Published:Updated:

கசாப் மரண தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!

விகடன் விமர்சனக்குழு

மும்பை, பிப்.21,2011

கசாப் மரண தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!

மும்பை தாக்குதல் வழக்கில், பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, மும்பை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. ##~~##

மேலும், பாகிஸ்தான் பயங்கவாதிகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்தியர்கள் இருவரை விடுதலை செய்தும் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில், மராட்டிய மாநில பயங்கரவாத ஒழிப்பு படை தலைவர் கர்கரே உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தேசிய கமாண்டோ படையினர் சண்டையிட்டனர்.

அதில், முகமது அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி தவிர மற்ற அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் மீது மும்பை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, கசாபுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகளுக்கு மும்பை வரைபடத்தை வழங்கிய தீவிரவாதிகள் பாகிம் அன்சாரி, சபவுதின் அகமது ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, மரண தண்டனையை எதிர்த்து மும்பை  உயர் நீதிமன்றத்தில் கசாப் மேல் முறையீடு செய்தான்.

இந்த மனுவை நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி.மோரே ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சு விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 17 முதல் தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வக்கீல் உஜ்வல் நிகாம், "கசாபுக்கு மரண தண்டனை விதித்தது சரியே. சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் அவனும் கொல்லப்பட்ட தீவிரவாதி அபு இஸ்மாயிலும் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.

ரயில் நிலைய ரகசிய கேமராக்களிலும் பதிவாகி உள்ளன. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அன்சாரி, அகமது ஆகிய இருவரும் இந்தியர்கள். ஆனால், போலி ஆவணங்கள் மூலமாக பாகிஸ்தான் பாஸ்போர்ட் பெற்றிருந்தனர். எனவே, அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்," என வாதிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகளை கசாப் சார்பில் ஆஜரான வக்கீல்கள் அமின் சோல்கர், பர்கான் ஷா ஆகியோர் மறுத்தனர். ரகசிய கேமராக்களில் முகம் தெளிவாக தெரியவில்லை என்று கூறினார்கள். வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.

அதுபோல, அஜ்மல் கசாபும், மற்ற தீவிரவாதிகளுடன் பாகிஸ்தானில் இருந்து வரவில்லை என்றும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லிக்கு வந்ததாகவும் இந்தி திரைப்படங்களை பார்க்க மும்பை வந்தபோது ஜுஹூ கடற்கரையில் வைத்து போலீசார் தன்னை கைது செய்ததாகவும் தெரிவித்தான்.

மும்பை உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. கோர்ட்டு வளாகத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறையில் இருக்கும் கசாபுடன் விசாரணை நடந்தது. சில வாரங்களுக்கு முன் இரு தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்தன.

இந்நிலையில், பயங்கரவாதி கசாப்பின் மரண தண்டனை உறுதி செய்து, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.

இந்தியர்கள் இருவர் விடுவிப்பு...

மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நகரிலுள்ள முக்கிய இடங்களின் வரைபடத்தை தயாரித்து கொடுத்தாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய தீவிரவாதிகள் பாகீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் மீதும் மும்பை ஆர்தர் ரோடு தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கலாகி விசாரணை நடைபெற்றது. அதில், அவ்விருவரும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அன்சாரி, அகமது ஆகியோரை விடுவித்ததை எதிர்த்து மராட்டிய மாநில அரசு மேல்முறையிடு செய்திருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், அன்சாரி மற்றும் அகமது ஆகியோரை குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்த தனி நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உறுதி செய்து மும்பை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பையொட்டி, மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.