Published:Updated:

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!
பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!

அதிஷா, படங்கள்: ப.சரவணகுமார்

பிரீமியம் ஸ்டோரி

ஸ்வின் படிக்கும் அந்த மெட்ரிக் பள்ளி மதுரையின் மையப்பகுதியில் இருக் கிறது. ஓரளவு நன்றாகப் படித்துக் கொண்டிருந்த மாணவன். கடந்த சில மாதங்களாக, பள்ளிக்குத் தொடர்ந்து  வருவதும் இல்லை; வீட்டுப்பாடங்களைச் சரியாகச் செய்வதும் இல்லை. விசாரித்தால் எரிந்து விழுவான்; கோபப்படுவான். அதுவரை கவனிக்காமல் இருந்த பெற்றோர், மதிப்பெண்கள் சரியத் தொடங்கிய பிறகுதான் விழித்துக் கொண்டனர். ஆசிரியரை எதிர்த்துப் பேச ஆரம்பித்த பிறகுதான், அஸ்வினைப் பின்தொடர்ந்தார்கள்.

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!

அஸ்வின் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வரும் முன்னர், தன் சக நண்பர்களைச் சந்திப்பான். அனைவரும் பள்ளிக்கு அருகில் இருக்கும் பெட்டிக்கடைக்குச் செல்வார்கள். ‘அண்ணா’ எனச் சிரித்தால், கடைக்காரர் புரிந்துகொள்வார். காசை வாங்கிக்கொண்டு, மறைத்துவைத்திருக்கும் மஞ்சள் பையில் இருந்து நீலநிற பாக்கெட்டுகளை எடுத்து நீட்டுவார். அது ‘கூல் லிப்' என்ற மெல்லும் புகையிலை.

கூல் லிப்... மின்ட் ஃப்ளேவர் சேர்த்து துவர்ப்பும் குளிர்ச்சியுமாக, குழந்தைகளைக் கவரும் வண்ணம் தயாரிக்கப்பட்ட ஆபத்தான எமன். எளிதாகச் சொன்னால் வடிகட்டப்பட்டப் புகையிலை. இதை உள்ளங்கையில் வைத்துக் கசக்கத் தேவை இல்லை. மாத்திரை அளவுக்கு பேக் செய்யப்பட்ட ஒரு குட்டி பாக்கெட்டை எடுத்து, அப்படியே வாய்க்குள் அல்லது உதட்டின் இடைவெளியில் வைத்துக்கொள்ளலாம். இதைப் போட்டுக்கொண்டுதான் ஒவ்வொரு நாளும் அஸ்வினும் நண்பர்களும் பள்ளிக்குக் கிளம்புவார்கள்.

அஸ்வினுக்கு இப்போது 13 வயது. இதை, சுமார் ஒன்றரை ஆண்டுகளாகப் பயன்படுத்து கிறான். சில நாட்களுக்கு முன்னர் காலையில் சன் மியூஸிக்கில் பாட்டு கேட்டபடி பல் துலக்கிக்கொண்டிருந்தபோது, கன்னத்தில் ஓட்டைவிழுந்து பிரஷ் வெளியே வந்துவிட்டது. அஸ்வினின் குடும்பம் அலறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓட, இப்போது அஸ்வினால் பேச முடியாது. வாயைத் திறக்க முடியாது.

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!

அஸ்வினைப் போல ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள் இந்த ‘கூல் லிப்’ என்ற ஆபத்தான புகையிலைக்கும் குட்காவுக்கும் அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள். இது மதுரையில் மட்டும் அல்ல... சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி என தமிழக மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து, நம் மாணவர்களின் உடல்நலத்தைச் சிதைக்கத் தொடங்கியுள்ளது.

‘`புகையிலை வியாபாரிகள், தங்கள் வருமானத்தைப் பெருக்க புதுப்புது வழிமுறை களைக் கையாள்கிறார்கள். அவர்களுக்கு எளிதான இலக்காக இருப்பது சிறுவர்கள்தான். போதைப்பழக்கம் எல்லாமே ஒன்றில் இருந்து இன்னொன்று எனப் பெருகக்கூடியவை.  இந்த ‘கூல் லிப்’ புகையிலை அப்படிப்பட்ட ஒன்று’’ என்கிறார் புகையிலைக்கு எதிரான தமிழக அமைப்பின் (Tamilnadu People’s Forum for Tobacco Control) இயக்குநர் சிறில் அலெக்ஸாண்டர்,

‘`குழந்தைகள், கூல் லிப் மட்டும் அல்ல; மாவா, குட்காகூட அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்’’ என எச்சரிக்கிறார்.

தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் குட்கா பொருட்களைத் தயாரிக்கவும் விற்கவும் தடைவிதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. `பான் மசாலா, குட்கா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம்' என முதலமைச்சர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டில் அறிவித்தார். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை. அவ்வப்போது இந்தப் போதைப் பொருட்கள் பிடிபட்டாலும்கூட, எல்லா நேரமும் தங்குதடையின்றி கிடைக்கின்றன.

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!

‘`இந்தப் போதைப் பொருட்கள் ரயில்களிலும் பார்சல் சர்வீஸ்களிலும் போலியான பெயர்களில் அனுப்பப்பட்டு போலியான நிறுவனப் பெயர்களில் பெறப்படுகின்றன’’ என்கிறார் போதைப் பொருட்கள் விற்கும் மதுரை ஏஜென்ட் ஒருவர். இங்கே தடை விதிக்கப்பட்டதால் உண்டான ஒரே பயன்,

எம்.ஆர்.பி எதுவும் இல்லாமல் இஷ்டம்போல விலைவைத்து விற்கத்தொடங்கியது மட்டும்தான்.

சின்னச்சின்னப் பெட்டிக் கடைகளில் இந்த பான் மசாலா, குட்கா பொருட்கள் கடை வாசலில் தோரணம் கட்டி விற்கப்படுவது இல்லை என்றாலும், மாணவர்கள் வந்து கேட்டால் கொடுக்கப்படும் என்பதுதான் இப்போதைய நடைமுறை.

குழந்தைகள், எதற்கும் எளிதில் அடிமையாகி விடுவார்கள். அதிலும் பதின்பருவக் குழந்தைகளைக் கட்டுப்படுத்தவே முடியாது. இவர்கள்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை வெவ்வேறு விதமான போதைப் பொருட்களை மறைவாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ஃபெவிகாலில் தொடங்கி வொய்ட்னர், பஞ்சர் சொல்யூஷன், பெயின்ட் என எவை எல்லாம் அதிகமாக மணக்கின்றனவோ,  அவற்றை எல்லாம் முகர்ந்து போதை ஏற்றிக்கொண்டிருந்தனர். டாஸ்மாக்குகள் வந்த பிறகு, பள்ளி மாணவர்கள் மத்தியில் குடிப் பழக்கமும் அதிகரித்துவிட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் இப்போது இந்தப் புகையிலைப் பொருட்கள் நடமாட்டம்.

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!

ஹான்ஸ், சாந்தி, மானிக்சந்த் மாதிரி கடைகளில் ஏகப்பட்ட வெரைட்டிகளில் புகையிலை குட்கா பொருட்கள் கவர்ச்சிகர பேக்குகளில் கிடைக்கின்றன. அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் நடத்திய சர்வேயின்படி சென்னையில் மட்டுமே 26 வகையான மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்கள் கிடைக்கின்றன. 

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!

ஒரு பள்ளி மாணவன், சிகரெட் பிடிக்க இடம் தேடி அலைய வேண்டும்; குடிக்க மறைவிடம் வேண்டும். ஆனால், இதுபோன்ற போதைப் பொருட்களுக்கு எந்த இடமும் தேவை இல்லை. லன்ச் பிரேக்கில் வாயில் அதக்கிக்கொண்டு பாடம் எடுக்கும்போது தலையை ஆட்டியபடி அமர்ந்திருந்தால், நாள் முழுக்க போதையிலேயே இருக்க முடியும். ஆசிரியரிடம் பிடிபட்டாலும் அப்படியே விழுங்கிவிடலாம். வீட்டுக்குப் போகும்போது அதைத் துப்பி வாயைக் கழுவிவிட்டால் போதும், வீட்டில் சிக்க மாட்டோம் என்கிற வசதி. வகுப்பறையில் ஒரு குழந்தைக்கு இந்தப் பழக்கம் வந்துவிட்டால், அடுத்தடுத்த குழந்தைகளிடம் வெகுவிரைவாக இது பரவிவிடுகிறது.

‘`இந்தப் புகையிலை பழக்கம், வாய் மற்றும் பற்களில் மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறது; உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயக் கோளாறுகளுக்கும் வழிவகுக்கிறது. குட்கா - பான் மசாலாவால் பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. உலக சுகாதார அமைப்பு, `குட்காவும் பான் மசாலாவும் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள்' எனத் தெளிவாக வகைப்படுத்தியுள்ளது. உலக அளவில் வாய்புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் இந்தியாவில்தான் அதிகம் இருக்கிறார்கள்’’ என்கிறார் புற்றுநோய் மருத்துவரான வெங்கடேஷ்.

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!

`கடந்த 30 ஆண்டுகளில், 15 வயது தொடங்கி 35 வயது வரைக்குமானவர்கள் மத்தியில் 400 சதவிகிதம் அளவுக்கு வாய்ப் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது' எனக் கூறுகிறது அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு ஒன்று. இதே ஆய்வு, தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேர்களில் மூன்று பேருக்கு வாய்ப்புற்று இருப்பதாகக் கூறுகிறது.

சென்னை, கோவை மாதிரியான பெரிய நகரங்களில் கட்டுமான வேலைகளுக்காக வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து குவிகின்றனர். இவர்களை குறிவைத்து பெட்டிக்கடைகளில் விற்கப்படும் புகையிலைப் பொருட்கள் உள்ளூர் மாணவர்களிடமும் பரவுகிறது.

‘`குழந்தைகள், நான்கு விஷயங்களால் புகையிலை மாதிரியான போதைப் பொருட்களை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். முதலாவது, மற்ற குழந்தைகள் பயன்படுத்துவதால் உண்டாகும் அழுத்தம். இரண்டாவது, வீட்டில் இருப்பவர்கள் பயன்படுத்துவதால் அதை முயற்சிசெய்து பார்ப்பது. மூன்றாவது சினிமா, தொலைக்காட்சி மாதிரியான ஊடகங்கள் வழி பரவுவது. நான்காவது, புகையிலைப் பொருட்கள் எளிதில் கிடைக்கும் சூழல். இவற்றை மாற்றி அமைக்காமல் இதைத் தடுக்கவே முடியாது'' என்கிறார் மருத்துவர் வெங்கடேஷ்.

இந்த நிலையை மாற்றுவதில் பெற்றோர்களுக்கு இருக்கும் அதே அளவு அக்கறை பள்ளி ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டும். இந்தப் போதை வலையில் விழ சாத்தியம் உள்ள பையன்களை இனங்கண்டு சிறப்புக் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கூடவே பள்ளியிலும் வீட்டிலும் போதை அல்லாத வழிகளில், அவர்களை மகிழ்விப்பதற்கான விஷயங்களை ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு, பாட்டு, நடனம்... எப்படியும் இருக்கலாம். பள்ளிகளில் ஒரு கவுன்சிலர் இருக்கவேண்டியதும் காலத்தின் தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக நம் அடுத்த தலைமுறையை, இளம் குறுத்துகளிலேயே கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் இந்த அபாயகரமான போதை வஸ்துக்களை அடியோடு ஒழித்துக்கட்டவேண்டிய அரசுதான், இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாடை இறுக்கம்

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!

மெல்லுகிற புகையிலையால் ஏற்படுகிற மிக முக்கியமான பாதிப்பு, தாடை இறுக்கம் (Jaw Locking). ஹான்ஸ், மாவா மாதிரியான புகையிலையை வாயில் அதக்கிவைப்பதால் கீழ்த்தாடையைத் திறக்கும் இடைவெளி குறைந்துவிடுகிறது. சாப்பிடும்போதுகூட வாயைத் திறந்து சாப்பிட முடியாமல்போகும். ஒரு இட்லியைக் கடிக்கும் அளவுக்குக்கூட வாயைத் திறக்க முடியாது. இட்லியை நசுக்கித்தான் உண்ண முடியும். நாள்பட இந்த அகலம் குறைந்து குறைந்து ஒருகட்டத்தில் வாயையே திறக்க முடியாமல் போகவும் நேரிடலாம்.

புகார் பண்ணலாம் வாங்க!

https://play.google.com/store/apps/details?id =application.com.tnpftc.complaintform

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!

புகையிலைக்கு எதிரான தமிழக அமைப்பு, இதுகுறித்த புகார்களை அளிக்கவும் புகையிலை தொடர்பான பாதிப்புகளைத் தெரிந்துகொள்ளவும் இந்தச் செயலியை வடிவமைத்துள்ளது. இதில் பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருட்கள் விற்கப்பட்டாலோ அல்லது குழந்தைகளுக்குப் போதைப் பொருட்கள் தருவது தெரியவந்தாலோ புகார் அளிக்க இயலும். கூடவே புகைப் பழக்கம் அல்லது போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட விரும்புபவர்களுக்குத் தேவையான தகவல்களும் இதில் உண்டு.

பாதிப்பு என்ன?

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!

“புகையிலைப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் குழந்தைகளுக்கு எந்த நேரமும் கோபமும் சண்டைபோடுகிற மனோபாவமும் நீடிக்கும். தன்னையே காயப்படுத்திக்கொள்வது, தற்கொலை எண்ணத்தோடு இருப்பது, படிப்பில் மந்தமாகிவிடுவது, நெறி தவறுதல் போன்றவை அதிகமாக இருக்கும். குறிப்பாக, பொய் சொல்லவும் திருடவும் செய்வார்கள். இவர்களைத் தண்டித்துச் சரிசெய்வது மிகவும் கடினம். மனதின் அடி ஆழத்தில் நுழைந்துவிட்ட இந்த மோகத்தை, பொறுமையாகப் புரியவைப்பதன் மூலம்தான்  சரிசெய்ய முடியும்’’ என்கிறார் டான்பாஸ்கோ அமைப்பின் உதவி இயக்குநர் ஜான் தர்மன்.

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!
பள்ளி மாணவர்களை குறிவைக்கும் போதை வலை!


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு