Published:Updated:

‘நிர்வாகத் திறமையற்றவரா சகாயம்?’

 ‘நிர்வாகத் திறமையற்றவரா சகாயம்?’
பிரீமியம் ஸ்டோரி
‘நிர்வாகத் திறமையற்றவரா சகாயம்?’

அரசின் அதிர்ச்சி அப்ரைசல்ஆ.விஜயானந்த்

‘நிர்வாகத் திறமையற்றவரா சகாயம்?’

அரசின் அதிர்ச்சி அப்ரைசல்ஆ.விஜயானந்த்

Published:Updated:
 ‘நிர்வாகத் திறமையற்றவரா சகாயம்?’
பிரீமியம் ஸ்டோரி
‘நிர்வாகத் திறமையற்றவரா சகாயம்?’

டனில் தத்தளித்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வருமானத்தை, 200 கோடியில் இருந்து 300 கோடி ரூபாயாக உயர்த்தியது, `வேட்டி தினம்', `தாவணி தினம்' எனப் புதுப்புதுத் திட்டங்கள் கொண்டுவந்தது, 80 ஆண்டுகளாக இல்லாத வகையில் லாபத்தில் இருந்து நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கியது, புகழ்பெற்ற அஜந்தா, எல்லோரோ ஓவியங்களை சேலையில் பதித்தது... என அடுக்கடுக்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சாதனைகள் புரிந்த ஓர் அதிகாரிக்கு, இந்த அரசு கொடுத்திருக்கும் சான்றிதழ் என்ன தெரியுமா?

‘நிர்வாகத் திறமையற்றவர்’.

ஆம், அந்த அதிகாரி, சகாயம் ஐ.ஏ.எஸ்.

மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்தபோது கிரானைட் விவகாரத்தைக் கிளறியதால், கோ-ஆப்டெக்ஸ் துறைக்கு மாற்றப்பட்டார் சகாயம். அப்போது கோ-ஆப்டெக்ஸின் கடன் 11.5 கோடி ரூபாய். இவர் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் 13.5 கோடி ரூபாய்க்கு உயர்த்தி லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றிக்காட்டினார். அப்போது கோ-ஆப்டெக்ஸ் துறைக்கு அமைச்சராக இருந்த கோகுல இந்திராவுக்கும் சகாயத்துக்கும் ஆரம்பம் முதலே ஏழரை. கோ-ஆப்டெக்ஸ் அலுவலகத்தில் தனக்கு தனியாக ஓர் அறை ஒதுக்கச் சொல்லி கோகுல இந்திரா கேட்க, சகாயம் மறுத்தார். ‘கோ-ஆப்டெக்ஸின் 11 மண்டல மேலாளர்களுக்கும் கார் கொடுக்க வேண்டும்’ என அமைச்சர் தரப்பு  சொல்ல, ‘தீபாவளி சமயத்தில்தான் கார் தேவைப்படும். அப்போது மட்டும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்’ என அதற்கும் நோ சொன்னார். `கோ-ஆப்டெக்ஸ் கடைகளை நவீனப்படுத்தும் வேலைகளுக்கான டெண்டரை, குறிப்பிட்ட ஒரு நபருக்குத்தான் தர வேண்டும்' என அமைச்சர் தரப்பில் இருந்து அழுத்தம் வர, ‘நீங்கள் குறிப்பிடும் நபர் தாராளமாக டெண்டரில் கலந்துகொள்ளட்டும். குறைவான தொகை குறிப்பிடுபவருக்கு மட்டுமே வேலையை ஒதுக்க முடியும்’ என, கறார் காட்டினார் சகாயம்.

 ‘நிர்வாகத் திறமையற்றவரா சகாயம்?’

இப்படியாக கோ-ஆப்டெக்‌ஸில் ஆளும் கட்சியினருடன் ஆடு புலி ஆட்டத்தில் ஈடுபட்ட சகாயம், விரைவிலேயே அங்கு இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான பணி மதிப்பீட்டு மதிப்பெண்ணில், சகாயத்தை `நிர்வாகத் திறமையற்றவர்’ பட்டியலில் சேர்த்திருக்கிறது தமிழக அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு இருக்கும் இன்டெர்னல் மதிப்பெண் போல, அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் மிக முக்கியமான மதிப்பெண் இது. 2014-2015ம் ஆண்டு செயல்பாட்டில் சகாயத்துக்கு, கோ-ஆப்டெக்ஸ் துறைச் செயலர் ஹர்மந்தர் சிங்கும் அமைச்சரும் போட்டிருக்கும் மதிப்பெண் 10-க்கு 4.

இப்படி மதிப்பெண் வழங்குவதால் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனிடம் கேட்டபோது... “தலைமைப் பண்பு, பணித்திறன், தகவல்தொடர்பு, கீழ்நிலை அதிகாரிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்ட காரணங்களை வைத்து இந்த மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஓர் அதிகாரி 10-க்கு 9 மதிப்பெண் எடுத்தால், `அவர் மிகப் பிரமாதமாகச் செயல் பட்டார்’ எனப் பொருள். 8 மதிப்பெண் என்றால் `வெரி குட்’. 5 அல்லது 6 மதிப்பெண் என்றால் `குட்’.

4 மதிப்பெண் என்றால் `சராசரி’. அதாவது, 5 மதிப்பெண்ணுக்குக் கீழ் இருந்தால் அந்த அதிகாரி `நிர்வாகத் திறமை யற்றவர்’ எனப் பொருள்படும். 3 மற்றும் 4 மதிப்பெண் எடுப்பவர்கள் `படு மோசம்’ எனப் பொருள்படும்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு, இந்த மதிப்பெண்களை வைத்துத்தான் தீர்மானிக்கப் படும். தொடர்ச்சியாக ஒருவர் 5-க்கும் குறைவான மதிப்பெண் எடுத்தால், திறம்பட நிர்வாகம் செய்யும் திறன் அவருக்கு இல்லை என உயர் அதிகாரி கணக்கில் எடுத்துக்கொள்வார். ஐந்து வருடகால மதிப்பெண்களில் ஒரு வருடம் அவர் சராசரி மதிப்பெண் பெற்றிருந்தாலும் பதவி உயர்வு பாதிக்கப்படும்'' என்றார்.

 ‘நிர்வாகத் திறமையற்றவரா சகாயம்?’

இப்போது சகாயம், `அரசு கூடுதல் செயலர்' என்ற அந்தஸ்தில் இருக்கிறார். அடுத்த ஆண்டு அவர் `அரசுச் செயலர்’ என்ற பதவி உயர்வை அடைவதற்கு இப்போதைய அரசின் அப்ரைசல் பெரும் தடையாக இருக்கும். கோ-ஆப்டெக்ஸில் இருந்தபோது முதல் வருடத்தில் சகாயத்துக்கு அரசு வழங்கிய மதிப்பெண் 9.5. அது `அவுட் ஸ்டாண்டிங்' பிரிவில் வரும். ஆனால், இரண்டாவது வருடத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பெண் வெறும் 4. சராசரிக்கும் கீழே.

`இது தனக்கு இழைக்கப்பட்ட அநீதி' எனக் கோபப்பட்ட சகாயம், இதுகுறித்து தலைமைச் செயலாளர் ஞானதேசிகனுக்குக் கடிதம் எழுதியிருக் கிறாராம். ‘ஊழலுக்கு ஒத்துழைக்காத காரணத்தால்தான் எனக்கு இவ்வளவு குறைவான மதிப்பெண் வழங்கப் பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் எனக்குத் தேவைப்படுகிறது. இதுகுறித்து மேல் முறையீடு செய்வதற்கு கால அவகாசம் வேண்டும்’ என அந்தக் கடிதத்தில் கோரியிருக்கிறாராம்.

இதுபற்றி சகாயம் என்ன சொல்கிறார்? “என்னுடைய பணியின் மீதும் நேர்மையின் மீதும் நம்பிக்கைவைத்து உழைத்துக்கொண்டிருக் கிறேன். உண்மையும் நேர்மையும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு என் பயணம் தொடர்கிறது. வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை” என்பதுடன் முடித்துக்கொண்டார்.

சகாயத்தை ஃபெயிலாக்குவதுதான் அரசின் நோக்கம் என்றால், அது தனக்குத்தானே ஃபெயில் மார்க் போட்டுக்கொள்கிறது என்றுதான் அர்த்தம்!