Published:Updated:

“சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது!”
“சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது!”

வீ.கே.ரமேஷ், படம்: எம்.விஜயகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``அன்னைக்கு எங்க ஊர் சேலம் பக்கத்துல அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவோட மஞ்சள் நீராட்டு நாள். தனக்குப் பிடிச்ச ஆண்கள் மீது பெண்களும், பெண்கள் மீது ஆண்களும் மஞ்சள் தண்ணீரை ஊற்றுவதும் ஓடி ஒளிவதும் என எல்லாரும் குதூகலமா விளையாடிட்டு இருந்தாங்க. ஆனா, `நாம யார் மீதும் மஞ்சள் தண்ணி ஊத்த முடியாதே?’னு ஏக்கத்தோடும் சோகத்தோடும் பெட்டிக்கடை பக்கத்துல நின்னுக்கிட்டிருந்தேன். அப்போ என் தலை முதல் தாவணி வரை என்னை மஞ்சள் தண்ணி ஊத்தி நனைச்சார் என் மணவாளன் வீராங்கன். இப்போ நினைச்சாலும் அது எனக்கு இன்ப அதிர்ச்சிதான்’’ என வெட்கப் புன்னகை பூக்கிறார் திருநங்கை ஸ்வேதா.

திருநங்கை ஸ்வேதாவைக் காதலித்துத் திருமணம் முடித்திருக்கிறார் வீராங்கன். ஒன்றரை வருடத்துக்கு முன்னர் இருந்து தனுஷ்யா என்கிற பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவரும் இந்தத் தம்பதியின் லட்சியம், அந்தக் குழந்தையை ஐ.ஏ.எஸ் ஆக்குவது. தங்களின் வித்தியாசக் காதல் கடந்துவந்த தடைகளை, அது தந்த தழும்புகளை, காதலில் ஜெயித்த கதையைப் புன்னகையோடு பகிர்ந்துகொண்டனர் இந்தத் தம்பதி.

‘‘என்கூடப் பிறந்தவங்க ஐந்து தம்பிகள்; ஒரு தங்கை. நான்தான் எல்லாருக்கும் மூத்த ஆள். எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து என்னை ஒரு பெண்ணாகத்தான் நினைச்சு வளர்ந்தேன். சக திருநங்கைகளைப்போல என் வீட்டிலும் ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தது. அம்மாவிடம் என் உணர்வுகளைப் பக்குவமாக எடுத்துச்சொன்ன பிறகு பெருசா எதிர்ப்பு இல்லை. பாலின மாற்று அறுவைசிகிச்சை செஞ்சுக்கிட்டு, ஒரு முழுப் பெண்ணா ஜவுளிக் கடை வேலைக்குப் போயிட்டு வந்தேன். இந்த வேளையில்...’’ என ஸ்வேதா தொடர்ந்தபோது, ``மத்ததை நான் சொல்றேன்’’ என இடைமறித்தார் ஸ்வேதாவின் கணவர் வீராங்கன்.

“சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது!”

‘‘ஸ்வேதாவைச் சந்திக்கும்போது எனக்கு வயசு 25. அவங்களுக்கு 21 இருக்கும். வேலைக்குப் போறதுக்காக நான் தினமும் காலை 9:30 மணிக்கு அன்னதானப்பட்டி பஸ் நிறுத்ததுல பஸ்ஸுக்குக் காத்திருப்பேன். ஸ்வேதாவும் வேலைக்குப் போறதுக்காக அதே பஸ்ஸுக்கு வருவாங்க. அப்போ இவங்க கரிசல்காட்டுக் காந்தள் மலரைப்போல அழகுனா அழகு அப்படி ஒரு அழகு. இவங்களைத்தான் கல்யாணம் பண்ணணும்னு முடிவு பண்ணினேன். எவ்வளவோ முறை பேச முயற்சி பண்ணியிருக்கேன். ஆனா, திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாங்க. இதுதான் என் காதலை இன்னும் அதிகரிச்சது. எங்க தெருவில் இருந்து 3-வது தெருவில்தான் ஸ்வேதா வீடு. ஆனா, வீட்டைவிட்டு வெளியில் வர மாட்டாங்க. என் ஒருதலைக் காதலைச் சுமந்துக்கிட்டு அந்தப் பஸ்ஸிலேயே வேலைக்குப் போய் வந்துட்டு இருந்தேன். இந்தச் சூழ்நிலையில்தான் 2005-ம் வருஷம் ஆடி மாதம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அது எட்டுப் பட்டிகளும் கொண்டாடுற பெரிய திருவிழா. கடைசி நாள் மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா. ஊரே மஞ்சள் நீரை ஒருவர் மேல் ஒருவர் ஊற்றிக் கொண்டாடிட்டு இருந்தாங்க. ஆனா, ஸ்வேதா மட்டும் தனியா நின்னுட்டு இருந்தாங்க. யோசிக்கவே இல்லை. ஸ்வேதா மேல மஞ்சள் தண்ணியை ஊத்திட்டேன்’’ என்ற வீராங்கனிடம், ``ஆனா, அன்னைக்கு என் மனசுக்குள்ள என்ன நடந்துச்சுனு நான் சொன்னாத்தான் நல்லாருக்கும்’’ எனச் சிரிக்கிறார் ஸ்வேதா.

‘‘மனசுக்குள்ள சந்தோஷமா இருந்தாலும், அதை வெளியில காட்டிக்காம கண்ணைக் கசக்கிக்கிட்டே வீட்டுக்கு வந்துட்டேன். அன்னைக்கு நைட் முழுக்கத் தூக்கமே வரலை. மஞ்சள் தண்ணியில நனைஞ்சதும், இவர் என்னைப் பார்த்துச் சிரிச்சிட்டு நின்னதும்தான் மனசுக்குள்ள இருந்தது.

`நான் ஒரு திருநங்கை. என்னை எப்படிக் கல்யாணம் பண்ணிக்குவீங்க?’, `உங்களுக்கு நான் எப்படிக் குழந்தை பெற்றுத் தர முடியும்?’, ‘உங்க வீட்டுல இதை எப்படி ஒப்புக்குவாங்க?’னு கேட்டேன்.

`அது என் பிரச்னை. நான் பார்த்துக்கிறேன்.உனக்கு நான் குழந்தை; எனக்கு நீ குழந்தை. உனக்கு ஒரு மாசம் டைம் தர்றேன். யோசிச்சு நல்ல முடிவா சொல்லு’னு சொல்லிட்டுப் போயிட்டார். பல தடவை யோசிச்சு சம்மதம் சொன்னேன். 2005-ம் ஆண்டு ஆவணி மாதம் 10-ம் தேதி திருமணம். எங்க ரெண்டு பேர் வீட்டுல இருந்தும் யாரும் வரவில்லை. எதிர்ப்பும் தெரிவிக்கலை. அன்னதானப் பட்டி மாரியம்மன் கோயில்ல நண்பர்கள் புடைசூழ, எங்க திருமணம் நடந்தது.

`கொஞ்ச நாளைக்கு உங்க வீட்லயே இரு. பிறகு, எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப்போறேன்’னு சொன்னார். நான் தாலியும் கழுத்துமாக எங்க வீட்டுக்குப் போனேன். யாரும் என்கிட்ட பேசலை. மூணு மாசம் ஓடியது. அக்கம்பக்கத்தில் இருப்பவர் களின் பேச்சைக் கேட்டு ‘உனக்குத் திருமணம் ஒரு கேடா?’னு அம்மா திட்டினாங்க.

அதைத் தாங்கிக்க முடியாம நான் விஷம் குடிச்சுட்டேன். இவர்தான் ஓடிவந்து என்னைத் தூக்கிட்டுப்போய் ஆஸ்பத்திரியில சேர்த்துக் காப்பாத்தினார். `இனிமே உங்க வீட்டில் இருக்க வேண்டாம்’னு அவங்க வீட்டுக்குப் கூட்டிட்டுப் போயிட்டார். அவங்க வீட்டுல யாரும் என்கூட பேசலை. காலப்போக்கில் நான் நடந்துக்கிட்ட விதம், குடும்பத்து மேல காட்டின அன்பால் இப்போ என்னை மகள்போல பார்த்துக்கிறாங்க’’ என்கிற ஸ்வேதா, `` என்னால குழந்தை பெத்துக்க முடியலையேனு இரவெல்லாம் அழுவேன். நீங்க ஒரு பெண்ணைத் திருமணம் செஞ்சிருந்தா, இந்நேரத்துக்கு ஒரு வாரிசு வந்திருக்கும். என்னால அது முடியலையேனு அழுவேன். அப்போ நாங்க ரெண்டு பேரும் பேசி முடிவெடுத்துத்தான் தனுஷ்யாவைத் தத்தெடுத்தோம்’’ என்கிறார்.

``எங்க திருமணம், சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டது. அதுக்கு கடவுள் கொடுத்த பரிசுதான் தனுஷ்யா. அவள்தான் எங்க காதலோட அடையாளம்’’ - தனுஷ்யா, ஸ்வேதா இருவர் முகங்களையும் உருவி முத்தமிடுகிறார் வீராங்கன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு