Published:Updated:

இன்னும் எத்தனை நாடகங்கள்?

இன்னும் எத்தனை நாடகங்கள்?
பிரீமியம் ஸ்டோரி
இன்னும் எத்தனை நாடகங்கள்?

ப.திருமாவேலன்படம்: பா.காளிமுத்து, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

இன்னும் எத்தனை நாடகங்கள்?

ப.திருமாவேலன்படம்: பா.காளிமுத்து, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
இன்னும் எத்தனை நாடகங்கள்?
பிரீமியம் ஸ்டோரி
இன்னும் எத்தனை நாடகங்கள்?

ரே ‘அரிச்சந்திர மயான காண்டம்’ நாடகத்தை, கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி நடித்துக் காட்டுவதைக் காணச் சகிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் அரசியல் நடத்த ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. போயும் போயும் சாவிலுமா தனது சதிகார அரசியலைப் பாய்ச்ச வேண்டும்?

ஈழத் தமிழர் விவகாரத்தில் இனப்பற்றுடன் சில முழக்கங்களை கருணாநிதி எழுப்பினால், உடனே ஜெயலலிதாவுக்கு நாட்டுப் பற்று பொங்கி வழியும். ‘தேசத் தாயாக’ தன்னை உருவகப்படுத்திக் கொள்வார். கருணாநிதி தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ள பதுங்க ஆரம்பித்தால், ஜெயலலிதா ‘தனி நாடு’ எனப் பாய ஆரம்பிப்பார். நளினியின் தண்டனையைக் குறைக்க கருணாநிதி அரசு முடிவெடுத்தால், ஜெயலலிதா எதிர்ப்பார். இப்போது ஏழு பேருக்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பதைப்போல நடிக்கிறார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் தனது தலைவலிக்கும் வயிற்றுவலிக்கும் மருந்து சாப்பிடும் மனிதர்கள் அல்ல. அடுத்தவர் நோவுக்குச் சாப்பிடுபவர்கள். இந்த ஓரங்க நாடகத்தை இன்னமும் உலகம் நம்புகிறது என அவர்கள் இருவருமே மனபூர்வமாக நம்பி செயல்படுவதுதான் அரசியல் கொடுமை. ஈழத் தமிழர் பிரச்னையிலும் ராஜீவ் கொலை வழக்கிலும் இந்த இரண்டு பேரும் அடித்த பல்ட்டிகள் மற்றும் திருகுதாளங்களை, பாவ-புண்ணியம் பார்க்கும் யாருமே பண்ண மாட்டார்கள்!

‘எந்த நாளில் தூக்கிலிடப்படுவோம் என ஒரு மனிதனும் அவனது குடும்பமும் தெரிந்துகொள்ள முடியாத நிலையில், அந்த மனிதனை தனிமைச் சிறையில் தொடர்ந்து நாட்கணக்கில், வாரக் கணக்கில் அடைத்து வைப்பது பிசாசுத்தனமானது' என அருந்ததி ராய் ஒருமுறை எழுதினார். எப்போது தூக்கிலிடப்படுவோம் எனத் தெரியாததைவிடப் பிசாசுத்தனமானது, `உனக்கு இன்று விடுதலை, நாளை விடுதலை' என ஆசை வார்த்தைகளை எலும்புத்துண்டுகளாகக் காட்டி ஆதாயம் அடைவது. இப்போது நாட்டில் நடப்பது இதுதான்!

இன்னும் எத்தனை நாடகங்கள்?

1991, மே 21-ம் நாள், ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தணுவால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது சம்பவ இடத்தில் இருந்த பலரும் பெங்களூருவில் தற்கொலை செய்துகொண்டார்கள். பிரபாகரன் உள்ளிட்டவர்களைத் தேடப்படும் குற்றவாளி களாகக் காட்டிய சி.பி.ஐ., 26 பேரை குற்றவாளிகளாக பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் நிறுத்தியது. இந்த 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தார் (1998, ஜனவரி 28) நீதிபதி நவநீதம். தடா வழக்கு என்பதால், உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு போனது. நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் (1999, மே 11) உறுதி செய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

1991-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கைதுசெய்யப்பட்ட இந்த ஏழு பேரும் 25 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என்பது ஆண்டவனுக்கே தெரியாது. ஆனால், அவர்களது விடுதலைக்கு யார் காரணம், அந்தப் பெருமையை யார் அறுவடைசெய்வது என்ற போட்டி மட்டும் நடக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் அளித்த தீர்ப்பின்படி, `அரசியல் அமைப்புச் சட்டம் 161-வது விதியின்படி, ஆயுள் தண்டனையில் இருந்து தண்டனைக் கழிவு  வழங்க, மாநில அரசு நினைத்தால் செய்யலாம்' எனச் சொல்லியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வந்துவிட்டது. ‘ஏழு பேரையும் விடுதலைசெய்ய வேண்டும்’ என தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் கொண்டுவந்த ஜெயலலிதாவுக்கு, உண்மையில் இந்தத் தீர்மானத்தின் மீது அக்கறை இருக்கு மானால், அந்தத் தீர்ப்பு வந்த உடனேயே மத்திய அரசுக்கு எழுதி கேட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு மாதங்களும் அமைதியாக இருந்த ஜெயலலிதா, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மூலமாக, கடந்த வாரத்தில் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். `உடனே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்' என அந்தக் கடிதத்தில் கட்டளையிட்டு இருந்தது தமிழக அரசு.

தனது பதவிக்காலம் முடியப் போகிறது, மார்ச் 5-ம் தேதி தேர்தல் தேதியை அறிவித்தால், அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும். மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் முடிவு எடுக்காது, முடிவெடுத்துச் சொல்வதற்கு முன்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என ஜெயலலிதா நினைத்தார். சும்மா கடிதம் அனுப்பினாலே பாராட்டு விழாக்களும் பாதயாத்திரைகளும் நடத்த ஈழ ஆதரவாளர்கள் தயாராக இருப்பார்கள் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். அந்தத் தந்திரத்தின் வெளிப் பாடுதான் மத்திய அரசுக்கு ஞானதேசிகன் எழுதிய கடிதம். இந்த நாடகம் போதாது என, மார்ச் 5-ம் தேதி இன்னொரு நாடகம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்னும் எத்தனை நாடகங்கள்?

நளினியின் வழக்குரைஞர் புகழேந்திக்கு, நண்பகல் 11 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. ‘நீங்கள் உடனடியாக வேலூர் சிறைக்கு வாருங்கள். நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலைசெய்யப் படலாம். மற்ற நான்கு பேரும் இலங்கைக் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், அவர்களை அகதிகள் முகாமுக்கு அனுப்பப்போகிறோம்’ என்று தகவல். இந்தத் தகவல் பரவுகிறது; பரப்பப்படுகிறது. `பிற்பகல் 3 மணிக்கு, தமிழ்நாட்டுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்போகிறது' என்ற அறிவிப்பு, பகல் 11 மணிக்கே வந்துவிட்டது. எல்லோருடைய கவனமும் வேலூர் சிறையை நோக்கியே இருந்தன. அவர்கள் ஏழு பேருக்கும் நன்னடத்தை அறிக்கையையும் சிறைத் துறை தயார்செய்தது. 3 மணி வரை எந்தத் தகவலும்  இல்லை. `இந்தத் தகவல் தவறு' எனச் சிறைத் துறையோ, தமிழக உள்துறையோ மறுக்கவில்லை. எதுவும் நடக்கவில்லை. இப்போது என்ன காரணம் பரப்பப்படுகிறது என்றால், ‘தேர்தல் தேதியை அறிவித்த பிறகு எதுவும் செய்ய முடியாது' என்று!

