Published:Updated:

பை பை மெக்கல்லம்!

தெரிஞ்சது அதிரடி... தெரியாதது பயம்...சார்லஸ்

பிரீமியம் ஸ்டோரி

‘என்னுடைய கனவு, நியூஸிலாந்து அணிக்காக விளையாடுவது. அது நிஜமானது. நாட்டுக்கும் ரசிகர்களுக்கும் நான் நல்ல பேட்ஸ்மேன் என்பதைக் காட்டிவிட்டேன். ஆனால், வீட்டுக்கு நான் நல்ல மனிதனாக வேண்டும். 14 வருடங்கள் கிரிக்கெட் ஆடிவிட்டேன். இது போதும். எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களைக் கவனிக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. என் சொந்த மண்ணில், என் மக்கள் முன்பு, பிப்ரவரி மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறேன்’ - கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட், ஒரு நாள், டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற இருப்பதாக அறிவித்தார் நியூஸிலாந்தின் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம்.

பை பை மெக்கல்லம்!

34 வயதே ஆன கிரிக்கெட் வீரர், அதுவும் சிக்ஸரும் பெளண்டரியுமாக விளாசும் அதிரடி பேட்ஸ்மேன் இப்படி அறிவிப்பார் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை. அறிவித்தபடியே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் விடைபெற்றிருக்கிறார் மெக்கல்லம். சாதாரணமாக அல்ல, உலக சாதனையோடு விடைபெற்றிருக்

கிறார். கடைசிப் போட்டியில் 54 பந்துகளில் சதம் அடித்து, `டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைவான பந்துகளில் சதம் அடித்தவர்' என்ற விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை உடைத்திருக்கிறார்.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மாவீரன், பிரண்டன் மெக்கல்லம். அதிரடி கிரிக்கெட்டால் உலகம் முழுக்க ரசிகர்களைக் கவர்ந்தவர். டி-20 கிரிக்கெட்டில் உலகின் டாப் ஸ்கோரர். 20-20 சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இரண்டு சதங்கள் அடித்திருக்கும் உலகின் ஒரே பேட்ஸ்மேன். ஏழாவது பேட்ஸ்மேனாகக் களம் இறங்கி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து சதங்கள் அடித்திருக்கும் ஒரே செஞ்சுரியன். டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்திருக்கும் நியூஸிலாந்தின் முதல் வீரர்... என மெக்கல்லத்தின் சாதனைகள் சீரியல்போல தொடர்கின்றன.

நியூஸிலாந்து அணிக்காக 400 போட்டிகளில் விளையாடி, 14 ஆயிரம்  ரன்கள் அடித்திருக்கிறார் மெக்கல்லம். நியூஸிலாந்து வீரர்கள், பொதுவாக எந்தவிதமான சுவாரஸ்யமும் இல்லாமல் மந்தமாக ஆடும் ஸ்டைலையே பின்பற்றுபவர்கள். ஆனால் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பது,  ஐந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருக்கும்போது கிரீஸைத் தாண்டி வந்து பெளண்டரிகள் வெளுப்பது என மெக்கல்லம், வேற லெவல் பேட்ஸ்மேன். மெக்கல்லத்தின் ஸ்ட்ரைக் ரேட் எப்போதுமே 100-க்கு மேல்தான் இருக்கும். சச்சின், கங்குலி தொடங்கி சுழற்பந்து வீச்சாளர்களை கிரீஸைவிட்டு ஏறி வந்து பலரும் சிக்ஸருக்கு விரட்டுவார்கள். ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களையே கோட்டைத் தாண்டி வந்து மிரட்டிய ஒரே பேட்ஸ்மேன் பிரண்டன் மெக்கல்லம்தான்.

கிரிக்கெட் குடும்பம். மெக்கல்லத்தின் அப்பா ஸ்டூவர்ட், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். இவரது அண்ணன் நாதன் மெக்கல்லம், நியூஸிலாந்து அணிக்காக விளையாடியவர். 2000-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டி, உலகின் மிகச் சிறந்த வீரர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அந்த உலகக் கோப்பையில் விளையாடியவர்கள்தான் யுவராஜ் சிங், முகமது கைஃப், ஹர்பஜன் சிங், மைக்கேல் கிளார்க், க்ராம் ஸ்மித் போன்றோர். அந்த வரிசையில் 19 வயது சிறுவனாக நியூஸிலாந்து அணிக்குள் அதிரடி ஆட்டம் ஆடியவர் மெக்கல்லம்.

முதலில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக 2003-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்குள் நுழைந்த மெக்கல்லத்தின் அதிரடி ஆட்டம் உலகம் முழுக்கப் பரவ, ஐ.பி.எல் ஒரு காரணம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகக் களம் இறங்கி, ஜாகீர் கான், பிரவீண் குமார், ஜாக்யூஸ் காலிஸ் என பெங்களூரு அணிக்காக பந்து வீசிய அத்தனை பௌலர்களையும் அடித்து நொறுக்கி, 13 சிக்ஸர், 10 பெளண்டரி என 73 பந்துகளில் 158 ரன்கள் விளாசினார்.

ஸ்டீஃபன் ஃப்ளெமிங்குக்குப் பிறகு சரியான கேப்டன்ஷிப் இல்லாமல் வங்கதேசம், ஜிம்பாப்வேயிடம் எல்லாம் அடிவாங்கும் அணியாக தரவரிசையில் 7-வது இடத்துக்குப் பின்தங்கியது நியூஸிலாந்து. 2013-ம் ஆண்டில் மெக்கல்லம் கேப்டனாகப் பொறுப்பேற்று, டாஸில் வெற்றிபெற்று, ‘நாங்கள் பேட் செய்கிறோம்’ எனச் சொல்லிவிட்டு பேட்டிங் விளையாட வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பை பை மெக்கல்லம்!

20 ஓவர்களிலேயே 45 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூஸிலாந்து. கேப்டனாக ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தார் மெக்கல்லம். செய்தியாளர்களைச் சந்தித்தவர், ‘இன்று எப்படி பேட்டிங் செய்யக் கூடாது என்பதை ஒரு கேப்டனாகக் கற்றுக்கொண்டேன். அடுத்த இன்னிங்ஸில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என்றார். சொன்னதுபோலவே அடுத்த இன்னிங்ஸில் அரை சதம் அடித்து, அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தார்.

2014-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மெக்கல்லம். அதிகபட்சம் ஆறு ஓவர்தான் களத்தில் இருப்பார். குறைந்தபட்சம் ஐந்து சிக்ஸர்கள், ஆறு பெளண்டரிகள் பறந்திருக்கும். ‘அணியில் மெக்கல்லம் இருக்கும்போது எனக்கு என்ன கஷ்டம்?’ என ஓப்பனாகவே சொன்னார் தோனி.

2015-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து. 40 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பிரண்டன் மெக்கல்லம் கேப்டன்ஷிப்பில்தான் முதல்முறையாக நியூஸிலாந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது. ஆனால், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. ‘நீங்கள் மிக மிக சாதாரணமானவரோ அல்லது பலம்வாய்ந்த மிகப் பெரியவரோ... யாராக இருந்தாலும் உங்களை விமர்சிப்பவர்கள் இருப்பார்கள். விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும்’ என்றார் மெக்கல்லம்.

விமர்சனங்களுக்கு மட்டும் அல்ல; எந்த பௌலருக்கும் பயந்தது இல்லை பிரண்டன் மெக்கல்லம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு