Published:Updated:

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான கையேடு

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான கையேடு

Published:Updated:
வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!
வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

மிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (CCE - Continuous and Comprehensive Evaluation) சிறப்பான வரவேற்புடன் தொடர்கிறது.

இந்த மதிப்பீட்டு முறை, பாடக் கல்வியோடு கல்வி இணைச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது. கல்வி இணைச் செயல்பாடுகள், (Co-Scholastic Activities) நான்கு தலைப்புகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

வாழ்க்கைத் திறன்கள் (Life Skills) மனப்பான்மை மற்றும் மதிப்புக் கல்வி (Attitudes and values activities) மற்றும் பாட இணைச் செயல்பாடுகள் (Com-curricular activities) ஆகியன. இவற்றின் கீழ் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இந்த இணைப்பில் முழுமையாகப் பார்ப்போம்.

தன்னம்பிக்கை தரும் தனித்திறன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பள்ளிப் பாடங்களை  எவ்வளவு சிறப்பாகப் படித்தாலும், ஒரு மாணவரை புகழ்பெறச் செய்வது அவரின் தனித்திறனே.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

நம்முடைய கைரேகை  ஒருவரைப் போல இன்னொருவருக்கு இருப்பது இல்லை. அதுபோல, ஒவ்வொரு மாணவருக்கும்  திறமைகள் வேறுபடும். மதிப்பெண் வாங்குவது மட்டுமே படிப்பு என நினைக்காமல், சின்னச் சின்னத் திறமைகளைக் கண்டறிய வேண்டும்.

ஓவியம் வரைதல், நடனம், விளையாட்டு, ஓட்டப்பந்தயம், கவிதை எழுதுதல், மனப்பாடம் செய்யும் திறமை, அழகான கைவினைப் பொருட்கள் செய்வது எனத் திறமைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

எட்டாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில், டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவரைப் பற்றிக் கொடுத்திருப்பதே, மாணவர்களின்  தன்னம்பிக்கையைக் கண்டறிந்து வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். தாமஸ் ஆல்வா எடிசனும், வால்ட் டிஸ்னியும், அகதா கிறிஸ்டி போன்ற சிறந்த எழுத்தாளர்கள்கூட ஒரு காலத்தில் டிஸ்லெக்ஸியா சுட்டிகள்தான்.

தனித்திறன்கள் நம் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவும். படம் வரைவதில் ஈடுபாடு உள்ள மாணவர்கள், கணினி உதவியால் புதுப்புது டிசைன்ஸ் உருவாக்க இயலும்.  மாணவர்களின் சுய மதிப்பீட்டை வளர்க்கவும் தனித்திறன் உதவுகிறது.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

தனக்கு எந்தத் தனித்திறனும் இல்லை என சில மாணவர்கள் நினைக்கக்கூடும். அந்த மாணவர்களை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்துடன் கையாள வேண்டும். தொடர்ந்து பேசி, சின்னச்சின்ன செயல்பாடுகளைச் செய்யவைத்து, எதில் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். அதன் மூலம் அவர்களின் திறன்களை வளர்க்க வேண்டும்.

- நா.கிருஷ்ணவேணி, ஊ.ஒ.ந.நி.பள்ளி, நல்லம்பாக்கம்.

என்னைப் பற்றி என்னைவிட அதிகம் யாருக்குத் தெரியும்?

லகில் மிகவும் கடினமான ஒன்று தன்னைப் பற்றித் தானே அறிந்துகொள்வது. அதில் வெற்றி கண்டால், இந்த உலகமே நம் வசம்.

எப்படி தன்னைப் பற்றி அறிந்துகொள்வது?

1. மாணவர்களுக்கு முதல் தேவை, தங்களைப் பற்றிய உயர்வான எண்ணங்கள். தாழ்வு மனப்பான்மையை விடுங்கள். கூச்சம், பயம் போன்றவற்றை மனதில் இருந்து அகற்றுங்கள்.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

2. ‘என்னால் ஒன்றுமே முடியாது’ என்ற எதிர்மறை எண்ணங்களை அகற்றி, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

3.வகுப்பறையில், சில மாணவர்களுக்கு கண் பார்வையில் குறைபாடு இருப்பது வழக்கம். அத்தகைய சூழலில், கரும்பலகையில் உள்ள எழுத்துகள் தெளிவாகத் தெரியாமல்போகலாம். இதுபோன்ற நேரங்களில் உங்கள் குறைகளைத் துணிந்து ஆசிரியரிடம் கூறுங்கள். சந்தேகம் கேட்டால், நம்மை திட்டுவார்களோ எனப் பின்வாங்காதீர்கள். பிறகு, உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்காமலேயே போய்விடும்.

4. ஓவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன், அந்த நாள் முழுவதும் நீங்கள் செய்த செயல்களை நினைத்துப் பாருங்கள். அதில் தவறுகள் இருந்தால், அடுத்த முறை அவ்வாறு நிகழா வண்ணம் திருத்திக்கொள்ளுங்கள்.

5.
காலையில் நேரம் கழித்து எழுந்து, அவசரமாக பள்ளிக்கு வந்தவர்களுக்கு தலைவலி, வயிற்றுவலி ஏற்பட்டிருக்கும். இதற்கான காரணத்தை யோசித்தால், காலை உணவைத் தவிர்த்திருப்பீர்கள். எனவே, எந்தக் காரணத்துக்காகவும் காலை உணவைத் தவிர்க்காதீர்.

6. தவறு என்றால், சுட்டிக்காட்டவும் சரி என்றால், தட்டிக்கொடுக்க மறவாதீர்கள். அதுவே, உங்கள் பண்பை எடுத்துக்காட்டும் கண்ணாடி.

7.வாய்ப்புகள் வரும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால், அதுவே உங்களை உயர்த்தும் ஏணி. நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. காரணம், ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

8. பிறர் செய்த உதவியை மறவாதீர்கள். பிறர் செய்த தீமையை உடனே மறந்துவிடுங்கள். அது உங்களின் நல்ல குணத்தைப் பிரதிபலிக்கும். சக மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுங்கள். உங்களின் மதிப்பு தானாக உயரும்.

9. பலருக்குத் தங்களின் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இல்லை. வெற்றி, தோல்விகளைச் சமமாக எண்ணுங்கள். அது, உங்கள் மனவலிமையை அதிகரிக்கும்.

இவை அனைத்தையும் செய்தால், உங்களைப் பற்றி உங்களைவிட அதிகமாக அறிந்தவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

வாழ்க்கைத் திறன்களை வளர்த்தெடுப்போம்!

மது பழக்கங்களே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எனவே, பழக்கங்களை நெறிப்படுத்துவோம்.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

பேசும் திறன் வளர்த்தல்

நம் கருத்தைக் கூறும்போது, கேட்பவரின் கண்களைப் பார்த்துக் கூற வேண்டும். பேசும்போது, கைகளைப் பிசையாமல், நெளியாமல் மையக் கருத்தைவிட்டு விலகாமல் பேச வேண்டும்.

பேசும்போதும், விவாதங்களில் ஈடுபடும்போதும் சிறப்பாகப் பங்கேற்க, வாசிப்புப் பயிற்சி உதவும். பதட்டம் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் அழகாகவும் சுருக்கமாகவும் பேசுதல் வேண்டும்.

ஒரு தலைப்பு குறித்து பேசுவதற்கு, அந்தத் தலைப்பு சார்ந்த கருத்துக்களை நன்கு படித்து, பயிற்சி மேற்கொண்டு எளிய நடையில் பேசுதல் நல்லது.

துணிந்துரைத்தல் / மறுத்துரைத்தல்

அந்நியர் மட்டுமல்லாது, தெரிந்தவராக இருப்பினும் தவறான நோக்கத்துடன் கொடுக்கும் எந்தப் பொருளையும் (நமக்கு பிடித்ததாக இருந்தாலும்) வாங்கக் கூடாது. எனக்கு வேண்டாம் எனச் சொல்லிவிட வேண்டும்.

வகுப்பறையின் உள்ளே...

குழுச் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, சிறப்பாகப் பங்காற்ற வேண்டும். குழுக்களை வழிநடத்தி,  தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வகுப்பறையில் சேரும் காகிதங்களைச் சேகரித்து விற்று, வகுப்பறைக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.

வகுப்பறைக்கு வெளியே...

பள்ளி மைதானங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு, குழுவாகப் பராமரிக்கலாம். சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தலாம்.

பள்ளிக்கு வரும்போதும் வீட்டுக்குச் செல்லும்போதும் தனித்துச் செல்லாமல், பிற மாணவர்களுடன் சேர்ந்து செல்வது நல்லது, பாதுகாப்பானதும்கூட.

பகுத்தறியும் திறன்

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

புத்தகங்கள் படிப்பதும், கலந்துரையாடல் மற்றும் விவாதங்களில் கலந்துகொள்வதும், பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்வதும் பகுத்தறியும் திறனை வளர்க்கும். ஒரு பிரச்னை குறித்துப் பல்வேறு வழிகளில் தீர்வு காண்பதும், மற்றவர் சூழ்நிலைகளில் நின்று யோசிப்பதும், யாருடைய மனதும் பாதிக்காதவாறு சூழ்நிலைகளைக் கையாள்வதும் பகுத்தறியும் திறனை வளர்க்கும்.

- மூ.சங்கீதா, அ.பெ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

நட்பை வளர்க்கும் குழுச் செயல்பாடுகள்!

ரு சிறிய குச்சியை எளிதாக உடைத்துவிடலாம். ஆனால், 100 சிறிய குச்சிகளை ஒன்றாக இணைத்தால், எளிதில் உடைக்க முடியாது. 

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

கல்வி இணைச் செயல்பாடுகளில் முக்கியமானது, குழுவாக இணைந்து செய்யப்படுவது. அவ்வாறு செய்யும்போது, மாணவர்களின் பல்வேறு நற்பண்புகள் வெளிப்படும்.

ஒரு செயலை தனி ஒரு ஆளாகச் செய்வதற்கும், குழுவாக இணைந்து செயல்படுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. குழுச் செயல்பாட்டின் மூலம், குழுவில் உள்ள அனைத்து  உறுப்பினர்களின் திறன்களும் வெளிப்படும். தனித்த திறமைக்கும், கூட்டுத்திறமைக்கும் உள்ள வேறுபாட்டை மாணவர்களுக்கு நன்கு விளக்கினால், அவர்கள் முழு ஈடுபாட்டோடு செயல்பட முன்வருவார்கள்.

குழுவில், முன்னின்று பணியாற்ற ஒரு சிலர் ஆர்வமாக இருப்பர். பிறர் கருத்துக்கு மதிப்பு அளிப்பதால், நல்ல பண்பு மாணவர்களிடையே வளரும்.

ஒருசில மாணவர்கள், செயலை முதலில் தொடங்கி மற்றவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படுவர். தன் குழு சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அனைவரும் பொறுப்புமிக்கவராகச் செயலில் ஈடுபடுவர். தவறு செய்பவர்கள், குழுவின் பிற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும்போது, அதனை நேர்மறையாக எடுத்துக்கொண்டு சரிசெய்துகொள்ள முயல்வர்.

பள்ளியில் நடக்கும் விழாக்களில், அனைவரும் ஒன்றிணைந்து ஆர்வமாகப் பணியாற்றுவார்கள். அதை, ஆசிரியர் நன்கு கவனிக்க வேண்டும். வகுப்பில் செய்யும் குழுச் செயல்பாடுகளில் அதை நினைவுபடுத்தி உற்சாகமாகச் செய்யவைக்கலாம்.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

தானே தலைமை ஏற்றுச் செயல்பட முன்வரும் மாணவர்களும் உண்டு. அவர்களை இனம் கண்டு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாணவனுக்கும் தலைமை ஏற்கும் வாய்ப்பினை வாரம் ஒரு முறை வழங்கி, அவர்களின் தலைமைப் பண்பினை மதிப்பிடலாம். குழு விளையாட்டுகளான கபடி, கோ-கோ போன்ற விளையாட்டுப் போட்டிகளை நிகழ்த்தியும் மதிப்பிடலாம்.

வகுப்பறையைத் தூய்மையாக வைத்திருக்க, வகுப்புகளிடையே போட்டிகளை நடத்தி, சிறப்பான வகுப்பினருக்கு பரிசு அளிக்கலாம். இதன் மூலம் அனைவரிடமும் குழுமனப்பான்மை ஏற்படும்.

சின்னச் சண்டையால் பேசிக்கொள்ளாத மாணவர்களை ஒரே குழுவில் இணைப்பதன் மூலம், சண்டை தீர்ந்து, பழம் விட்டுக்கொள்வர்.

- இரத்தின புகழேந்தி,

அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.

மாணவர் கடமைகள்!

மாணவர்கள் கல்வியுடன் பின்வரும் செயல்களையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

மனப்பான்மைகளும் மதிப்புகளும்

நமது நாட்டின் சின்னங்கள் மற்றும் மாநில அரசுச் சின்னங்களைத் தெரிந்துகொண்டு, அதற்கு தக்க மரியாதை செலுத்த வேண்டும். 

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தினங்களில் நடைபெறும் கொடியேற்றங்களில் தவறாமல் கலந்துகொண்டு, தமிழ்த்தாய் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் பாட வேண்டும்.

பாராட்டத்தக்க பண்புடைமை

எந்தச் சூழ்நிலையிலும் பொருத்தமான பண்பையே வெளிப்படுத்த வேண்டும்.

நாம் சொல்லும் சொல்லிலும், செய்யும் செயலிலும் மற்றவர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

நண்பர்களுக்கு உதவுபவராகவும், அவர்களுக்குப் பிடித்தமானவராகவும் இருக்க வேண்டும். கோபம் வரும் சூழ்நிலையிலும் பண்பைத் தவறவிடக் கூடாது.

பொதுச்சொத்தைப் பாதுகாப்பது முக்கியம்.  பள்ளிக்கூடத்தில் உள்ள அனைத்துவிதமான பொருள்கள், வகுப்பறைச் சுவர்களை, நம் வீட்டுப் பொருள்களைப் போல பார்த்துக்கொள்ள வேண்டும்.

மின்சாதனப் பொருள்களைத் தேவைப்படும்போது  மட்டுமே பயன்படுத்தி, மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்.

மற்றவர்களால் கலை, பண்பாட்டுச் சீரழிவு ஏற்பட்டால், அதைத் தடுக்க வேண்டும்.

நடந்து செல்லும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் விதிகளைப் பின்பற்றி, மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும். விளையாட்டுத் திடலில் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மதிப்புகள்

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

மக்காத பொருள்களான பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைக்கவும், மறு பயன்பாடு மற்றும் மறு சுழற்சி பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

நேரம் தவறாமை மற்றும் கடமை தவறாமை

பள்ளிக்குச் சரியான நேரத்தில் செல்ல வேண்டும்.

கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடங்களை தவறாமல் செய்ய வேண்டும்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.

 தொடர்புகொள்ளும் திறன்!

மூகத்தில் ஒருவரை நல்ல மனிதராகக் காட்டுவதில் முக்கிய இடம், தொடர்புகொள்ளும் திறனுக்கு உண்டு.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

தொடர்புகொள்ளுதல் என்பது இரு வகைகளில் நடைபெறுகின்றன.

ஒன்று, தனக்குத்தானே தொடர்புகொள்ளுதல், மற்றொன்று, மற்றவர்களுடன் தொடர்புகொள்ளுதல்.இவற்றில் முதலாவது, அவ்வளவாகப் பேசப்படுவது இல்லை. காரணம், இது முழுக்க முழுக்க தனி மனித உளவியல் சம்பந்தப்பட்டது. ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், தன் செயல்களைப் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் தனக்குத்தானே ஆராய்ந்து பார்ப்பது. இது, வெளியில் தெரிவது இல்லை. ஆதலால், இதை யாரும் பெரிதாகக் குறிப்பிடுவது இல்லை. ஆனால், ஒவ்வொருவரும் தன்னைப் பற்றித் தனக்குள் தொடர்புகொள்ளுதல் அவசியம். இது சரியாக நடந்தால், சமூகத்தில் பல பிரச்னைகள் குறையும்.

அடுத்தது, மற்றவருடன் உரையாடுதல். இது, வார்த்தைகள் மூலம், சைகைகள் மூலம் என இரண்டு விதமாக நடைபெறுகின்றன.

வார்த்தைகள் மூலம்: இது வாய்மொழியாகவோ, எழுத்து வடிவத்திலோ அமைகிறது. வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, கேட்பவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படியும், சுருக்கமாகவும், குழப்பம் இல்லாமலும் எடுத்துரைக்க வேண்டும்.

கடிதம் எழுதுதல், குறுஞ்செய்தி அனுப்புதல், அலுவலகம் சம்பந்தமான மின்னஞ்சல் அனுப்புதல் போன்றவை எழுத்துத் தொடர்புக்குப் பயன்படுபவை. உறவினர்களுக்கு எழுதும் கடிதமும், அலுவலகத் தொடர்புக் கடிதமும், முற்றிலும் வேறுபட்டவை. அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் நன்றி கூறவேண்டும்.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

சைகைகளின் மூலம்: சில நேரங்களில் நம் சைகைகள், மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளும்படி அமைந்துவிடலாம்.  அது, எதிர்மறை விளைவுகளைத் தந்துவிடலாம். ஆகவே, சைகை மூலம் தொடர்புகொள்கையில், மிகமிகக் கவனமாக உடல் அசைவுகளைப் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக, வயதில் மூத்தவர்களைத் தொலைவிலிருந்து அழைக்க நேரும்போது, கையசைத்து அழைப்பது நல்லது அல்ல. ஒருவரிடம் உரையாடும்போது, விழிகளைத் தாழ்த்திப் பேசுவதோ, எங்கோ பார்த்தபடி உரையாடுவதோ நம் ஆளுமைக் குறைப்பாட்டின் வெளிப்பாடாகவே கருதப்படும். விழிகளைப் பார்த்துப் பேசுதலே சிறப்பாகத் தொடர்புகொள்ளும் முறை.

ஆகவே, பள்ளியிலும் பொது இடங்களிலும் தொடர்புகொள்ளும்போது மேலே கூறியவற்றை நினைவில்வைத்து, சிறப்பாகத் தொடர்புகொள்ள முயலுங்கள். வாழ்வில் சிறந்த நிலையை அடைய வாழ்த்துகள்!

- து.விஜயலட்சுமி, அ.ஆ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாமா... கூடாதா?

டகங்கள் வழிக் கல்வி கற்பித்தல் என்பது இன்று நடைமுறையாகிவிட்டது. சாதாரண வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ் என மாறிவிட்டது. 

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

தேர்வுக்கு வினாத்தாள் தந்து, அதற்கான விடைத்தாள்களைத் திருத்துவது பழைய முறை. இ்ன்றைய நடைமுறையில், ஆன்லைன் டெஸ்ட் வளரத் தொடங்கிவிட்டது. ஆசிரியர் மட்டுமே தயாரித்துக் கொடுத்த ஒரு செயல்பாட்டை, மாணவர்கள் கற்றுக்கொண்டு, தாமாகத் தயாரித்து வழங்கும் முறை வந்துவிட்டது.

கற்பித்தலுக்கான கருவிகளாகச் சார்ட், மின்னட்டை ஆகியவற்றோடு நவீன தொழில்நுட்பக் கருவிகள் வந்துவிட்டன. அதனை, ஆசிரியரும் மாணவர்களும் ஒன்றாக இணைந்து தயாரிக்கும் பணியும் தொடங்கிவிட்டது. அதாவது, மாணவர்களுடன்    சேர்ந்து ஒரு மென்பொருளை ஆசிரியர் கற்கிறார். இருவரும் இணைந்து அந்த மென்பொருளைக்    கற்பித்தல், கற்றலுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.  

எனது ஆன்ட்ராய்டு போனில் com phone என்கிற இலவச செயலியை டவுண்லோடு செய்தேன். பிறகு, அதை எப்படி இயக்குவது என்பதை மாணவர்களுக்குக் கற்றுத்தந்தேன்.  படிமத்தை டவுண்லோடு செய்து ஏற்றுவது, படிமத்துக்குப் பின்னணிக் குரல் கொடுப்பது, அதற்கான தலைப்பிடுவது ஆகிய செயல்பாடுகளை மட்டும் செய்தால் போதும். இறுதியில் share செய்தால், அந்தச் செயலியே, போட்டோ ஸ்டோரி வீடியோவாக மாற்றிவிடும். நாம் விரும்பும் பகுதிக்குப் பகிர்ந்துவிடும். அல்லது share (மின்னஞ்சல், யு டியூப்) செய்துவிடும்.

ஒரு பாடத்துக்கான படங்களைத் திரட்டுதல், அதற்கான பின்னணிக் குரல் கொடுத்தல், எழுத்தாக்கம் என்பதை   மாணவர்களே உருவாக்குகின்றனர். பாடக் கருத்தில் உள்ள பிழைகளைத் திருத்தித்தருவதே ஆசிரியரின் பணி. உதாரணமாக, எம் பள்ளி மாணவர்கள், மூவிடப் பெயர்கள் என்பதற்கான கருத்துருவைத் தயாரித்தனர். அதில் உள்ள பிழைகளை மட்டுமே நான் திருத்தினேன். தன்மை, முன்னிலை, படர்க்கைக்கான சான்றுகளாக   அவர்களாகவே நடித்தனர். இவற்றைப் பற்றிய விளக்கங்களுக்கும் மாணவர்களே குரல் கொடுத்தனர். பிறகு, அவர்களாகவே தயாரித்துக் கொடுத்தனர்.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

ஒவ்வொரு செல்பேசியிலும் Voice Recorder  இருக்கும். அதில்,  ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு மதிப்பெண் வினா விடையைத் தயாரிக்கலாம்.  உதாரணமாக, ஒரு மாணவன் கேள்விகளைக் கேட்க, ஒரு மாணவி பதில்களைச் சொல்லிக்கொண்டே வரலாம். அதனைச் சேமித்து, மாணவர்களின் அலைபேசியிலும் இணையதளத்தில் பகிரலாம்.

ஆக, தொழில்நுட்பத்தை நல்ல வழியில் பயன்படுத்தி, ஒலிப்பேழை, வீடியோ ஆகியவற்றைப் பாடங்களுக்குத் தயாரிக்கலாம்.

- ரா.தாமோதரன், அ.உ.நி.பள்ளி, மெலட்டூர், தஞ்சாவூர்.

பாராட்டு எனும் டானிக்!

பாராட்டுதல், மிகச் சிறந்த பண்பு. பாராட்டு, தருபவருக்கும் பெறுபவருக்கும் மகிழ்வைத் தரக்கூடியது.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

கல்வி கற்பித்தலிலும், கற்றலிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பது பாராட்டு. ஒருவரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைக்கும் வல்லமை பாராட்டுக்கு உண்டு.

குறிப்பாக, வகுப்பறையில் பாராட்டும் குரல், அதிகம் ஒலிக்க வேண்டும். அது, வகுப்பறையில் ஒரு நேர்மறை அதிர்வை ஏற்படுத்தும். வகுப்பறைச் செயல்பாடுகளை மேலும் ஊக்குவிக்கும் ஒரு வினை ஊக்கியாகச் செயல்படும்.

ஒரு மனிதர், ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் அவரது ஆயுள் அதிகரிக்கிறது என்பார்கள். ஒரு வகுப்பில் எத்தனை முறை பாராட்டும் குரல் ஒலிக்கிறதோ, அத்தனை முறை ஒரு மனிதன் நல்வழியில் செல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எங்கள் வகுப்பில் இப்படிப் பாராட்டுதல் மூலமாகவே பலர் நல்வழிப்படுத்தப்பட்டு, படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, உருவத்தில் அனைவரையும் பயமுறுத்தும்படி இருக்கும் ஒரு மாணவரை, மற்ற மாணவர்கள் ‘ரவுடி’ என்று கேலி செய்தனர். இந்தக் கேலி, சாதுவான அந்த மாணவனை, முரடனாக  மாற்றிக்கொண்டிருந்தது. இதை மாற்ற, அந்த மாணவனை அடிக்கடி பாராட்டிக்கொண்டிருந்தேன். அவன் முதலில் வெட்கப்பட்டான்; பிறகு பெருமைப்பட்டான்; அதன் பிறகு மற்ற மாணவர்களைப் போல தன்னை உணர ஆரம்பித்தான். மற்ற மாணவர்களின் கேலியும் குறைந்தது. தற்போது,      11-ம் வகுப்பு சென்றுள்ள அந்த மாணவன், நல்ல புரிதலுடனும் முதிர்ச்சியுடனும் நடந்துக்கொள்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பாராட்டு, ஒரு மாணவனை எந்த அளவுக்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டு.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

மாணவர்கள், தங்களுக்குள் நல்ல செயலைச் செய்பவர்களைப் பாராட்டும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவரை மனம் திறந்து பாராட்டிவிட்டால், அதைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாக உழைப்பார். இதைப் பார்க்கும் இன்னொருவர், தானும் ஆசிரியர் பாராட்டும் மாணவராக மாற முயற்சி எடுப்பார்.

