Published:Updated:

படுகொலை செய்யப்பட்ட ஜூனைத் கான் குடும்பத்துக்கு சாகித்ய அகாடமி தொகையை அளித்த எழுத்தாளர்!

படுகொலை செய்யப்பட்ட ஜூனைத் கான் குடும்பத்துக்கு சாகித்ய அகாடமி தொகையை அளித்த எழுத்தாளர்!
படுகொலை செய்யப்பட்ட ஜூனைத் கான் குடும்பத்துக்கு சாகித்ய அகாடமி தொகையை அளித்த எழுத்தாளர்!

டெல்லியில் மத வன்முறையாளர்களால் கொல்லப்பட்ட 16 வயதுச் சிறுவன் ஜுனைத் கானின் குடும்பத்துக்கு, மலையாளச் சிறுகதை எழுத்தாளரும் நாவல் ஆசிரியருமான கே.பி.ராமன் உன்னி, சாகித்ய அகாடமி விருதுத் தொகையை அளித்திருக்கிறார். மத வன்முறைகளையும் சகிப்பின்மையையும் கேள்வி கேட்கும் அவரது `தெய்வத்திண்டே புஸ்தகம்'தான், விருதை வென்றிருக்கும் அவரது நாவலின் பெயர். இந்த நாவலில் வரும் நபிகளுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடல், கேரளத்தில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜுனைத் கானின் குடும்பத்தைச் சந்தித்த ராமன் உன்னியின் உணர்வுகளைப் பதிய, அவரைத் தொடர்புகொண்டபோது, ``மதத்தின் பெயரால் எத்தகைய பெருங்குற்றத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்! இஸ்லாமியர் என்கிற ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்டவர் ஜுனைத் கான். உண்மையான இந்துவான என்னால் இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சாகித்ய அகாடமி அளித்த ஒரு லட்சம் ரூபாயை, ஜுனைத் கானின் தாயாரிடம் அளித்துவிட்டேன். இந்து மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட படுகொலைக்கு, என்னாலான சிறு பரிகாரம் அது. பரிகாரம் செய்வதும், மன்னிப்புக்காக தவம் இருப்பதும், இந்து மதத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்று. நான் இந்து நல்லிணக்கத்தை வலியுறுத்துவது என் கடமை” என்றார்.

ஜுனைத் கான் யார் என நினைவிருக்கிறதா? - ஈத் பண்டிகைக்கு மூன்று நாள்கள் முன்னர் (ஜூன் 22, 2017), மஸ்ஜித்துக்குச் சென்று புது உடைகள் வாங்கிக்கொண்டு மதுரா ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் ஜுனைத். `தேச விரோதி’ என்றும், `மாட்டிறைச்சி சாப்பிடுபவன்’ என்றும் வன்முறையாளர்கள் அவதூறு பேசியதால், அங்கிருந்து அகல நினைத்த அந்த 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டார். 

``இரவு முழுவதும் அந்தக் காட்சிகள்தான் என் கண்களில் தெரிகின்றன. கண்களை மூட முடியவில்லை. எப்போதும் அந்தத் தருணங்களின் நினைவாகவே இருக்கிறது. ரத்தத்தில் நனைந்து எனது மடியில் அவன் இறந்த காட்சிகள் எனக்கு மறக்கப்போவதில்லை. என் காதுகளில் அவனது வலியின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. என்னால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்துபோன அந்த நாளுக்குத் திரும்பவும் சென்று அவனை நான் காப்பாற்றிவிட முடியாதா என அழுகிறேன். தரையிலும் ரயிலிலும் ரத்தமும் சதையுமாக, உயிர் தப்பிக்க அவன் ஓடிய வழிகளின் தடங்களும் என்னை பயமுறுத்துகின்றன. எனக்கு தேசியவாதம், தீவிரவாதம் எதுவும் தெரியாது. அவர்கள் ஏன் எங்களை அப்படித் திட்டினார்கள்? இப்படிக் கொல்லப்படுவதற்கு நாங்கள் என்ன பாவம் செய்தோம்? நான் இந்தியன் என்பதும், இது என் வீடு என்பதும் மட்டும்தான் எனக்குத் தெரியும்” - ஜுனைத்தின் சகோதரர் ஹாஷிம், வட இந்திய ஊடகங்களிடம் பேசிய வார்த்தைகள் இவை.

கொண்டாட்டத்துடன் காணப்படவேண்டிய ஜுனைத்தின் கந்தவாலி கிராமம், கடந்த வருட ஈத் பண்டிகையை துயரத்துடன் அனுசரித்தது. கொல்லப்படுவதற்கு ஒருநாள் முன்னதாகத்தான், ஜுனைத்தும் அவரின் சகோதரர் ஹாஷிமும் மூன்று வருடங்களாக குரானை மனனம் செய்து `ஹஃபீஸ்' ஆகியிருக்கிறார்கள். பரிசாக, அவர்களின் தாயிடமிருந்து 1,500 ரூபாயைப் பெற்றிருக்கிறார்கள். ஹஃபீஸ் ஆனதற்குப் பிறகு கொண்டாடப்படவிருந்த முதல் ரம்ஜான் என்பதால், கூடுதல் கொண்டாட்டத்துக்குத் தயாரான ஜுனைத்தும் ஹாஷிமும் டெல்லியின் ஜுமா மஸ்ஜித்திக்குச் சென்று ஷாப்பிங் முடித்துவிட்டு வருவதாக வீட்டில் சொல்லியிருக்கிறார்கள். ஜுனைத் வீடு திரும்பவே இல்லை.

``என் மகனை ஏன் இப்படி கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள்? அவன் குழந்தை. 16 வயதுதான் ஆகிறது. ஏன் எங்களை இப்படி வெறுக்கிறார்கள்? அந்த இடத்துக்கு நான் பதறிச்சென்று சேர்ந்தபோது, எனது மகன் ஹாஷிம், ஜுனைத்தைத் தனது மடியில் ரத்த வெள்ளத்தில் கிடத்தி வைத்திருந்தான்” என்று கதறிய ஜுனைத்தின் தந்தை ஜலாலுதீனின் வார்த்தைகள், பலரை அசைத்தன. நாட்டில் சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்து, சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், லக்னோ, பாட்னா, திருவனந்தபுரம், சண்டிகர், அலஹாபாத், கொச்சி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெண்களும் இளைஞர்களும் #NotInMyName போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நவம்பர் 2017, ராஜஸ்தான் - ஹரியானா எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட உமர்கான் உள்பட, `பசு பாதுகாப்பு' என்ற பெயரில் கடந்த வருடம் மட்டும் கொலை செய்யப்பட்டவர்கள் 11 பேர். 2010-ம் ஆண்டிலிருந்து பசுக்களை முன்வைத்து நடத்தப்படும் வன்முறைகள், இந்த ஆண்டுதான் (2017) அதிகளவில் நடத்தப்பட்டுள்ளன. பசுக்களை முன்வைத்து நடத்தப்படும் வெறுப்பு வன்முறைகளின் புள்ளிவிவரத்தை, ஆண்டுவாரியாக வெளியிட்டிருந்தது இந்தியா ஸ்பெண்ட் நிறுவனம். 2010-ம் ஆண்டிலிருந்து இதுவரை நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில், மொத்தம் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் இஸ்லாமியர்கள்.

உள்துறை அமைச்சகத் தகவலின்படி, பசுக்களை முன்வைத்து நடத்தப்படும் வெறுப்பு வன்முறைத் தகவல்களை, தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சேகரிக்கவில்லை. வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, வன்முறையில் படுகாயமடைந்தவர்கள், சிறு காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், இடம், ஆண்டு, மாநிலம், வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தபோது ஆட்சியிலிருந்த கட்சி போன்ற பல தகவல்களையும் பட்டியலிட்டிருந்தது இந்தியா ஸ்பெண்ட் நிறுவனம்.