Published:Updated:

உலகில் தலைசிறந்த சொல் 'செயல்' - சிவகார்த்திகேயனுக்கு சாத்தியமானது எப்படி? #HBDSivakarthikeyan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உலகில் தலைசிறந்த சொல் 'செயல்' - சிவகார்த்திகேயனுக்கு சாத்தியமானது எப்படி?  #HBDSivakarthikeyan
உலகில் தலைசிறந்த சொல் 'செயல்' - சிவகார்த்திகேயனுக்கு சாத்தியமானது எப்படி? #HBDSivakarthikeyan

உலகில் தலைசிறந்த சொல் 'செயல்' - சிவகார்த்திகேயனுக்கு சாத்தியமானது எப்படி? #HBDSivakarthikeyan

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

75 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகம் பல்வேறு விதமான கலைஞர்களைச் சந்தித்து வருகிறது. நடிகர் திலகம், புரட்சித் தலைவர் என்று ஒரு காலத்தில் மக்கள் மனதில் கம்பீரமாக நின்று தங்கள் கலைப் பயணத்தை மேற்கொண்ட காலத்திற்குப் பிறகு, அடுத்த தலைமுறையினர் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, நம் தமிழ்த் திரையுலகை வேற லெவலுக்கு அழைத்துச் சென்ற பெருமை ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் உண்டு. அவர்களுக்குப் பிறகு, தமிழ் சினிமா யாரை நம்பி இயங்கப்போகிறது என்ற கேள்விக்குப் பதிலாய் தனக்கென்று ஒரு ஸ்டைலை வகுத்துக்கொண்டு களமிறங்கினார்கள் விஜயும், அஜித்தும்.
 

இந்தத் தலைமுறையினரின் சிம்மசொப்பனமாக விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என ஒரு பட்டாளமே இயங்கி வந்தாலும், அடுத்த தலைமுறையினரின் 'மாஸ் ஸ்டார்' யார் என்ற கேள்விக்குப் பதில், சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதிதான்! ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா... எனப் பல முன்னணி நடிகர்களைப் பார்த்து வளர்ந்த இவர்கள்தாம், ஜென் Z-ன் 'ஃபர்ஸ்ட் சாய்ஸ்' நடிகர்கள். இந்த இருவரில் ஒருவரான, சிவகார்த்திகேயனுக்கு, இன்று பிறந்தநாள்!. இந்த பர்த்டே பேபியின் வளர்ச்சியைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்யலாமா?

விஜய் டிவி-யில் 'கலக்கப்போவது யாரு` நிகழ்ச்சி வந்தபிறகு யாராலும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அதில் பங்கேற்பவர்களின் திறமைகள் இருந்தது, இருந்தும் வருகிறது. அதில், ஒரு சாதாரண பங்கேற்பாளராகத் தோன்றி, இன்று தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத நாயகனாய் வலம் வந்துகொண்டிருக்கிறார், சிவகார்த்திகேயன். விஜய் டிவி-யில் இவர் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் இவர் வாழ்வைச் செதுக்கியது. பிறகு, தன் முயற்சியாலும் கடின உழைப்பினாலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளர் ஆனார். இவர் பேச்சுக்கும், இடையிடையே கொடுக்கும் காமெடி கவுன்ட்டர்களுக்கு ரசிகர்கள் உருவானார்கள். பட்டி தொட்டி எங்கும், 'தொகுப்பாளர்' சிவகார்த்திகேயனின் மாடுலேஷனுக்கு லைக்ஸ் குவிந்தது. அந்நிகழ்ச்சியில் இவரது செயல்பாடுகள், 'சிரிச்சாப் போச்சு' சுற்றில் வரும் கலைஞர்களுடன் சேர்ந்து இவர் செய்த அட்ராசிட்டிகளுக்கு இன்னும் யூ-டியூபில் ரிப்பீட் ஆடியன்ஸ் இருக்கிறார்கள்.

தன் திறமையை, திரைக்கு வரும் முன்பே மக்களுக்கு உணர்த்தி ஸ்டாராக ஜொலித்தவர். இவரது செயல்பாடுகளையும் திறமையையும் பார்த்து இயக்குநர் பாண்டிராஜ் 'மெரினா'வில் வாய்ப்பு கொடுத்தார். கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தத் தொடங்கிய சிவா, இன்றுவரை தனக்கு வரும் வாய்ப்பினை கச்சிதமாகப் பயன்படுத்தி, தன்னை மெருகேற்றி, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்.  

இவரின் முதல் படமான 'மெரினா'வில் செந்தில்நாதனாக இவரது யதார்த்த நடிப்பு அன்று பரவலாகப் பேசப்பட்டது. படத்தில், 'பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்' என்ற எஸ்.எம்.எஸ் படித்து, ஓவியாவை வெறுப்பேற்றி, அவரிடம் 'லைட்டா பசிக்குதா சொப்பனசுந்தரி?' எனக் கேட்ட இவரது காதல் வசனம், காதல் ஜோடிகளுக்குப் பிடித்தமானது. 'சினிமாவில் நடிச்சாச்சு' என்றில்லாமல், முதல் படத்தை முடித்த கையோடு பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக தன் பயணத்தைத் தொடர்ந்தது பாராட்டக்கூடிய ஒன்று. 'மெரினா' வெளியான சில மாதங்களில் தனுஷுடன் இணைந்து நடித்த '3' இவரை மேலும் ஒரு படி ஏறச்செய்தது. குமரனாக இவரது தோற்றம் இவரைத் தவிர யாருக்கும் பொருந்திருக்காது என்று பல விமர்சனங்களும் பாரட்டுகளும் குவிந்தன. 'சொல்லு நீ ஐ லவ் யூ' என்று தனுஷுடன் சேர்ந்து ஸ்கூல் யூனிஃபார்மில் இவரது ஆடிய டான்ஸூக்கு ஆடியன்ஸ் அதிகம். அதிலும், 'நானெல்லாம் ஸ்கூலுக்கு வர்றதே பெருசுடா.. என்னைப் போய் டியூசனுக்கெல்லாம் வரச் சொல்றியேடா` என்ற டயலாக் 'கடைசி பெஞ்ச் கார்த்தி' ரகங்களின் ஆல் டைம் ஃபேவரைட். 

அதே வருடத்தில் 'மனம் கொத்திப் பறவை'யில் மீண்டும் ஹீரோவாக தன் முத்திரையைப் பதித்து வெகுஜனங்களின் பார்வையை இவர் பக்கம் திரும்பச்செய்தார். இதில் வரும் கண்ணன் (சிவா), சூரி, சிங்கம்புலி என நகைச்சுவை நடிகர்களோடு நடித்த விதம், 'என்ன சொல்ல ஏது சொல்ல...' என ஆத்மியாவுடன் பாடிய டூயட், அந்தத் தருணத்தில் பலர் உதடுகளில் உச்சரித்த பாடல் வரிகள். இந்தப் படத்தின் மூலம் இவரது க்ராஃப்ட் அடுத்த படி ஏறியது. அடுத்ததாக 'கேடிபில்லா கில்லாடிரங்கா' படத்தில் விமலுடன் கைகோர்த்த இந்தப் பட்டை முருகன், பட்டையைக் கிளப்பினார். ஜெராக்ஸ் கடை 'பாப்பா'வின் பேச்சிற்கு, 'பட்டை முருகா... இப்படித்தான் பல பசங்களைக் குழியில தள்ளப்பாப்பாய்ங்க, லைக் பண்ணாத அன்லைக் பண்ணு' என்ற இவரது மைண்ட் வாய்ஸ், பல இளைஞர்களின் ஓபன் கமென்ட். விமலுடனும் சூரியுடனும் நடிப்பில் கில்லாடி ரங்காவாகத் தன்னை நிரூபித்தார் சிவகார்த்திகேயன்.
  

