Published:Updated:

``வாழ்த்துகள் வித்யு லேகா... தமிழ் இயக்குநர்கள் உங்களை ஏன் கவனிக்கலைனு தெரியலையே" - `தொலி பிரேமா' படம் எப்படி? #TholiPrema

``வாழ்த்துகள் வித்யு லேகா... தமிழ் இயக்குநர்கள் உங்களை ஏன் கவனிக்கலைனு தெரியலையே" - `தொலி பிரேமா' படம் எப்படி? #TholiPrema
``வாழ்த்துகள் வித்யு லேகா... தமிழ் இயக்குநர்கள் உங்களை ஏன் கவனிக்கலைனு தெரியலையே" - `தொலி பிரேமா' படம் எப்படி? #TholiPrema

அதே காதல், அதே  ஊடல், அதே பிரிதல், அதே புரிந்துகொள்ளுதல் எனப் பல்வேறு பழகிய காதல் உணர்வுகளை அழகிய காட்சிகள்,  கையளவு யதார்த்தமான கதாபாத்திரங்களுடன் ரசிக்கும்படி கூறியுள்ள தெலுங்குப் படம் `தொலி பிரேமா.'

 6 அடி உயரம், அழகிய உருவம் என ஆப்பிள்போல இருப்பவன் ஆதித்யா (வருண் தேஜா) ரயில் விபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும் வர்ஷாவிடம் (ராஷி கண்ணா) காதல்கொள்கிறான். டி.டி.ஆரிடம் எகத்தாளம் பேசியதால் ரயிலிலிருந்து இறக்கிவிடப்படுகிறான். எதையும் ஒரு சேலஞ்ஜாக எடுத்துக்கொள்ளும் ஆதித்யா, அடுத்த ஸ்டேஷனில் ரயிலைப் பிடித்துவிடலாம் என்று தயாராகிறான். அடுத்த ஸ்டேஷனில் தண்ணீர் குடிக்க இறங்கும் வர்ஷா ரயிலை மிஸ் செய்கிறாள். ஒரு ரவுடிக் கும்பல் வர்ஷாவை வழிமறித்து வம்பு செய்யவே, அவளைக் காப்பாற்றுகிறான் ஆதித்யா. அடுத்த டிரெயினுக்காகக் காத்திருக்கும் இருவரும் பரஸ்பரம் அறிமுகமாகிக்கொள்ள ஆதித்யா புரொபோஸ் செய்கிறான். தனது முடிவுகளை யோசித்து எடுக்கும் வர்ஷா, இந்தக் காதலை ஏற்க அவகாசம் கேட்கிறார். இருவருக்கும் இருக்கும் வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு சேர்கிறார்களா இல்லையா என்பதுதான் `தொலி பிரேமா' படத்தின் கதை.

தெலுங்கு பட உலகில் வருடத்துக்கு வெளியாகும் பல காதல் படங்களில் சில நம் மனதில் நிற்கும். இந்த வருடம் அந்த லிஸ்டில் `தொலி பிரேமா'வுக்கு டாப் ப்ளஸ் கொடுக்கலாம். `காதலன் ஐ லவ் யூ சொல்வதை ரசிப்பதே பெரும் திருப்தி' எனச் சொல்லும்போதும் முதன்முதலாக தயங்கித் தயங்கி முத்தம் கொடுக்கும் காட்சி, 'ஒரு சூழலுக்கு ஏற்றாற்போல் யோசித்து முடிவெடுப்பது எவ்வளவு அவசியம்' எனக் கூறுவது இப்படிப் பல இடங்களில் ஒரு ஹீரோயினுக்கான இடங்களாக மாற்றி நம்மைக் காதலிக்கச் செய்கிறார் ராஷி கண்ணா. எதையும் சவாலாக எடுத்துக்கொண்டு சில வெற்றிகளைப் பெறும் ஹீரோ, தன் முன் கோபத்தால் பல இன்னல்களுக்கு ஆளாகிறான் என்ற ஒற்றை வரிக் கதாபாத்திரத்தில் வருண் தேஜ் பொருந்தியது கச்சிதம். 

முறைமாமன், ஜாதிவெறி, பணக்கார ஏழை பேதம் என்று காதலுக்கு எந்த எக்ஸ்டெர்னல் வில்லன்களும் இல்லை, காதலர்களுக்குள் இருக்கும் வித்தியாசமும் புரிந்துகொள்வதும்தான் வில்லன் என்று ஃபிக்ஸ் செய்து அதற்கு கதையைப் பிண்ணியுள்ள இயக்குநருக்குப் பல 'வாவ்'கள். 

ஒரு காதல் கதையில் ஹீரோ ஹீரோயின் திரையில் வரும்போதெல்லாம் நம் மனதில் பட்டாம்பூச்சி பறக்கும் ஒரு ஃபீலிங் இருக்க வேண்டும். அப்படி இப்படத்தில் நிறைய காட்சிகள் இருக்கின்றன. ஜூனியரான ஆதித்யாவின் மீது ஒருதலைக் காதல்கொள்ளும் வித்யுலேகாவை `அக்கா' என ஹீரோ கூப்பிடும் காட்சியில் திரையரங்கமே சிரிப்பில் தெறிக்கிறது (வாழ்த்துகள் வித்யு... தமிழ் இயக்குநர்கள் உங்களை ஏன் கவனிக்கலைனு தெரியலை). ஹீரோவின் நண்பர்களாக வரும் பிரியதர்ஷி மற்றும் ஹைப்பர் ஆதி செய்யும் சேட்டைகள் அருமை. ஆதித்யாவின் அம்மாவாக வரும் சுஹாசினிக்குப் பெரிதான கதாபாத்திரம் இல்லை. லண்டனில் பிரியதர்ஷி காதலிக்கும் பெண்ணின் அப்பா சாதி பார்த்து பழகும் விதமும் அதை வருண் தேஜ் ஹேண்டில் செய்யும் விதம் மிகவும் மேலோட்டமாக இருந்தாலும் '2020-களிலும் சாதி பார்ப்பது அபத்தமான விஷயம்' என்ற வசனம் ஆழப் பதிகிறது.     

இயக்குநர் வெங்கி அட்லுரி முதல் படம் என்பதைத் தாண்டி வசனத் தேர்விலும் காட்சியமைப்பிலும் முதிர்ச்சியைக் காட்டியுள்ளார். ஒரு சில சீன்களின் கனெக்‌ஷனை ஏதோ ஒரு முந்தைய காட்சிக்கு ரெஃபர் செய்வது என நம்மை கதைக்குள்ளேயே உட்கார வைத்து தனக்கு வேலை தெரியும் என நிரூபித்திருக்கிறார் வெங்கி. லோக்கல், ஃபாரின் என்றில்லாமல் ஒரு காதல் கதைக்குத் தேவையான கலர்ஃபுல் விஷுவல்கள் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ். 'நின்னெல்லா நின்னெல்லா', 'தொலி பிரேமா' பாடல்களைத் தவிர கதைக்கும் பாடல்களுக்கும் பெரிதாகச் சம்பந்தமில்லை. தமனின் பின்னணி இசை காட்சிக்கு வேண்டிய ஏற்ற இறக்கங்களைத் தருகிறது. ஃப்ளாஷ்பேக் கதைக்குள் ஒரு ஃப்ளாஷ்பேக் அந்தக் காட்சியில் ஒரு சின்ன ஃப்ளாஷ் கட் என்று காட்டியிருந்தாலும் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் கதையைக் கூறியிருக்கிறது நவீன் நூலியின் எடிட்டிங்.
       
90-களில் வந்த தமிழ், தெலுங்கு, இந்தி என மக்களுக்கு மிகவும் பிடித்த கிளாசிக் காதல் படங்களை ஞாபகப்படுத்தினாலும் இயக்குநர் இப்படத்துக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் சரிவர கலந்துகொடுத்திருக்கிறார். 1998-ல் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த `தொலி பிரேமா' படம் காதல் படங்களுக்கு ஒரு தனி ரசிகர்களைத் தந்தது அந்தப் படத்தின் டைட்டிலை மட்டும் எடுத்திருந்தாலும் அறிமுக இயக்குநர் வெங்கி அட்லூரி அந்த டைட்டிலுக்குரிய ஒரு மரியாதையைக் காப்பாற்றியிருக்கிறார்.

பார்க்க அழகாக இருக்கும் இருவரின் காதல் கதையாக இல்லாமல் அழகான காதல் கதையாகவும் இருக்க முயற்சி செய்கிறது தொலி பிரேமா.' இந்தக் காதலர் தினத்துக்கு காதலர்கள் பார்க்க  'தொலி பிரேமா' சரியான சாய்ஸ்.