Published:Updated:

"என்னோட ஸ்ட்ரெஸ்ஸைப் போக்க ரெண்டு விஷயங்களாலதான் முடியும்!" - வசந்தபாலன் #LetsRelieveStress

"என்னோட ஸ்ட்ரெஸ்ஸைப் போக்க ரெண்டு விஷயங்களாலதான் முடியும்!" - வசந்தபாலன் #LetsRelieveStress
"என்னோட ஸ்ட்ரெஸ்ஸைப் போக்க ரெண்டு விஷயங்களாலதான் முடியும்!" - வசந்தபாலன் #LetsRelieveStress

சந்தபாலன்... 'ஆல்பம்' படம் தொடங்கி, 'வெயில்', 'அங்காடித் தெரு', 'அரவான்', 'காவியத் தலைவன்' என வித்தியாசமான கதைக்களன்களால் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். இவர் இயக்கிய 'வெயில்', 'அங்காடித் தெரு' இரண்டு படங்களுமே பிலிம்ஃபேர் விருது பெற்றவை. திரைப்படத்துறையில் இருந்தாலும் பந்தா, பரபரப்பு போன்ற ஜோடனைகளற்ற எளிய மனிதர். மன அழுத்தம் தரும் பொழுதுகளையும், ஸ்ட்ரெஸ்ஸான தருணங்களையும் அவர் எப்படிக் கடக்கிறார் என்பது குறித்து விளக்குகிறார் இங்கே... 

 '' `ஆல்பம்’ படம் பண்ணின பிறகு, 2004-ம் வருஷம் தெலுங்குல ஒரு படம் பண்றதுக்கு வாய்ப்புக் கிடைச்சுது. படப்பிடிப்பு ஆரம்பிச்சதுல இருந்தே எனக்கும் அந்த ஹீரோவுக்கும் இடையிலே ஒரு சின்ன முரண்பாடு. அதோட, அந்தப் படத்தின் புரொடியூசருக்கும் எனக்கும்கூட சில விஷயங்கள்ல முரண்பாடு ஏற்பட்டுச்சு. 

ஒரே ஒரு வாரம் மட்டும் ஷூட்டிங் முடிஞ்சிருந்த நிலைமையில, தொடர்ந்து அந்த புராஜெக்ட்ல வொர்க் பண்ண முடியாத நிலைமை. ஒரு கட்டத்துல அந்தப் படத்திலே இருந்தே விலகிடலாம்னு முடிவு பண்ணினேன். அதை அந்த தயாரிப்பாளர்கிட்டேயே சொல்லிட்டேன். 

அவர், 'அப்படின்னா அந்தக் கதையை முழுசா எங்களுக்கு எழுதிக் கொடுத்துட்டுப் போங்க'னு சொன்னார். நாலு வருஷமா நான் யோசிச்சு வெச்சிருந்த கதை. அப்படியே போகிறபோக்குல `எங்களுக்குக் கொடுத்துடுங்க’னு சொன்னாங்க... அன்னிக்கு என்னோட சூழ்நிலை... நான் இருந்த நிலைமை... என்னால எதுவும் பேச முடியலை. 

இல்லைனா, `செலவு பண்ணின பணத்தைத் திரும்பக் கொடுங்க’ங்கிற லெவல்ல பேசினாங்க. அவர் தெலுங்குல பெரிய தயாரிப்பாளர். பெரிய அரசியல் பின்புலமும் இருந்துச்சு. அந்த ஹீரோவும் செல்வாக்கு உள்ளவர். வேற வழியில்லாம அப்படியே என் கதையைக் கொடுத்துட்டேன். அவங்க எனக்கு எந்தப் பணமும் கொடுக்கலை. ட்ரெயின் டிக்கெட் மட்டும் போட்டுக் கொடுத்தாங்க. எனக்குன்னா அழுகையும் ஆத்திரமுமா வந்துச்சு. தோற்றுப்போன  மனநிலையில, கண்ணீரோட ஹைதராபாத்துலருந்து கிளம்பி வந்தேன். 

ட்ரெயின்ல வர்றப்போ முழுக்க உடைஞ்சு போயிருந்தேன். `நாம அவ்வளவுதான்... இப்படியே இந்த ட்ரெயின்ல இருந்து குதிச்சு இறந்து போயிடலாமா?’னுகூட தோணுச்சு. என்னென்னவோ மனசு நினைக்க ஆரம்பிச்சிடுச்சு. ஏன்னா, ஒரு படம் ஆரம்பிச்சு நின்னு போயிடறதுங்கிறது ஒரு இயக்குநருக்கு பெரிய சரிவு. எனக்கு என்ன பண்றதுனே புரியலை. 

சென்னைக்கு வந்த நான், நேரா ரூமுக்குப் போனேன். ரூம்ல இருந்த என் நண்பன்கிட்டகூட எதுவும் பேசலை. யார்கிட்டயும் எதுவும் பேசப் பிடிக்கலை. சாப்பிடலை, குளிக்கலை. பாயை எடுத்துப் போட்டுட்டு அப்படியே படுத்துட்டேன். தூங்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து 24 மணி நேரம் இடைவிடாம தூங்கினேன். என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாத, அப்படி ஒரு ஆழ்ந்த தூக்கம். 

காலையில எழுந்திரிச்சதும் மனசுல ஒரு வைராக்கியம். `எந்த ஹைதராபாத் என்னை நிராதரவாக்கி, ஒரு பிச்சைக்காரன் மாதிரி துரத்தி அடிச்சதோ, அதே ஹைதராபாத்துல ஜெயிச்சுக் காட்டணும்’னு ஒரு வேட்கையை, வைராக்கியத்தை அன்றைய சூரிய உதயம் என் மனசுல ஏற்படுத்துச்சு.

குளிச்சு, டிபன் சாப்பிட்டுட்டு நேரா கடைக்குப் போனேன். ஒரு பண்டல் பேப்பர், பேடு, புதுசா ஒரு பேனா வாங்கினேன். வாங்கிட்டுப் போய் ஒரு கதையை எழுத ஆரம்பிச்சேன். 30 நாள்ல முழுக்கதையையும் ஸ்கிரிப்டாக எழுதி முடிச்சேன். அப்படி எழுதி முடிச்ச ஸ்கிரிப்ட்தான் 'வெயில்'. அந்தப் படத்துக்குத்தான் ஃபிலிம்ஃபேர் விருது கிடைச்சுது. 

அதற்கான விழா ஹைதராபாத்துல நடந்துச்சு. ஹைதராபாத்துக்குப் போய் சிறந்த இயக்குநர் விருதை வாங்கினப்போ அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. 'அங்காடித் தெரு' படத்துக்கும் ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைச்சது. எந்த ஹைதராபாத்துலருந்து தோற்றுப்போய்த் திரும்பி வந்தேனோ, அங்கேயே நான் விருது வாங்கினேன்.

சினிமா உலகத்தைப் பொறுத்தவரை நமக்குனு ஒரு இடம் கிடைக்கிறது கஷ்டம். அப்படி கிடைச்ச இடத்தைக் காப்பாத்திக்கிறது அதைவிடக் கஷ்டம். தினமும் சரியான வாய்ப்பைத் தேடுவது, கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துறதுங்கிறது ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல்லான விஷயம்.

ஒரு தயாரிப்பாளருக்கு, நாம கதை சொல்லணும்; அந்தக் கதை அவருக்குப் பிடிக்கணும்; அவரைச் சுற்றி உள்ளவங்களுக்குப் பிடிக்கணும்னு பல கட்டங்கள் இருக்கு. என்ன சொல்லுவாங்களோ, ஏது சொல்லுவாங்களோனு பதற்றமாகவே இருக்கும்.

நான் ஒரு புரொடியூசருக்குக் கதை சொல்லப் போறேன்னா, முதல் நாள் ராத்திரியே சரியா தூக்கம் வராது. காலையில 10 மணிக்கு கதை சொல்லப் போறேன்னா, அன்னிக்குக் காலை சாப்பாடு உள்ளேயே இறங்காது. மூணு மணி நேரம் முழுக்கதையும் சொல்லணும். கிட்டத்தட்ட படத்தோட எல்லா கேரக்டராகவும் நடிச்சுக் காண்பிக்கணும்.

கதையைக் கேட்டுட்டு, அவங்க `நல்லா இருக்கு’னு சொல்லணும். இல்லை, `நல்லா இல்லை’னு சொல்லணும். ஆனா, எதுவுமே சொல்ல மாட்டாங்க. அதை எப்படி எடுத்துக்கிறது? அதனால அவங்க `சரி’ சொல்ற வரைக்கும் நமக்கு ஸ்ட்ரெஸ்ஸாதான் இருக்கும். சினிமா லைஃப் அப்படித்தான்.

என்னுடைய ஸ்ட்ரெஸ்ஸைப் போக்க ரெண்டே ரெண்டு விஷயங்களைத்தான் பண்ணுவேன். நேரா பெட்ரூமுக்குப் போய் தூங்க ஆரம்பிச்சிடுவேன். தூக்கம் அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனாலும், கொஞ்ச நேரம் ஆக ஆக மனசு ஒடுங்கி தூக்கம் வந்துடும். 

நல்லா தூங்கி எழுந்திரிச்சதும், அடுத்தடுத்து தொடர்ந்து வேலைகள் பண்ண ஆரம்பிச்சிடுவேன். அதுதான் என்னோட மனஅழுத்தத்தை சரிசெய்ய உதவும். மற்றபடி என் குழந்தைகளோட விளையாடுவேன். மனசு லேசாகிடும்.''