அடுத்து நடித்த 'எதிர்நீச்சல்' அனைவராலும் பேசப்பட்டது. 'குஞ்சிதபாதம்' என்ற தன் பெயருக்காக ஓடிய மாரத்தான், இளைஞர்களை ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற மோடிவேஷனுக்கான திரி. படத்தில் இடம்பெற்ற 'ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்...' என்ற பாடலின் மூலம்,  தான் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்பதை உணர்த்தினார், சிவா. இவர் போட்ட எதிர்நீச்சலுக்குக் கிடைத்தது அடுத்த 'போஸ் பாண்டி' வாய்ப்பு. கிராமத்து இளைஞனாக இவரது அணுகுமுறை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம மக்களின் மனதிலும் நாற்காலி போட்டு உட்கார வைத்தது. 'வருத்தப்படாத வாலிபர் சங்க' தலைவராக இவர் நடிப்பிலும், டயலாக் டெலிவரியிலும் மாஸ் காட்டி அதிரவைத்தார். சிவனாண்டி மாமனாரிடம் சீண்டி, லதா பாண்டியைக் காதலித்த இவரின் 'பாக்காதே... பாக்காதே...' பாடலைக் கேட்காத ஆட்களே இல்லை. இவர் கூறிய, 'பட்டப் பகலிலே, பங்குனி வெயிலிலே எனைப் பார்த்துச் சிரிக்கும் நிலா!' வசனம் ஒன்சைடு காதலர்களின் ஒரே சாய்ஸ். இதே படத்தில் இடம்பெற்ற 'ஊதா கலரு ரிப்பனி'ன் சாயல் இன்னும் போகவில்லை. 

இந்தப் படத்தின் வெற்றி இவருக்குத் தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களை உருவாக்கியது என்றே சொல்லலாம். ஆகவே, 'மான் கராத்தே' படத்தின் டிரெய்லர் வெளிவந்த உடனே கொண்டாடித் தீர்த்தார்கள் சிவாவின் விழுதுகள். சிட்டி பையனாக இருந்த சிவாவின் நடனம் இந்தப் படத்தில் அடி தூள்ள்ள்... ராயபுரம் பீட்டராக இருந்த சிவா பாக்ஸர் பீட்டராகத் திரையரங்கில் தோன்றும்போது, வந்த விசில் சத்தமும், கைதட்டலும் கணக்கில் அடங்காதவை. முதல் முறையாக முன்னணி கதாநாயகி ஹன்சிகாவுடன் நடித்தபோது இவர் கையாண்ட விதம்தான், சிவாவின் கூடுதல் பலம். 'மான் கராத்தே' சிவாவின் சோலோ ஸ்டில், பல சிவகார்த்திகேயன் ரசிகர்களின் பீரோக்களை அலங்கரித்திருக்கிறது. 
 

ஒரு பேட்டியில், 'அடுத்த படத்துல போலீஸ் கேரக்டர் பண்ணனும்னு சொல்லியிருக்கார் இயக்குநர்' என்று சொன்ன சிவா கேஷூவலாக 'ஐ எம் ஸோ கூல்' என்று படத்தை வெற்றிகரமாக முடித்து ரசிகர்களின் மத்தியில் மதிமாறனாக மணிமகுடம் சூட்டிக்கொண்டார். சிவாவின் அடுத்த படம் என்ன? கேள்வி பலர் மனதில் எழ, பல தடைகளைத் தாண்டி திரையைத் தொட்டது, 'ரஜினி முருகன்'. 'ஜிகிரு ஜிகிரு ஜிகிரே...' பாடலில் சிவாவின் குத்தாட்டத்திற்கு அரங்கம் அதிர, 'உன்மேல ஒரு கண்ணு' பாடல் காதலில் திளைக்க வைத்தது. 'நம்பி வாங்க... சந்தோசமா போங்க...' எனப் படத்திலும் நிஜத்திலும் சொல்லியவர்தான், இந்த எஸ்.கே!
 

பிறகு வந்த 'ரெமோ' சிஸ்டர், நம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். சிவா - சதீஷின் காமெடி கெமிஸ்ட்ரி வழக்கம்போல மார்க் அள்ளியது. 'வாடி என் தமிழ்செல்வி` என்று இவர் ஆடிய ஆட்டத்திற்கு மயங்காத ஆட்கள் இல்லை. ஒரு ஹீரோவாக தன்னை முழுமையாக உணர்ந்து, நடனத்தில் இவரது கடின உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி அது. 

'நீ வெறும் எட்டு மணி நேரம்தான் சேல்ஸ்மேன். மீதி இருக்கும் பதினாறு மணிநேரம் கன்ஸ்யூமர்', என்று கார்ப்பரேட்டின் முகத்திரையை 'அறிவு'ள்ள இளைஞனாகப் புரியவைத்த கலைஞன்.  ஒவ்வொரு கன்ஸ்யூமருக்கும் கார்ப்பரேட் உலகில் இருப்பவர்களுக்கும் எடுத்துக்காட்டிய காட்சிகளும், 'இனி விளம்பரங்களில் நடிக்கமாட்டேன்' என்று நிஜத்தில் இவர் எடுத்த முடிவும் சமூக அக்கறையுள்ள மனிதனாக இன்னும் ஒருபடி உயரத்தில் ஏற்றியது. 'கருத்தவன்லாம் கலீஜாம்' என்று திரையில் இவர் ஆட, திரைக்கு முன்னால் கொண்டாடித் தீர்த்தார்கள் சிவகார்த்திகேயன் ப்ரதர்ஸ். அன்று பல ஸ்டார்களின் படங்களுக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார் சிவகார்த்திகேயன். இன்று சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டிற்காகப் பலர் வரிசையில் காத்திருக்கின்றனர், என்பதில் இருக்கிறது சிவகார்த்திகேயனின் உழைப்பு!

வாழ்வில் மட்டுமல்லாமல், திரைத்துறையிலும் பல்வேறு விதமான இன்னல்களைச் சந்தித்து இன்று மக்கள் முன் 'நல்ல ஹீரோ' அடையாளத்தோடு வளர்ந்து நிற்கிறார், எஸ்.கே. சூப்பர் ஸ்டாருக்கும், உலக நாயகனுக்கும், தல தளபதிக்கும் கைத்தட்டி விசில் அடித்த இவரது கைகளில், சமீபத்தில் விஜய் கையால் விருது கிடைத்தது. 

ஒருமுறை கவிஞர் வைரமுத்து முன்னால், 'நீங்கள் மட்டும் கள்ளிக்காட்டில் பிறக்காமல் கலிஃபோர்னியாவில் பிறந்திருந்தால், ஹாலிவுட்டிலும் வைத்திருப்பார்கள் மறுக்காமல் ஆறு பாடல்கள்' என்று சிவா மிமிக்ரி செய்தபோது, வைரமுத்து சொன்னார், 'எப்போதும் நிஜத்தைவிட நகலுக்குத்தான் மவுசு அதிகம்' என்று. அந்த ஒன்றை தனது டிரேட் மார்க்காக கொண்டு ஆரம்பித்த இந்தக் கலைப்பயணம் இன்று பல வெற்றிகளைத் தாண்டி உச்சத்தை அடைய உத்வேகத்துடன் சென்றுகொண்டிருக்கிறது. 
     

நிகழ்ச்சித் தொகுப்பாளராக 'தி நாமினீஸ் ஆர்...' என்று வாய் வலிக்க விருதுகளை அறிவித்தவர், இன்று நடிகராக விருதுகளை அறுவடை செய்துகொண்டிருக்கிறார். நடிகர் மட்டுமல்லாமல், பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். மக்களை மகிழ்விக்க சிவா ஓடும் இந்த மாரத்தான் ஓட்டம் என்றும் தொடரவும், அது இன்னும் பல மடங்கு பெருகவும் வேண்டும்.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், 'சீமராஜா' என டைட்டிலும் அறிவித்திருக்கிறார்கள். பொருத்தமான தலைப்புதான். 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்!


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு