலவு செய்வது மிகுதியான பலனைத் தரும். தேவையற்ற வீண் ஆடம்பரச் செலவுகளைத்  தவிர்ப்பது, நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்வது, சமாதானமில்லாமல் வாழும் குடும்பத்தினரிடம் சமாதானம் ஏற்படுத்த முயற்சிப்பது போன்றவற்றையும் இந்த தவக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டும். தீய சிந்தனைகளை விட்டொழிக்க வேண்டும். இப்படியாக பல்வேறு நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக, தவக்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது உணவு உண்ணாமல் இருப்பது, இறைச்சி உணவுகளை உண்ணாமல் இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள். 
உண்ணா நோன்பு என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வே. பழைய ஏற்பாட்டில், இறைவன் மோயீசனை நோக்கி, தனக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் இடையே ஏற்படவிருக்கும் உடன்படிக்கை வார்த்தைகளை எழுதி வைத்துக்கொள்ளும்படி பணித்திருக்கிறார். அப்போது மோயீசன், இறைவன் குறிப்பிட்ட இடத்திலேயே 40 நாள்கள் பகலும் இரவுமாக அவருடன் தங்கி எந்த உணவையும் உண்ணாமல் எதையும் அருந்தாமல் இருந்தாராம்.

இயேசு கிறிஸ்து தனது பொதுவாழ்வைத் தொடங்குவதற்கு முன் பாலைவனத்தில் 40 நாள் பகலும் 40 நாள் இரவும் உண்ணா நோன்பு இருந்தார் என்று புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது. 

இயேசு கிறிஸ்து 40 நாள்களின் முடிவில் பசியுற்றிருக்கும்போது சாத்தான் அவரை நெருங்கி, நீர் கடவுளின் மகனாக இருந்தால், 'இந்தக் கற்கள் அப்பமாக மாறும்படி கட்டளையிடும்' என்றானாம். அதற்கு இயேசு கிறிஸ்து மறுமொழியாக, 'மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று; கடவுள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லிலும் உயிர் வாழ்கிறான் என்று எழுதப்பட்டிருக்கிறதே' என்றார்.


தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பதன் காரணம் இதுவே. 'உயிர் வாழ இறைவனின் வாக்கு எவ்வளவு முக்கியம்' என்பதை தங்களுக்குத் தாங்களே நிரூபித்துக்கொள்வதற்காகவே உண்ணா நோன்பு இருப்பது அவசியமாகும். ஆனால், 'நான் நோன்பு இருக்கிறேன் என்று என்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் அர்த்தமில்லை' என்றும் சொல்லப்படுகிறது.

``நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப்போல முகவாட்டமாக இருக்கவேண்டாம். அவர்கள் நோன்பு இருப்பதை மனிதர் பார்க்கும்பொருட்டு தங்கள் முகத்தை விகாரப்படுத்திக் கொள்கின்றனர். நீ நோன்பு இருக்கும்போது தலைக்கு எண்ணெய் தடவு; முகத்தைக் கழுவு. அப்போது நீ நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாமல் மறைவாயுள்ள உன் தந்தைக்கு (இறைவனுக்கு) மட்டும் தெரியும். அவரும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார் (மத்தேயு:6:16)'' என பைபிளில் கூறப்பட்டுள்ளது.

உண்ணா நோன்பு என்பது நம்மை நாமே வருத்திக்கொள்வது என்பது ஒருபுறம் இருந்தாலும், நம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவதாக அமைந்தால் நல்லது.