Published:Updated:

கமான் கபடி கேர்ள்ஸ்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி

கபடி, கிராமத்து விளையாட்டுதான். ஆனால், ஒரு கிராமம் முழுக்க கபடி வீரர்களாக, அதுவும் மாநில அளவில், தேசிய அளவில் தடம் பதிக்கும் வீரர்களாக இருந்தால் ஆச்சர்யம் தானே! தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இருக்கும் தென்னமநாடு கிராமத்தில் நுழைந்தால் எக்கச்சக்க கபடி வீரர்கள். ஆண்களைவிட கபடி வீராங்கனைகள்தான் இந்த ஊரின் சிறப்பு. தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் கேப்டன் பவித்ரா, இந்த ஊர்தான்.

‘‘2012-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டியில், டெல்லி அணியோடு மோதி தமிழ்நாடு அணி தங்கம் வென்றது. அதில் சிறப்பா விளையாடி தங்கப் பதக்கத்தோடு ஊர் திரும்பிய காவ்யாவை, ஒட்டுமொத்த ஊரே தலையில் தூக்கிவெச்சுக் கொண்டாடியது. உஜ்ஜயினியில் நடந்த போட்டியில், தமிழ்நாடு அணி வெள்ளிக் கோப்பை ஜெயிச்சது. அதுல எங்கள் ஊர்ல இருந்து நானும் பிரகதீஸ்வரியும் விளையாடினோம். கேரளாவில் நடந்த தேசியப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு மூன்றாவது இடம். அதுல விளையாடிய நான், கௌசல்யா, ரதிபாரதி, பிரகதீஸ்வரி நாலு பேரும் தென்னமநாடு பெண்கள். சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில், தமிழ்நாடு அணி மூன்றாம் பரிசு வென்றது. அதுல கலந்துக்கிட்டவங்கள்ல பத்து பேர் எங்க கிராமத்தைச் சேர்ந்தவங்க. ஒவ்வொருத்தருக்கும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைச்சது. அடுத்து, ஈரானில் நடக்கவிருக்கிற ஆசிய அளவிலான போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட நானும் பிரகதீஸ்வரியும் தேர்வாகியிருக்கோம்’’ என்று சொல்லும் பவித்ராவின் கண்களில் பெருமிதம் மின்னுகிறது.

கமான் கபடி கேர்ள்ஸ்!

கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், காவல் மற்றும் ரயில்வே துறைகளில் உள்ள கபடி அணிகளிலும், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கபடி அணியிலும் தென்னமநாடு கிராமப் பெண்களின் கொடி பறக்கிறது.

கிராமங்களில் வயதுவந்த பெண்களை விளையாட அனுமதிப்பதே அதிசயம். அதுவும் கபடி போன்ற, உடல் காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட வாய்ப்பு உள்ள ஒரு விளையாட்டுக்கு அனுப்புவது அதைவிட ஆச்சர்யம். திருமண வயதில் ஏதேனும் உடல் பிரச்னைகள் ஏற்பட்டால் அது வாழ்க்கையைப் பாதித்துவிடுமே எனத் தயங்காமல், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கபடி விளையாட அனுப்பிவைக்கிறார்கள்.

‘‘அப்போ நான் ப்ளஸ் டூ ஸ்டூடன்ட். புதுக்கோட்டையில் நடந்த கபடி போட்டியில, என் கால் மூட்டு ஜவ்வு கிழிஞ்சு, ஆறு மாசம் படுத்த படுக்கையாவும், ஒன்றரை வருஷம் ஓய்விலும் இருந்தேன். அதுக்கெல்லாம் என் அம்மா - அப்பா கலங்கவே இல்லை. எனக்கு கால் சரியானதும் மறுபடியும் கபடி விளையாட அனுப்பிவெச்சாங்க’’ என்கிறார் பொறியியல் மாணவி அகல்யா. தற்போது இவர் கபடி போட்டியில் தேசிய வீராங்கனை.

ஒரு போட்டியின்போது இந்த ஊரைச் சேர்ந்த ரதிபாரதிக்கு நெற்றியில் பலத்த காயம். அளவுக்கு அதிகமான ரத்தம் கொட்டி மயக்கம் அடைந்துவிட்டார். ஆனால், அவர் ஓய்ந்து உட்காராமல் இப்போதும் கபடியில் கலக்குகிறார்.

கமான் கபடி கேர்ள்ஸ்!

கபடி வீராங்கனையாக இருப்பதன் மூலம் இந்த ஊரின் ஏராளமான பெண்கள், காவல் மற்றும் ரயில்வே துறைகளில் அரசு வேலைகளைப் பெற்றுள்ளனர். கல்வியிலும் பல்வேறு சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன. `இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் பின்னணியில் இவர்தான் இருக்கிறார்' என கிராமமே கை காட்டுவது, இந்த ஊரில் உள்ள ஸ்ரீராமவிலாஸ் உயர்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வரும் தவமணியைத்தான்.

``எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம எங்க ஊர் ஆண் - பெண் அத்தனை பேருக்கும் கபடி பயிற்சி தர்றது தவமணி சார்தான். எந்தவிதத்திலும் பயிற்சி தடைப்படக் கூடாதுங்கிறதுக்காக டிரான்ஸ்ஃபர், புரொ மோஷன் எல்லாத்தையும் வேண்டாம்னு சொல்லிட்டு எங்க ஊர்லயே வேலை பார்க்கிறார். எங்க பிள்ளைங்க அடையுற ஒவ்வொரு வெற்றிக்கும் தவமணி சார்தான் காரணம்'' என்கிறார்கள் தென்னம நாட்டுக்காரர்கள்.

ஒரு பயிற்சியாளருக்கே உரிய நிதானமும் பக்குவமும்கொண்ட தவமணி, தன்மை யாகப் பேசுகிறார். ‘‘இந்த ஊர்ப் பெண்கள், கடும் உழைப்பாளிகள்; சுட்டெரிக்கும் வெயில், கடும் மழையில்கூட பயிற்சிக்கு வந்துடுவாங்க. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்தாகூட அவங்க முக்கியத்துவம் கொடுப்பது பயிற்சிக்குத் தான். இந்த ஊர் ஆண்களுக்கும் கபடியில் ஆர்வம் அதிகம். ஆரம்பத்துல அவங் களை முன்மாதிரியா சொல்லித்தான் பெண்களையும் கபடி விளையாட ஊக்கப்படுத்தினேன். இப்போ ஆண்களை விட பெண்கள்தான் அதிக சாதனை படைச்சுட்டிருக்காங்க.

ஆரம்ப காலத்துல பயிற்சிக்கு என் சொந்தப் பணத்தைச் செலவழிச்சேன். நாளடைவில் எங்க பள்ளியில் படிச்சு, வெளிநாடுகள்ல வேலைபார்க்கிறவங்க, அரசாங்க வேலையில் இருக்கிறவங்கனு பலர், பயிற்சிக்கு வேண்டிய பொருளாதார உதவிகளை மனமுவந்து செய்றாங்க. எல்லாத்துக்கும் மேல, இந்த ஊர் பெண் களின் அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு, துணிச்சல் இவைதான் இந்த அளவுக்குச் சாதிக்கக் காரணமா இருக்கு. எங்க புள்ளைங்க இன்னும் நிறைய சாதிப்பாங்க’’ என்கிறார் உற்சாகமாக.

அடிச்சு தூள் கிளப்புங்க... ஆல் தி பெஸ்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு