Published:Updated:

அரசுப் பள்ளியில் சோலார் ஸ்மார்ட் வகுப்பறை! - நெல்லையில் முதல் முறையாக அசத்தல்

பி.ஆண்டனிராஜ்
அரசுப் பள்ளியில் சோலார் ஸ்மார்ட் வகுப்பறை! - நெல்லையில் முதல் முறையாக அசத்தல்
அரசுப் பள்ளியில் சோலார் ஸ்மார்ட் வகுப்பறை! - நெல்லையில் முதல் முறையாக அசத்தல்

நெல்லை மாவட்டம் பாலாமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட சோலார் ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார். நெல்லையில் முதல் முறையாக சூரிய ஒளி மின் திட்டத்தின் மூலமாக வகுப்பறை அமைக்கப்பட்டு உள்ளது. 

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மாணவ, மாணவியருக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவர்களுக்குக் கரும்பலகைக்குப் பதிலாகக் கணினி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான கிராமப் பகுதிகளில் அடிக்கடி மின் தட்டுப்பாடு ஏற்படுவதால் மாணவர்களுக்குக் கணினி மூலமாக கற்பிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 

இதனைத் தவிர்க்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் சோலார் மூலமாகப் பள்ளிகளின் ஸ்மார்ட் வகுப்பறையை இணைக்கும் திட்டம் பரீட்சார்த்தமாகத் தொடங்கி இருக்கிறது. அதன்படி பாலாமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் ஸ்மார்ட் வகுப்பறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாலாமடை பள்ளியில் இந்தத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘’சமச்சீர் கல்வித்திட்டத்தின் அடிப்படையில் பாடங்கள் ஸ்மார்ட் டி.வி-யின் மூலம் மாணவ, மாணவிகளுக்குக் கற்றுத் தரப்படுகிறது. ஆசிரியர்கள், பாடம் நடத்திய பின்பு அதன் காட்சிகளை ஸ்மார்ட் டி.வி-யின் மூலம் மாணவர்கள் நேரடியாகப் பார்ப்பதால், மறக்காமல் இருக்க முடியும். நமது மாவட்டத்தில் மின்சாரத் தட்டுப்பாடுள்ள பகுதிகளில் சோலார் மூலம் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க முயற்சி செய்யப்படும். 

இங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் ஸ்மார்ட் வகுப்பறையின் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து ஆசிரியர்கள் சரியான புள்ளி விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க முயற்சியெடுக்கப்படும். பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, கிராமத்திலுள்ள அனைவரும் சுத்தமாகவும்,
சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி கற்க இதுபோன்ற திட்டங்கள் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.