மாணவர்களுக்குப் பாராட்டு எனும் டானிக்கைக் கொடுக்க ஒருநாளும் தயங்கக் கூடாது.

- து.விஜயலட்சுமி, அஆமே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

இணைச் செயல்பாடுகளுக்கு உதவும் இணையதளம்!

ணையதளங்களில் ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை கல்வி கற்பதற்குப் பயன்படுத்தலாம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உதவியோடு இணையத்தைப் பயன்படுத்துவது நல்லது. http://nroer.in/home/

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

மத்திய அரசின் என்.சி.ஆர்.டி-யின் இணையதளம். தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான புதிய தகவல்கள் உள்ளன. செய்திகளாக மட்டுமல்லாமல், வீடியோ, ஆடியோ, ஆவணங்கள் என சுவாரஸ்யமான வடிவில் இருக்கின்றன.

http://www.tamilvu.org/

இந்தத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கலாம். திருக்குறள், பாரதியார் பாடல்கள், தமிழின் முக்கியமான இலக்கியங்கள், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் படிக்கக் கிடைக்கின்றன.

http://learnenglishkids.britishcouncil.org/en/kids-games    

ஆங்கிலத்தை சிறு விளையாட்டுகள் மூலம் இந்த இணையதளத்தில் கற்கலாம். ‘நீளமான கால்களும் கழுத்தும்கொண்ட விலங்கு எது?’ எனக் கேட்டிருக்கும். மேலே ஒவ்வோர் எழுத்துக்கும் கோடுகள் விடப்பட்டிருக்கும். கீழே A,B,C,D-யின் அனைத்து எழுத்துகளும் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் Giraffe என்று சரியாக அடித்தால் பச்சை நிறத்திலும், தவறாக அடித்தால் சிவப்பு நிறத்திலும் அந்த எழுத்துகள் தெரியும்.

http://englishteststore.net/

http://www.english-4kids.com/

https://www.britishcouncil.in/

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

உங்களுடைய ஆங்கிலத் திறனைச் சோதித்துப்பார்த்து, வெரிகுட் வாங்க ஆவலா? உங்களுக்காவே மேலே உள்ள இணையதளங்கள் காத்திருக்கின்றன.

http://www.k5learning.com/cursive-writing-worksheets/cursive-words

ஆங்கிலத்தில் அழகான கையெழுத்துடன் எழுத, பயிற்சி அளிக்கும் தளம் இது.

http://edu.tamilclone.com/

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள, எளிய தமிழ் நடையில் உதவும் தளம் இது.

www.brainpop.com/

அனைத்துப் பாடங்களும் அனிமேஷன் வீடியோக்களாக இந்தத் தளத்தில் உள்ளன. ஆங்கிலம், கணக்கு, ஹெல்த் எனப் பல பிரிவுகளில் அசத்தலான வீடியோக்கள் உள்ளன.

www.palli.in

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

பத்தாம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களுக்கும் வலைப்பூக்களின் இணைப்புகளை இந்தத் தளத்தில் பார்க்கலாம். அறிவியல் பக்கத்துக்குச்  சென்றால், எளிமையான சோதனைகள், ஒரு நிமிட வீடியோக்கள் ஏராளம் உள்ளன.

http://www.classtools.net/

இது, விளையாட்டுகளை உருவாக்கிட உதவும் தளம்.  ஆசிரியர்கள், தங்கள் பாடத்துக்குத் தேவையான விளையாட்டுக்களை உருவாக்கி, மாணவர்களிடையே பகிர்ந்துகொள்ளலாம்.

நம்மால் திரும்பப் பெறவே முடியாத ஒன்று, நேரம். அதை, இதுபோன்ற இணையதளங்களில் செலவழித்து பயனுள்ளதாக மாற்றுவோம்.

- ஸ்ரீதிலீப், அ.உ.நி.பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்.

சாரணர் இயக்கம்!

சிறுவர்களின் நற்பண்புகளை வளர்க்கும்பொருட்டு உருவாக்கப்பட்டதே, சாரணர் இயக்கம். தகுந்த உடற்பயிற்சி, திட்டமிட்ட செயல்வேகம் மூலம் சிறுவர்களை ஒன்றிணைத்தால், பல சாதனைகள் புரியலாம் என்பதை நிரூபிக்கும் பேரியக்கமே சாரணர் இயக்கம்.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

மாணவர்கள், பள்ளிப் பருவத்திலேயே பொதுநலத் தொண்டில் ஆர்வம்கொள்ள, இத்தகைய இயக்கங்களில் உறுப்பினராகித் தொண்டுகள் புரிதல் வேண்டும்.

சாரணர்களின் குறிக்கோள்

‘எப்போதும் தயாராய் இரு’ என்பதுவே சாரணரின் முதன்மையான குறிக்கோள்.

1. கடவுள், அரசு, தாய்-தந்தை, பெரியோர் ஆகியவர்களுக்கு என் கடமைகளை ஆற்றுவேன். 2. பிறருக்கு உதவி புரிந்திட எந்த நேரமும் தயாராக இருப்பேன். 3. சாரணர் இயக்கச் சட்டங்களை மதித்து நடப்பேன் என மூன்று விரல்களால் வணக்கம் செய்து, உறுதிமொழிகளைக் குறிப்பிட வேண்டும்.

பள்ளிகளில் சாரணர் தொண்டு

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

பள்ளிகளில், சாரணர் இயக்கப் பயிற்சிபெற்ற ஆசிரியர் ஒருவரின் கட்டுப்பாட்டில், சாரணர் இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒற்றுமை, பொது மக்களுக்கு உதவி செய்தல், கடமை தவறாமை போன்ற நற்குணங்களைச் சாரண இயக்கத்தின் மூலம் மாணவர்களிடையே உருவாக்கிட வேண்டும்.

