Published:Updated:

பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: ஜெ. வேண்டுகோள்

சென்னை, பிப்.21,2011

தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தனது கட்சியினரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளர். ##~~##

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற சிந்தனையோடு வாழ்ந்தவர் அண்ணா அவர்கள். இதற்கு முற்றிலும் மாறாக எங்கும் குடும்பம், எதிலும் குடும்பம் என்ற குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் முதல்வர் கருணாநிதி. அவரின் தன்னலம் காரணமாக, அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

விண்ணை முட்டும் விலைவாசி, கடுமையான மின்வெட்டு, பெட்ரோல் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, குடிநீர்ப் பற்றாக்குறை, மருத்துவ வசதியின்மை, சாலை வசதியின்மை என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, பதுக்கல், கொலை, கொள்ளை, என அனைத்து சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. 

பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது.  அண்டை மாநிலங்களுடனான அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளிலும் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் காரணமாக மீன்பிடித் தொழிலையே விட்டுவிடும் நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம், உலக அரங்கில் இந்திய நாட்டுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார் திரைப்படத் துறை, கட்டுமானத் துறை என ஒவ்வொரு துறையிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.

இந்தக் ஆட்சியை, பொதுத் தேர்தல் மூலம் அகற்றுவதற்கான பணிகளில் அதிமுகவினர் அனைவரும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.  இந்தத் தருணத்தில், எனது பிறந்த நாளை கொண்டாடுவதை விட ஒரு குடும்பத்தின் பிடியில்

சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை காப்பாற்றும் பணிகளில் ஈடுபடுவது தான்  எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்.  

பொதுவாக எனது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புவதில்லை.  இருப்பினும், எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கருதினால், ஏழை, எளிய மக்களுக்கு துணிமணிகள் வழங்குதல், மருத்துவ சேவையாற்றுதல், அன்னதானம், ரத்ததானம், போன்ற நற்காரியங்களில் அதிமுகவினர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குடும்ப ஆட்சியை அகற்றி, எம்ஜிஆரின் நல்லாட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திட எனது பிறந்த நாளன்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டு, அதை நிறைவேற்றிடும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். 

குடும்ப ஆட்சி அழிந்து நல்லாட்சி அமையும் நாளே தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நாள் என்பதால், அனைத்து கொண்டாட்டங்களையும் அந்த நாளன்று வைத்துக் கொள்ளலாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.