Published:Updated:

“சிக்கவைக்கணும்னே கேள்வி கேட்கிறீங்களே!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“சிக்கவைக்கணும்னே கேள்வி கேட்கிறீங்களே!”
“சிக்கவைக்கணும்னே கேள்வி கேட்கிறீங்களே!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

பிரீமியம் ஸ்டோரி

``இந்தப் பகுதிக்கு கலாட்டாவா பதில் சொல்லணுமே. முடிஞ்ச அளவுக்குக் கிண்டலா பதில் சொல்றேன் தம்பி. சரியா?'' - சிரிக்கிறார் நீதிபதி சந்துரு.

`` `என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?'னு சொல்லி கிண்டல் பண்ணாதீங்கனு விகடன்லயே பல தடவை சொல்லியிருக்கேன். ஆனாலும், விஜய் டி.வி, சிவகார்த்திகேயன், இமான் எல்லாருமே சொல்லி சிரிச்சிட்டு பாட்டு எல்லாம் போட்டாங்க. இப்ப அவங்க எல்லாரையும் `என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?'னு சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம். ஒருவகையில இப்ப நிம்மதியா இருக்கேன்'' - கருத்தாகப் பேசுகிறார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

``சென்னை வந்தே ரெண்டு நாள்தான் ஆச்சு. சரியா பதில் சொல்லலைன்னா `இவன் மக்கு பிளாஸ்திரி'னு சொல்லிடக் கூடாது. ஓ.கே-வா?'' எனத் துறுதுறுவெனப் பேசுகிறார்
ஆர்.ஜே.பாலாஜி.

``ஒரு டி.வி விவாதத்துக்குக் கிளம்பிட்டு இருக்கேன். அங்கே இருந்து இன்னொரு நிகழ்ச்சியில் கலந்துக்கப் போறேன். எல்லாத்தையும் முடிச்சிட்டுக் கூப்பிடவா?'' என, ஓய்வான நேரத்தில் கூப்பிட்டார் கவிஞர் மனுஷ்ய புத்திரன்.

“சிக்கவைக்கணும்னே கேள்வி கேட்கிறீங்களே!”

``பதவி விலகிய தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் எத்தனை பேர் அ.தி.மு.க-வில் இணைந்தனர்?''

விடை: 8 பேர்.

சந்துரு
: ``அம்மாவுக்கு ராசி இல்லாத நம்பர் 8. அந்த எட்டுப் பேர்தான் அந்தக் கட்சியில் சேர்ந்திருக்காங்க.''

லட்சுமி ராமகிருஷ்ணன்: ``டி.எம்.டி.கே-வில் இருந்து 31 எம்.எல்.ஏ-க்கள் ஏ.டி.எம்.கே-வுக்குப் போயிருக்காங்கனு நினைக்கிறேன். தேர்தல் நெருங்கும்போது அரசியலில் இதுபோல நடக்கிறது இயல்புதானே. சரியா?'' பதிலைச் சொன்னதும், ``அட, தேர்தல் சமயத்துல இன்னமும் 21 பேர் போனாலும் போகலாம்ப்பா. அந்தச் சமயத்துல நான் சொன்ன பதில்தான் சரியா இருக்கும்.''

ஆர்.ஜே.பாலாஜி: ``இதே மாதிரி ஜாலி கொஸ்டீன்ஸ் எல்லாம் நானும் எஃப்.எம்-ல கேட்டிருக்கேன். ஒரு தடவை ப்ளஸ் ஒன் படிக்கிற பையன் லைன்ல வந்தான். `நம்ம நாட்டுப் பிரதமர் யாரு?'னு சிம்பிளா கேட்டேன். `தோனி'னு சொன்னான். `தம்பி, மாத்தி சொல்லிட்ட பார்... எங்க கரெக்டான பதில் சொல்லு'னு சொன்னேன். கொஞ்சம் யோசிச்சிட்டு, `ஆங்... நரேந்திர தோனி'னான். நான் ஷாக் ஆகிட்டேன். சரி, நான் உங்க கேள்விக்கு வர்றேன். 8-ல இருந்து 12 பேர் வரை இணைந்திருப் பாங்க. இந்த ரெண்டு நம்பர்ல ஏதாவது ஒரு நம்பர்தான். ப்ளீஸ் லாக் த பதில்.''

“சிக்கவைக்கணும்னே கேள்வி கேட்கிறீங்களே!”

மனுஷ்ய புத்திரன்: ``எட்டுப் பேர்னு நினைக்கிறேன். ஜெயலலிதா விசுவாசத்தில் அ.தி.மு.க அமைச்சர்களையே விஞ்சி அதிரவைச்சவங்க அவங்க.''

`` `ஃப்ரீடம் இந்தியா 251’ போனை அறிமுகப்படுத்திய மொபைல் நிறுவனத்தின் பெயர் என்ன?''

விடை: ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம்.

சந்துரு:``என்னைக்கு அலைபேசி வந்ததோ, அன்னைக்கே ஃப்ரீடம் போய்விட்டது. அதன் பெயரில் ஒரு போனா? நிறுவனத்தின் பெயர் தெரியாதே.''

லட்சுமி ராமகிருஷ்ணன்:
  ``இந்த மொபைல் போன் எப்போ வந்ததோ? அப்பவே நாடு கெட்டுப்போயிருச்சு. பல பேரோட வாழ்க்கையே இந்த போனால் சீரழிஞ்சுபோயிருச்சு. மத்தவங்களைவிட இது எனக்கு நல்லா தெரியும். இப்ப 251 ரூபாய்க்கு போன் கொடுத்து இன்னும் நிலைமையை மோசமாக்கப் போறாங்க. ஆனா, 251 ரூபாய்க்கு எப்படி போன் தர முடியும்? நிச்சயமா இது மோசடியாத்தான் இருக்கும்.''

ஆர்.ஜே.பாலாஜி: ``ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம். இங்கே எப்படி காந்தப் படுக்கை, எம்.எல்.எம்., ஈமு கோழி மோசடிகள் நடந்ததோ, அதேபோல தான் `ஃப்ரீடம் இந்தியா 251' மோசடி இந்தியா முழுக்க நடக்கிற மாதிரி இருக்கு. இந்த கம்பெனியையே மூணு மாசத்துக்கு முன்னாடிதான் தொடங்கி இருக்காங்க. 10 நாளைக்கு முன்னாடி தான் கம்பெனிக்கு வெப்சைட் தொடங்கியிருக்காங்க. எனக்கு ஏதோ இது சரினு தோணலை.''

மனுஷ்ய புத்திரன்: ``ம்ம்ம்... ரிங்க் பெல்லோ, பெல் ரிங்கோ. ஆமா, 500 ரூபாய்க்கு ரிலையன்ஸ் போன் கொடுத்தப்ப சந்தேகப்படாதவங்க, இந்த கம்பெனியை மட்டும் ஏன் சந்தேகப்படுறாங்க? அந்த கம்பெனிக் காரன், நாம அஞ்சாயிரம் பத்தாயிரம்னு கொடுத்து வாங்குற செல்போனின் தயாரிப்புச் செலவு 200 ரூபாய்தான். எங்களுக்கு 251 ரூபாய் போன்ல 31 ரூபாய் லாபம்னு சொன்னப்ப, நான் ஆடிப்போயிட்டேன்.''

``ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று எத்தனை பேர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தினார்கள்?''

விடை: 668 பேர்.

சந்துரு: ``பச்சை குத்தி யிருந்தால் ராணுவத்தில் சேர முடியாது என்பது, அந்த இளைஞர்களுக்குத் தெரியுமா? இந்தத் தகவலை நீங்கள் வெளியிட்டால், `குத்திய பச்சையை அழிப்பதற்கு ஆசிட் ஏதாவது இருக்கிறதா?' என ஒரு பெருங் கூட்டம் தேடி அலையும். இதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பெயரைப் பச்சை குத்தியவர்கள், தி.மு.க ஆட்சியில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றவர்கள் எல்லாம் முழுக்கைச் சட்டை அணிந்து செல்ல நேர்ந்தது. தமிழ்நாட்டின் தலையெழுத்து அது.''

“சிக்கவைக்கணும்னே கேள்வி கேட்கிறீங்களே!”

லட்சுமி ராமகிருஷ்ணன்:  ``ஏங்க, அவங்க அம்மாவுக்கு அவங்க பச்சை குத்துறாங்க. இதை நாம எப்படி தப்புனு சொல்ல முடியும்? இதுக்கு நான் குத்துமதிப்பாக்கூட பதில் சொல்ல விரும்பலை தம்பி.''

ஆர்.ஜே.பாலாஜி ``நானும் வேண்டிக்கிட்டேன். இன்னமும் நிறைய ஆண்டுகள் இருந்து நல்லா ஆட்சி செய்யணும்னு. 68-வது பிறந்தநாளைக் கொண்டாடி னாங்க. அதனால, 68,000 பேர் அல்லது 6,800 பேர் பச்சை குத்தியிருப்பாங்க'' - பதிலைச் சொன்னதும், ``அட... என்னங்க இது, சம்பந்தமே இல்லாம இருக்கு?'' எனச் சிரிக்கிறார்.

மனுஷ்ய புத்திரன்:
: ``தங்களுக்கு தாங்களே பச்சை குத்திக்கொண்ட ஜெயலலிதா அபிமானிகளைக் கேக்கிறீங்களா, இல்லை இலவசத் திருமணத்தில் மணமக்கள் நெத்தியில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிவிட்ட மாதிரி மத்தவங்களுக்கு அ.தி.மு.க-காரங்க ஏதும் பச்சை குத்திவிட்டாங்களா?''

``மகிளா காங்கிரஸில் நடிகை நக்மா என்ன பொறுப்பில் உள்ளார்?''

விடை: அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர்.

சந்துரு: ``குஷ்புவுக்கு மேலே, சோனியாவுக்குக் கீழே எனத் தெரியும். ஆனால், பதவியின் பெயர் தெரியாது. அவர் இருக்கும் கட்சியை காந்தியடிகளே கலைக்கச் சொல்லிவிட்ட பிறகு, அந்தக் கட்சிக்கு சட்டதிட்டமே கிடையாது. எத்தனை பதவிகளை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம்.''

“சிக்கவைக்கணும்னே கேள்வி கேட்கிறீங்களே!”

லட்சுமி ராமகிருஷ்ணன்: ``சமூக மேம்பாட்டுத் துறையில் முக்கியப் பொறுப்புல இருக்காங்க நக்மா. அவங்க அரசியல்  பேசி நான் ஒருதடவைகூட டி.வி-யிலயோ நியூஸ்லயோ பார்த்தது இல்லை.''

ஆர்.ஜே.பாலாஜி: ``நக்மானு சொல்லும்போது `லவ் பேர்ட்ஸ்' படம்தான் ஞாபகத்துக்கு வருது. அவங்க கட்சிப் பொறுப்பு எதுவும் ஞாபகத்துல இல்லையே!''

மனுஷ்ய புத்திரன்:
: ``அவங்க கொள்கைப்பரப்பு செயலாளர்தானே... இல்லை செகரட்டரி என நினைக்கிறேன். வரும் தேர்தலில் அ.தி.மு.க சினிமா பேச்சாளர்களுக்குக் கடும் சவாலா நக்மா  இருப்பார்.''

`` `அம்மா கணக்கு' என்ற பெயரில் உருவாகி உள்ள படத்தின் தயாரிப்பாளர் யார்?''

விடை: தனுஷ்.

சந்துரு: ``எப்போது இருந்து காந்தி கணக்குக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது? தயாரிப்பாளர் யாராக இருப்பினும் பட வெளியீட்டுக்கு தியேட்டர் கிடைப்பதற்குக் கஷ்டப்படுவார். அது மட்டும் அல்ல, அது தமிழ்ப் பெயராக இருப்பினும் வரிச் சலுகைக்கு வழி இருக்காது.''

லட்சுமி ராமகிருஷ்ணன்:
: ஷாக் ஆகிறார் ``அடப்பாவீங்களா, என்னைச் சிக்க வைக்கணும்னே கேள்வி கேட்கிறீங்க போல... எங்க அம்மாவோட கணக்கே எனக்குத் தெரியாது. இதுல `அம்மா கணக்கு' தயாரிப்பாளரைப் பற்றி என்ன சொல்றது? சரி, ஒரு யூகத்துல பதில் சொல்றேன். ம்ம்... உதயநிதி ஸ்டாலின். சரியா?''

ஆர்.ஜே.பாலாஜி ``அய்யோ... நீங்க ஏன் இந்த சீஸன்ல இந்தக் கேள்வி கேட்கிறீங்கனு தெரியும். உங்க வலையில் சிக்காமல் பதில் சொல்லிடுறேன். `அம்மா கணக்கு' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். இந்தப் படத்துல அமலா பால், ரேவதி எல்லாம் நடிச்சிருக்காங்க. நான் அப்பீட்டு ஆகிடுறேன். நன்றி, வணக்கம்.''

மனுஷ்ய புத்திரன்:
வேகமாகப் பதில் வருகிறது ``குமாரசாமி.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு