Published:Updated:

துக்கமும் தூக்க மாத்திரைகளும்... துயரத்தில் ஜெயலலிதா! சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 7

துக்கமும் தூக்க மாத்திரைகளும்... துயரத்தில் ஜெயலலிதா! சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 7
துக்கமும் தூக்க மாத்திரைகளும்... துயரத்தில் ஜெயலலிதா! சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 7

துக்கமும் தூக்க மாத்திரைகளும்... துயரத்தில் ஜெயலலிதா! சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 7

''நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில், கட்டிய வீட்டில் இருக்கிறேன். எனக்கு 41 வயது ஆகிறது. நான் குழந்தை அல்ல. என்னை யாரும் ஒளித்து வைக்க முடியாது. சில காலத்துக்கு நான் தனிமையாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய சொந்த விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது'' - 1989 ஜூலையில் ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் இவை.

'சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதா இருக்கிறார்' என்ற விமர்சனங்கள் 1989-ம் ஆண்டே எழுந்தன. அந்த நேரத்தில்தான், இந்த பதிலடியைக் கொடுத்தார் ஜெயலலிதா. இப்படி ஜெயலலிதா சொன்னதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

'தேர்தலில் போட்டியிட பணம் பெற்றுக்கொண்டு, அதைத் திருப்பித் தராமல் நடராசன் மிரட்டினார்' என தேனி ஶ்ரீதர் கொடுத்த புகாரில் நடராசன் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி நடராசன் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார். அவரின் தலையீடு இல்லாததால், போயஸ் கார்டனுக்குள் சீனியர்கள் நுழைவதில் கெடுபிடி கொஞ்சம் குறைந்திருந்தது. பிறகு சென்னைக்குள் நுழைந்ததும் நடராசனின் ஆட்டம் ஆரம்பம் ஆனது. நடராசன் தனது அரசு வேலையை ராஜினாமா செய்ததைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. 7576 என்ற பதிவு எண் கொண்ட சிவப்பு நிற மாருதி காரில் நடராசன் கார்டனுக்கு வருவதும் போவதுமாக இருந்தார்.

1989 ஜூலையில் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு நான்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான தேர்தல் ஜூனில் நடைபெற்றது. அப்போது, அ.தி.மு.க-வுக்கு 27 எம்.எல்.ஏ-க்களும் காங்கிரஸுக்கு 26 எம்.எல்.ஏ-க்களும் இருந்தனர். காங்கிரஸ் தயவில், அ.தி.மு.க. சார்பில் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு செய்ய முடியும் என்ற சூழலில், அந்தப் பதவியைப் பிடிக்க ஏக டிமாண்ட். ஹண்டே, முத்துசாமி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அந்த சீட்டுக்கு குறி வைத்திருந்த நிலையில் நடராசனும் அந்தப் பதவியைப் பிடிக்க நினைத்தார்.

காங்கிரஸுடன் ஜெயலலிதா நெருக்கம் பாராட்ட ஆரம்பித்த நேரம் அது. நடராசனின் பிரஷர் தாங்க முடியாமல், அந்த சீட்டை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தார் ஜெயலலிதா. அந்த சீட்டில்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.கே.டி.ராமசந்திரன் ஜெயித்தார். நடராசனுக்கு சீட் கொடுத்தால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும். கட்சியில் வேறு யாருக்கும் தந்தால், நடராசன் எதிர்ப்பார். காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தால் கூட்டணிக்கு அச்சாரமாக இருக்கும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தினார் ஜெயலலிதா.

இதன்பிறகும் நடராசன், சசிகலா ஆகியோரின் தலையீடு குறையவில்லை. அவர்களை கட்டுப்படுத்த ஒரு வழியைத் தேடினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் தோழி பிரேமா மீண்டும் கார்டனுக்குள் கால் பதிக்கத் தொடங்கினார். ஜெயலலிதாவின் பி.ஏ-வாக இருந்த இந்த பிரேமா, சசிகலா வருகையால் கார்டனில் இருந்து வெளியேறினார். பிரேமாவை அடிக்கடி அழைத்து, அவருடன் அளவாடிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. சசிகலாவுக்கு பாடம் புகுத்த ஜெயலலிதா போட்ட திட்டம் இது. விஜய் மல்லையாவின் உறவினர்தான் பிரேமா. 1989 சட்டசபைத் தேர்தலுக்கு விஜய் மல்லையாவிடம் இருந்து தேர்தல் நிதியைப் பெற்றுத் தந்ததில் பிரேமாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதன்பிறகு கார்டனுக்குள் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. இதன்பிறகுதான் 'ஜெயலலிதா எங்கிருக்கிறார்' என்ற சர்ச்சை பூதாகரமாக எழுந்தது.

அப்போது என்ன நடந்தது? மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது. ''சசிகலா குடும்பத்தினரோடு ஏற்பட்ட தகராறில் கோபம் அடைந்த ஜெயலலிதா, தூக்க மாத்திரைகளை அதிகமாக போட்டுக் கொண்டார். பதறிய சசிகலா, நடராசனுக்கு தகவல் சொன்னார். சசிகலாவின் அண்ணன் டாக்டர் விநோதகன் விரைந்து வந்து, சிகிச்சை அளித்தார். இந்த விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். சுமார் ஒரு மாத காலமாக ஜெயலலிதா வெளியே வரவில்லை. போயஸ் கார்டனில்தான் இருக்கிறாரா... அல்லது வெளியூர் சென்றிருக்கிறாரா? எனத் தெரியாமல் கட்சியினர் குழம்பிப் போனார்கள். நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல போயஸ் கார்டனில்கூட அவரின் தரிசனம் கிடைக்கவில்லை. 'உடல்நலக் குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் ஜெயலலலிதா சிகிச்சை பெற்று வருகிறார்' என செய்திகள் றெக்கை கட்ட ஆரம்பித்தன. சசிகலா குடும்பத்தினர் எஸ்.டி.எஸ்-ஸை அழைத்து, 'அம்மா சிகிச்சைக்காக பெங்களூர் போயிருக்கிறார். வருவதற்கு சில நாள்கள் ஆகும்.' எனச் சொல்லி செய்தியைக் கசியவிட்டார்கள்.'' என்றார்கள் அந்த மூத்த பத்திரிகையாளர்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான், ''ஜெயலலிதாவை சசிகலா குடும்பம் ஒளித்து வைத்திருக்கிறார்கள்'' எனப் பேச்சுகள் கிளம்பின. வழக்கம்போல சசிகலா குடும்பத்தின் மகுடிக்கு ஆடினார் ஜெயலலிதா.

கடைசியில் வேறுவழியில்லாமல் ஜெயலலிதா விளக்கம் சொல்லும் அளவுக்குப் போனது. ''நான் குழந்தை அல்ல. என்னை யாரும் ஒளித்து வைக்க முடியாது. என்னுடைய சொந்த விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.'' என திருவாய் மலர்ந்தார் ஜெயலலலிதா.

ஜெயலலிதாவின் விளக்கவுரை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், சசிகலா குடும்பத்துக்கு அல்ல. சசிகலா குடும்பம் ஜெயலலிதாவைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. போயஸ் கார்டனில் இருந்த இரண்டு கார்கள் கூத்தாநல்லூரில் உள்ள ஒரு டாக்டர் பெயருக்கு மாற்றப்பட்டன.

(தொடரும்...)

அடுத்த கட்டுரைக்கு