செஞ்சிலுவைச் சங்கம்

‘காலத்தினாற் செய்த உதவி...’ என்ற வள்ளுவரின் வாக்குப்படி, மனிதர்க்குத் தேவையான நேரத்தில் தேவையான தொண்டாற்றும் அமைப்பே செஞ்சிலுவைச் சங்கம்.

இந்திய செஞ்சிலுவைச் சங்கம்: 1920-ம் ஆண்டில் இந்திய அரசு சட்டம் இயற்றி, ‘இந்திய செஞ்சிலுவைச் சங்கம்’ ஏற்படுத்தியது.

கொடி: இந்தச் சங்கத்தின் கொடி, வெள்ளை நிறத்தில் சிவப்பு சிலுவைச் சின்னம் கொண்டது.

நோக்கம்: போரில் மற்றும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதப் பாகுபாடும் பார்க்காமல் மருத்துவம் செய்வது.

வளர்ச்சி: 1863-ம் ஆண்டு, 13 நாடுகளில் இதன் கிளைச்சங்கங்கள் நிறுவப்பெற்று, இப்போது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது.

தன் நாட்டவர்க்கு மட்டுமின்றி எந்நாட்டவர்க்கும் தொண்டுசெய்யும் இந்தச் சங்கம், இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அமைக்கப்பெற்று நன்கு செயல்படுகிறது. இந்தச் சங்கத்தில் மாணவர்களை உறுப்பினராக இணைத்து பொதுப்பணி ஆற்றுவோம்; நாட்டு நலம் போற்றுவோம்.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

இளம் செஞ்சிலுவைச் சங்கம்: பள்ளித் தலைமை ஆசிரியரின் மேற்பார்வையில், செஞ்சிலுவைச் சங்கத்தில் ஈடுபாடு உடைய பள்ளி ஆசிரியர் ஒருவரால் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மாணவர்களிடையே, மனிதநேயத்தை வளர்க்கும் கல்வி இணைச் செயல்பாடு இது.

தேசிய பசுமைப் படை

புவி வெப்பமாவதைக் குறித்து அனைத்து நாடுகளும் கவலைப்படும் இந்தச் சூழலில், தேசிய பசுமைப் படையின் பணி முக்கியமானது. இது, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டம்.

பள்ளியில் தேசிய பசுமைப் படைகளின் பணிகள்: சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல், பாலித்தீன் பயன்பாட்டைக் குறைக்க விழிப்புஉணர்வு பிரசாரம் மேற்கொள்ளுதல், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதை விளக்கிக் கூறுதல், மரக்கன்றுகளை நடுதல்,  மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரிக்க உதவுதல், குண்டு பல்புக்கு பதில் LED பல்புகளைப் பயன்படுத்த வலியுறுத்துதல் என இந்த உலகைப் பசுமையாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அனைத்துமே இதன் பணிகள்தான்.

மாணவர்கள், கல்வியோடு சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப்படை போன்ற சமூகப் பணிகளிலும் ஆர்வத்தோடு ஈடபட வேண்டும்.

- தி.முத்துமீனாள்,சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.

கல்வி இணைச் செயல்பாட்டுக்கு உதவும் மன்றங்கள்!

வ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பாடத்துக்கும் மன்றங்கள் உள்ளன. அவற்றின்  மூலம் என்னவெல்லாம் செய்யலாம்?

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

தமிழ் மன்றம்!

அந்தப் பகுதியின் புகழ்பெற்ற புலவர் ஒருவரின் பெயரைத் தமிழ் மன்றத்துக்குத் தலைப்பாக வைக்கலாம். எங்கள் கும்பகோணம் பகுதியில் வாழ்ந்த சத்திமுத்தப்புலவரின் பெயரை, தமிழ் மன்றத்தின் பெயராக வைத்திருக்கிறோம். தமிழ் அறிஞர்களின் பிறந்தநாள் விழாவில், பேச்சுப் போட்டி,  செய்யுள் பகுதிக்கான ஓவியப் போட்டி, வாரந்தோறும் கவிதை, கதை, விநாடி-வினா போட்டிகளை நடத்தலாம்.  தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை, படைப்புப் பலகையில் ஒட்டிப் பாராட்டலாம்.

ஆங்கில மன்றம்!

ஆங்கில எழுத்து, தொடர் பற்றிய அறிவை வளர்க்க வேண்டும். வாரம் ஒரு கவிதை, வாரம் ஒரு கதை, வாரம் ஒரு விநாடி-வினா போட்டியை வகுப்பறையில் நடத்தலாம். மாணவனின் பேச்சாற்றலை வளர்க்க, பேச்சுத்திறன் அதிகரிக்கும் விடியோக்களைக் காண்பித்து பயிற்சி தரலாம். ‘பேச்சு ஆங்கிலம்’ என்ற பயிற்சி மூலம்  மாணவர்கள், தமக்குள் பேசும் தன்மையை உருவாக்க வேண்டும்.

கணித மன்றம்!

விளையாட்டு வழியில் கணிதத்தைக் கற்பிக்க,  வீடியோக்களைக் காட்டலாம். கணிதப் புதிர்களை வாரம் ஒருமுறை வெளியிட்டு, அதற்கான பதிலைச் சொன்னவர்களுக்குப் பரிசு அளிக்கலாம். சிறப்பாகச் செயல்படும் மாணவர்களைப் பாராட்டி, விருது வழங்கலாம்.

அறிவியல் மன்றம்!

ஒரு கண்டுபிடிப்பில் உள்ள சாதக, பாதகங்களைக்  கண்டறிந்து பட்டியலிடலாம். புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்யலாம். மாணவர்களின்  படைப்பாற்றலை வளர்க்கும் வகையில், மாணவர்களைக்கொண்டே புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போட்டிகளை நடத்தலாம்.

சமூக அறிவியல் மன்றம்!

மாணவர்களின் வசிப்பிடப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மனிதர்களின் கதையை, வரலாற்றை எழுதி வரச் சொல்லி படைப்புப் பலகையில் ஒட்டிப் பாராட்டலாம். உதாரணமாக, எங்கள் மெலட்டூர் பகுதியில் நாட்டிய மேளா புகழ்பெற்றது. அதைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தரச் செய்தோம்.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

சுகாதார மன்றம்: மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சுகாதார விழிப்புஉணர்வை ஏற்படுத்துவது.

கலாசார மன்றங்கள்: நம் நாட்டில் கொண்டாப்படும் விழாக்களின் காரணங்களை, பள்ளியிலும் பொது இடங்களிலும் பிரசாரம் செய்வது, பள்ளி விழாக்களை ஒருங்கிணைப்பது.

மன்றங்களில் ஆர்வத்தோடு ஈடுபட்டு, கல்வி இணைச் செயல்பாட்டைப் பயனுள்ளதாக மாற்றுவோம்.

- ரா.தாமோதரன்,அ.மே.நி.பள்ளி, மெலட்டூர், தஞ்சாவூர்.

 உடலினை உறுதிசெய்வோம்!

டல் ஆரோக்கியமாக இருந்தால்தான், படிப்பில் கவனம் செலுத்த முடியும்.  

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

மாணவரின் உடல்நலத்தில், சுற்றுச்சூழல் சுகாதாரம் முக்கியப் பங்குவகிக்கிறது. அதனால், சுகாதாரத்தைப் பள்ளிகளில் தொடங்கி, சமூதாயத்திலும் தொடர வேண்டும். ஆகவே, மாணவர்களிடம் சுகாதாரம் சார்ந்த முறையான அறிவையும், மனப்பான்மையையும் வளர்த்து, அதற்கேற்ப நடத்தையில் மாற்றத்தை உருவாக்கும் வகையில், சுகாதாரக் கல்வி அமைய வேண்டும். கீழ்க்கண்ட முயற்சிகள் மூலம் மாணவரின் உடல்நலம் பேணப்பட்டு, வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்.

1. தன் சுத்தம் குறித்த விழிப்புஉணர்வு, மாணவரின் உச்சி முதல் பாதம் வரை தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் நோய் வராமல் தவிர்க்க உதவும். உதாரணமாக, தலைமுடியை வாரம் ஒருமுறை சிகைக்காய், அரப்புத்தூள் போட்டு அலசி, குளிக்கச் செய்தல். காலை எழுந்தவுடன் சுத்தமான குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவச் செய்தல். பாதுகாப்பான குடிநீர் அருந்த வலியுறுத்துதல்.அசுத்தமான குடிநீரால் உருவாகும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

2. உணவுப் பொருட்களைத் தொடும் முன்பும் உணவு உண்ட பின்பும் கைகளை சோப் போட்டு கழுவச் செய்தல். இதேபோல மலம் கழித்த பின்பும் சோப் போட்டு கழுவச் செய்தல்.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

3. தூய்மையான ஆடைகளை அணிந்து வரச்  செய்தல். தூய்மையான பள்ளி வளாகம் அமைய, மாணவர்கள் மூலம் கண்காணிப்பை ஏற்படுத்துதல். உதாரணமாக, குப்பைகளை முறையாக தொட்டிகளில் போடுதல், இயற்கை உரம் தயாரிக்கப் பழக்குதல்.

4. பள்ளியின் குடிநீர் தொட்டி தூய்மை குறித்து கண்காணிக்க மாணவர்களுக்குப் பழக்குதல். குடிநீரைச் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துதல், குடிநீரைச் சுடவைத்து, வடிகட்டி அருந்த வலியுறுத்துதல்.

5. பள்ளிகளில் கழிப்பறைக் கண்காணிப்புக் குழு அமைத்தல். இதன் மூலம், கழிப்பறை சுகாதாரமாக உள்ளதா, முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா  என்பதை உறுதிசெய்தல்.

6. கழிப்பறைக்குச் செல்லும்போது, காலணிகளைப் பயன்படுத்தும் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து, பின்பற்றச்செய்தல். கழிப்பறையை இளம் மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை மூத்த மாணவர்களை கவனிக்கச்செய்து, வழிகாட்ட உதவுதல்.

7. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்தல், உடலையும் மனதையும் பக்குவப்படுத்தும் யோகா செய்தல் ஆகியவற்றைத்  தினசரி செய்யவைத்தல்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதே, தேர்வில் சாதிக்க முதல் படி.

- க.சரவணன், டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை.

கலைக் கல்வியும் விளையாட்டும்!

மாணவர்களின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு விளையாட்டு முக்கியமானது. இது, கற்கும் ஆற்றலை அதிகரிக்கும். மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கிறது. விளையாட்டினால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம். 

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

1. குழந்தைகளுக்குள் ஒற்றுமை மற்றும் நட்பு உணர்வை வளர்க்கின்றது. உடன் விளையாடும் குழந்தைக்கு உதவிசெய்வதன் மூலம், உதவிசெய்யும் மனப்பான்மை வளர்கின்றது. குழுவாகப் பணி செய்வதைக் கற்றுக் கொடுக்கிறது. மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

2. தலைமைப் பண்புக்கான  ஆற்றலை வளர்க்கிறது.பிரச்னைகள் ஏற்படும்போது, தக்க முடிவு எடுக்கும் ஆற்றல் கிடைக்கிறது. முடிவு எடுத்தலில், உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் ஆற்றலையும் வளர்க்கின்றது.  

3. போட்டி மனப்பான்மையை உருவாக்கும் அதே நேரம், தோல்வியை எதிர்கொள்ளும்  பக்குவத்தைக் கொடுக்கிறது.

4. உடலை உறுதியாக வைத்துக்கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

பொம்மலாட்டம், நாடகம், கதை கூறுதல், கதை எழுதுதல், பட்டிமன்றம் போன்ற செயல்கள் கலைக்கல்வியில் கொடுக்கப்படுகின்றன. இது, பாடம் தொடர்பான செயல்பாடாக இருப்பதால், பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்கின்றனர். மேலும், மாணவர்களிடம் கீழ்க்கண்ட பண்புகள் வளர்கின்றன.

1. படைப்பாற்றல் திறனும் அதை வெளிப்படுத்த வாய்ப்பும் கிடைக்கிறது. திறமையை வெளிப்படுத்தும்போது கிடைக்கும் பாராட்டினால், தன்னம்பிக்கை அடைகின்றனர்.

2. குழுவாகச் செயல்படுவதன் மூலம் கூட்டுணர்வு அதிகரிக்கிறது.

3. சமகாலப் பிரச்னைகளைவைத்து நிகழ்ச்சிகளை நடத்துவதால், அந்தப் பிரச்னைகள் பற்றி முழு விவரங்கள் தெரியவருகிறது. உதாரணமாக, பிளாஸ்டிக்கின் தீமை பற்றி நாடகம் போடுவதால், அதில் நடிப்பவர்களும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள். சமூகப் பொறுப்பு விதைக்கப்படும்.

4. கலைகள் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை சக நண்பரைப் போல பார்க்கும் உணர்வை, கலைக்கல்வி ஏற்படுத்துகிறது.

5. பள்ளியின் மீது பற்றையும், கல்வியில் ஈடுபாட்டுடன் மாணவர்கள் இருக்கவும், மாணவனின் பங்களிப்பு முழு அளவில் இருக்கவும் கலைக்கல்வி உதவுகின்றது. 

- க.சரவணன் டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை.

நூலகம் இன்னொரு பள்ளி!

‘நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே, என் தலைசிறந்த நண்பன்’ என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். உலகில், பலருக்கு ரோல்மாடலாக இருக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் லிங்கன் சொன்னது,  பாடப் புத்தகங்களைத் தவிர்த்து மற்ற புத்தகங்களை.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

பள்ளியில் இருக்கும் நூலகத்தைப் பயன்படுத்தும் பழக்கம் இல்லாத மாணவர்கள் இருக்கலாம். அவர்கள், இன்றே நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

நூலகத்தில், முதலில் தென்படுவது செய்தித்தாள். அவற்றைப் படிக்கும்போதுதான், உலகின் நடப்புகள் நமக்குத் தெரியவரும். பக்கத்து ஊரில் சாலை போட்டது முதல் நாசாவில் நடக்கும் அறிவியல் ஆராய்ச்சிகள் வரை தகவல்கள் கிடைக்கும்.

தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் இருக்கும். உங்கள் பாடத்தில் காமராஜர் வாழ்க்கை வரலாறு சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், நூலகத்தில் உள்ள புத்தகத்தில் விரிவாக இருக்கும். அதைப் படிக்கும்போது, பாடப்புத்தகத்தில் உள்ளதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், (உதாரணமாக அவர் பிறந்த வருடம், ஆட்சிக்கு வந்த வருடத்தில் குழப்பம் இருந்தால்,)நூலகத்தில் படித்த புத்தகம் உதவும். இதேபோலத்தான் மன்னர்களைப் பற்றிப் படிப்பதும்.

நெசவு, கடிகாரத்தின் கதை எனத் தொழில்கள் தொடங்கி கண்டுபிடிப்புகள் வரை எண்ணற்ற புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன. ‘பட்டுப்புடவைக்கு புகழ்பெற்றது காஞ்சிபுரம்’ என்று ஒரு வரியில் பாடத்தில் படித்திருப்போம். காஞ்சிபுரத்தைப் பற்றி விரிவான புத்தகத்தைப் படிக்கும்போது, நமக்கான தகவல் வங்கி விரிவடையும்.

அறிவியல் புதிர்கள், கணக்குப் புதிர்கள் எனப் பாடங்களோடு தொடர்புடைய நூல்களும் உள்ளன. தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்கள், தயக்கத்தைப் போக்கி எதையும் துணிவோடு எதிர் கொள்ள வைக்கும்.

நாம் விரும்பிப் படிக்கும் கதைப்புத்தகங்கள், நமக்கு புதிய உலகை அறிமுகப்படுத்தும். பேசும் முயல், சிரிக்கும் சிங்கம் எனப் படிக்கப் படிக்கத் திகட்டாது.

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

நூலகத்தில், வேறு சத்தங்கள் இல்லாமல், மனதை ஒருநிலைப்படுத்திப் படிக்கும் பழக்கம், நமக்குப் பாடங்களைப் படிக்கும்போது மிகவும் உதவும்.

சில பள்ளிகளில், மாணவர்கள் தங்கள் பிறந்தநாளின்போது அந்தப் பள்ளியின் நூலகத்துக்கு ஒரு புத்தகத்தை அளிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். சில பள்ளிகளில், மாணவர்களின் பிறந்தநாளில் சிறந்த புத்தகத்தைப் பரிசளிக்கும் வழக்கம் உள்ளது.

நூலகத்தில் நுழைவோம், புதிய உலகில் பயணிப்போம்.

- அபூர்வா

வாழ்வைப் படிப்போம் தேர்வை ஜெயிப்போம்!

அன்பு மாணவர்களே...

ணக்கம்.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில், சிறப்பான நடைமுறையில் இருக்கும் CCE-FA பாடத்திட்டத்துக்கு, சுட்டி விகடன் தொடர்ந்து உறுதுணையாக இருந்துவருகிறது. சென்ற ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இந்த இணைப்பின் மூலம் உங்களைச் சந்திக்கிறோம்.

ஒவ்வொரு மாணவரின் திறமை, தனித்தன்மை, கற்பனைத் திறனுக்கு வகைசெய்யும் கல்வி இணைச் செயல்பாடுகள் இதில் உள்ளன. ஆசிரியர்களுக்கு, சிறந்த கையேடாக இந்த இணைப்பு இருக்கும். இதன் உருவாக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு நன்றி.

மாணவர்களுக்கு ஒரு தகவல். எஃப்.ஏ மற்றும் எஸ்.ஏ பகுதிகளை உள்ளடக்கிய கல்விசார் செயல்பாடுகளில், ஒரு மாணவர் பெறும் கிரேடுக்கும், கல்வி இணைச் செயல்பாடுகளில் அந்த மாணவர் பெறும் கிரேடுக்கும் வேறுபாடு உண்டு. அதாவது, ஒரு மாணவர் வழக்கமான தேர்வுகளில் சிறப்பாக எழுத முடியாவிட்டாலும், கல்வி இணைச் செயல்பாடுகளில் ‘ஏ’ கிரேடு வாங்கி அசத்த முடியும்.

கல்வி இணைச் செயல்பாடுகளை மாணவர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், ஆசிரியர்கள் கூடுதல் ‘டிப்ஸ்’ பெறவும் வாழ்த்துகள்.

அன்புடன்

ஆசிரியர்.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன்படங்கள்: கே.குணசீலன், வி.சதீஸ்குமார், க.சதீஷ்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism