Published:Updated:

இந்திய வானம் - 26

இந்திய வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய வானம்

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியம்: ரமேஷ் ஆச்சார்யா

த்தியப்பிரதேசத்தில் உள்ள பழைமையான நகரம் விதிஷா. அங்கே ஒரு வெள்ளைக்காரர், மண்பாண்டங்கள் விற்றுக்கொண்டிருப்பதைக் கண்டேன். ஆச்சர்யமாக இருந்தது.

உள்ளுர் ஆட்களுடன் ஒருவராக உட்கார்ந்து, தான் செய்த மண்குவளைகள், பானைகளை விற்றுக்கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, தனது பெயர் அட்ரியன் என்றும், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹங்கேரியில் இருந்து இந்தியாவுக்கு ஒரு பயணியாக வந்ததாகவும், இங்கே குயவர்களின் கலைத்திறனைக் கண்டு வியந்து, தானும் பானை செய்யக் கற்றுக்கொண்டு, இந்த எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துவருவதாகவும் சொன்னார்.

இப்படி இந்தியர் எவரும் ஏதாவது நாட்டுக்குப் பயணம் போய், அங்கே பானை செய்ய கற்றுக்கொண்டு தங்கிவிடுவார்களா என்ன? இந்த மனது எப்படி வருகிறது என யோசனையாக இருந்தது.

அட்ரியன் செய்த மண்குவளைகளில் ஒன்றை வாங்கினேன். விலை 10 ரூபாய். ஒரு நாளில் அதிகபட்சம் அவர் 200 ரூபாய் சம்பாதிக்கக்கூடும். `இந்தச் சம்பாத்தியம் போதுமா?' எனக் கேட்டேன்.

இந்திய வானம் - 26

`இப்படி வாழ்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கிடைக்கும் பணம் போதுமானது' என்றார் பணமும் பொருளும் ஆடம்பரமான வாழ்க்கையும்தான் மகிழ்ச்சியின் அடையாளங்கள் எனப் பலரும் நினைக்கும் இன்றையச் சூழலில், அதை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு, இப்படி எளிய வாழ்க்கையை மேற்கொண்டு, அதில் முழுமையான சந்தோஷத்தை அனுபவித்துவருவது சிறப்பானதாகத் தோன்றியது.

அட்ரியனைப் போல எத்தனையோ பேர் `வாழ்வில் எது சந்தோஷம்?' என்பதைத் தாங்களே கண்டுபிடித்திருக்கிறார்கள்; அதை ஏற்றுக்கொண்டு நிறைவான வாழ்க்கையும் வாழ்கிறார்கள். ஆனால், கை நிறைய சம்பாதித்தும் வாழ்வில் சந்தோஷமே இல்லை என்பதற்காக குடி, ஆட்டம், பாட்டம் என தன்னைக் கரைத்துக்கொண்டு, அதில் தற்காலிக மகிழ்ச்சி மட்டுமே கிடைக்கிறது எனப் புலம்பும் பலரும் நம்மோடுதான் இருக்கிறார்கள்.

வசதியான வீடு, புதிய கார், கை நிறைய பணம், உயர்ந்த பதவி, விருப்பமான உணவுகள், ஆடம்பர வாழ்க்கை இவைதான் சந்தோஷத்தின் அடையாளங்களாக முன்வைக்கப்படுகின்றன. இவை, விலை கொடுத்துப் பெறும் சந்தோஷங்கள். ஆனால், வாழ்வில் விலையில்லாத சந்தோஷங்கள் நிறைய இருக்கின்றன. சூரியனும் நிலவும் மலைச்சிகரங்களும் புல்வெளிகளும் அருவிகளும் ஆறுகளும் கடலும் வானும் ஒளிரும் நட்சத்திரங்களும் பறவைக் கூட்டங்களும் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருகின்றன. இவை விலையில்லாத சந்தோஷங்கள். இதன் அருமையை நாம் முழுமையாக உணர்வதே இல்லை.

`மங்கோலிய அரசன் ஒருவன் படையெடுத்துப் போனபோது, ஓர் இடத்தில் பறவை ஒன்றின் இனிமையான பாடலைக் கேட்டான். அந்தப் பாடல் அளித்த சந்தோஷத்தில் தனக்கு அந்தப் பாடல் வேண்டும் என்பதற்காக பறவையைப் பிடித்துவரும்படி கட்டளையிட்டான். அந்தப் பறவை ஒரு மரத்தில் இருந்த காரணத்தால், அந்த மரத்தைக் கைப்பற்ற ஆணை பிறப்பித்தான். பறவை அங்கு இருந்து பறக்கவே, அதைப் பிடிப்பதற்காக இடையில் உள்ள ஊர்களைக் கைப்பற்றினான்.

