Published:Updated:

காஜல், நித்யாமேனனின் தெலுங்கு திரைப்படம் 'ஆவ்' - 'ஆவ்' படம் எப்படி? #AWEreview

அலாவுதின் ஹுசைன்
காஜல், நித்யாமேனனின் தெலுங்கு திரைப்படம் 'ஆவ்'  - 'ஆவ்' படம் எப்படி? #AWEreview
காஜல், நித்யாமேனனின் தெலுங்கு திரைப்படம் 'ஆவ்' - 'ஆவ்' படம் எப்படி? #AWEreview

வாழ்க்கை துணையை எதிர்பார்த்துள்ள இளம்பெண், வேலை தேடும் இளைஞன், போதைக்கு அடிமையான பெண், டைம் டிராவல் மெஷின் கண்டுபிடிக்கப் போராடும் ஒருவன், தலைகணம் பொருந்திய மேஜிக்மேன் என வாழ்க்கையின் வெவ்வேறு ஆழத்தைத் தேர்ந்தெடுக்கும் இவர்களது பிரச்னைகள் என்ன, அதற்கான முடிவு என்ன என்பதே, 'மல்டி ஜானர்' தெலுங்குப் படமான  'ஆவ்' ! #AWE

காஜல், நித்யாமேனனின் தெலுங்கு திரைப்படம் 'ஆவ்'  - 'ஆவ்' படம் எப்படி? #AWEreview

இளம்பெண் ராதா (ஈஷா) தன் துணையைப் பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்த வேண்டி, ஒரு காஃபி ஷாப்பில் காத்திருக்கிறாள். தாமதமாகும் நேரத்தில் தனது மனதிற்கு நெருக்கமான க்ரிஷ் என்கிற கிருஷ்ணவேணி (நித்யாமேனன்) பற்றி தன் அப்பா, அம்மாவிடம் (ரோஹினி) எடுத்துக் கூறுகிறாள். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் வாழ்க்கையின் விளிம்பு நிலையிலிருக்கும் இளைஞன் புல்லிகொண்டா நளன் (ப்ரியதர்ஷி) ரெஸ்டாரன்ட்டில் வேலைக்குச் சேர, தனக்குச் சமைக்கத் தெரியும் எனப் பொய் சொல்கிறான். ஒண்ணும் தெரியாத ப்ரியதர்ஷிக்கு ஒரு மீனும் (வாய்ஸ் ஓவர் - நானி), போன்சாய் மரமும் (வாய்ஸ் ஓவர் - ரவிதேஜா) உதவி செய்கிறது. போதை வஸ்துகளுக்கு அடிமையான பெண்ணாக (ரெஜினா கெஸன்ட்ரா) தன் வருமானத்திற்காக ஒரு காஃபி ஷாப்பில் வேலை செய்பவர், தனது பாய் ஃப்ரெண்டிற்கு உதவியாக ஒரு கொள்ளையில் ஈடுபடத் துணிகிறார்.

காஜல், நித்யாமேனனின் தெலுங்கு திரைப்படம் 'ஆவ்'  - 'ஆவ்' படம் எப்படி? #AWEreview


சிறுவயதில் ஒரு விபத்தில் தன்னை விட்டுப் பிரிந்த பெற்றோர்களைக் காப்பாற்றி திருப்பி உயிர்கொடுக்க, டைம் மெஷினைக் கண்டுபிடிக்க நினைக்கிறான் 'லைப்ரரி தீம்டு கஃபே'யில் வேலை பார்க்கும் ஶ்ரீனிவாஸ் அவசராலா. அவனை கடுப்பாக்கும் ஒரு 40 வயதான பெண்மணி (தேவதர்ஷினி). மேஜிக்கில் தான் மட்டும்தான் சிறந்தவன் என்ற ஆணவத்தில், பேக்கரி நடத்தும் ஒரு குழந்தையுடன் சண்டையிடும் மேஜிஷியன் யோகி (முரளி ஷர்மா). மற்றவர்களை மகிழ்விப்பவன்தான் மேஜிஷியன் என்று அந்தச் சிறுமியுடன் வாக்குவாதம் முற்றுகிறது. மன இறுக்கத்துடனேயே காணப்படும் காளி (காஜல் அகர்வால்), பிறந்த நாளன்று ஒரு துப்பாக்கியை வாங்கிக்கொண்டு ரெஸ்டாரன்ட்டில் உடல் தானத்திற்கான படிவத்தைப் பூர்த்திசெய்துவிட்டு, தற்கொலைக்குத் தயாராகிறாள்.   

இப்படிப் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள். எல்லாப் பிரச்னைகளும் எப்படி முடிவுக்கு வருகிறது, இவர்கள் அனைவரும் காஃபி ஷாப், ரெஸ்டாரன்ட் என ஒரேமாதிரியான சூழலில் இருக்கக் காரணம் என்ன, இவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி சம்பந்தப்படுகிறார்கள்... என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது, 'ஆவ்' திரைப்படம்.

இயக்குநர் பிரஷாந்த் வர்மா தனக்குக் கிடைத்த வாய்ப்பில் சற்றும் பயப்படாமல், தயங்காமல் பயன்படுத்தியிருக்கிறார். 'ஹை-கான்செப்ட் ஃபிலிம்ஸ்' எனச் சொல்லப்படும் இயல்பை விஞ்சும் படங்கள் சயின்ஸ் பிக்‌ஷன், ஹாரர் த்ரில்லர், ஃபேன்டசி அட்வென்சர் எனத் தனிதனியாக இருக்கும். ஒரே படத்தில் நடக்கும் வெவ்வேறு கதைகளில் இவை அனைத்தையும் வைத்திருந்தது, உலகத் தரமான ஐடியாவை கொண்டு வந்தது, இந்தக் கதையை ரசிகர்களால் புரிந்துகொள்ளமுடியும் என்று நம்பி எழுதியது... எனப் பல இடங்களில் பாஸ் மார்க் பெறும் இயக்குநரைப் பாராட்டலாம். ஒரு இயக்குநராக, தனக்குக் கிடைத்த வாய்ப்பை சமூகத்தில் பெண்கள் தொடர்பான அடிப்படைப் புரிதல்களையும், கருத்துகளையும் முன் வைத்திருப்பதற்கு பிரஷாந்த் வர்மா கூடுதல் லைக்ஸ் பெறுகிறார். தவிர, கதைக்குத் தேவையான காஸ்டிங் பிடித்ததற்காகவும் எக்ஸ்ட்ரா எனர்ஜியைப் பெறுகிறது, இப்படம்.  

காஜல் அகர்வாலுக்கு சிறிது நேர கதாபாத்திரமே என்றாலும், தனது வழக்கமான ஹீரோயின் ஜோடனைகள் இல்லாமல் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்குப் பெரிய வாழ்த்துகள். சமபால் ஈர்ப்பாளர்களைப் பற்றி சமூகம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளவேண்டிய, காது கொடுத்துக் கேட்கக் கூட தயங்கும் விஷயங்களை எடுத்துச் சொல்லும் க்ரிஷ் கதாபாத்திரத்தில் நித்யாமேனன், ராதா கதாபாத்திரத்தில் ஈஷா ரெப்பா, மீரா கதாபாத்திரத்தில் 'லோனர்' பெண்ணாக ரெஜினா கெஸன்ட்ரா, தனக்கு வேண்டியவற்றை வேண்டிய வழியில் முடித்துக்கொள்ள நினைக்கும் ப்ரியதர்ஷி, ஈகோவை பெரிதாகச் சித்திரித்துக்கொள்ளும்  முரளி ஷர்மா... என இவர்களையெல்லாம் தாண்டி நம்மைக் கவர்வதில் முதலிடம் பெறுபவர், தேவதர்ஷினி. காமெடி ரோல்களில் மட்டுமே நாம் பார்த்து வந்த தேவதர்ஷினி, இப்படத்தில் நம்மை மிரட்டி எடுக்கிறார். தான் ஒரு ஆல் ரவுண்டர் எனக் காட்டியிருகிறார் (கலக்குங்க தேவதர்ஷினி). ரோஹினி சமகால ஒளிவுமறைவின்மையை, கலாசாரத்தை  ஏற்றுக்கொள்ள முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பது வாவ். படத்தின் இன்னொரு சர்ப்ரைஸ், ஒரு மீனுக்குக் குரல் கொடுத்திருக்கும் நானி, போன்சாய் மரத்திற்குக் குரல் கொடுத்திருக்கும் ரவிதேஜா. இப்படிப் பா சர்வதேசத் தரத்திலான ஐடியாக்கள்தாம் இந்த 'ஆவ்' படத்தின் ஸ்பெஷல்.

முரளி ஷர்மா கேரக்டர் ஏன் அவ்வளவு பெரிதாக வருகிறது, நோய்தான் காரணம் என்றால் அது எந்த வகையில் காஜலை தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தூண்டுகிறது... என ஆங்காங்கே எழும் லாஜிக் கேள்விகளுக்குப் பதில் இல்லை. ஆனால், பாசிட்டிவ் காரணங்கள் அதிகம் இருப்பதால், இவற்றையெல்லாம் தவிர்த்துவிடலாம் என்றே தோன்றுகிறது. 

காஜல், நித்யாமேனனின் தெலுங்கு திரைப்படம் 'ஆவ்'  - 'ஆவ்' படம் எப்படி? #AWEreview

ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வோர் அரங்க வடிவமைப்பு இருப்பதுபோல் வசனங்கள் இருப்பதும் இயக்குநரின் தெளிவு. 'வெஜிடேரியன்' என்ற பெயரில் பெருமையாய் இலை, தழை, காய் கனிகளைச் சாப்பிடுவது எவ்வளவு பெரிய குற்றம்? என மரம் (ரவிதேஜா) கூறும்போது, அரங்கம் அதிர்கிறது. சிறுவயதிலிருந்து ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் அச்சுறுத்தல்களை மிக நேர்த்தியாய் சொன்னவிதம் அருமை. மொத்தத்தில் அரைமணி நேரம் நடக்கும் நிகழ்வுகளை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் காட்சியோட்டத்தில் காட்டிய விதமும், இவையனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியைத் தெளிவாக விளக்கிய விதத்திலும் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்,  படத்தொகுப்பாளர் கௌதம் நேரசு. காபி ஷாப், ரெஸ்டாரன்ட் என ஒரே இடத்துக்குள் அலைந்து திரியும் கார்த்திக் கட்டமனேனியின் கேமிரா, சஹி சுரேஷின் அரங்க அமைப்பு இரண்டுமே நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன. மார்க் கே ராபினின் பின்னணி  இசையும், 'விஷ்வமே தாகினா...' என்ற ஒற்றைப் பாடலும் படத்தின் ஓட்டத்தோடு நம்மையும் கடத்திச் செல்கிறது. ஒலி, ஒளி என இரண்டையும் நுட்பமாகக் கையாண்டுள்ள திரைப்படம் 'ஆவ்'.

காஜல் அகர்வால், நித்யாமேனன், நானி என டாப் ஸ்டார்களைக் கொண்டு முற்றிலும் புதியதோர் கதைக்களத்தில் நம்மை பிரயாணப்படுத்தி பல 'வாவ்'களை அள்ளுகிறது இந்த 'ஆவ்'.