Published:Updated:

முதல் நாளே சோதனை… சைபர் தாக்குதலுடன் தொடங்கிய தென் கொரியாவின் குளிர்கால ஒலிம்பிக்ஸ்!

முதல் நாளே சோதனை… சைபர் தாக்குதலுடன் தொடங்கிய தென் கொரியாவின் குளிர்கால ஒலிம்பிக்ஸ்!
முதல் நாளே சோதனை… சைபர் தாக்குதலுடன் தொடங்கிய தென் கொரியாவின் குளிர்கால ஒலிம்பிக்ஸ்!

ரசியல் ஆட்டங்களாலும், வட கொரியாவின் கீழ் நிற்பதாலும், மூன்று பக்கமும் நீர் சூழப்பட்டுள்ளதாலும் தென் கொரியாவிற்கு அவ்வப்போது சிக்கல்கள் வருவதுண்டு. இத்தனைக்கும், அளவில் சிறியது என்றாலும், வட கொரியாவைவிடத் தென் கொரியாவில்தான் மக்கள் தொகை அதிகம். அங்கிருக்கும் பியாங்சாங் (PyeongChang) என்னும் இடத்தில்தான் 2018-ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக்ஸ் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது 23-வது குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டி. பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி, 25-ம் தேதி வரை நடக்கும் இதில், இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 92 நாடுகளைச் சேர்ந்த 2,952 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியின் துவக்கநாள். பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் இருக்கும் ஒரு பகுதி அது. தோராயமாக 200 பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். எல்லோரும் பதின்பருவத்திலிருந்து, இருபத்தைந்து வயதிற்குள்ளாகவே இருந்தனர். எல்லோருக்கும் ஒரே வண்ணத்தில் உடை. கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையைப்போல சிவப்பு வர்ணம். கைகளைத் தட்டுகின்றனர். உற்சாகக் குரல் எழுப்பி, கோவையாக மிகவும் சிரத்தையுடன் செய்யப்பட்ட அது, ஒரு நடனம்போல காட்சியளிக்கிறது. அவர்கள்தான், தென் கொரியாவில், வடகொரிய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த வந்த ‘சியர்லீடர்ஸ் குழு’.

ஆனால், அவர்களின் பணி அது மட்டுமல்ல! வட கொரிய அதிபர் கிம்மின் கொள்கைகளையும், அவர்கள் நாட்டின் பெருமைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும் உலகிற்குப் புரியவைக்கவும் அவர்கள் அங்கே இருக்கிறார்கள்.   வட கொரியாவின் ‘ஆர்மி ஆஃப் பியூட்டிஸ்’ (Army of Beauties) என்று அழைக்கப்படும் அந்தக் குழு, பல வருடங்களுக்குப் பிறகு தங்கள் நாட்டைவிட்டு முதன்முதலாக வெளிவந்திருக்கிறது. அதிலிருக்கும் ஒவ்வொரு பெண்ணையும், வட கொரிய அரசாங்கம் எப்படி, எதை வைத்துத் தேர்ந்தெடுக்கிறது, தங்கள் சொந்த நாட்டிலேயே அந்தப் பெண்கள் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறார்கள் என்பதெல்லாம் மாபெரும் அரசியல். எல்லா நிகழ்விலும், ஒரு செய்தியாக அவர்கள் இடம்பெற்று விடுகிறார்கள். உலக ஊடகங்களும் அவர்களைக் குறித்து விவாதித்துச் சலித்து விடுகின்றன. ஆனால், இந்த முறை அவர்களுடன் சேர்ந்து வேறு ஒரு செய்தியும் முக்கிய இடத்தைப் பிடித்தது.  

குளிர்கால ஒலிம்பிக்ஸ் நிகழ்வைச் சீர்குலைத்து, தென் கொரியாவைத் தலைகுனிய வைக்க ஒரு சைபர் அட்டாக்கும் நிகழ்ந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, ஒலிம்பிக்ஸ் துவக்கவிழா நடைபெறுவதற்குச் சற்று முன்பு, அந்நிகழ்ச்சியின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் பார்க்க வந்த பார்வையாளர்களுக்கு டிக்கெட்கள் அச்சடித்துக் கொடுக்க முடியவில்லை. போட்டி நடக்கும் சில இடங்களில் நெட்வொர்க் எதுவும் இணைப்பில் இல்லை. கிட்டத்தட்ட, 12 மணி நேரங்கள் போட்டியை நடத்துபவர்களாலும் கூட எதையும் செய்ய முடியவில்லை. அந்த அளவிற்கு வீரியம் கொண்ட சைபர் தாக்குதல் அது! ஆம், இது சைபர் அட்டாக்தான் என்று உறுதி செய்ய, ஞாயிறன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருக்கிறார்கள் விழா ஒருங்கிணைப்பாளர்கள்.

பியாங்சாங் 2018-ன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சைபர் அட்டாக் எப்படி நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஒலிம்பிக் போன்ற பெரிய நிகழ்வுகள் நடைபெறும்போது, இவ்வகை பிரச்னைகள் சாதாரணமாக நடக்கும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் நாங்கள் சேர்ந்து எடுத்த முடிவின்படி, யார் இதை செய்தார்கள் என்பதை நாங்கள் வெளியிட விரும்பவில்லை” என்று அரைகுறையான விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தகவல்தொடர்பு தலைவர் மார்க் ஆடம்ஸ் இது முடிந்துவிட்ட பிரச்னையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, இது குறித்துப் பேசுவது சரியான ஒன்றாக இருக்காது. இது ஒரு மாபெரும் நிகழ்வின் பாதுகாப்புக் குறித்த விஷயம். அனைவரும் எங்கள் பிரச்னையைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். சைபர் அட்டாக் மீண்டும் நிகழாதவாறு, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது இந்த ஹேக்கிங் எப்படி நிகழ்ந்தது என்று விளக்கினால் அது எங்களுக்குத்தான் ஆபத்து. இப்படி ஓர் அசம்பாவிதத்திற்குப் பிறகு இதைத்தான் எந்த நிர்வாகமும் செய்யும்” என்று தெரிவித்தார்.

இவ்வாறு கூறியபின், முறையான விசாரணை முடிந்ததும், நிச்சயம் தங்கள் குழு விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும் என்றும் உறுதி அளித்தார். வட கொரியா தற்போது தென் கொரியாவுடன் சமாதான உடன்படிக்கை செய்துவிட்டதால், அவர்கள் இதைச் செய்திருப்பார்கள் என்று சிலர் குற்றம் சாட்டினாலும், அது உண்மையாக இருக்காது என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில், வட கொரியா போட்டிகளில் பங்கேற்க பட்டாளத்துடன் வந்திருக்கிறது. இது அவர்கள் அமைதியையும், நட்புறவையும் விரும்பும் நாடு என்று சுட்டிக்காட்ட சரியான மேடை என்பதால், அவர்கள் இவ்வாறு நினைக்கிறார்கள்.