‘விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை முதலமைச்சர் கருணாநிதி மரண தண்டனையில் இருந்து தப்பிக்கவைக்க முயற்சிசெய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வரும்போது எல்லாம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழகத்தில் பகிரங்கமாக நடைபெறுகின்றன. அவர் இதை எல்லாம் தடுத்து நடவடிக்கை எடுப்பது இல்லை. என் ஆட்சியாக இருந்தால், நான் கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பேன்’ என 2008-ல் சொன்ன ஜெயலலிதா, இப்போது மாறிவிட்டாரா? அல்லது அதே நிலைப்பாட்டை மனசுக்குள் வைத்துக்கொண்டு சும்மா கடிதக் கண்ணாமூச்சி நடத்துகிறாரா என்பது கண்டுபிடிக்கக் கூடிய நடிப்புகளில் ஒன்றுதான். ஏமாற்றுவதில்தான் எத்தனை திறமை... எவ்வளவு லாகவம்?!

இந்த நடிப்பைப் பார்த்து அதிகமாகப் பதறிப்போனவர் கருணாநிதிதான். ஏழு பேரை ஜெயலலிதா விடுதலை செய்துவிட்டால், தனது தமிழினத் தலைவர் நாற்காலி உடைந்து தொங்கிவிடுமே என்ற பதற்றத்தில் அறிக்கை மேல் அறிக்கையாக விடுத்தார். ‘எல்லோரும் கேட்பது ஏழு பேரின் விடுதலையே’ எனப் பிரகடனம் செய்தார். ‘தமிழக அரசு சார்பில் இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தின் உள்நோக்கம் எதுவாக இருந்தபோதிலும், மிகவும் தாமதம் ஆகிவிட்ட இந்தக் கட்டத்திலாவது இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்' என கண்ணீரை மையால் தோய்த்து எழுதியிருக்கிறார் கருணாநிதி. அவர் சொல்லும் காலதாமதத்துக்கு அவர்தான் முதல் காரணம்!

இன்னும் எத்தனை நாடகங்கள்?

இன்று அல்ல, 17 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1999-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வரும் அன்றைய ஆளுநருக்கு கருணை மனு போட்டார்கள். அப்படிப் போட்டாலும், அவர் அமைச்சரவையின் கருத்தைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும் என்பது மிக அடிப்படையான விதி. அதைக்கூடச் செய்யாமல் அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி (உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்!) நிராகரித்தார். இது சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு தாக்கல் செய்ய, அதை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் ‘மாநில அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் ஆளுநர் இப்படி முடிவெடுத்தது தவறு’ என தீர்ப்பு தந்தார். அதன் பிறகு கூடிய கருணாநிதியின் அமைச்சரவை (2000, ஏப்ரல் 19), நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம், மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனையே இருக்கலாம் எனவும் பரிந்துரைத்தது. அதுதான் இன்று வரையிலான காலதாமதத்துக்குக் காரணம் என்பதை கருணாநிதி உணர்ந்ததாகத் தெரியவில்லை. கருணாநிதி மீண்டும் முதலமைச்சராக வந்தபோது 2008-ம் ஆண்டில் பேரறிவாளன் மிக நீண்ட கடிதத்தை அவருக்கு அனுப்பிவைத்தார். ‘வாழ்வோ சாவோ... ஒளியோ இருளோ... இன்பமோ துன்பமோ... தற்போதே இறுதிசெய்யப்பட்டாக வேண்டும்' என பேரறிவாளன் அதில் கெஞ்சியிருந்தார். இந்தக் கடிதத்தை, கருணாநிதி படித்தும் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

‘வேதனை மிகுந்த இந்த நீண்ட சிறைவாசம் முற்றுப்பெறத் துணைபுரியுங்கள். ஓர் உண்மை மனிதனின் உயிர்ப் போராட்டத் துக்கு, கொள்கையாளனின் மனக்குமுறலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். முடிவுரை எழுதுங்கள்' எனவும் அந்தக் கடிதத்தில் பேரறிவாளன் சொல்லியிருந்தார். பிரச்னையும் முற்றுப் பெறவில்லை; ஜெயலலிதா - கருணாநிதியின் நாடகங்களும் முற்றுப்பெறவில்லை. முத்துக்குமார், செங்கொடி ஆகிய இரண்டு உயிர்களும் தங்கள் உடம்பில் வைத்த தீயாவது உங்கள் மனச் சாட்சியைத் தட்டி எழுப்பாதா?