பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

உயிர் பிழை - 27

உயிர் பிழை - 27
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் பிழை - 27

மருத்துவர் கு.சிவராமன், படம்: வீ.சக்தி அருணகிரி

ரில், முக்குவீட்டு இட்லிக் கடையை இப்போது காணோம். சின்னதாக பேக்கரி ஒன்று அங்கே முளைத்திருந்தது. விசாரித்ததில், கமலாம்மா இறந்துபோய்விட்டார்களாம். அவள் பையனுக்குக்கூட ஏதோ வியாதி வந்து ஹைகிரவுண்ட் பெரியாஸ்பத்திரியில் இருந்தான் என்ற தகவல் மட்டும் கிடைத்தது. `கடையை விற்று, வியாதிக்கு மருந்து எடுக்கிறான்’ என்றார்கள். கமலாம்மாவின் இட்லிக் கடை நாங்கள் படிக்கும் காலத்தில் அங்கே மிகப்பிரசித்தி. சின்னதாக ஒரு பலகையில் அவள் குத்தவைத்து உட்கார்ந்திருந்து, இடதுகையால் இரும்புக் குழலைப் பிடித்துக்கொண்டு, விறகடுப்பை ஊதிக்கொண்டு சமைக்கும் அழகு தனி அலாதி.

யோசித்து இதை எழுதும்போதே கொஞ்சம் புழுக்கமாகவும் வெப்பமாகவும்தான் இருக்கிறது. எல்லா காலைப் பொழுதிலும் இரவுப் பொழுதிலும் அதே வியர்வையுடனும் அதே புழுக்கத்துடனும் மட்டுமே அவளைப் பார்க்க முடியும். கூடவே, உலகம்மன் கோயில் கச்சேரியின் ஆரம்ப ஆயத்த நிமிஷத்தில், புல்லாங்குழலை இசைக்கலைஞர் ஊதிப்பார்த்து சோதிக்கும்போது எழும்பும் ஒலிபோல, தாள சங்கதி இல்லாமல் காற்றின் இசை ஒன்று காதுக்கு இனிமையாக வரும். அதே இசை, அவள் அடுப்பு ஊதும்போது வரும். அந்த இசையில் சிலாகித்து விறகில் இருந்து ஆடிக்கொண்டே புறப்பட்டுவரும் கரித்தூளோடு தான் அவள் சுவாசம் இருக்கும். ஆடிவந்த அதே கரித்தூள்தான் அவளுக்கு நுரையீரல் புற்றையும் தந்து, சுவாசத்தைப் பறித்துச் சென்றது.

உயிர் பிழை - 27

இந்தக் கரித்தூளோடு சுவாசித்து கமலாம்மா மாதிரி இறந்துபோகும் ஏழைக் குடும்பப் பெண்கள் இன்றைக்கும் இந்தியாவில் கணிசமான பேர். `காற்று மாசுபடுதல்’ என்றால் பலருக்கும் உடனடியாக தன் நீண்ட சிம்னி முக்கில், வானத்தில் கசியவிடும் பணக்காரத் தொழிற்சாலையின் நச்சு ஏப்பம் மட்டுமே நினைவுக்குவருகிறது. கணிசமான பேர் இந்த நச்சை சுவாசிக்காமலேயே, அன்றாடம் தன் பசிக்கும் அடுத்தவர் பசிக்கும் அடுப்பங்கரை விறகு அடுப்பிலும் கரி அடுப்பிலும் வரும் கரிப்புகையில் உயிர் பிழை பெற்று உருக்குலை கின்றனர். சைக்கிளின் பின்னால் விறகு வாங்கிக் கட்டிவந்து, அதை அடுப்படி ஓரத்தில் அடுக்கி வைக்கும்போது கையில் ஏறிய விறகுச் சிராய்ப்பின் வலி அடுப்பின் காதைத் திருகினாலே பற்றிக்கொள்ளும் காஸ் அடுப்புத் தலைமுறையில் பலருக்குத் தெரியாது.  நசுங்கியேனும் நகர்ப் புறத்தில் வாழ்ந்துவிடலாம் எனச் செத்துக் கொண்டிருக்கும் பலரின் மூத்தோரும் இளையோரும் இன்னமும்கூட விறகு அடுப்பின் கரி அடுப்பில் சமைத்து வாழும் `காக்கா முட்டை’கள்தாம்.

இன்னமும் உலகில் 300 கோடி மக்கள் விறகு அடுப்பில்தான் சமைத்துக்கொண்டிருக்கின்றனர். அதில் 43 லட்சம் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் விறகு அடுப்பினால் மட்டுமே மரணத்தைப் பெறுகின்றனராம். அந்தக் கூட்டத்திலும் கணிசமாக 13 லட்சம் மக்கள் (ஏறத்தாழ 30%) இந்தியாவில் கரி அடுப்பு, விறகு அடுப்பில் ஏற்படும் காற்று மாசில் மரணம் அடைகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் நிமோனியா, பெரியவருக்கு எப்போதும் இருமிக்கொண்டே இருக்கவைக்கும், `Chronic Obstructive Pulmonary Disease' எனும் நாள்பட்ட நுரையீரல் நோய், மாரடைப்பு, புற்றுநோய்... என கரி அடுப்பு தரும் நோய்க் கூட்டங்கள்தாம் இந்த மரணங்களுக்கு முகாந்திரம். நகர்ப்புறத்தில் சின்ன மழைக்குத் தும்மும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு `கொஞ்சம் நெபுலைசர் வைக்க வேண்டுமா?’ எனக் கேட்டு குழந்தை மருத்துவரிடம் ஓடும்  நம்மில் பலருக்கு, கரித்தூள் சுவாசத்தால், நுரையீரலின் கணிசமான பகுதியைச் சுருங்கி விரியாமல் நிமோனியா கட்டியாக்கிவிடுவதும், அதோடு மட்டும் அல்லாமல், சிலருக்கு நுரையீரல் புற்றாக்கிவிடுவதும் தெரியாது. கிட்டத்தட்ட 30 சதவிகித நுரையீரல் புற்று, விறகு அடுப்பு ஊதி மட்டுமே வருவதாம்.

வறுமையும் வசதியின்மையும் இருக்கும் கிராமங்களில் இப்படியிருக்க, நகர்ப்புற காற்று மாசு, மெள்ள மெள்ள விரிந்துவரும் பேராபத்து. 2013-ம் ஆண்டில் நடைபெற்ற புகைபிடிக்காத நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் `ஐரோப்பியரை ஒப்பிடும்போது இந்தியருக்கு நுரையீரல் பணி 30 சதவிகிதம் குறைவாகத்தான் இருக்கிறது’ என்கிறார்கள். விறகு அடுப்பு, வாகன இன்ஜின், தொழிற்சாலை அடுப்பு எல்லாம் சேர்ந்து மாசுபடுத்தும் காற்றுதான் இதற்கு மிக முக்கியக் காரணம். 

ஒவ்வொரு நாளும் இந்த விறகு அடுப்பும் சரி, வாகனத் தொழிற்சாலைக் கழிவும் சரி வளிமண்டலத்தில் அனுப்பும் கார்பன்டை ஆக்ஸைடும் கார்பன் மோனாக்ஸைடும் நைட்ரஸ் ஆக்ஸைடும் மீத்தேனும்தான் காற்றை மாசுபடுத்தும் மிக முக்கிய நச்சுவாயுக்கள். விறகு அடுப்பும் வாகனமும் மட்டும் மாசுபடுத்துவது அல்ல. நமது திறமற்ற அனல்மின்சார நிலையங்கள் அரைகுறையாக எரிக்கும் கரியில் இருந்து வரும் நச்சுவாயுக்கள் செய்யும் சேட்டைதான் மிக அதிகம். ஐரோப்பிய அனல்மின் நிலையங்களைக் காட்டிலும் 50-120 சதவிகிதம் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுக்களை நம் நாட்டுக் கம்பெனிகள் வெளியிடுகின்றன.

போதாகுறைக்குப் பெருகிவரும் சாலையின் வாகன நெரிசல் தரும் புகை நேரடி நோய்க் காரணிகள். பெரும்பாலான ஆய்வுகள் சென்னையிலும் டெல்லியிலும் நடத்தப்பட்டு புள்ளிவிவரங்களைக் கொட்ட, நிறையப் பேர் `எங்க ஊர் பரவாயில்லை' என்ற அங்கலாய்ப் புடனேயே ஊர்ப் பெருமிதம் காட்டுவது உண்டு. ஆனால், உண்மை வேறு.  தமிழகப் பெருநகரங் களுக்கு இணையான சாலை நெருக்கடி, கோவையின் ஒப்பனக்கார வீதியாக இருக்கட்டும், நெல்லை டவுன் வாகையடி முக்காக இருக்கட்டும், மதுரை சிம்மக்கல் சாலையாக இருக்கட்டும்... எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது.

வாகன நெரிசல், அலுவலகத்துக்குப் போகத் தாமதப்படுத்துவது  மட்டும் அல்ல, ஆகாயத்துக்குப் போகத் துரிதப்படுத்துகிறது. எப்படி? வாகன நெரிசல், வாகன வேகத்தைக் குறைக்கும். குறைவான வேகத்தில் வாகனம் கூடுதலாக நச்சை உமிழும். அது ஆடி காராக இருந்தாலும் சரி, மீன்பாடி வண்டியாக இருந்தாலும் சரி.

55 கி.மீ வேகத்தில் பயணிக்கும் கார் உமிழும்  நச்சுப் புகையைவிட 20 கிலோமீட்டர் வேகத்தில் போகும் கார் இரண்டு மடங்கு அதிகம் காற்று மாசைக் கொட்டும். இன்னும் `ஆடு மாடு எல்லாம்' நம்மை ஓவர்டேக் செய்துவிட்டுப்போகும் வேகத்தில், நெரிசலினூடே நகரும்போது, (அதாவது 5-20 கிலோமீட்டர் வேகத்தில் போகும்போது), கிட்டத்தட்ட 4-8 மடங்கு காற்று மாசு உமிழப்படுகிறதாம். கூடவே, நியூட்ரலில் நின்று போகும், பழுதே பார்க்காத இன்ஜினை ஏதோ ரேஸுக்குப் போவதுபோல் உறுமிக் கொண்டே இருப்பதும், `20 சதவிகிதம் மண்ணெண்ணெய் ஊத்தினீங்கன்னா சும்மா தடதடனு போகும்' என அறிவுரையின்படி கலப்படம் செய்து ராக்கெட் புறப்படுவதுபோல் வண்டி ஓட்டுவதும் சுவாசக் காற்றை நாசம் செய்யும் உத்திகள். எல்லா விஷங்களும் அதிகம் தாக்குவது, ஏ.சி காருக்குள் எஃப்.எம் கேட்கும் நபரை அல்ல; காதில்  நீலப்பல் (அதுதான் Bluetooth) புண்ணியத்தில் மனைவியிடமோ ஆபீஸரிடமோ திட்டுவாங்கிக்கொண்டே காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிக்குத்தான் அதிக ஆபத்து. ஹெல்மெட், உங்கள் தலைக்கு மட்டும் கவசம் அல்ல; முகம் மறைத்து அணியும் ஹெல்மெட் நுரையீரலுக்கும்கூட கவசம். குறிப்பாக நுரையீரல் புற்றுக்கு.
 
உலகம் முழுக்க எண்ணெய் விலை, நான்கில் ஒரு பங்காகக் குறைந்தாலும், `எங்க லாபம் போயிடக் கூடாதில்ல' என இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையைக் குறைப்பது இல்லை. விளைவு? நாட்டின் பல வறுமை சூழ்ந்த பகுதிகளில் டீசல், பெட்ரோலில் நடக்கும் கலப்படம் எக்கச்சக்கம். இந்தக் கலப்படத்தினால் காற்றில் கசிவனவற்றை `Tailpipe Emissions' என்கிறார்கள். ஹைட்ரோ கார்பன்கள், கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் இவை எல்லாமே, மிக முக்கியப் புற்றுக்காரணிகள். `கொஞ்சம் காசை சேமிக்கலாம்' என நினைத்து கலப்படத் திரவத்தில் பயணிக்கும் பலருக்கு இந்த விவரம் தெரியாது. ஆக்ஸிஜன் என நினைத்து இப்படி கலப்படம் உமிழும் பென்சீனையும் பாலி ஹைட்ரோகார்பனையும் சுவாசித்து சுவாசித்து வாழ்கிறார்கள் இந்த நாட்டு மன்னர்கள்.

`கிட்டத்தட்ட 40 சதவிகிதப் புற்றுநோயைத் தடுக்க முடியும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதுவும் மிகக் குறைவான செலவில்; அதிகம் பிரச்னை இல்லாத பாதையில். இருப்பினும் ஏன் இந்த நோயின் கொட்டம் கூடிக்கொண்டே போகிறது? உற்றுப் பார்த்தால், புற்று நம் எல்லா சொகுசுகளுக்குமே சொந்தக்காரன். வளர்ச்சி என்ற பெயரில் நாம் படைக்கும் சொகுசுகளுக்காகச் சிதைக்கும் சூழலில் இருந்து புறப்படும் விஷம் அது. ஆனால், கூடவே தொடர்ந்து அலட்சியப் படுத்தப்படும் புறக்கணிக்கப்படும் வறுமையும், இன்னும் வறுமையின் கொடுமையில் சிக்கியிருக்கும் விறகு அடுப்பு நெரிசலில் நகரும் வாழ்வு முதலான வாழ்வியலும்கூட, புற்றுக்கான பெருவாரியான காரணம். `இந்த விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை எப்படி மேம்படுத்தப்போகிறீர்கள்?' என்ற யோசனையை இன்னும் இரு மாதங்களுக்கு, பூமி செரிக்கவே முடியாத ஃப்ளெக்ஸ் தோரணங்களுடன், பெரும் வாகன நெரிசலுடன், வரப்போகும் அம்மா, அய்யா, தாத்தா, தளபதி, கேப்டன், கமாண்டோ, காம்ரேட் எனும் பெருங் கூட்டத்திடம் கேட்டே ஆக வேண்டும். கேட்போமா?

உயிர்ப்போம்...

காற்று மாசில் சத்தம் இல்லாமல் தினம் அவதிப்படும் இந்தியர்கள்

1. கோடிகளைக் கொட்டி பணக்காரர்களை உருவாக்கும் சுரங்கத் தொழிலில்தான் இந்தியாவின் பெரும்பான்மை ஏழைத் தொழிலாளிகள் உள்ளனர். சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களில் உள்ள சுரங்கத் தொழிலாளிகள் மக்கள்தொகை, அந்தந்த மாநில மக்கள்தொகையில் 40 சதவிகிதத்துக்கும் அதிகம். அத்தனை பேருக்கும் காசு மட்டும் அல்ல, காற்றும் பிரச்னைதான்.

உயிர் பிழை - 27

2. நம் ஊர் செங்கல்சூளைத் தொழிலாளர்கள் வருடத்துக்கு 20,000 கோடி செங்கற்களைக் கட்டுகிறார்கள் (உலகில் இரண்டாவது இடம்). குறைந்த கூலியில் அதிகக் காற்று மாசுவையும் புழுதியையும் அதிவெப்பத்தையும் பெறும் இவர்களின் நுரையீரலின் அதிக பாதிப்புகள் கணக்கிடப்பட்டது இல்லை. பல மில்லியன் வருடம் பூமி சேமித்த மேல் களிமண்ணைப் பயனாக்கி உருவாக்கும் செங்கல், சூழலை மட்டும் கெடுப்பது இல்லை... செங்கல்சூளைத் தொழிலாளியின் வாழ்வையும் கேடாக்குகிறது.

** இருசக்கர வாகன ஓட்டிகள் முன்பக்கக் கண்ணாடி மறைப்புடன்கூடிய தலைக்கவசம் அணிவது நுரையீரலுக்கும் சேர்த்து பாதுகாப்பு.

** துணி மாஸ்க் அணிவதாக இருந்தால் அன்றாடம் மாற்ற வேண்டும்.

** கடல் கொள்ளைக்காரர் மாதிரி துப்பட்டாவை / கர்சீஃப்பைக் கட்டுவதில் நுரையீரலுக்குப் போதிய காற்று கிடைக்காத சங்கடம் இருக்கும். அது அவசியமற்ற சோர்வைத் தரும். கூடவே, துப்பட்டாவில் படியும் மிக நுண்ணிய கார்பன் துகள்கள், அதே துணியை ஆபீஸ் போய் பயன்படுத்தும்போது, மீண்டும் ஒரே மூச்சில் உள்ளே செல்லும் வாய்ப்பு உண்டு.

உயிர் பிழை - 27

** குழந்தையை வண்டி பெட்ரோல் டேங்க் மீது வைத்து பயணிப்பது, காற்று மாசுக்களை குழந்தை வேகமாக முகர வழிவகுக்கும்.

** காற்று மாசில் நேரடியாக புற்றுக்காரணியாவது ஆஸ்பெஸ்டாஸ். பல நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸுக்குத் தடை உள்ளது. மொட்டைமாடியில் கார்பரேஷனுக்குத் தெரியாமல் ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை போட்டு அதை வாடகைக்கு விடுவதும், அதில் வாடகைக்குப் போவதும் நேரடிப் பிரச்னைக்கு வழிவகுக்கும்!