சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

உயிர் பிழை - 29

உயிர் பிழை - 29
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் பிழை - 29

மருத்துவர் கு.சிவராமன், ஓவியங்கள்: ஸ்யாம்

மாற்றத்துக்கான முதல் படி விழிப்புஉணர்வு. மெள்ள மெள்ள விரியும் புற்றுக் கரங்களை, அதன் இறுக்கத்தை, வலியை, வலிமையைத் தெரிந்து கொள்வதும் புரிந்துகொள்வதும்தான் அதை வீழ்த்தும், தடுக்கும் முதல் படி. உயிர் பிழை கட்டுரை அந்த இலக்கில் உருவானதுதான்.

என் முன்னால் காலியாக இருந்த முதல் வரிசை ஓரத்து நாற்காலி, அவன் வீட்டில் ஓரமாக நிறுத்திவைத்திருக்கும் இருசக்கர வாகனம் மீது மௌனமாகப் படிந்திருக்கும் தூசி, பீரோவின் கீழ்த் தட்டுக்குப் போய்விட்ட அவனின் சிவப்பு நிற பனியன்... என என்னைச் சுற்றி இருப்பவை சுருட்டிவைத்திருக்கும் நினைவுகளைப்போல், கடந்த வருடம் ஆறு லட்சம் பேர், நினைவுகளை மட்டும் நிறுத்திவைத்துவிட்டுச் சென்றிருக்கி றார்கள்.

உயிர் பிழை - 29

நம் பக்கம் இது நிகழும்போது, நாளிதழின் இரண்டாம் பக்க மூலைச் செய்திபோல அவ்வளவு எளிதாகக் கடந்துசென்றுவிட முடியாது. `எந்தத் துறையின் மருந்து எடுக்கலாம்... எந்த மருத்துவரிடம் எடுக்கலாம்?' என்ற குழப்பம் சில நேரத்தில் எழுவது உண்டு. மலேரியாவைப் போல மஞ்சள்காமாலையைப்போல எந்த வடுவும் இல்லாமல் கடந்துபோகும் நிலை பல புற்றுகளுக்கு இன்று இல்லை. நோய் பற்றிய தெளிவான புரிதலும், அச்சம் விலக்கிய அணுகுமுறையும், ஒருங்கிணைந்த மருத்துவமும், தேர்ந்தெடுக்கப் பட்ட உணவும் மட்டுமே நோயை வலுவிழக்கச் செய்யும் அஸ்திரங்கள். அப்படி அணுகியவர்கள் மட்டுமே மிகச் சிறப்பான வாழ்வியலோடு, இன்றும் தங்கள் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர்.

இப்போது அவருக்கு வயது 67. மார்பகப் புற்று அவரைத் தாக்கிய சமயம் 52 அல்லது 53 வயது இருக்கும். தன் மகள் திருமணத்துக்காகக் கூரைப்புடவை வாங்கிய நாள் மாலை, அந்த அம்மாவுக்கு செய்யப்பட்ட மேமோகிராமில் நோய் உறுதிசெய்யப்பட்டது.

உயிர் பிழை - 29

`பொண்ணு கல்யாணம், சீர்செனத்தினு அலைஞ்சுட்டிருக்கேன்  டாக்டர்... இப்ப  ஆபரேஷன், மருந்து, பத்தியம்னு இருக்க முடியுமா?’ எனக் கேட்டார்.

`அப்படி இல்லைங்க... இது ரொம்ப அவசரம். ஒரு பிரச்னையும் வராது; உடனே சிகிச்சையைத் தொடங்குங்க’ என அன்று நான் சொன்னதும் நினைவில் இருக்கிறது. பிறகு, அவரின் மகள் திருமணத்துக்குப் போயிருந்தபோது, `பொண்ணுக்கு நல்ல இடமா அமைஞ்சிருக்கு. அதான் ஏழுமலையானுக்கு வேண்டிக்கிட்டேன்’ என என்னை நமட்டுச் சிரிப்புடன் வரவேற்று, தன் கீமோவைப் பற்றியோ, முடி உதிர்வதைப் பற்றியோ யாரிடமும் அங்கலாய்க்காமல், திருமண மண்டபத்தில் ஓடி ஆடி அவர் வேலைசெய்ததை என்னால் மறக்க முடியாது.

15 வருடங்கள் கழித்து ஆர்கானிக் சந்தையில் அவரை மீண்டும் சந்தித்தபோது, மிகுந்த  பொலிவுடன் `ஹலோ டாக்டர்... எப்படி இருக்கீங்க... இது யாரு தெரியுதா? பேரு வாணி. என் மகள் வயித்துப் பேத்தி.  இவ அம்மா கல்யாணத்துக்குக்கூட நீங்க வந்தீங்களே... இப்போ நாங்க ரெண்டு பேரும் யோகா கிளாஸ் போயிட்டு, நேரே இங்கே வர்றோம். ஒரு ஜோக் தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் இப்போ சம்பா டான்ஸ் கிளாஸ் ஒண்ணா போறோம்’ எனச் சொல்லி கலகலவெனச் சிரித்தார். கூடவே, `பார்த்துப் பார்த்து சமைக்கிறேன் டாக்டர். எங்க வீட்ல சீனி கிடையாது. எந்தவிதமான குப்பை உணவையும் என் வீட்டுச் சமையல் அறையில் பார்க்க முடியாது. முடிஞ்சவரைக்கும் எல்லாமே ஆர்கானிக்தான். எனக்கு வந்த பாதிப்பை என் பரம்பரையைவிட்டே விரட்டணும்ல?’ என்றார்.

`நீங்க நலமா இருக்கீங்களா, செக்கப் போனீங்களா?’ என்றெல்லாம் நான் அவரிடம் கேட்கவில்லை; கேட்பதற்கான அவசியமும் இல்லை என்பதை அவரின் கண்களும் முகமும் தெளிந்த பேச்சும் துல்லியமாகச் சொல்லிவிட்டன. சரியான நேரத்தில் நோயைக் கணித்து, அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு ரேடியேஷன், கூடவே, இனி எப்போதும் நோய் மீண்டும் வரக் கூடாது என்பதற்காக அவர்கள் எடுத்த கூட்டுச் சிகிச்சை எல்லாமே அவரை நோய்ப்பிடியில் இருந்து மொத்தமாக விலக்கியிருந்தன.

உயிர் பிழை - 29

பாதி கீமோ சிகிச்சையில் அவர் இருந்தபோது, `ப்ளீஸ்... இந்த மளிகைக்கடை லிஸ்ட்டில் என்னென்ன எல்லாம் சாப்பிடணும், என்னவெல்லாம் கூடாதுனு ஒரு டிக் போட்டுச் சொல்லுங்களேன்’ என அக்கறையாகக் கேட்கையில், மீண்டும் அவருக்கு அடர்த்தியாக முடி வளர ஆரம்பித்திருந்தது. தனது நீண்ட கூந்தலை அழகாக பாப்கட் செய்திருந்ததைப் பார்த்து அவரது கணவர், `சிகிச்சையில அவ செம அழகாகிட்டு வர்றா சார். இங்கிலீஷ்காரி மாதிரி ஸ்டைலா பாப்கட் பண்ணியிருக்கா. எனக்குத்தான் சொட்டை விழுந்திருச்சு’ என வலியை மறக்கடிக்க, காதலைக் கரிசனமாகக் குழைத்து, அவர் கணவர் கொடுத்தது கமல்ஹாசன் சொன்ன `கட்டிப்புடி வைத்தியம்’. எல்லாம் எனக்கு நினைவில் இருக்கின்றன. எல்லோருமாகச் சேர்ந்து ஜெயித்திருக்கிறார்கள். காதல், கரிசனம், கீமோ, கீரைக்கட்டு, கதிர்வீச்சு, மஞ்சள்கிழங்கு, மூச்சுப் பயிற்சி, மூலிகை இலை... என அந்த காம்போ சிகிச்சை, அந்த இளம்பாட்டியை இன்று தன் பேத்தியுடன் சம்பா நடனத்துக்கு அழைத்துச் செல்கிறது.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் பின்னிரவில் வந்த தொலைபேசியில், `மரணப்படுக்கையில் இருக்கும் என் மனைவியின் புற்றுநோய்க்காக, பெங்களூரு வர முடியுமா?' என தன் மெல்லிய குரலில் கேட்ட அவர், என் வாழ்வின் முக்கியமான நபர்களில் ஒருவர். அழைப்பின் பேரில் அங்கு சென்றபோதுதான், குடும்பத்தில் அத்தனை பேரும் மருத்துவர்கள் என்பதும் தெரிந்தது. குறிப்பாக, அவரது மகன் மிகப் பெரிய புற்றுநோய் மருத்துவர்.

`அதிகபட்சம் இன்னும் ஓரிரு மாதங்கள் கிடைக்கலாம். பிரைமரி சினைப்பைப் புற்று. அறுவைசிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் அலட்சியமாக விட்டுவிட்டதால், உடல் எங்கும் பரவி விட்டது’ என்றார்.

`இப்படித்தான் இருக்கும்’ என்ற அனுமானிப்பு அவரின் மருத்துவப் படிப்பும் அனுபவமும் சொன்னது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஈரல், நுரையீரல், வயிற்றின் சில பாகங்கள், இடுப்பு,  முதுகெலும்பு என எல்லாவற்றிலும் பெட் ஸ்கேனின் தடயங்கள். ஆனால், அந்த அம்மாவின் முகத்தில் பெரிதாக பயமோ, கவலையோ இல்லை. படுத்துக் கொண்டே `டாக்டர்... வயிற்றில் தேங்கியுள்ள நீரைக் குறைச்சீங்கன்னா, அடுத்த முறை நீங்கள் வரும்போது உங்களுக்கு ஸ்பெஷல் உடுப்பி காபி கலந்து தருவேன். நீங்க சென்னையில் குடிச்சிருக்கவே முடியாது’ எனப் பேசியதுதான் அவருக்கும் எனக்குமான முதல் பேச்சு.

வழக்கம்போல், `சித்த மருந்துகள் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழர் நலவாழ்வில் புற்றுக்கு நிகரான பல நோய்களுக்கு அன்று பயன்பட்டவை. இந்த மூலிகைகள் உலகம் எங்கும் ஆராயப்பட்டு வருகின்றன. கூடுதலாக, அவற்றின் தொடக்க முடிவுகள் வரவேற்கும்படி உள்ளன. நீங்கள் எடுத்துவரும் மருத்துவத்தோடு, உங்கள் மருத்துவரின் அனுமதி யோடு, இதையும் சேர்த்துச் சாப்பிடுங்கள். வயிறு வீக்கமும் குறையலாம்’ என்றேன்.

அந்த மருத்துவர் இல்லத்தில் காபியோடு சேர்த்து கஷாயமும் மகிழ்வோடு தயாராகத் தொடங்கியது. அவர்களின் நவீன மருத்துவ சிகிச்சை, சித்த மருத்துவம், பிராணாயாமப் பயிற்சி, இயற்கை உணவு - பழச்சாறு வைத்தியம், அவர்கள் கற்றிருந்த `சுஜோக்’ எனும் கொரிய சிகிச்சை என அனைத்தும் மிக நேர்த்தியாகப் பின்னப்பட்டதில், அடுத்தடுத்த சமயங்களில் அவர் கையால் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிடும் சந்தோஷம் கிட்டியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் வீட்டிலேயே பலருக்கும் மூச்சுப்பயிற்சியைக் கற்றுத்தரும் ஆசிரியையாக, அவர் மாறியிருந்தபோது, வயிற்றைச் சுற்றிய நீரும், எக்குத்தப்பாக இருந்த CA125-ம் இயல்புக்குத் திரும்பியிருந்தன. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஓர் இரவில் அமெரிக்காவில் இருந்து அவர் மெயில் ஒன்றை அனுப்பியிருந்தார்...

‘டாக்டர்... நேற்று எனக்கு 73-வது பிறந்தநாள். பேரனும் நியூரோ சர்ஜனுக்குப் படிக்கிறான். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால், கொஞ்ச நாட்களாக உடல் நலமாக இல்லை. இந்தியாவுக்கு மீண்டும் வந்து உங்களைப் பார்ப்பேனா எனத் தெரிய வில்லை. பழையதும் புதியதும் எல்லா வற்றையும்விட உங்கள் நம்பிக்கையும் சேர்ந்து எனக்கு எவ்வளவு பயன் தந்தது தெரியுமா? இந்தத் துறையில் நிறைய ஆராய்ச்சி செய்யுங்கள் டாக்டர். நிறையப் பேருக்கு பயன் கிடைக்க வேண்டும். ரொம்ப நன்றி டாக்டர்’ என எழுதியிருந்தார்.

மறுநாள் காலை அவர் கணவர் எனக்கு போன்செய்தார். `என் மனைவி காலமாகிவிட்டார். இரவு முழுவதும் சந்தோஷமாகப் பேசினாள். உங்களைப் பற்றியும்தான்' என்றார். நான் மிகவும் நெகிழ்ந்த கணங்களில் இதுவும் ஒன்று.

`உயிர் பிழை’ தொடரின் இந்தக் கடைசிக் கட்டுரையைத் தட்டச்சு செய்து பிழைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, என்னைத் திகைக்கவைத்த ஒரு சம்பவம் நடந்தது.

அவர் ஓர் அரசு ஊழியர். தாம தமாக திருமணம் செய்துகொண்டவர். இப்போது அவருக்கு ஆறு வயதில் மகன் இருக்கிறான். ஒரு பெரும் கோப்பை என்னிடம் காட்டி, `இதைப் பாருங்கள் டாக்டர்... என்ன செய்யலாம்?’ எனக் கேட்டார்.

உயிர் பிழை - 29

`கோப்புக்கு வைத்தியம் செய்யக் கூடாது; உங்கள் பிரச்னையைப் சொல்லுங்கள்’ என்றேன்.

2010-ம் ஆண்டில் இருந்து மூச்சிரைப்பு, நடக்கும்போது முட்டியில் வலி போன்ற உபாதைகள் இருக்கவே, சிகிச்சைக்குச் சென்றிருக்கிறார். எக்ஸ்ரேயில் நெஞ்செலும்புக்குக் கீழே ஏழு செ.மீ. அளவுக்கு ஒரு கட்டி இருப்பது தெரியவந்திருக்கிறது. அடுத்தடுத்து சி.டி ஸ்கேன் மற்றும் பல சோதனைகள் செய்து அவரைப் பரிசோதித்த மருத்துவர், `உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தியிருக்கிறார்.

`திருமணம் முடிந்து ஓர் ஆண்டுதான் ஆகிறது. அதற்குள் இவ்வளவு பெரிய அறுவைசிகிச்சையா?' எனத் தயங்கி, தள்ளிப்போட்டிருக்கிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், பசி கொஞ்சம் குறைந்து, வயிறு வலி, வாந்தி என புதிதான சில பிரச்னைகளுடன் மருத்துவரை மீண்டும் சந்தித்திருக் கிறார். இப்போது ஈரலின் பல பாகங்கள், பெரிடோனியம் எனும் வயிற்றுப் பகுதியில் என ஆங்காங்கே கட்டிகளும் அதை ஒட்டிய நிணநீர் முடிச்சுகளும் தென்பட்டுள்ளன. சிகிச்சையின் விவரம், நோயின் வீரியம், சிகிச்சை பலன் அளிக்கும் சதவிகிதம்... என எல்லாவற்றையும் மருத்துவர் விளக்க, மீண்டும் அவருக்குத் தயக்கம். பணியிட மாறுதலில் அவர் வேறு ஊருக்குச் செல்ல, நோயை மறந்து, அவ்வப்போது தலைகாட்டும் நோய்க்குறிக் குணங்களுக்கு மட்டும் தற்காலிகச் சுயவைத்தியம் செய்திருக் கிறார். மேலும் இரண்டு ஆண்டுகள் ஓட... `இப்போது வந்திருக்கும் முதுகுவலிக்கு ஏதேனும் தைலம் போடலாமா?’ என்ற கேள்வியுடன் தான் என்னிடம் வந்தார். கோப்பு களைப் புரட்டிப் பார்த்தால் பெரும் வியப்பு. அவரது பிப்ரவரி மாத நோய்க் கண்காணிப்பு ஸ்கேனில், முதுகில் டி5 முதல் எல்4 வரை அத்தனை முதுகுத்தண்டுவடத்திலும் நோய்க்கூறுகள் பரவியிருப்பது தெரிந்தது.

அவர் முகத்தில் பதற்றம் இல்லை; பயம் இல்லை. புன்னகையோடு எந்த வலியும் தெரியாமல் சிரித்துக் கொண்டு, `இந்த நோய்க்கூறு பரவல் (Metasatasis) பற்றி நாலு வருஷமா சொல்றாங்க. எனக்கும் தெரியும். அப்பவே நான் சந்திச்ச டாக்டர்கள் எனக்குப் பெருசா நம்பிக்கை தரலை. அதனால நான் ஒண்ணும் செய்யலை’ என்றார்.

அவரை முட்டாளாகப் பார்ப்பதா அல்லது ரமணரைப் போல் பார்ப்பதா அல்லது `Living with cancer happily’ எனப் பேசும் நவீன உலகச் சிந்தனையாளர்களைப் பார்ப்பதுபோல் பார்ப்பதா எனப் புரிய வில்லை. ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. அவரது மனதிடமும் நம்பிக்கையும் கொடுத்த மருந்து, எந்தத் துறையிலும் கிடையாது.

உயிர் பிழை கட்டுரையை, பேய்ப் படம் பார்ப்பதுபோல கண்களைச் சுருக்கிப் படித்தவர்கள் உண்டு. `தண்ணீர், காற்று, சோப்பு சீப்பு... என எல்லாமே பயங்கரம்னு சொல்றீங்க. எதைத்தான் திங்கிறது... எப்படித்தான் வாழ்றது?’ எனக் கோபமாக பின்னூட்டம் எழுதியவர்களும் உண்டு. பயமுறுத்த எழுதப்பட்ட தொடர் அல்ல இது. நம்மைச் சுற்றி நடக்கும் வன்முறைகளை, கொஞ்சம் அடையாளம் காட்டி விழிப்புஉணர்வு தரும் முயற்சி மட்டுமே. மேலே சொன்ன மூன்று அனுபவங்களும் சொல்வது ஒன்றைத்தான். என்னால் வாழ முடியும். என் சவாலை முறியடிக்க முடியும். என்னாலான அத்தனை முயற்சிகளையும் மகிழ்வோடு செய்வேன் என்ற மனோதிடம், அவர்கள் குடும்பம் காட்டும் கரிசனம், அன்பு இவைதான் அத்தனை மருத்துவத்துக்கும் மேலானது.

`வளர்ச்சி’ எனும் பெயரில் சிதைக்கப்படும் சூழல், வேதனைக்கு உரியது. `நவீனம்’ என்ற போலிப் புரிதலில் நொறுங்கிவரும் மரபு, வருத்ததுக்கு உரியது. `துரிதம்’ எனும் ஓட்டத்தில் இழந்துவரும் வாழ்வியல், வலியைத் தருவது. எல்லாவற்றையும் சிதைத்து, நொறுக்கி, இழந்து எதை வளர்க்கப்போகிறோம்?

ஒட்டுமொத்த உலகமும் பிரபஞ்சத்தில் கருந்துளையின் மோதலில் உண்டான கீச்சுக்குரலைப் பதிவுசெய்து பரவசம் அடைந்திருக்கிறது. அறிவியலின் உச்சம் அது. அதே சமயம், பணிகள் எல்லாம் முடித்த மாலைப்பொழுதில், மொட்டை மாடியில் நின்றுகொண்டு, பிரபஞ்சத்தின் நீலநெற்றியில், பொன் மஞ்சள் பொட்டாகத் தெரியும் நிலவை ரசித்துக்கொண்டு, தென்னங்கீற்றில் கண்கள் முன்னே உட்காரும் தூக்கணாங்குருவியின் சலசலப்பை உற்றுக்கவனித்து, `ஒவ்வொரு நாளும் வாழ்வின் ஓட்டத்தில் இளைப்பாறும் இடம் இங்கேதான்’ என பிடித்தவரின் கைகளை இறுகக் கோப்பதில் கீச்சுக்குரலாக உயிரின் ஒலி உடலினுள் கேட்கும். அமைதியான மனதால் மட்டுமே அதைக் கேட்க முடியும். இது நம் மரபு சொன்ன வாழ்வியலின் உச்சம். அறிவியலின் உச்சமும் மரபின் உச்சமும் செய்யும் ஆலிங்கனத்தில், இனி உயிர்் பிழை ஒடுங்கிப்போகும். உயிரின் இசை நீடித்து ஒலிக்கும்!

- நிறைந்தது