மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 19

குடி குடியைக் கெடுக்கும் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
குடி குடியைக் கெடுக்கும் - 19

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படங்கள்: எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார்

டாஸ்மாக்கின் கேடுகளை நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். டாஸ்மாக் ஊழியர்கள் படும் துன்பம், மிகப் பெரிய கொடுமை. ‘அவர்கள் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் விலைவைத்து கொள்ளையடிக்கிறார்கள். லட்சம், லட்சமாகச் சம்பாதிக்கிறார்கள்’ என்ற விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கின்றன. அவற்றையும் பேசுவோம். அதற்கு முன்னால் நாள் முழுக்க தன் உழைப்பைத் தரும் ஒரு தொழிலாளியாக அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லிமாளாதவை. குறிப்பாக, வேலை நேரம். ஒரு டாஸ்மாக் கடை, காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு முடிகிறது. மதிய உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை என எதுவும் கிடையாது. தொடர்ச்சியாக 12 மணி நேர வேலை.

நிலக்கோட்டையில் இருக்கும் ஒருவர், தன் சொந்த ஊரில் இருந்து கிளம்பி மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு வர வேண்டும் என்றால், காலை 8:30 மணிக்கு பஸ் பிடிக்க வேண்டும். அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். இரவு 10 மணிக்கு கடை முடிந்ததும் வீட்டுக்கு வந்து சேர, குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் வைத்துக்கொண்டாலும் இரவு 11 மணி ஆகிவிடும். சாப்பிட்டுவிட்டுப் படுக்க 12 அல்லது 1 மணி ஆகிவிடும். ஒரு நாளில் முக்கால்வாசி நேரத்தை அவர்கள் டாஸ்மாக் கடையிலேயே செலவிடுகின்றனர். ஞாயிறு விடுமுறையோ, மாத விடுமுறையோ கிடையாது. காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் உள்பட வருடத்துக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை. மற்ற நாட்களில் நல்லது கெட்டதுக்கு விடுமுறை தேவை என்றால், ஒரு கடையில் பணிபுரியும் ஊழியர்களே அவர்களுக்குள் அனுசரித்துக்கொண்டு விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும். விடுமுறைக்கு அதிகாரபூர்வமாக விண்ணப்பிப்பது, அவர்கள் அதை அனுமதிப்பது என்பது எல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லாதவை.

குடி குடியைக் கெடுக்கும் - 19

‘‘நாம வீட்டுக்குப் போகும்போது பிள்ளைங்க தூங்கியிருக்கும். காலையில அதுங்க ஸ்கூலுக்குக் கிளம்பணும், நாம வேலைக்குக் கிளம்பணும். அந்த இடைவெளியில அரை மணி நேரம் பார்த்துக்கிட்டா உண்டு. சில பேர் 100 கி.மீ தாண்டிகூட வேலைக்கு வந்து போறாங்க. அவங்க நிலைமை இன்னும் கொடுமை’’ என்பது வேதனைக்குரலின் சிறுதுளி.

நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை என்பது வேறு எந்த அரசுத் துறைகளிலாவது நடைமுறையில் இருக்கிறதா? மருத்துவமனை, காவல் நிலையம் போன்றவை அத்தியாவசியத் தேவைகள். எனவே, அவை 24 மணி நேரமும் இயங்குகின்றன. அவற்றைத் தவிர்த்து, ரேஷன் கடையோ, தாசில்தார் அலுவலகமோ, வங்கிகளோ 8 மணி நேரம்தான் இயங்குகின்றன. டாஸ்மாக் மட்டும் 12 மணி நேரம் இயங்கவேண்டிய அவசியம் என்ன?

‘‘அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பது உங்களுக்கே தெரியும். அவர்களுக்கு, மாணவர்களின் பரீட்சைப் பேப்பர்களைத் திருத்துவதற்காகத் தனியாக மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. அதாவது, அவர்களின் வழக்கமான பணி அல்லாத கூடுதல் பணியைச் செய்வதால் அந்தக் கூடுதல் ஊதியம். ஆனால் நாங்கள், நாள்தோறும் 6 மணி நேரம் கூடுதலாகப் பணிபுரிகிறோம்; விடுமுறையே இல்லாமல் உழைக்கிறோம். எங்களுக்கு என்ன தருகிறார்கள்? மதிப்பூதியத்தை விடுங்கள், எங்களுக்கு `தொகுப்பூதியம்' என்ற பெயரில் வழங்கப்படும் ஊதியமே மிக, மிகக் குறைவாக இருக்கிறது. ஒரு விற்பனையாளருக்கு ஐந்து ஆயிரம் ரூபாயும், ஒரு மேற்பார்வையாளருக்கு ஏழு ஆயிரம் ரூபாயும் தருகிறார்கள். விற்கிற விலைவாசிக்கு இது எந்த மூலைக்கு? நாள்தோறும் கடைக்கு வந்து செல்வதற்கான பேருந்துக் கட்டணமே மாதத்துக்கு 1,000 ரூபாய் போய்விடும். ஊர்விட்டு ஊர் வந்து தங்கியிருந்து வேலை பார்ப்பவராக இருந்தால், அறை வாடகை குறைந்தது இரண்டு ஆயிரம் ரூபாய் போய்விடும். உணவு, இதரச் செலவுகள் எல்லாம் கழித்தால் கையில் மிஞ்சுவது சொற்பத்திலும் சொற்பம்தான்’’ எனப் புலம்புகிறார்கள் பலர்.

2003-ம் ஆண்டு இவர்கள் டாஸ்மாக் பணிக்கு வரும் போது சம்பளம் வெறும் 1,000 ரூபாய்தான். இருப்பினும் அந்த வேலைக்கு கடும் போட்டி நிலவியது. காரணம், எப்படியும் சில ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கைதான். டாஸ்மாக் தொடங்கிய சில மாதங்களிலேயே அதன் விற்பனை இலக்கான 300 கோடி ரூபாயைத் தாண்டி 1,000 கோடி ரூபாயை எட்டியது. இதனால் `கிராமப்புறப் பகுதிகளில் மூன்று லட்ச ரூபாய்க்கு அதிகமாகவும், நகர்புறப் பகுதிகளில் பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமாகவும் விற்பனையாகும் கடைகளின் ஊழியர்களுக்கு, விற்பனை மதிப்பில் இருந்து 20 சதவிகிதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்' என அறிவித்தது அரசு. அது, டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பொற்காலம். ஊக்கத்தொகையாக பெரும்தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டே ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டில் இந்த ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டது. அதற்கு மாறாக அரசு வேறு ஒன்றை ஊக்கப்படுத்தியது.

‘குவார்ட்டர் பாட்டிலுக்கு இரண்டு ரூபாய், பீர் பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் எனக் கூடுதலாக விலைவைத்து விற்றுக்கொள்ளுங்கள்’ என ஊழியர்களுக்கு வாய்மொழியாகச் சொல்லப்பட்டது. அதாவது, ஒரு பொருளின் விலையை, அதன் விற்பனை விலையைவிட அதிகமாக விற்கச் சொல்லி, டாஸ்மாக் நிர்வாகமே சொன்னது. ‘ஊழல் செய்யுங்கள்... உயர்ந்து நில்லுங்கள்’ என அரசே சொன்னபிறகு கேட்கவா வேண்டும்? இதைப் பயன்படுத்திக் கொண்டு ‘கூலிங் பீர் வேண்டுமா... பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா கொடு. குறிப்பிட்ட பிராண்ட் விஸ்கி வேண்டுமா... ஐந்து ரூபாய் அதிகம் கொடு’ என கட்டிங்கில் கல்லா கட்டியோர் பலர். நாள் முழுக்கக் கூட்டம் அள்ளும் டாஸ்மாக் கடைகளில், ஒரு நாளைக்கு ஐந்து ஆயிரம் பாட்டில்கள் விற்பனையாகின்றன என்றால், ஒரு பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் அதிகம் வைத்து விற்றால் பத்து ஆயிரம் ரூபாய் லாபம். இந்த உபரி வருவாயின் வரவும் கணக்குவழக்கும் தங்கள் கட்டுப்பாட்டு எல்லைக்குள் வருகின்றன என்பதால், பொதுவில் டாஸ்மாக் ஊழியர்கள் இதில் ஆர்வம்காட்டினார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பெரும் பொருளீட்டியவர்கள் உண்டு. ஆனால், இதை எல்லோருக்கும், எல்லா கடைகளுக்கும் பொருத்த முடியாது. இதில் கவனிக்க வேண்டிய வேறு பல அம்சங்களும் உள்ளன.

குடி குடியைக் கெடுக்கும் - 19

‘‘ `விலையைக் கூட்டி விற்றுக் கொள்ளுங்கள்' என டாஸ்மாக் நிர்வாகம் சொல்வதன் பொருள், `எவ்வளவு வேண்டு மானாலும் சம்பாதித்துக்கொள்ளுங்கள்’ என்பது அல்ல. அந்த அளவுக்கு எங்களுக்கு செலவுகளையும் வைக்கிறார்கள். உதாரணமாக, கடையில் உடையும் பாட்டில்களுக்கு நாங்களே பொறுப்பு. கோடை காலத்தில் பீர் பாட்டில்கள் சும்மாவே உடையும். தூக்கும்போதும் எடுக்கும்போதும் ஒவ்வொரு நாளும் சில பாட்டில்கள் உடையும். இதற்கு உரிய பணத்தை நாங்கள்தான் செலுத்த வேண்டும். அதேபோல ஓர் அட்டைப் பெட்டியின் மதிப்பு மூன்று ரூபாய். அதற்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டாலும் நாங்கள்தான் பொறுப்பு. சமீபத்தில் பெய்த பெருமழையில் சென்னை, கடலூர் பகுதிகளில் உள்ள பல டாஸ்மாக் கடைகளில் ஆயிரக்கணக்கான அட்டைப் பெட்டிகள் சேதமாகின. அவற்றுக்கான அபராதமும் எங்களைத்தான் கட்டச் சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் குறைந்தது பத்தாவது வந்துவிடும். குறிப்பாக, பத்து ரூபாய் நோட்டுக்கள். அதையும் நாங்கள்தான் ஈடுகட்ட வேண்டும்.

நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு கடையில், கூடுதல் விலைவைத்து சரக்குகளை விற்பனைசெய்வதன் மூலம், இரண்டு ஆயிரத்தில் இருந்து மூன்று ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மேலே சொன்ன செலவுகளைக் கழித்தால் ஒரு நபருக்கு சுமார் 700 ரூபாய் கிடைக்கும். இதைத்தான் சம்பளம்போல கருதி நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இதிலும் பங்குபோட அடிக்கடி அதிகாரிகள் வந்துவிடுவார்கள். கலால் துறை, காவல் துறை, டாஸ்மாக் ஸ்குவார்டு எல்லாம் அவ்வப்போது கிளம்பிவந்து, ‘நீங்கள் கூடுதல் விலைவைத்து விற்கிறீர்கள். சஸ்பெண்ட் செய்யப்போகிறோம்’ என மிரட்டுவார்கள். அதாவது, எங்களை முறைகேடு செய்யச் சொல்லித் தூண்டிவிட்டு, பின்னர் அதையே எங்களின் குற்றமாகச் சித்திரித்து மிரட்டுகின்றனர். அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும்.

ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் குறைந்தது இரண்டு லோக்கல் ரெளடிகள் கோலோச் சுவார்கள். அந்த ரெளடிகள், தனது அல்லக்கை களுடன் தினசரி வந்து ஓசி சரக்குக் கேட்பார்கள். கேட்பதைக் கொடுத்தாக வேண்டும். இல்லை என்றால், ‘எப்படி கடை நடத்துறேனு பார்க்கிறேன்’ எனப் பிரச்னை செய்வார்கள். அந்தக் காசும் எங்கள் கணக்குதான். இது எல்லாவற்றையும்விட முக்கியமானது, பார் நடத்துவோரின் அட்டகாசம்.

டாஸ்மாக் பார்கள் அனைத்தும் ஆளும் கட்சி நபர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவர்கள் இரவு 8:30 மணிக்கே வந்து, ‘கடையை மூடு, கடையை மூடு’ என நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் கடையை மூடினால்தான், அவர்கள் பாரில் வைத்து சரக்கு விற்க முடியும். கடைசி நேரத்தில் குடிக்க வருவோரிடம் இருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் லாபம் பார்க்கின்றனர். இப்படி பார்களில் விற்கப்படும் பெரும்பாலான சரக்கு, போலி மதுபான வகையைச் சேர்ந்தது. இதைக் கண்டுபிடித்து நாங்கள் புகார்செய்தால், எங்கள் மீதுதான் டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். சென்னையில், ஒரு கடையில் போலி மதுபானம் விற்ற பார் குறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் புகார் தெரிவித்தார். கடுப்பான பார் ஆட்கள், 10 மணிக்குப் பிறகு, அந்த ஊழியர் பணிபுரியும் கடையை உடைத்து, உள்ளே இருந்த கலெக்‌ஷன் பணத்தைத் திருட முயற்சித்துள்ளனர். நல்லவேளையாக அங்கே பணம் இல்லாததால், தப்பித்தது. ஆனால், கூரையைப் பிரித்து உள்ளே குதித்ததால் ஏராளமான மது பாட்டில்கள் உடைந்துவிட்டன. `அந்தப் பாட்டிலுக்கு உண்டான பணத்தையும் டாஸ்மாக் ஊழியர்கள்தான் கட்ட வேண்டும்' என அதிகாரிகள் சொல்கிறார்கள். எவ்வளவு மோசமான நிலையில் நாங்கள் வேலைபார்க்கிறோம் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

ஓர் அரசு அலுவலகத்தில் திருடுபோனால், அதற்கு சம்பந்தப்பட்ட அரசு ஊழியரைக் குற்றம் சொல்வார்களா? ஆனால், எங்களைச் சொல்கிறார்கள்.

பூந்தமல்லி அருகே ஒரு கடையில் கூரையைப் பிரித்து மூன்று லட்ச ரூபாய் கலெக்‌ஷன் பணத்தைத் திருடிவிட்டார்கள். இதற்கு அந்த ஊழியர்களைக் குற்றவாளிகளாகச் சித்திரித்து, அவர்களைப் பிடித்துவந்து மோசமாக அடித்து உதைத்தது போலீஸ். கடைசியில் உண்மையான திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. மீதித்தொகை ஒரு லட்சத்தை மற்ற டாஸ்மாக் ஊழியர்கள்தான் பங்குபோட்டுக் கட்டினோம். இப்படி, கேட்க நாதியற்றவர்களாக இருக்கிறோம். ஏதோ ஓர் அரசு வேலை, எப்படியும் நிரந்தரம் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த வேலைக்கு வந்தோம். ஆனால், 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்களை வைத்து அரசியல் செய்கிறார்களே தவிர, எங்கள் நலன்குறித்து சிந்திக்க ஒருவரும் இல்லை’' என்கிறார் டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகளில் ஒருவர்.

ஒரு டாஸ்மாக் கடையில் ஒவ்வொரு நாளும் கல்லாவில் சேரும் பணத்தை, கடையில் உள்ள லாக்கரில் வைத்திருக்க வேண்டும். ஆனால், 40 சதவிகித கடைகளில்தான் இந்த லாக்கர் பயன்படுத்தும் நிலையில் இருக்கிறது. மற்ற கடைகளில் என்ன செய்கிறார்கள் என்றால், வசூல் பணத்தை ஊழியர்களே சொந்தப் பொறுப்பில் வீட்டுக்கு எடுத்துச் சென்று மறுநாள் கொண்டுவருகிறார்கள். லட்சக்கணக்கான பணத்தோடு சென்று திரும்பும் நேரம் முழுவதும் பெரும் பதற்றம் அவர்களைச் சூழ்கிறது. ஏனெனில், இந்தப் பணத்தை வழிப்பறி செய்வதும், அதற்காக கொலை வரை செல்வதும் பல இடங்களில் நடந்திருக்கின்றன!

- போதை தெளிவோம்...