Published:Updated:

“என் வாழ்வின் மோசமான நாள்கள்!” மேரி க்யூரி பற்றி நமக்குத் தெரியாதவை #WomenInScienceDay #RememberingMarieCurie

“என் வாழ்வின் மோசமான நாள்கள்!” மேரி க்யூரி பற்றி நமக்குத் தெரியாதவை #WomenInScienceDay #RememberingMarieCurie
“என் வாழ்வின் மோசமான நாள்கள்!” மேரி க்யூரி பற்றி நமக்குத் தெரியாதவை #WomenInScienceDay #RememberingMarieCurie

பிப்ரவரி 11, அறிவியல் துறையில் இருக்கும் பெண்களுக்கான நாள். பெண்கள் அறிவியல் துறையில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டதே இந்த நாள். இன்று, நாம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான நபர், மேரி க்யூரி. முதல் நோபல் பரிசு வாங்கிய பெண், முதல்முறையாக இயற்பியல் மற்றும் வேதியியல் என இரண்டு துறைகளில் நோபல் பரிசு வென்றவர். கதிர்வீச்சுத் துறையில் இவருடை பணி மகத்தானது எனச் சிறு வயதில் படித்தவையெல்லாம் அறிவியல் அறிஞர் குறிப்பில் இருப்பவை. அவற்றையெல்லாம் தாண்டி, மேரி க்யூரியைப் பற்றி அறியவேண்டிய விஷயங்கள் எண்ணற்றவை.

1867-ம் ஆண்டு அரசியல் கொதிப்பில் இருந்த போலாந்தில் பிறந்தவர், மரியா ஸ்கௌடவ்ஸ்கி என்கிற மேரி. போலந்து அப்போது ரஷ்ய அரசின் கீழ் இருந்தது. போலந்து பற்றாளரான தந்தையால், ரஷ்ய உயர் அதிகாரிகளிடம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அது நிறையப் பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட்டிருந்தது. ஆனால், மேரியை உருக்குலைத்தது அந்தப் பொருளாதார நெருக்கடிகள் அல்ல; 11 வயதில் தாய் மற்றும் மூத்த சகோதரியின் மறைவுதான். 

15 வயதில் பள்ளிப் படிப்பை கோல்டு மெடலுடன் முடித்திருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் பெண்கள் நேரடியாகக் கல்லூரிகளில் சென்று கல்வி கற்க தடை இருந்தது. எனவே, தன் மற்றொரு சகோதரியுடன் போலந்து இளைஞர்களுக்காக, குறிப்பாகப் பெண்களுக்காகவே தலைமறைவாகச் செயல்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தார்கள். ஒருவருக்கொருவர் கல்விக்கு உதவுவதாக ஒப்பந்தமும் போட்டுக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஒரு வீட்டிலும் நிறுவனத்திலும் டியூஷன் எடுத்தார் மேரி. 

டியூஷன் எடுக்கப்போன இடத்தில் மேரிக்கு காதல் மலர்ந்தது. ஆனால், அவர்களுக்கு இடையில் இருந்த ‘வகுப்பு’ பிரித்தது. இருவரும் மோசமான வலியை அனுபவித்தார்கள். “இவை தான் வாழ்வின் மோசமான நாள்கள்” என்று தான் எழுதிய கடிதங்களில் விவரித்திருந்தார். மேரியின் காதலர் கேசிமிர் சுராவ்ஸ்கி, பின்னாளில் உலகம் அறிந்த கணித அறிஞரானார். பல காலம் வார்சாவில் இருக்கும் மேரி க்யூரியின் சிலையின் அருகே வெறித்தப் பார்வையுடன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.   

பாரிஸில் கணவருடன் வசித்துவந்த சகோதரி எவ்வளவு அழைத்தும் போகாமல், இரண்டு வருடம் வேலை பார்த்து, படிப்பு செலவுக்கான பணத்தைச் சம்பாதித்த பின்னரே, பாரிஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். ஒரு வழியாக 27 வயதில் அறிவியல் அறிஞராக வேலை பார்க்கத் தொடங்கினார். அப்போது, நண்பர் ஒருவரால் அறிமுகமானார், பியேர் க்யூரி. முதலில் ஆராய்ச்சிகூடத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார்கள். ஆரம்பத்தில், பியேரின் காதலை மேரி ஏற்கவில்லை. போலந்துக்கே திரும்பிவிட வேண்டும் என்பதுதான் மேரியின் எண்ணமாக இருந்தது. ஆனால், போலந்துக்குத் திரும்பமுடியவில்லை. ஒருவழியாக 1895-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். தன்னுடைய திருமண உடையையே பல காலமாக ஆராய்ச்சிகூட உடையாக மேரி அணிந்திருந்தர்.

பியேர் க்யூரிக்கும் மேரி க்யூரிக்கும் குழந்தைப் பிறந்தது. இருவரும் கதிர்வீச்சுக் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவந்தார்கள். கதிர்வீச்சு ஆபத்தானது என்பதை அறிந்திராத அந்தக் காலத்தில், இருவரும் எந்த பாதுகாப்பும் இல்லாமலேயே பணியைத் தொடர்ந்தார்கள். அவர்களுடைய கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் வெளியிட்டார்கள். தன் சொந்த நலனையோ, பணத்தையோ முக்கியமானதாகக் கருதவில்லை. 

“கனிமங்களில் மிகக்குறைந்த அளவிலேயே ரேடியம் கிடைப்பதால், அது மிகவும் விலை உயர்ந்தது. அதிலிருந்து தீர்க்கக்கூடிய வியாதிகள் அதிகம் என்பதால், அதனை உருவாக்குவதில் இருக்கும் லாபம் அதிகம். எனவே, எங்களுடைய கண்டுபிடிப்பை வெளியிடுவதன் மூலம், எங்களுக்குப் பிறகு எங்களுடைய குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அளவிலான பணத்தை இழக்கிறோம். இன்னும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவருடைய வாதத்தின்படி, எங்கள் கண்டுபிடிப்புக்கான உரிமையை பெற்றிருந்தால், ரேடியத்துக்கான தனியான நிறுவனத்தை உருவாக்கி நிறைய ஆராய்ச்சி செய்திருக்க முடியும். இப்போது அனுபவிக்கும் பல சிக்கல்களை அனுபவிக்காமல் இருந்திருப்போம். ஆனால், இன்னும் நான் என்ன செய்திருக்கிறேனோ அதனைச் சரி என்று நினைக்கிறேன்” என்று 1921-ம் ஆண்டு குறிப்பிடுகிறார் மேரி க்யூரி. 

மேரி க்யூரியின் பார்வை மிகவும் விசாலமானது என்றாலும், அவர் பெண்ணாகவே பிறந்ததற்காக அனுபவித்த சிக்கல்கள் ஏராளம். சொல்லப்போனால், 1903-ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கொடுப்பதாகவே இல்லையாம். அந்த கமிட்டியில் இருந்த ஒருவர், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். மிகவும் போராடி, மேரி க்யூரிக்கு விருது வாங்கிக்கொடுத்தார். 

மேரி க்யூரியின் கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்ததும், மேரிக்கு பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் அந்தப் பல்கலைக்காகத்தின் முதல் பெண் பேராசிரியர். ஆனாலும், அவர் பிரான்சில் பிறக்காதவர் என்பதால், பாகுபாட்டுக்கு ஆளாக்கப்பட்டார். அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என பிரெஞ்ச் அறிவியல் அகாடமியில் நுழைய அனுமதி இல்லை என எண்ணற்ற புரளிகள். மேரியுடன் வேலைப் பார்க்கும் ஒருவருடன் தொடர்பு இருப்பதாகப் பத்திரிகைகள் எழுதின. மேரி கணவரை இழந்தவர், அந்த ஆண் திருமணமானவர் என்றாலும், மேரி மீதுதான் செய்தித்தாள்கள் சேற்றை வாரி இறைத்தன. சிலர் அவருடைய வீட்டுக்கு வெளியே திரண்டு அவரின் குழந்தைகளை தாக்கும் வரை சென்றனர். அகதியைப்போல நண்பர்கள் வீடுகளில் குடியேறினார் மேரி. அதற்காகக்கூட அசராதவரை அசைத்துப் பார்த்த சம்பவமும் நடந்தது. 

மேரி இரண்டாம் முறையாக நோபல் பரிசு பெறும்போது, பிரச்னை கிளம்ப வாய்ப்பு இருக்கிறது. அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வில், ஏதேனும் காரணம் சொல்லி வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். 

”இந்தப் பாரிசு ரேடியம் மற்றும் பொலொனியமில் என் கண்டுபிடிப்புக்காகக் கொடுக்கப்படுவது. என் சொந்த வாழ்வுக்காக இல்லை. தனிப்பட்ட வாழ்வுச் சார்ந்த ஒன்று இதில் தாக்கத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதில் அளித்தார். 

ஆனாலும், மன அழுத்தத்தினாலும், கிட்னி பிரச்னையாலும் பாதிக்கப்பட்டு பல காலம் வெளி உலகத்தில் தலைகாட்டாமல் இருந்தார். அதன்பின்னும் ரேடியம் நிறுவனம் ஒன்றை உருவாக்குதல், உலகப் போரில் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் இணைந்து ரேடியோலஜி சேவைகளை வழங்குதல் எனத் தொடர்ந்து இயங்கியவர், 1934-ம் ஆண்டில் ஒரு கர்வீச்சு விபத்தில் இறந்துபோனார். 

அவருடைய உடை, புத்தகங்கள், உடைமைகளில் கதிர்வீச்சுத் தன்மை இருக்க வாய்ப்பிருப்பதால், தனியாகவே வைத்துப் பாதுகாக்கப்பட்டன. 1890-ம் ஆண்டில் அவருடைய ஆராய்ச்சிகூடத்தில் இருந்த நோட்டுப் புத்தகங்கள், பேப்பர்கள் எல்லாம் பிரான்ஸ் தேசிய நூலகத்தில் பத்திரமாக பூட்டிவைக்கப்பட்ன. 

மேரி க்யூரி தன் வாழ்வின் பல்வேறு தடைகளைத் தாண்டி வந்த ஃபீனிக்ஸ் பறவை. கதிர்வீச்சுத் துறையில் அவருடைய தன்னலமில்லாத பங்களிப்பு, பல நோய்களுக்கான குறிப்பாக கேன்சருக்கு மருந்தாகி உள்ளது.