Published:Updated:

பரிணாமக் கொள்கை இருக்கட்டும்... டார்வினுக்கு திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? #DarwinDay

பரிணாமக் கொள்கை இருக்கட்டும்... டார்வினுக்கு திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? #DarwinDay
பரிணாமக் கொள்கை இருக்கட்டும்... டார்வினுக்கு திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? #DarwinDay

பரிணாமக் கொள்கை இருக்கட்டும்... டார்வினுக்கு திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? #DarwinDay

Charles darwin 

“உங்கள் பலத்தை நிரூபிக்க என்ன செய்வீர்கள்?’ - எடை தூக்கலாம்; கல்லை உருட்டலாம்; பாறையைப் புரட்டலாம். ஆனால், தனது பலத்தை உணர ஒரு நாயைக் கொடூரமாக அடிக்கிறான் ஒரு சிறுவன்.

‘ஒருவன், ஒரு விஷயத்தைச் சொன்னால் நம்பிவிடுவீர்களா?’ - ஆராய்ந்து பார்ப்பீர்கள்; பரிசீலனைசெய்வீர்கள். ஆனால், ‘என் தலையில் இருக்கும் தொப்பியைக் குறிப்பிட்ட விதத்தில் ஆட்டினால், பேக்கரியில் கேக் இலவசமாகக் கிடைக்கும்’ என நண்பன் ஒருவன் சொன்ன விஷயத்தை நம்பி, பேக்கரி கடைக்காரரால் ஓட ஓட விரட்டப்படுகிறான் அதே சிறுவன். 

அந்தச் சேட்டைக்காரச் சிறுவனுக்கு ஹாஸ்டல் பிடிக்கும்தான். ஆனால், அடிக்கடி வீட்டுக்கு ஓடிவந்து இம்சை கொடுப்பான். மீன் பிடிப்பதைப் பொழுது சாயும்வரை வேடிக்கைபார்த்துக்கொண்டிருப்பான். பூச்சியைப் பிடித்து ஆராய்ச்சி செய்வான். பிடித்த பூச்சிகளை வைத்துக்கொள்ள இடமில்லாமல், வாயில் போட்டுத் துப்பிய வரலாறும் அவனுக்கு உண்டு. வேட்டை அவ்வளவு பிடிக்கும். பறவைகளைச் சுட்டுத் தள்ளுவதில் அவனுக்கு நிகர் அவன்தான். எலி பிடிப்பது, முயலை வேட்டையாடுவது, இன்னும் மிச்சமிருக்கும் அத்தனை இம்சைகளையும் அப்பாவுக்குக் கொடுப்பதுமாய் வளர்ந்த அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘நீ உனக்கும் நம் குடும்பத்துக்கும் அவமானமாய் இருக்கப்போகிறாய்’ எனச் சாபம் விடுகிறார் அவனது அப்பா. இப்படியாகப் பள்ளியில் படிக்கும்போது ஒட்டுமொத்த இம்சைகளின் அரசனாய் இருந்த அந்தச் சிறுவன்தான், சார்லஸ் டார்வின். 

ஒரு செடியைக் குறிப்பிட்டு, ‘அதில் கலர் கரைசலை ஊற்றினால் விதவிதமான வண்ணங்களில் பூ முளைக்கும்’ என்ற ஒரு பொய்யைச் சொல்கிறான் சிறுவன் டார்வின். ஏனெனில், ‘பொய் சொன்னாலும் அதில் ஒரு கிளர்ச்சி இருக்க வேண்டும்’ என்பது டார்வினின் எண்ணம். ஆனால், அவர் சொன்ன ஓர் உண்மைதான், உலகை உலுக்கிப்போட்டது. அது, ‘குரங்கு இனத்திலிருந்து பரிணமித்தவர்களே, மனிதர்கள்!’. 

கடந்த சில நாள்களுக்கு முன்புகூட, ‘டார்வினின் கோட்பாடு தவறு’ எனச் சொல்லி, வாங்கிக் கட்டிக்கொண்டார் மத்திய இணையமைச்சர் சத்யபால் சிங். 1859-ல் சொன்ன டார்வினின் கருத்துக்கு இன்றுவரை ஆயுள் இருப்பதுதான், சார்லஸ் டார்வின் என்ற அறிவியல் அறிஞரின் வெற்றி. என்றுமே இருக்கும் என்பதுதான் ஆய்வாளர்கள் கருத்து. 