அப்படியும் பறவை அவனைவிட்டுத் தப்பிப் பறந்துபோனது. அதைப் பிடிப்பதற்காக அது பறந்த ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையும் அவன் கைப்பற்றினான். அப்போதும் அந்தப் பறவை அவன் கைவசப்படவில்லை. ஆனால், ஒரு நாடு அவன் வசமானது. அதை, தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டான். பறவையைத் தேடிச் சென்ற அவன், கடைசி வரை தன் வீடு திரும்பவே இல்லை' என ஏ.கே.ராமானுஜன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

பறவையின் பாடலைத் தேடிச் செல்லும் ஒருவன், அதை அடைவதற்காக எவ்வளவு அழிவுகளை உண்டுபண்ணுகிறான் என்பது நம் வாழ்வின் குறியீடாகவே உள்ளது. நமது சந்தோஷத்துக்காக யார் யாரோ கஷ்டப் படுகிறார்கள்; இம்சிக்கப்படுகிறார்கள். அதை நாம் கண்டுகொள்வதே இல்லை.

பிரான்சுவா லெலார்டு என்கிற பிரெஞ்சு உளவியல் அறிஞர், `மகிழ்ச்சி என்றால் என்ன?’ எனத் தேடிச்செல்லும் ஒருவரைப் பற்றி நாவல் எழுதியிருக்கிறார். 20 லட்சம் பிரதிகள் விற்று சாதனைபுரிந்த அந்த நாவலின் பெயர் `ஹெக்டர் அண்ட் தி செர்ச் ஃபார் ஹேப்பினெஸ்'. இந்த நாவல், திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது.

ஹெக்டர் என்கிற ஓர் உளவியல் மருத்துவருக்கு, ஒருநாள் `உண்மையான மகிழ்ச்சி என்பது எது... அதை எப்படி அறிந்துகொள்வது?' என்ற சந்தேகம் உருவாகிறது. மகிழ்ச்சியைத் தேடி பயணிக்கத் தொடங்குகிறார். அதை, தான் கண்டறிந்துவிட்டால் தன்னிடம் மனநல சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அதைக்கொண்டு உதவிசெய்ய முடியும் என நினைக்கிறார்.

தனது காதலி கிளாராவையும் தன்னோடு அழைத்துப்போக ஆசைப்படுகிறார். அவள் அலுவலக நெருக்கடி காரணமாக உடன் வர மறுக்கிறாள். ஹெக்டர் தனியே கிளம்புகிறார்.

அவரது பயணத்தின் முதல் புள்ளி, சீனா. இதற்காக விமானப் பயணம் மேற்கொள்ளும்போது அதிர்ஷ்டவசமாக அவருக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில் பயணம்செய்ய வாய்ப்பு கிடைக் கிறது. சொகுசான இருக்கை, சுவையான ஷாம்பெயின், விதவிதமான உணவு வகைகள் என பயணத்தில் சகல வசதிகளையும் அனுபவிக்கும் ஹெக்டருக்கு `மகிழ்ச்சி என்பது, எதிர்பாராமல் கிடைக்கும் ஒன்று' என்ற எண்ணம் உருவாகிறது. அதை, தனது குறிப்பேட்டில் குறித்துக்கொள்கிறார்.

சீனாவுக்குச் சென்ற அவர், தன் நண்பனுடன் சிறந்த உணவகம் சென்று விலை உயர்ந்த உணவை ரசித்துச் சாப்பிடுகிறார். அப்போது `அதிகமான பணமும் வசதியும் கிடைப்பதுதான் மகிழ்ச்சி' என்ற ஓர் எண்ணம் உருவாகிறது. அதையும் குறித்துக்கொள்கிறார்.

சீனாவில் இருந்த நாட்களில் ஒரு பெண்ணுடன் பழகுகிறார். அப்போது `ஒரே நேரத்தில் நிறையப் பெண்களுடன் பழகுவதுதான் மகிழ்ச்சி' என்ற நினைப்பு உருவாகிறது. சில நாட்களுக்குப் பிறகு, அவளின் கடந்த காலத்தைத் தெரிந்துகொள்ளும்போது மனவருத்தம் அடைகிறார். அப்போது `ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே சந்தோஷம்' என அவருக்குத் தோன்றுகிறது. அதையும் தனது குறிப்பேட்டில் எழுதிக்கொள்கிறார்.

திபெத்திய மடாலயம் ஒன்றுக்குச் செல்கிறார் ஹெக்டர். அங்கே துறவிகள் அமைதியாக, எளிமையாக, சந்தோஷமாக வாழ்வதைக் காண்கிறார். `எது எப்படி மகிழ்ச்சியை உருவாக்குகிறது?' என ஆராயும்போது, அந்தத் தருணங்களில் அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள் என்பதைக் கண்டறிகிறார்.

ஹெக்டர் தன்னுடைய பயணத்தில் எதிர்ப்படும் மனிதர்களிடம் `அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா... மகிழ்ச்சி என்பது என்ன?’ எனத் தொடர்ந்து விசாரிக்கிறார். அவர்களின் பதில்களையும் தொகுத்துக்கொள்கிறார்.

இந்திய வானம் - 26

இப்படியாக அவரது பயணத்தின் ஊடே அவர் சந்திக்கும் மனிதர்களும் அனுபவங்களும் `எது மகிழ்ச்சி?' என்பதைப் பற்றிய வரையறைகளை உருவாக்குகின்றன. அதில் இருந்து எது மகிழ்ச்சி என்பதைப் பட்டியலிடத் தொடங்குகிறார்.

`அதில் சொந்த வீடு, சிறந்த நண்பர்கள், விரும்பிய வேலை இவைதான் மகிழ்ச்சி' எனப் பலரும் நினைக்கிறார்கள். `நாம் எதுவாக இருக்கிறோமோ, அதற்காகப் பாராட்டப்படுவதே சிறந்த மகிழ்ச்சி' என ஒரு சிலர் நினைக்கிறார்கள்.

`மற்றவர்களுக்கு உதவி செய்வதே உண்மையான மகிழ்ச்சி' எனச் சிலரும், `மகிழ்ச்சி என்பது ஒரு கண்ணோட்டம். எந்த ஒன்றையும் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் இருந்தே மகிழ்ச்சி பிறக்கிறது' என இன்னும் சிலரும், `சும்மா இருப்பதே மகிழ்ச்சி' என துறவிகளும், `அடுத்தவரைப் புரிந்துகொண்டு ஆதரவாக நடந்துகொள்வதே மகிழ்ச்சி' என்று மேலும் சிலரும் நினைக்கிறார்கள்.

சந்தோஷமோ வேதனையோ இரண்டையும் பெண்கள் முழுமையாக உணர்கிறார்கள்; அனுபவிக்கிறார்கள். ஆண்கள், சந்தோஷத்தை உணரும்விதத்தில் வேதனையை உணர்வதே இல்லை. தனது வேதனையைத் தாங்கிக்கொள்ளத் தெரியாதவர்கள் ஆண்கள்.
`மகிழ்ச்சி என்பது எது?' என யாராலும் வரையறை செய்ய இயலாது. ஆனால், நம்மால் மகிழ்ச்சியை உருவாக்க முடியும்; பகிர்ந்து தர முடியும்; அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்த முடியும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்பதை ஹெக்டர் உணர்ந்துகொள்கிறார். ஒரு மகிழ்ச்சி, ஆயிரம் வருத்தங்களை விலகி ஓடச்செய்துவிடும் என்கிறது சீனப் பழமொழி.

ஹெக்டரைப் போலவே நாம் ஒவ்வொரு வரும் மகிழ்ச்சியின் பட்டியல் ஒன்றை வைத்திருக்கிறோம். அதில் சில பொதுவானவை; பல நாமே உருவாக்கிக்கொண்டவை. சந்தோஷத்தைத் தேடும் பலரும், எதிர்காலத்தில்தான் அது கிடைக்கக்கூடும் என நம்புகிறார்கள். இன்றைய வாழ்வு சந்தோஷமானது அல்ல. இதன் நெருக்கடிகளில் சந்தோஷங்கள் காணாமல்போய்விடுகின்றன எனப் புலம்புகிறார்கள்.

குழந்தைகள், கடலைப் பார்த்து சந்தோஷப்படுவதைவிடவும் கடற்கரை மணலைக் கண்டு அதிகம் சந்தோஷம்கொள்கிறார்கள். அது அவர்களின் மன இயல்பு.

`எது சந்தோஷம் தரும்?’ என்பதைப்போலவே `எவை எல்லாம் சந்தோஷம் தராதவை?’ என்ற பட்டியலையும் நாம் வைத்திருக்கிறோம். உண்மையில் இரண்டும் எதிர் எதிரானவை அல்ல. நமக்கு எது மகிழ்ச்சி தரவில்லையோ, அது வேறு ஒருவருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.

ப்பானின் புகழ்பெற்ற ஜென் கவிஞர் ரியோகான், ஒருமுறை நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தார். புகழ்பெற்ற கவிஞர் தன் வீடு தேடி வந்திருக்கிறாரே என விதவிதமான உணவு வகைகளைச் சமைத்துவைத்தார்கள். அவர் உடுத்திக்கொள்ள பட்டாடைகளைப் பரிசாகத் தந்தார்கள். அவருக்குப் பட்டாடையோ, ருசியான உணவோ எதுவும் பிடிக்கவில்லை. இவரை எப்படிச் சந்தோஷப்படுத்துவது என அவர்களுக்குப் புரியவில்லை.

அவர்கள் வீட்டின் பின்புறம் சிறிய நீரோடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதைக் காட்டுவதற்காக ரியோகானை அழைத்துப் போனார்கள். அந்த ஓடையை, ரியோகான் ஒரு சிறுவனைப்போல தாவிக்குதித்துக் கடந்தார். அப்போது அவரது முகத்தில் சந்தோஷம் பீறிட்டது. அடுத்த சில நிமிடங்களுக்கு அவர் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என மாறி மாறித் தாவிக்குதித்து விளையாடினார். எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தவரைப்போல சொன்னார்... `எத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு நீரோடையைத் தாவிக் குதிக்கிறேன். இதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்கிறது?'

விருந்து அளித்த நண்பருக்கு, ரியோகானைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சந்தோஷத்தில் அரியது, நாம் பால்ய வயதில் அடைந்த மகிழ்ச்சியை மறுபடியும் அடைவது. அதைத்தான் ரியோகான் செய்திருக்கிறார்.

எந்தவிதமான சிரமமும் இன்றி, தனக்கான பாதையை அமைத்துக்கொண்டு ஓடுகிறது நீரோடை. அதுபோலவே இயற்கையின் புதிர் தன்மையின் ஊடே மனித மனம் தனக்கான வழியை, தானே கண்டறிந்துகொள்கிறது என்பதுதான் ரியோகானின் எண்ணம்.

இந்திய வானம் - 26

ஒரு மரம் பூப்பதைக் கண்டு, மற்றொரு மரம் பொறாமைகொள்வது இல்லை. அதுதான் இயற்கையின் உன்னதம். இயற்கையில் யாவும் அதனதன் இயல்பிலேயே இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பிரித்து, வகைப்படுத்தி `பயன்பாடு' என்ற கூடைக்குள் அடைக்க நினைக்கும் மனித மனமே இயற்கையைக் கூறுபோடுகிறது. மனிதனுக்குத்தான் பூவுக்கும் மணம் தேவைப்படுகிறது. மற்றபடி மணம் இருக்கிற மலர்களைப்போல, மணம் இல்லாமல் இருப்பதும் பூவின் இயல்பே. நாம் மணமற்ற மலர் என்பதை உபயோகமற்ற ஒன்று என நினைத்து விலக்கிவிடுகிறோம். அது நமது அறியாமை.

மகிழ்ச்சியை உணரும்போது நாம் நம்மை அறியத் தொடங்குகிறோம். அப்போது இயற்கையும் நாமும் வேறு அல்ல என்பதை உணர்கிறோம். மகிழ்ச்சி ஒரு திறவுகோல். அதைக் கொண்டு மனிதர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்கிறார்கள்; இணைந்து வாழ்கிறார்கள்.

சந்தோஷத்தை அனுபவிக்கும் மனிதன், `அது முடியப்போகிறதே!' எனக் கவலைகொள்ளத் தொடங்குகிறான். `இன்னொரு முறை அதே சந்தோஷம் கிடைக்காதா?!' என ஏங்க ஆரம்பிக்கிறான். கிடைக்காதபோது ஏமாற்றம் அடைகிறான். மகிழ்ச்சிகொள்வதற்கு எத்தனையோ வழிகள், விதங்கள் இருக்கின்றன. அதில் கலையும் இலக்கியமும் முதன்மையான வழிகள். அவை தலைமுறை தலைமுறைகளாக மனிதர்களைச் சந்தோஷப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

ஜப்பானிய கவிதை ஒன்று இப்படிக் கூறுகிறது...

வசந்த காலம் பூக்கிறது

அறுவடைக் கால நிலவு ஒளிர்கிறது

கோடையிலோ ஏகாந்தமான காற்று

பனிக்காலமெங்கும் வெண்பனி

வேண்டாத எண்ணங்கள் மனதில் அடையாத வரை

எல்லா காலமும் சிறப்பானதே!


இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமான எனது பயணத்திலும் இதையே நான் அறிந்து கொண்டிருக்கிறேன். இந்தக் கவிதையில் எல்லா காலமும் சிறப்பானதே என்பதுடன் கூடுதலாக நான் ஒரு வரி சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

வேண்டாத எண்ணங்கள் மனதில் அடையாத வரை

எல்லா காலமும் சிறப்பானதே

எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியானவர்களே!

- நிறைந்தது