`கொட்டலங்கோ லியோன்' என்றால் என்ன? இது ஒரு மனிதரின் பெயர். தூத்துக்குடியில் பிறந்து, கோவையில் வளர்ந்து, இப்போது அமெரிக்காவில் வசிக்கும் தமிழர். சோனி நிறுவனத்துக்காக இவர் தயாரித்துக் கொடுத்த ஒரு தொழில்நுட்பம், இவருக்கு ஆஸ்கர் அகாடமி விருதைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. ஆஸ்கர் தமிழரை, ஸ்கைப்பில் பிடித்தோம்.

‘`கோவை கள்ளப்பாளையத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில்தான் படிச்சேன். இத்தாலியைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவப் புனிதருடைய பெயர் கொட்டலங்கோ. எல்லாருமே என் பெயரை உச்சரிக்கச் சிரமப்படுவாங்க. ஒண்டிப்புதூரில் ஹை ஸ்கூல். அப்புறம் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சேன். நான் படிச்சு முடிச்ச நேரம் சினிமாவில் டெக்னாலஜி துறை நல்லா வளர்ந்துட்டு வந்தது. என் நண்பன் ஒருவன் அமெரிக்காவில் படிச்சான். அவன் சொல்லித்தான் அங்கு போய் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் படிச்சு சினிமா துறைக்குள் வந்தேன்’’ - குட்டி ஃப்ளாஷ்பேக் சொன்னார் கொட்டலங்கோ.

டெக் தமிழன்!

``பெருமைமிகு ஆஸ்கர் விருது. எப்படி ஃபீல் செய்கிறீர்கள்?’’

‘`ஆஸ்கர்ல ரெண்டு வகை உண்டு. ஒண்ணு கலைஞர்களுக்கானது; இன்னொண்ணு, நான் வாங்கிய தொழில்நுட்பத்துக்கானது. இதை, ஒரு குறிப்பிட்ட படத்துக்காகத் தர மாட்டாங்க. சினிமாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைக்காகத் தரப்படுற விருது இது. சினிமாவில் ரொம்ப முக்கியம், நேரம். ஒரு சினிமாவில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வேலை பார்ப்பாங்க. எல்லாரையும் ஒன்றிணைச்சு, அத்தனை பேரையும் முழுமையா பயன்படுத்தக் கூடிய, ‘இட்வ்யூ’ங்கிற தொழில்நுட்பத்தைக் உருவாக்கினோம். அதுக்காகத்தான் இந்த விருது. எனக்கும் இன்னொருத்தருக்கும் சேர்த்து இந்த விருது வழங்கப்பட்டிருக்கு.''

``என்னென்ன படங்களில் உங்க டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டிருக்கு?''

‘` `ஸ்டூவர்ட் லிட்டில்', `ஸ்பைடர்மேன்', `மென் இன் பிளாக்', `ஹாரி பாட்டர்' என நிறையத் திரைப்படங்களில் எங்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.’’

‘`அடுத்து என்ன?’’ என்றால், நேனோ செகண்டில் பதில் வருகிறது.


``எட்டு வருஷம் கழிச்சு இப்பதான் இந்தப் புராஜெக்ட் முடிஞ்சிருக்கு. அடுத்து இதைவிட பெருசா பண்ணுவோம் பாஸ்’’ என்கிறார் உற்சாகமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு