Published:Updated:

கேரள நடிகை கடத்தல் நடந்து ஓராண்டு நிறைவு: நடிகர் திலீப்புக்கு தண்டனை கிடைக்குமா?

பி.ஆண்டனிராஜ்
கேரள நடிகை கடத்தல் நடந்து ஓராண்டு நிறைவு:  நடிகர் திலீப்புக்கு தண்டனை கிடைக்குமா?
கேரள நடிகை கடத்தல் நடந்து ஓராண்டு நிறைவு: நடிகர் திலீப்புக்கு தண்டனை கிடைக்குமா?

கேரளாவில் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தப்பட்ட சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வழக்கின் நிலைமை தற்போது என்னவாக இருக்கிறது? இதில் தொடர்புடைய நடிகர் திலீப் உள்ளிட்டவர்களுக்கு கேரள போலீஸார் தண்டனை வாங்கிக் கொடுப்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கேரளாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி நடைபெற்றது. சூட்டிங் முடிந்து கொச்சியில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த நடிகையை வழிமறித்த கும்பல் ஒன்று காருக்குள் ஏறி அவரை அடித்து துன்புறுத்தியதுடன், வீடியோ எடுத்தது. இதுபற்றி விசாரணை நடத்திய போலீஸார், கார் டிரைவரான மார்ட்டின் என்பவரைக் கைது செய்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில், சினிமா செட்டில் கார் டிரைவராகப் பணியாற்றிய பல்சர் சுனில் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பல்சர் சுனில், விஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். சாதாரண பணம் பறிக்கும் கும்பல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவே கேரள போலீஸ் கருதியது. 

ஆனால், எர்ணாகுளத்தில் திரைத்துறையினர் சார்பாக இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியார், இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது என்றார். இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்ட பல்சர் சுனில், நடிகர் திலீப்புக்கு எழுதிய கடிதம் ஒன்று காவல்துறையின் கையில் சிக்கியதால் விசாரணை தீவிரமடைந்தது.

அதனால் கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி திலீப் மற்றும் அவரது நண்பரும் இயக்குநருமான நாதிர்ஷா ஆகியோரை விசாரணைக்கு அழைத்த போலீஸார் சுமார் 13 மணி நேரம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாகவே 2017-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். மேலும் 11 பேரும் கைதாகினார்கள். நடிகர் திலீப் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடைய ஜாமீன் மனு அங்கமாலி நீதிமன்றத்தில் 4 முறை நிராகரிக்கப்பட்டது. கேரள உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை 4 முறை நிராகரித்த நிலையில், 5-வது முறையாக அவருக்கு ஜாமீன் அளித்தது. அதனைத் தொடர்ந்து 85 நாட்களுக்குப் பின்னர் அக்டோபர் 3-ம் தேதி அவர் வெளியில் வந்தார். இந்த நிலையில், அங்கமாலி நீதிமன்றத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து விட்டது. அதனால் அடுத்த வாரம் விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்த வழக்கின் முக்கிய ஆவணமாகக் கருதப்பட்ட செல்போன் மெமரி கார்டு கடைசி வரை கிடைக்கவே இல்லை. ஆனாலும், திரைப்படத் துறையின் பல முக்கிய பிரமுகர்களிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில் அவருக்கு எதிராக பல முக்கிய சாட்சியங்கள் கிடைத்து இருப்பதாக போலீஸார் கருதுகின்றனர். அதனால் விசாரணையின் போது நடிகர் திலீப்புக்கு எதிராக எடுத்து வைக்க தங்களிடம் ஏராளமான ஆவணங்கள் இருப்பதாகவே காவல்துறை கருதுகிறது. இந்த வழக்கு விசாரணையின் இறுதி முடிவை அறிய கேரள திரைத்துறையினர் மட்டும் அல்லாமல் திலீப்பின் ரசிகர்களும் ஆர்வமாகவே இருக்கிறார்கள்.