`என் உடல் மீதான சுதந்திரத்தை நான்தான் தீர்மானிக்க வேண்டும்' என்கிறார் மகாத்மா காந்தி. அப்படி எந்தச் சுதந்திரத்தையும் சாமானிய நோயாளிக்குக் கொடுக்காமல் இந்திய மருந்து சந்தையை வைத்து கண்ணாமூச்சி ஆடுகிறது மத்திய அரசு. எய்ட்ஸ், புற்றுநோய் உள்பட 76 வகையான நோய்களுக்கான மருந்துகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இறக்குமதி வரிச் சலுகையை கடந்த வாரம் ரத்துசெய்திருக்கிறது மத்திய அரசு. `இதன் மூலம், 30 சதவிகிதம் வரையில் மருந்துகளின் விலை உயரக்கூடும்' என மருத்துவர்கள் சொல்லும் நிலையில், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வுடன் மிக நேரடியாகத் தொடர்புடைய இந்த விலை உயர்வு நிச்சயம் பெரும் மக்கள் கூட்டத்தைப் பாதிக்கும்.

இந்திய மருந்து வணிகச் சந்தை, மிகப் பெரியது. இங்கு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மருந்து வியாபாரம் நடைபெறுகிறது. இதில், 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் 220 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய மருந்துகள் விலை குறைவு என்பதுதான் இதற்குப் பிரதான காரணம். பிப்ரவரி 6-ம் தேதி, மத்திய கலால் மற்றும் சுங்கவரித் துறை வெளியிட்ட அறிக்கையில், 76 வகையான மருந்துகளுக்கு அளிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், எய்ட்ஸ், எலும்பு நோய்கள், ரத்தக் கசிவு (Haemophilia) ஆகிய நோய்களுக்கான மருந்துகளும் இதில் அடக்கம். ``வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டு விட்டதால், மருந்துகளின் விலை உடனடியாக ஏற்றப்படும். இதனால் புற்றுநோய் உள்ளிட்ட தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அவற்றை இன்னும் கூடுதல் விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்கும்'' என்கிறார் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வம்.

மருந்து உலகின் மாஃபியாக்கள்!

``அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மருந்துக்கான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சுமார் 22 சதவிகிதம் அளவுக்கு வரிச் சலுகை ரத்து செய்யப்படுவதால், உற்பத்தி செய்யப்படும் மருந்தின் விலை 25 சதவிகிதம் அளவுக்கு உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் மருந்து விலை குறைவு. மொத்த உள்நாட்டுத் தேவைக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறு கிறது. ஏற்றுமதியும் அதே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெறுகிறது. இந்தியாவில் மருந்து உற்பத்தியாளர்கள் அதிகமாக இருப்பதால் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. உலக அளவில் ஒப்பிடும்போது அதிகப்படியான நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில்தான். `வரக்கூடிய 10 ஆண்டுகளில், மேலும் 30 சதவிகித மக்கள் சர்க்கரை நோய் குறைபாட்டுக்கு ஆளாவார்கள்' என மருத்துவ அறிக்கை ஒன்று சொல்கிறது. இதைக் குறிவைத்து, பல வெளிநாட்டு மருந்து கம்பெனிகள் இந்தியாவின் மீது பார்வையைத் திருப்பியுள்ளன'' என்கிறார் செல்வம்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த புற்றுநோயாளி ஒருவர், தற்போது மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்குகிறார் என்றால், இந்த வரிச் சலுகை ரத்தின் மூலம், இனிமேல் 38 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கவேண்டியிருக்கும். ஆனால், `இறக்குமதி செய்யப்படும் மருந்துகளால் விலையில் பெரிய பாதிப்பு வராது' என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

``பன்னாட்டு நிறுவனத்தின் ஏஜென்டுகள்தான் வரிவிதிப்பினால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள்தான் அதிகப்படியாகக் கூச்சல் இடுகிறார்கள்'' என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத். ``எய்ட்ஸ் நோய்க்கு இந்தியாவில் உள்ள மருந்தையும், அமெரிக்காவில் உள்ள மருந்தையும் விலையில் ஒப்பிட்டால், நம் நாட்டில் உள்ளதைக் காட்டிலும் 2,000 மடங்கு அதிக விலை வைத்து அங்கு விற்கிறார்கள். எனவே, வரிவிலக்கை ரத்து செய்திருப்பது உண்மையில் வரவேற்கப்படவேண்டிய விஷயம். அதே நேரம், வெளிநாட்டு மருந்துகளை ஒப்பிடும்போது, உள்நாட்டு மருந்துகளின் விலை குறைவாக இருந்தாலும், உண்மையில் உள்நாட்டு மருந்துகளின் விலையும் சாதாரண மக்கள் வாங்க முடியாத உயரத்தில்தான் உள்ளது. எனவே, அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இந்திய மருந்து கட்டுப்பாட்டு விதியின் கீழ் 13 சதவிகித மருந்துகளுக்கு மட்டும்தான் கட்டுப்பாடான விலை உள்ளது. அதாவது 90 ஆயிரம் கோடி ரூபாய் மருந்து வணிகத்தில், 11,700 கோடி ரூபாய்க்கான மருந்துகளுக்கு மட்டுமே விலை கட்டுப்பாடு உள்ளது. புதிய மருந்துகளை பன்னாட்டு நிறுவனம் விற்கும்போது காப்புரிமை அடிப்படையில் விற்கிறார்கள். முதல் 20 ஆண்டுகள் அவர்கள் வைத்த விலைதான். இதை நாம் கட்டுப்படுத்த முடியாது. இவர்களுக்கு கட்டாய உரிமம் கொடுத்து உள்நாட்டில் உற்பத்தி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்'' என்கிறார்.

`வரிச் சலுகை நீக்க அறிவிப்பு, `மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதி' என்கிறது பா.ஜ.க அரசு. அப்படியானால் உள்நாட்டு மருந்துச் சந்தையை ஊக்குவிக்கும் நடவடிக்கை களைத்தான் எடுக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க பதவியேற்ற பிறகுதான் மருத்துவ உபகரணங்களில் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டுவந்தார்கள்.

``டெங்கு காய்ச்சலுக்கு டெல்லியைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஒருவர் மருந்து கண்டுபிடித்தார். சுண்டெலிக்குப் பரிசோதித்து வெற்றி பெற்ற மருந்தை, அடுத்து குரங்குக்குப் பரிசோதனை செய்ய பணம் வேண்டும். அதற்குப் பணம் இல்லாமல் பரிசோதனை கைவிடப் பட்டிருந்த நிலையில், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 2 கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இந்த அளவுக்குத்தான் `மேக் இன் இந்தியா' திட்டம் செயல்படுகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் டெங்கு ஊசியை பஞ்சாபில் பரிசோதித்துப் பார்த்து வருகிறது. அந்த நிறுவனத்தை ஊக்குவிக்க நடக்கும் சதியாகக்கூட இதைப் பார்க்கலாம்'' என்கிறார் மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவர் ஒருவர்.

மருந்துத் துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்குப் பிறகு, உள்நாட்டில் மருந்து உற்பத்திசெய்யும் பல நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கிவிட்டன. குறைந்த விலையில் மருந்து உற்பத்தி செய்துவந்த உள்நாட்டு நிறுவனமான ரான்பாக்ஸி, முதலில் ஒரு ஜப்பான் கம்பெனிக்கு விற்கப்பட்டு, அங்கு இருந்து சன் ஃபார்மாவுக்குக் கைமாறிவிட்டது.

குன்னூர் லூயி பாஸ்டர் இன்ஸ்டிட்யூட், கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட், இமாச்சலப்பிரதேசம் கசாலி நோய்த் தடுப்பு மருந்துத் தயாரிப்பு நிறுவனம் ஆகிய மூன்றும் பொதுத் துறை நிறுவனங்கள். இங்கு உற்பத்தி செய்யப்பட்ட நோய்த்தடுப்பு மருந்துகளைத்தான், ஐ.நா நல நிறுவனம் உலகின் பல நாடுகளுக்குக் குறைந்த விலையில் வழங்கியது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்த மூன்று பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகளும் முடக்கப் பட்டன. இப்போது இந்த நிறுவனங்கள் செயல்பட்டாலும், போதிய உற்பத்தி இல்லை. விலையும் உயர்த்தப்பட்டுவிட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட டி.டி தடுப்பூசி முன்பு 3.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது 16 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது.

``பன்னாட்டு கம்பெனிகள் மருந்துகளின் விலையை உயர்த்தும் என கோஷம் போடுபவர்கள் யாரும், உள்ளூர் மருத்துவர்களின் கொள்ளையைப் பற்றி கேள்வியே கேட்க மாட்டார்கள். நமது மருத்துவர்களில் பெரும்பாலானோர் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களா? தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம்தான் விலையைத் தீர்மானிக் கிறது. அதுவும் சட்டமாக இல்லை. வழிகாட்டும் நெறிமுறையாகத்தான் வைத்திருக்கிறார்கள். மருந்து ஸ்டாக்கிஸ்ட்களுக்கு ஒரு மாத்திரை விலை 1 ரூபாய் என்றால், அவர்கள் 1 ரூபாய் 10 பைசா வரை விற்கலாம் என்றும், இதே மருந்தை 30 சதவிகித லாபத்தில் சில்லறை வணிகர்கள் விற்கலாம் என்றும் சொல்கிறார்கள். நடைமுறையில் இப்படித்தான் நடக்கிறதா? படர்தாமரை நோய்க்கு ஃப்ளுகனோசோல் (Fluconazole) என ஒரு மருந்து இருக்கிறது. இந்த மருந்து டாக்டருக்கும் ஸ்டாக்கிஸ்ட்களுக்கும் 3.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், மருந்துக் கடையில் இதன் விலை, 16.45 ரூபாய். அமிக்கோசின் (Amikacin) என்ற கிருமிக்கொல்லி மருந்து, 13 ரூபாய்க்கு டாக்டருக்கும் ஸ்டாக்கிஸ்ட்டுக்கும் வருகிறது. இதன் சில்லறை விற்பனை விலை 85 ரூபாய். அந்த அளவுக்கு மருந்தை வைத்து அப்பாவி மக்களைச் சுரண்டிக் கொழுக்கிறார்கள். மருத்துவ உலகின் இந்த மாஃபியாக் களைப் பற்றி யாரும் பேசுவதே இல்லை.

மருந்து உலகின் மாஃபியாக்கள்!

அடிப்படையில், இந்தியாவில் தயாரிக்கும் மருந்துகளில், ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான மருந்துகளைத்தான் பொதுத் துறை நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஒரு காலத்தில் 73 சதவிகிதம் வரை நாம் தயாரித்துக்கொண்டிருந்தோம். அப்படியானால், தனியார் மருந்து கம்பெனிகளை ஊக்குவிக்கும் போக்கைத்தான் எல்லா அரசுகளும் தொடர்ந்து கையாண்டுவருகின்றன. 75 சதவிகித ஆங்கில மருந்துகள் தாவரங்களில் இருந்துதான் எடுக்கப்படுகின்றன. டெங்கு நோயைக் குணப்படுத்த கேரிபில் (Caripill) என ஒரு மருந்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த மருந்தின் விலை 25 ரூபாய். இது பப்பாளி இலைச் சாறில் இருந்து எடுக்கப்படுகிறது. இதை நாமே செய்துவிட்டுப்போகலாமே... உள்ளூர் வியாதிகளுக்கு உள்ளூரில் என்ன வாய்ப்பு உள்ளது என்பதைத்தான் பார்க்க வேண்டும். இதை ஊக்குவிக்க போதிய முயற்சி எடுத்தாலே போதும்'' என ஆதங்கப் படுகிறார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் டாக்டர் புகழேந்தி.

ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டில் மருத்துவச் செலவுகளும் இணைந்துவிட்ட நிலையில், அதை விலை குறைவாக, தரமானதாகக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அதுதான் ஒரு மக்கள் நல அரசின் பணி.

அதிரடியாக உயர்ந்த  மருந்து விலை!

மருந்து உலகின் மாஃபியாக்கள்!

வரிச்சலுகை ரத்து அறிவிப்பு வந்த சில நாட்களில் நோவார்டிஸ் நிறுவனம், கேன்சருக்கான `அஃப்னிடார்' மருந்து 10 மாத்திரைகள்கொண்ட அட்டையை 72 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவிட்டது. மார்பகப் புற்றுநோய்க்கான `ஃபெமரா' மருந்தின் விலையும் கணிசமாக உயர்ந்துவிட்டது. கிளாக்ஸோ, ஜான்சன் அண்ட் ஜான்சன், பேயர், ரோச்சி கம்பெனிகள் விரைவில் விலையை உயர்த்த உள்ளன. `ஹீமோஃபிலியா' எனப்படும் ரத்தக் கசிவு நோய்க்கான ஹீமோஃபிலிக் ஃபேக்டர் என்னும் மருந்து, அரசு மருத்துவமனைகளில் மூன்று சதவிகிதம்தான் கிடைக்கிறது. மற்றவை தனியாரிடமே வாங்கப் படுகின்றன. தற்போது இந்த நோய்க்கான மருந்தின் விலை 5 சதவிகிதம் அதிகரித்துவிட்டது.

``பெரிய பாதிப்பு இல்லை''

`` `வரிச் சலுகை ரத்து, இதன் மூலம் மருந்து விலை உயரும்' எனப் பேசப்படும் இந்த விவகாரத்தில், இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கருத்து என்ன? அதன் அகில இந்தியத் தலைவர் வீரமணியிடம் பேசியபோது, ``மருந்துக்கான வரிச் சலுகையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இனி முழு வரியை செலுத்தவேண்டியிருக்கும். மருந்து மூலப் பொருட்களுக்கான வரி 7.5 சதவிகிதம்தான். இந்த 76 மருந்துகளில், 61 மருந்துகளுக்கு முன்பே 5 சதவிகித இறக்குமதி வரி இருந்தது. இப்போது கூடுதலாக 2.5 சதவிகிதம் அதிகரிக்கப்போகிறது. இதனால், ஒரு சதவிகிதம் அளவுக்கே விலை உயரும் என நம்புகிறோம். ஒருசில மருந்துகளுக்கு இரண்டு சதவிகிதம் விலை உயரலாம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு