Published:Updated:

அப்பவும் இப்பவும் எப்பவும் ஹீரோ ரேடியோதான்..! #WorldRadioDay

அப்பவும் இப்பவும் எப்பவும் ஹீரோ ரேடியோதான்..!  #WorldRadioDay
அப்பவும் இப்பவும் எப்பவும் ஹீரோ ரேடியோதான்..! #WorldRadioDay

சமைத்துக்கொண்டே சீரியல் பார்க்க முடியாது. சாப்பிட்டுக்கொண்டே கிரிக்கெட் பார்ப்பதுகூட முழுமையாக இருக்காது. ஆனால், சமைத்துக்கொண்டே ரேடியோ கேட்கலாம். சாப்பிட்டுக்கொண்டே ஸ்கோர் கேட்கலாம். ரேடியோ எப்போதும் வலிமையான ஓர் ஊடகம்தான். நம் அன்றாட வாழ்வில் பெரும்பாலான சமயங்களில் நாம் நுகரும் சாத்தியமிருக்கிற ஓர் ஊடகம்.

யுனெஸ்கோ அமைப்பு வானொலி இவ்வுலகிற்கு ஆற்றிய முக்கிய பங்கினைக் கருத்தில்கொண்டு அதைச் சிறப்பிக்கும் விதமாக  2011-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பிப்ரவரி 13-ம் தேதியை  "உலக வானொலி நாளாக" அறிவித்தது.

நாம் தற்போது அனுபவித்து வரும் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் ரேடியோதான் ஆதாரமாக இருந்தது. தற்போதைய கேட்ஜெட் உலகத்தில் வேண்டுமானால் வானொலி ஒரு சாதாரண கருவியாகக் கருதப்படலாம். ஆனால், அது அறிமுகமான காலத்தில் அதன் தாக்கம் என்பது மிகப் பெரியது. உலகில் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் நடக்கக்கூடிய விஷயங்களை மற்ற இடங்களுக்குத் தெரியப்படுத்தலாம் என்பதே அப்போது பெரிய ஆச்சர்யம். அத்தகைய மாற்றத்தை நிகழ்த்த ஒரு விஞ்ஞானி படையே முயன்றது. "நிக்லோ டெஸ்லா, ஜேம்ஸ் மேக்ஸ்வெல் ஆரம்பித்து இதற்கு இறுதி வடிவம் தந்த மார்கோனி"வரை வானொலி பல்வேறு பரிணாமங்களைத் தாண்டி வந்துள்ளது.

இத்தாலி கண்டுபிடிப்பாளரான மார்கோனி கம்பியில்லா தொலைத் தொடர்பு சாதனத்தை உருவாக்க விரும்பினார். ஆனால், அதற்கான சரியான வடிவமைப்பு கிடைக்காமல் மிகவும் போராடினார். இறுதியாக "ஹென்றி ஹெர்ட்ஸ்" என்ற ஆராய்ச்சியாளர் தனது ஆராய்ச்சியில் தொலைபேசி கம்பிகளுக்கிடையேயான கருத்தினை முன்னிறுத்தி ஹெர்ட்ஸ் வேவ்ஸ் என்றொரு சமன்பாட்டை நிறுவினார். யதேச்சையாக இதைப் பார்த்த மார்கோனிக்கு இதை வைத்து ஆராய்ச்சி செய்யலாமே எனத் தோன்றுகிறது. 

1895-ம் ஆண்டு மார்கோனிக்கு முதல் ரேடியோ சிக்னல் கிடைத்தது முதல் இன்று நாம் கடைசியாக கேட்ட எப்.எம்.ஒலிபரப்பு வரை வானொலியின் பங்களிப்பினால் நிகழ்ந்த நிகழ்வுகள் அளப்பரியது.

முதலில் இந்த முயற்சியைப் பலரும் நகைக்கத் தொடங்கினர் என்பதே உண்மை. ஆனாலும், மார்கோனி மனம் தளராமல் தனது ஆராய்ச்சியை இங்கிலாந்து சென்று தொடர்ந்தார். அங்கு அவருக்கு வெற்றி கிடைத்தது. அதன்பிறகு மார்கோனியின் புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. பிறகு தனக்கென்று ஒரு நிறுவனத்தை தொடங்கினார். முதல் உலகப்போர் சமயத்தில் ஒரு நாட்டின் பலத்தினை அறிய அதற்கு எவ்வளவு ரேடியோ ஸ்டேசன்கள் இருக்கின்றன என எதிர்நாட்டினர் ஆராயும் அளவிற்கு அவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 

உலகம் முழுவதும் தற்போது முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ரேடியோ ஸ்டேஷன்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் எண்பதுக்கும் அதிகமான ரேடியோ நிலையங்கள் இயங்குகின்றன. பேரிடர் காலங்களில் சாதாரண மக்கள் செய்தியறிய ரேடியோவையே நம்பி உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தீமில் உலக ரேடியோ தினம் கொண்டாடப்படுகிறது,இந்த வருடம் "ஸ்போர்ட்ஸ் மற்றும் ரேடியோ" என்ற தீமில் கொண்டாடப்பட உள்ளது. 

ரேடியோ டே மற்றும் வேலன்டைன்ஸ்-டே கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான வேலைகளை முடித்துவிட்டு ஆன்-ஏர்-இல் பறந்துகொண்டிருந்த மதுரையின் சில ஃபேவரைட் RJ-க்களை சில மணிநேர காத்திருப்பிற்குப் பின் எட்டிப்பிடித்தோம்.

ஆர்.ஜே. சிக்கந்தர் (ஹலோ எஃப் எம்)

" ஆர்.ஜே புரொஃபைல் எனக்கு உணர்வுபூர்வமானது. மக்களை என்டர்டெயின் பண்றது சாதாரண விஷயம் இல்ல. ரேடியோல நான் சொல்ற நல்ல விஷயத்தை நாலு பேர் ஃபாலோ பண்ணும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் மீடியா ரேடியோ.


ரேடியோ அண்ட் ஸ்போர்ட்ஸ்  தீம்  மக்களுக்கானது ஸ்போர்ட்ஸ்ல சாதிச்ச நெறைய பேர்  நம்ம ஊருலயும் இருக்காங்க. கோபி கண்ணன், ரஞ்சித், மாரியப்பன் இப்படி லிஸ்ட் பெருசு. அவங்களோட அனுபவத்தையும்  வெற்றியையும் பகிர்வதன் மூலமா விளையாட்டு பற்றிய ஆர்வத்தையும் விழிப்புஉணர்வையும் ஏற்படுத்துவதுதான் ஹலோ எஃப்.எம் மின் ப்ளான். சமீபத்துல திருநெல்வேலியில 45 வயது நிறைந்த பெண்மணி இளவட்டக் கல்ல அசால்ட்டா தூக்கி பின்பக்கம் போடுறாங்க.  நம்ம பழக்க வழக்கங்கள் மாறினாலும் நம்ம மரபு இன்னும் மாறல. சிலம்பம், தாயம், கிட்டி, சொட்டாங்கல் இப்படி நலிந்துபோன மரபு விளையாட்டுகளை கொண்டாடும்விதமா கிராமிய திருவிழாக்களை  முன்னெடுப்பதும் இந்த வருடத்தோட ஷெட்யூல்."

ஆர்.ஜே. சேது   (சூரியன் எஃப்.எம்) 

"என்டெர்டெயின்மென்ட தாண்டி, சமூகத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக்குற மீடியா ரேடியோ. ஜல்லிக்கட்டு நிகழ்வுக்குப் பிறகு, நமது மரபு விளையாட்டு சார்ந்த விழிப்புஉணர்வு  மக்களிடம் வரத்தொடங்கியிருக்கு. கபடிபோல மற்ற  நாட்டுப்புற  விளையாட்டுகளும் உலக அளவில் அங்கீகரிக்கப்படணும். நம்ம ஊர்ல இருந்து நிறைய வீரர்கள் உலக அரங்கில் இந்தியாவை புரொஜக்ட் பண்ணணும். அரசும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதற்கான முதல் அடியாக இந்த நாள் அமையும்".
 

ஆர்.ஜே ஜாக்சன் துரை (ரேடியோ மிர்ச்சி)

மற்ற ஊடகங்களைப்போல் ரேடியோவுக்கு தனியா டைம் ஸ்பெண்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. 'வழித்துணைபோல நானும் வருவேன்'ங்கிற  நா.முத்துகுமாரின் வரிகள் ரேடியோவுக்கும் பொருந்தும்.  எங்களுக்கு எல்லா நாளும் ’ரேடியோ டே’ தான். நான் ஹாக்கி பிளேயர். அதனால இந்த வருஷ தீம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். மேலும் நம்ம மரபு விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு நினைவுகூரும் விதமாக இந்த நாளையும் வருஷத்தையும் கொண்டாடப் போறோம்.


 ஆர்.ஜே.  தினேஷ் (ரேடியோ சிட்டி)

"பொதுவா எஃப் எம் மை தியேட்டர் ஆஃப் மைண்ட்னு (Theatre of mind) சொல்லுவோம். எங்களோட வார்த்தைகளில்  உருவாகும் உங்களுடைய  உலகம். எத்தனையோ மீடியா இருந்தும் பிரதமர் மோடி ' மன் கி பாத்' னு ஒரு நிகழ்ச்சியை  வானொலியில ஏன் பண்ணணும்? ஏன்னா ரேடியோ சுலபமா மக்களுடன் கலக்கிற ஊடகம்.  ஆரம்பத்துல இருந்து இப்போ வரை ரேடியோவுக்கான முக்கியத்துவம் குறையல. 

120 கோடி மக்கள்தொகை இருக்குற நம்ம நாட்டில் இரண்டே இரண்டு  வீரர்கள்  உலக அரங்கில் இந்தியாவின் பிரதிநிதியா கலந்துக்கிறது  வலியைக் கொடுக்குது. ரேடியோ சிட்டி மூலமா பாரா ஒலிம்பிக்ஸ்கான ஃபண்ட் கலெக்‌ஷன் இப்படி சில விஷயங்கள்  விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் பண்ணியிருக்கோம்.   நம்ம ஊர் விளையாட்டு வீரர்களைக் கௌரவப்படுத்துற விதமா இந்த நாள் அமையும்.

நம்மைத் தட்டிக் கொடுக்க மாட்டாங்களானு ஏங்குற நெறைய பேர் இருக்காங்க. கோலியையோ தோனியையோ அங்கீககரிச்ச அளவுக்கு  மற்ற வீரர்களையும் நாம அங்கீகரிக்க ஆரம்பிக்கணும்."என முடித்துக்கொண்டார்.

ரேடியோ என்பது ஒன்-வே கம்யூனிகேஷனாகக் கருதப்பட்டாலும்,அது ஏற்படுத்தும் தாக்கம் பல்வேறு தருணங்களில் 'எக்கோ'வாக எதிரொலிப்பதை உணர்ந்திருப்பீர்கள்.

ஒலி வழியே மக்களை எண்டர்டெயின் செய்துகொண்டே, தகவல்களையும், அறிவையும் ஊட்டிக்கொண்டு இருக்கின்ற இந்த ஒலி வழி ஊடகத்தின் பணி மகத்தானது.அர்ப்பணிப்பிலும் இன்பம் காணும் வகையில் தொழிலை விரும்பிச் செய்யும் ரேடியோ துறை நண்பர்களுக்கும் அவர்களின் பணியை ஊக்குவித்து சிறக்க வைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கும் உலக ரேடியோ தின வாழ்த்துக்கள்.