பிரீமியம் ஸ்டோரி
மக்கள் கணக்கு

தேர்தல் சூடு தகிக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசார யுத்தப் பேரிகைகள் முழங்குகின்றன. ஆனால் அவர்கள் யாரை நோக்கி வாக்கு கேட்கிறார்களோ, யாருடைய பெயரால் மக்களாட்சியின் அதிகாரத்தை அடைய நினைக்கிறார்களோ, அந்த மக்களின் நலன் சார்ந்த அக்கறை, கட்சிகளின் பிரசாரத்தில் இல்லவே இல்லை. பொங்கலுக்குக் கரும்பும் தீபாவளிக்குப் பட்டாசும் வாங்கும் சீஸன் வாடிக்கையாளர்களைப்போல, மக்களிடம் உள்ள ஓட்டு என்னும் மதிப்புமிக்க ஜனநாயக அஸ்திரத்தை, பணம் கொடுத்து வாங்கும் சீஸன் வாடிக்கையாளர்கள்தான் இந்த அரசியல்வாதிகள். இவர்களுக்கு மக்கள் என்போர் வெறும் வாக்காளர்கள் மட்டுமே. அதனால்தான், வாக்களிக்கும் நேரத்தில் மட்டும் மக்கள் இவர்களுக்கு நினைவுக்குவருகின்றனர்.

கட்சிகளின் பிரசார உத்தியில் மக்கள் நலன் என ஏதேனும் இருக்கிறதா? ஐந்து ஆண்டு காலமாக தமிழ்நாட்டை ஆட்சிசெய்துவரும் அ.தி.மு.க அரசு, ஆண்டு முழுவதும் படிக்காமல் கடைசி நேரத்தில் தேர்வுக்குப் படிக்கும் மாணவனைப்போல நடந்துகொள்கிறது. தெருவுக்குத் தெரு புதிய சாலைகள் போடப்படுகின்றன. முடங்கிக்கிடந்த திட்டங்கள் முடுக்கிவிடப்படுகின்றன. புதிய கட்டடங்கள் திறக்கப்படுகின்றன. எனில், இத்தனை ஆண்டுகள் இவை செயல்படுத்தப் படாமல் இருந்தது ஏன்? ஆட்சியின் அந்திமக்காலத்தில்தான் இவற்றைச் செய்ய முடியும் என்றால், இதுவரை செயல்படாமல் இருந்தீர்கள் என்பதற்கு, நீங்களே கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இது.

பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக எந்த வகையிலும் செயல்படாத தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், இப்போது நடத்திக்கொண்டிருப்பது பச்சையான கொச்சையான குதிரை பேரம். ஒரு பொருளை பதுக்கிவைத்துக்கொண்டு, தட்டுப்பாடு ஏற்படும்போது விலையை உயர்த்தி விற்கும் ஒரு கள்ளச்சந்தை வியாபாரியைப்போல, இறுதிநேரம் வரை கூட்டணி பேரம் நடத்துகிறார். ஒரே நேரத்தில் நான்கு பேரிடமும் பேரம்பேசுவது ஒரு வியாபாரியின் குணம். இதை விஜயகாந்த் எந்தக் கூச்சமும் இல்லாமல் தொடர்ந்து செய்கிறார்.

தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க., மிக மிக மலிவான விளம்பர உத்திகளுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளை நேருக்குநேர் மக்கள் மன்றத்தில் விவாதிப்பதற்குப் பதிலாக, வெறுமனே பரபரப்புச் செய்திகளில் கவனம் ஈர்க்க முயற்சிக்கிறது; வாழ்வாதாரப் பிரச்னைகளைப் பொழுதுபோக்காக மாற்றுகிறது. இவர்களுக்கு எதிர்நிலையில் நாகரிகமான பிரசாரத்தை பா.ம.க மேற்கொள்ள முயற்சித்தாலும், சாதி கடந்த வேட்பாளர்களை நிறுத்தி மாற்றம், முன்னேற்றத்தை அவர்களும் தொடங்கி வைக்கப்போவதாக இல்லை.

மொத்தத்தில் இந்தத் தேர்தலில் கட்சிகளின் அணுகுமுறை என்பது, முந்தைய தேர்தல்களில் இருந்து தோற்றத்தில் வேறுபட்டாலும் உள்ளடக்கத்தில் ஒன்றாகவே இருக்கிறது. எதைச் சொல்லியேனும் மக்களை மயக்கி ஓட்டுக்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதைத் தாண்டி, இவர்களுக்கு வேறு எந்தச் செயல்திட்டமும் இதுவரை இல்லை. அதற்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டுசேரவும், எதைச் சொல்லியேனும் எதிர்த்தரப்பை விமர்சிக்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

ஆனால், இத்தகைய பேரமும் கூச்சலும் ரகசியமாக நடைபெறவில்லை. அனைத்தும் மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக நடைபெறுகின்றன. எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். கட்சிகள், மக்களைப் பற்றி ஒரு கணக்கு வைத்திருக்கின்றன. ஆனால், அந்தக் கணக்குக்கான விடையை மக்கள் வைத்திருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு