பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

நிலா பார்க்காத பிள்ளைகள்!

ந்தக் குழந்தையிடம் ‘நீ நட்சத்திரங்களைப் பார்த்திருக் கிறாயா?’ எனக் கேட்கிறாள் அம்மா. குழந்தை `ம்ஹூம்' என மறுக்கிறது. `நீ வெண்மேகங்களைப் பார்த்திருக்கிறாயா?' எனக் கேட்கிறாள். மீண்டும் குழந்தை `இல்லை' என தலை அசைக்கிறது. `நீ சூரியன் உதிப்பதையோ, மறைவதையோ பார்த்திருக்கிறாயா?' எனக் கேட்கிறாள் அம்மா. அதற்கும் `இல்லை' என மறுக்கிறது.

அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது. பிறந்ததில் இருந்து இவை எதையுமே பார்த்தது இல்லை. காரணம், பார்வைக் குறைபாடோ வேறு ஏதேனும் உடல் பிரச்னையோ அல்ல... சுற்றுச்சூழல் சீர்கேடு. சீனாவைச் சூழ்ந்திருக்கும் நச்சுக் காற்றால் உண்டான பனிப்படலம், எந்த நேரமும் திரையாக மூடி மறைத்ததால் உண்டான பாதிப்பு.

விகடன் சாய்ஸ்

மேலே சொன்ன காட்சிகள் `Under the Dome' (மாடத்துக்குக் கீழே) என்ற ஆவணப்படத்தில் வருகின்றன. இந்தப் படத்தை இயக்கிய சாய் ஜிங்தான் அந்த அம்மா. அந்தக் குழந்தை, அவருடைய மகள். காற்று மாசுபடுவது பற்றிய மிக முக்கியமான சீன மொழி ஆவணப்படம் இது. சீனாவின் பல பகுதிகளும் நச்சுப் பனிமண்டலத்தில் சிக்கி, எப்படி எல்லாம் சீரழிகின்றன என்பதை நேரடியாக விமர்சிக்கிறது இந்த ஆவணப்படம். கடந்த ஆண்டு இணையத்தில் வெளியாகி முதல் மூன்று நாட்களிலேயே 1.5 கோடி பேரால் பார்க்கப்பட்டது. 

சாய் ஜிங், ஒரு தொலைக்காட்சி நிருபர். ஒட்டுமொத்த சீனாவும் நச்சுப் பனியால் சூழப்பட்டு, பகலிலும் இருளாக அடர்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது. இத்தகைய கால கட்டத்தில்தான் சாய் ஜிங் கருவுறுகிறார். `பிறக்கும்போதே குழந்தைக்கு தலையில் கட்டி ஒன்று உருவாகியிருந்தது. காரணம்... காற்று மாசுபாடுதான்’ என்கிறார் சாய் ஜிங். 

சீனா தனது மூர்க்கமான வளர்ச்சிக்காக தன் சுற்றுச் சூழலைப் பலிகொடுத்திருக்கிறது. அதை, இந்தப் படம் தயவுதாட்சண்யம் இன்றி தோலுரிக்கிறது. நாட்டின் முக்கிய நகரங்கள், ஓர் ஆண்டில் 175-க்கும் அதிகமான நாட்களில் நச்சுப்பனியால் சூழப்பட்டு இருளில் கிடக்கின்றன. இதை 40 புகைப்படக்காரர்களின் உதவியுடன் ஆவணமாக மாற்றியுள்ளார் சாய் ஜிங். ஒரு கனடா நிறுவனம் சுத்தமான காற்றை, பைகளில் அடைத்து சீனாவில் விற்கத் தொடங்கிவிட்டது.

விகடன் சாய்ஸ்

20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தண்ணீரை காசு கொடுத்து வாங்குவோம் எனக் கற்பனைசெய்தது இல்லை. இன்று அதைச் செய்கிறோம். காற்றுக்கும் அந்த நிலை வரும். `காற்று மாசு அடைவதால் சென்னையில் மட்டுமே ஆண்டுதோறும் 863 பேர் இறக்கிறார்கள்' என்கிறது சமீபத்திய ஆய்வு. சிப்காட்களை உருவாக்குவதிலும் அந்நிய முதலீடு களைப் பெறுவதிலும் காட்டும் அக்கறையைவிட, சுத்தமான காற்றை தக்கவைக்க பன்மடங்கு அக்கறை செலுத்த வேண்டும். இல்லையேல், நம் எல்லோர் முதுகிலும் ஒரு காற்றுப்பையைச் சுமக்கவேண்டியிருக்கும். சுவாசிக்கவும் சேர்த்து சம்பாதிக்கவேண்டியிருக்கும்.

இந்த ஆவணப்படத்தை யூடியூபில் காண... https://www.youtube.com/watch?v=T6X2uwlQGQM

வானில் இருந்து ஒரு கண்... Home

விகடன் சாய்ஸ்

யற்கை வளங்களை எப்படி எல்லாம் அழிக்கிறோம் என்பதை விளக்கும் எளிய ஆவணப்படம் `Home'. முழுக்க முழுக்க வானில் இருந்து மட்டுமே (Aerial only)படம்பிடிக்கப்பட்டது என்பது இதன் சிறப்பு. இதுவரை நாம் பார்த்திராத வேறு ஓர் உலகத்தை நமக்கு இது புலப்படுத்துகிறது.

50 நாடுகளின் வான்வெளியில் சுற்றி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இதன் இயக்குநர் ஆர்தஸ் பெர்ட்ராண்டு.

இந்த ஆவணப்படத்தை யூடியூபில் காண...

https://www.youtube.com/watch?v=jqxENMKaeCU&feature=youtu.be

இனிக்க இனிக்கக் கொல்கிறோம் Sugar Crash

டந்த 100 ஆண்டுகளில், அயர்லாந்தில் உள்ள குழந்தைகள் மூன்று மடங்கு அதிக சர்க்கரையை உண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். வெவ்வேறு வழிகளில் ஒவ்வொரு நாளும் புகட்டப்படும் இந்தச் சர்க்கரை, அவர்களை எந்தெந்த வகைகளில் பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது `Sugar Crash' என்ற ஆவணப்படம். குடல் பிரச்னைகள், பற்கள் பாதிப்பு, இதய நோய்கள், பார்வைக் குறைபாடு... என

விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்

நம் குழந்தைகள் எடுத்துக்கொள்கிற அளவுக்கு அதிகமான சர்க்கரையின் பாதிப்புகளைத் துல்லியமாக விளக்கும் படம். கூடவே, 35 ஆண்டுகளுக்கு முன்னர் சிகரெட் எப்படி நம் அன்றாட வாழ்வில் நுழைக்கப்பட்டதோ, அதே அளவு வீரியத்துடன் இன்று சர்க்கரையும் நம் உணவுப்பழக்கத்தில் திணிக்கப்படுவதன் அபாய அரசியலையும் பேசுகிறது. 

இந்த ஆவணப்படத்தை யூடியூபில் காண... https://www.youtube.com/watch?v=w8hzDtbYAh0

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு