Published:Updated:

"ஏற்றிவிட வேண்டாம்... ஏணியைப் பறிக்காதீர்கள்!"

"ஏற்றிவிட வேண்டாம்... ஏணியைப் பறிக்காதீர்கள்!"
பிரீமியம் ஸ்டோரி
News
"ஏற்றிவிட வேண்டாம்... ஏணியைப் பறிக்காதீர்கள்!"

குமுறுகிறார் பாக்ஸர் துளசி ஹெலன்...பாக்ஸிங்

“பொண்ணுங்களோட பிரசவ வலியைவிட, இந்த பாக்ஸிங் ஒண்ணும் கஷ்டமில்லை. மனசுல தில், நல்ல பயிற்சி, தெளிவான வியூகம் இருந்தா... களத்தில் கலக்கலாம்!’’

- சென்னையைச் சேர்ந்த பாக்ஸர் துளசி ஹெலன்... தடதடக்கிறார் பேச்சிலும்! இவர், சர்வதேச பாக்ஸிங் போட்டிகளில் விளையாடிவரும் தமிழ்ப் பெண்.

"ஏற்றிவிட வேண்டாம்... ஏணியைப் பறிக்காதீர்கள்!"

``என் அக்கா பாக்ஸிங் கத்துக்கிட்டா, இப்போ போலீஸா இருக்கா. அவள் பாக்ஸிங் பண்ணுவதை பார்த்துதான் எனக்கு பாக்ஸிங்கில் ஆர்வம் வந்தது. ஆர்வம்

படிப்படியா லட்சியமா மாறி, இப்போ பாக்ஸிங்தான் என் வாழ்க்கைனு ஆயிடுச்சு. நான் இப்போ புரொஃபஷனல் பாக்ஸர். சில சினிமா பிரபலங்களுக்கு ஃபிட்னஸ் டிரெயினராவும் இருக்கேன்’’ எனும் ஹெலன், உலகத் தமிழ் வர்த்தக சங்கம் வழங்கும் ‘சாதனைத் தமிழச்சி’ விருதை, உலகத் தமிழர் திருநாள் விழாவில் ஆளுநரிடமிருந்து சமீபத்தில் பெற்றிருக்கிறார்.

‘‘இப்போ எனக்கு 29 வயசாகுது. 12 வயசில் பாக்ஸிங் செய்ய ஆரம்பிச்சேன். என்னோட இந்த 16 வருஷ பாக்ஸிங் பயணத்துல மாநில அளவில் 32 மெடல்கள் வாங்கியிருக்கேன். தேசிய அளவில் ரெண்டு முறை வெண்கலப் பதக்கமும், உலக அளவில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கமும் வாங்கியிருக்கேன். திறமை, வெற்றியெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். என்னோட தினசரி வாழ்க்கையைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க...’’ எனும்போது, துளசியின் வார்த்தைகள் வேகமாகின்றன.

‘‘என்னை நானே காப்பாத்திக்க வேண்டிய சூழல். என் ஏழ்மை காரணமாவும், நான் கீழ்நிலையில் இருந்து மேல் வந்தவள் என்பதாலும் என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காம நான் நிராகரிக்கப்பட்ட இடங்கள் நிறைய. அது இன்னும் தொடருது. ஆனாலும், ஒரு சுயம்புவா இவ்வளவு தூரம் வந்திருக்கேன். இப்பவும்கூட அடுத்தடுத்த போட்டிகளுக்கான ஸ்பான்ஸர்களுக்கு உயிர் வெறுக்க அலையுறது தொடர்கதையாதான் இருக்கு’’ என்று தன் பாரம் சொன்ன துளசி,

‘‘இன்னிக்கு எத்தனை நல்ல பாக்ஸர்கள் ஆட்டோ ஓட்டறாங்க தெரியுமா? காய்கறிக் கடையில வேலை செய்யுறாங்க தெரியுமா? நானும் எல்லா வேலைகளும் செய்திருக்கேன். கறிக்கடையிலகூட வேலை பார்த்திருக்கேன். திறமை இருந்தும் அதுக்கான அங்கீகாரம் தட்டிப்பறிக்கப்பட, குடும்பச்சூழலுக்காக கிடைக்கிற வேலையை செய்துட்டு வாழ்க்கையை ஓட்டுற சர்வதேச விளையாட்டு வீரர்கள் நிறையப் பேர். அரசாங்கம் கொஞ்சமாவது திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுங்க. பெரிய இடத்துப் பசங்களுக்கு மட்டும் ஸ்பான்ஸர் செய்யுறவங்க, தயவுசெஞ்சு எங்க திறமைமேல நம்பிக்கைவெச்சு, கீழ இருக்குறவங்களுக்கும் கைகொடுங்க’’ என்று மனம் வலிக்கச் சொல்லி தொடர்ந்தார்...

‘‘பிரியங்கா சோப்ரா நடிச்ச ‘மேரி கோம்’ வாழ்க்கை பத்தின படம் பற்றி எல்லாருக்கும் தெரியும். நானும்... நார்வேயைச் சேர்ந்த பெத்தே, சூஸன் எடுத்த ‘Light Fly, Fly High’ என்ற ஆவணப்படத்துல நடிச்சிருக்கேன். அது உலக அளவில் 7 விருதுகள் வாங்கிச்சு. 2010 முதல் 2013 வரை தயாரான அந்தப் படத்தில் நான் அழுதது, சிரிச்சது எல்லாமே உண்மை. இந்தியாவில் சில காரணங்களால் அந்தப் படத்தை வெளியிடுவதை நான் விரும்பவில்லை. யுடியூப்லகூட அந்தப் படத்தின் டிரெய்லர் மட்டும்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"ஏற்றிவிட வேண்டாம்... ஏணியைப் பறிக்காதீர்கள்!"

தான் இருக்கும். ஆனா, அந்தப் படம் சர்வதேச அரங்குகளில் விருதுகள் குவிச்சதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்’’ என்றவர்,

‘‘அமெச்சூர்ல இப்போ என்னால விளையாட முடியல. நேரு ஸ்டேடியத்துக்கு பிராக்டீஸ் செய்யப்போனா, வாட்ச்மேனை வெச்சு வெளிய அனுப்புவாங்க. காரணம், சில வருஷங்களுக்கு முன்னாடி அங்கே சிலர் மேல நான் கொடுத்த பாலியல் தொல்லை புகார். அதனாலேயே பல விதங்களில் முடக்கப்பட்டு, முடங்கிக் கிடந்து இப்போ எழுந்திருக்கேன். பாக்ஸிங்தான் வாழ்க்கைனு இருக்கிற என்னை, பாக்ஸிங்கே விளையாடவிடாம செய்றது எவ்வளவு கொடூரம்?! 

இந்தியாவுக்குள்ள விளையாடுறதுக்கும், உலக அளவில் விளையாடுறதுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கு. உலக அரங்குகளில் என் திறமையைத்தான் பார்ப்பாங்க, சாதியை இல்ல. ஆனா, இந்தியாவில் நான் ஜெயிக்கவேண்டிய சில மேட்சுகளில் சாதியும், பணமும் விளையாடி, தோற்கவேண்டியவரை வெற்றியாளரா உலகத்துக்கு அறிமுகப்படுத்தினப்போ நான் அனுபவிச்ச வலியை, எந்த வார்த்தைகளில் சொல்லியும் உங்களுக்குப் புரியவைக்க முடியாது. ஏழைங்களை கைதூக்கிவிடக்கூட வேண்டாம். ஆனா, நாங்களா முட்டிமோதி பிடிச்சு ஏறும் ஏணியையும் பறிச்சா, என்னதான் செய்வோம்?’’ என்று துளசி சொல்லும்போது நமக்கும் வலிக்கிறது. துளசி இப்போது

`Toneez Fitness' அகாடமியில் பயிற்சியாளராக இருக்கிறார்.

‘‘அகாடமியின் எம்.டி. ஸ்ரீராம் சாரும், என் தோழி சுபாவும்தான் இப்போ எனக்குப் போட்டிகளுக்கான உதவிகள் செய்துட்டு இருக்காங்க. ஸ்பான்ஸர்கள், எனக்குத் தேவை. நிராகரிப்பு, அவமானம், புறக்கணிப்பை எல்லாம் பற்றிக் கவலைப்படாம, என் கால்கள் வெளிச்சம் நோக்கி நடந்துட்டேதான் இருக்கும்!’’

-  துளசியின் கண்களில் வலியும், ஒளியும்.

கே.அபிநயா, படங்கள்:  சொ.பாலசுப்பிரமணியன்