1809-ம் ஆண்டு, பிப்ரவரி 12 ல் பிறந்தார் டார்வின். ‘மகனை எப்படியாவது மத குரு ஆக்கிவிடவேண்டும்; மருத்துவர் ஆக்கிவிட வேண்டும்’ என ஆசைப்பட்ட அப்பாவுக்கு, ‘ஸாரிப்பா’ என்று சொல்லாமல் தன் போக்கிலேயே திரிந்தவர் டார்வின். அவருக்கு, அறிவியலில் ஆர்வம் இருந்தது. பறவைகள், விலங்குகள், பவளப் பாறைகள், பூச்சிகளை ரசிப்பது, சுரண்டிப் பார்ப்பது, சேகரிப்பது, அவற்றைக் குடைந்து எதையாவது குறிப்பெழுதி வைத்துக்கொள்வதில் ஆர்வம் இருந்தது. 

அதற்கான காரணம், ‘எவையெல்லாம் என்னை ஆர்வப்படுத்தியதோ, அதையெல்லாம் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது’ என்றார் டார்வின். இல்லையெனில், பள்ளிச் சிறுவனாக இருக்கும்போதே, ‘வொன்டர்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற புத்தகத்தின் உண்மைத்தன்மையை விடிய விடிய விவாதித்திருக்க மாட்டார். வேதியியலில் தீவிர ஆர்வமாக இருந்த அண்ணனுக்கு ஆய்வக உதவியாளனாக இருக்கிறேன்’ எனச் சொல்லி, அண்ணனின் ஆராய்ச்சிகளை வேவு பார்த்திருக்க மாட்டார். சீனியர், ஜூனியர் என வயது வித்தியாசம் இல்லாமல், கிடைக்கும் நேரங்களில் இயற்கையோடு ஒட்டிக்கொள்வதும், இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகள், விவாதங்கள், ஆய்வுகளில் பங்கேற்பதுமாய் இருந்திருக்க மாட்டார். 

இப்படி அறிவியலுக்காக நேர்ந்துவிடப்பட்டவராகத் திரிந்த டார்வினுக்கு, பூச்சிகளைப் பற்றிய ஒரு புத்தகத்தில், ‘டார்வினால் கண்டுபிடிக்கப்பட்ட’ என்ற வார்த்தைகள் இடம்பெற, எதிர்கால வெற்றிக்கான அடித்தளமாக இதையே தீர்மானித்துக்கொண்டார். 

கல்லூரியில் படிக்கும்போது பழக்கமான தாவரவியல் பேராசிரியர் ஒருவரின் உதவியால், ‘பீகிள்’ கப்பலில் இயற்கை ஆய்வாளராக இணைந்துகொன்டார். ‘பரிணாமவியல் கொள்கை’யை உலகிற்குச் சொல்ல மிக முக்கியக் காரணமாக அமைந்த இந்தப் பயணம், டார்வின் எதிர்பார்க்காத ஒன்றுதான். அந்தக் கூத்தை அவரே தனது சுயசரிதையில் இப்படி விவரித்திருக்கிறார், 

“பீகிள் கப்பலின் கேப்டன் பிட்ஸ் ராயுடன் நான் நெருக்கமாகப் பழகிய பிறகு, என்னுடைய மூக்கின் வடிவத்தை வைத்து நான் நிராகரிக்கப்படும் அபாயத்திலிருந்து தப்பித்ததாகக் கேள்விப்பட்டேன். ஏனெனில், ‘ஒரு மனிதனின் புறத் தோற்றங்களை வைத்தே அவனது குணத்தைத் தீர்மானிக்க முடியும்’ என நம்பியவர் அவர். என் மூக்கைப் பார்த்து ‘இவன் இந்தப் பயணத்துக்குத் தேவையான ஆற்றலையும் தைரியத்தையும் பெற்றிருப்பானா?’ எனச் சந்தேகப்பட்டாராம் அவர். பிறகு, என் மூக்கைப்பற்றி அவர் பேசியது தவறு என உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.” 

பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்களோடு பீகிள் கப்பலுக்கும் டார்வினுக்குமான உறவையும் ‘பீகிள் கடற்பயணம்’ என்ற தனிப் புத்தகமாகவே எழுதியிருக்கிறார் டார்வின். “நான் படித்தது, நினைத்தது எல்லாவற்றையும் நேரடியாகப் பார்த்து, ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தினேன். இது, ஆய்வில் ஈடுபட்ட ஐந்து ஆண்டுகளிலும் தொடர்ந்தது. இந்தப் பழக்கம்தான், நான் அறிவியலில் என்ன சாதிக்க நினைத்தேனோ அதைச் சாதிக்க உதவியது’’ என்கிறார் டார்வின். 

வாழ்வின் பெரும்பகுதியை ஆய்வுகளில் கழித்த டார்வினுக்குக் காதலும் பெரும் களம்தான். ‘ஆய்வுகளுக்கு மத்தியில் குடும்பத்துக்கும் சரியாக நேரம் ஒதுக்குகிறார் டார்வின்’ எனப் பக்கத்து வீட்டுக்காரர்கள் பொறாமைப்பட்ட சம்பவமும் டார்வின் டைரியில் உண்டு. யாரோ ஒருவரோடு கல்யாணம் என்ற நிலையில் தயாராக இருந்தார் ‘எம்மா’. சம்பந்தப்பட்ட நபர், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள, நாயகனாக என்ட்ரி கொடுத்தது டார்வின்தான். ‘எம்மாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என அவர் வீட்டுக்கே சென்று சொன்ன ஹீரோ டார்வின். 

1839-ல், டார்வினுக்கும் எம்மாவுக்கும் திருமணம். டார்வின் போல அறிவியலில் ஆர்வம் இல்லை என்றாலும், இலக்கியம் படிப்பதில் கில்லாடி எம்மா. சிறுவயதிலேயே தாயை இழந்த டார்வினுக்கு நண்பன், காதலி, அம்மா, மனைவி... என எல்லாமே எம்மாதான். இருவருக்குமான காதலுக்குப் பிறந்த பத்துக் குழந்தைகள் சாட்சி. அறிவியல் மொழிக்காரனுக்கு, காதல் வசனங்களும் வரும். ஒருமுறை காய்ச்சலில் கிடந்தபோது எம்மாவிடம் டார்வின் சொல்கிறார், ‘நீ இவ்வளவு அக்கறையாகப் பார்த்துக்கொள்வாய் என்றால், தினம் தினம்கூடக் காய்ச்சலில் படுப்பேன்’ என்று.

காதலில் மட்டுமல்ல, நட்புக்கும் உதாரணம் இருக்கிறது டார்வினிடம். டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு ஆதரவாகப் பேராசிரியர் ஹென்றிட் என்பவர், ‘மனிதனின் வளர்ச்சி’ என்ற நூலை வெளியிடுகிறார். ‘பைபிளுக்கு எதிராகப் பேசுகிறார்’ என ஏற்கெனவே டார்வின் மீது தீராக் கோபத்தோடு இருக்கும் பாதிரியார்களுக்கு, இந்த நூல் திரி கிள்ளிக் கொளுத்தியது. டார்வினுக்கு வந்த எதிர்ப்புகளையெல்லாம் தடுத்துத் தாங்கிக்கொண்டவர், தாமஸ் ஹென்றி ஹக்ச்லே என்பவர். அதிகம் பேசுவதையும் வாக்குவாதம் செய்வதையும் விரும்பாத டார்வினுக்கு, தாமஸ்தான் ‘ஆக்ஸன் டார்வின்’. டார்வினுக்கு ஆதரவாகப் பல மேடைகளில் பேசினார்; விவாதம்செய்தார்; மக்களுக்குப் புரியவைத்தார். 

ஆய்வுசெய்த டார்வினும் இப்போது இல்லை; புரியவைத்த தாம்ஸும் இல்லை. டார்வினின் தேவையைவிட, தாமஸ்களின் தேவைதான் இப்போது அதிகம் இருக்கிறது. ஏனெனில், டார்வின் சொன்னது இதுதான். ‘மனிதர்கள் குரங்கில் இருந்து பிறந்தவர்கள் அல்ல; குரங்கிலி ருந்து பிரிந்தவர்கள்!’.

அடுத்த கட்டுரைக்கு