Published:Updated:

``புடவை கட்டத் தெரியாமல் இருக்கலாமா?’’ - வைரல் வசவு வாங்கும் ஆடை வடிவமைப்பாளர்

``புடவை கட்டத் தெரியாமல் இருக்கலாமா?’’ - வைரல் வசவு வாங்கும் ஆடை வடிவமைப்பாளர்
``புடவை கட்டத் தெரியாமல் இருக்கலாமா?’’ - வைரல் வசவு வாங்கும் ஆடை வடிவமைப்பாளர்

``புடவை கட்டத் தெரியாமல் இருக்கலாமா?’’ - வைரல் வசவு வாங்கும் ஆடை வடிவமைப்பாளர்

பாலிவுட் பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளரான சப்யாசச்சி முகர்ஜியின் உரையாடலுக்கு, நாடெங்கிலும் பல எதிர்ப்புகள் குவிந்துள்ளன. வித்யாபாலன், அசின், பிபாஷா பாசு, அனுஷ்கா கோலி ஆகியோரின் திருமண உடைகள் முதல் பல பிரபலங்களின் அழகான ஆடைகளை வடிவமைத்த சப்யாசச்சி, தற்போது `புடவை' பற்றி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்த கருத்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் `பிளாக்', `இங்கிலீஷ் விங்கிலீஷ்' போன்ற பாலிவுட் சூப்பர் ஹிட் படங்களின் ஆடை வடிவமைப்பாளரும்கூட!

சப்யாசச்சி தன் உரையாடலில், ``இந்தியப் பெண்களுக்கு புடவை கட்டத் தெரியவில்லை என்றால், அது அவர்களுக்கு மிகப்பெரிய அவமானம். நம் நாட்டின் கலாசாரம் அது. அதற்காக முன் நில்லுங்கள்" என்ற கருத்து, இந்தியப் பெண்கள் பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர், தங்களின் எதிர்ப்பை அனைத்துச் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ` `அவமானம்' என்ற சொல்லை உபயோகப்படுத்தியது தவறுதான்' என மன்னிப்புக் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார் சப்யாசச்சி. அதில், தான் நேரடியாக அந்தக் கருத்தை முன்வைக்கவில்லை என்றும், புடவையை தற்போது அனைவரும் வயதானவர்கள் அணியும் உடையாகத்தான் பார்க்கிறார்கள். அந்த எண்ணம் மாற வேண்டும் என்பதற்காகத்தான் கூறினேன் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களின் எதிர்ப்பையும் ஆதரவையும் மாறிமாறி முன்வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், `மேரி கோம்' திரைப்படத்தில் மேரியின் தாயாக நடித்த நடிகை ரஜினி பாசுமட்டரி `இந்தப் பிரச்னையில் தவறவிட்டவை' எனக் குறிப்பிட்டு, விரிவான கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், `புடவை உடுத்தத் தெரியாதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு, புடவை நம் நாட்டின் தேசிய உடையும் அல்ல... கடவுளால் நியமிக்கப்பட்ட ஆடையும் அல்ல என்ற இந்தச் சிறிய தகவலை முன்வைத்து இந்தக் கடிதத்தை  எழுதத் தொடங்குகிறேன். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் புடவை பற்றி தாங்கள் கூறிய கருத்து, அனைத்துச் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளர் எனப் போற்றப்படும் உங்களுக்கே இந்தியக் கலாசாரம் பற்றித் தெரியவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. புடவை ஒன்றே இந்தியப் பெண்களின் உடை எனக் கூறுபவன், முட்டாள் அல்லது பொய் கூறுபவனாகத்தான் இருக்க வேண்டும். அதும் உங்களைப் போன்ற பிரபலங்கள் கூறுவதை என்னவென்று சொல்வது?

முகர்ஜியான உங்களுக்கும், உங்களின் உரையாடலைக் கேட்டு கைதட்டிய ஹார்வர்டு பல்கலைக்கழகப் பார்வையாளர்களுக்கும், இந்தியாவின் காலாசாரத்தைப் பற்றி சிலவற்றை நினைவுகூர விரும்புகிறேன். இந்திய மொழி என்று எதுவும் இங்கு இல்லை. இந்திய மொழிகள்தாம் உள்ளன. இந்தியக் கலாசாரம் என்று ஏதும் இங்கு இல்லை. ஏனெனில், பல மாநிலங்களின் கலாசாரங்களைத் தாங்கும் நாடு இது. அதேபோல, இந்திய உடை என்ற ஒன்று இங்கு இல்லை. ஒவ்வொரு சமுதாயத்துக்கு ஏற்ப, பல கலாசார உடைகள் இந்தியாவில் உள்ளன. ஏதோ ஒரு காரணத்தினால் புடவை எல்லோராலும் விரும்பப்பட்டு, மற்ற உடைகளைவிட அதிகம் ஈர்த்துள்ளது. அதுவும் நன்மைக்கே. அப்படி ஈர்க்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்துக்காக, புடவை அணியத் தெரியாத பெண்கள் அவமானப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

நான் `போரோ'வைச் சார்ந்த பெண். `போரோ' என்பது, இந்தியாவில் உள்ள பழங்குடியினச் சமுதாயங்களில் ஒன்று. என் அம்மா 86 வயது வரை வாழ்ந்தவர். ஆனால், அவர் வாழ்நாளில் புடவையைத் தொட்டதுகூட இல்லை. என் உறவினர்களில் பெரும்பாலானோர் புடவை உடுத்தியதில்லை. நம் நாட்டில் 29 மாநிலங்கள் உள்ளன. இதில், வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் பாரம்பர்ய உடை நிச்சயம் புடவை அல்ல. என் சொந்த மாநிலமான அசாமிலும் கலாசார உடைப் பட்டியலில் புடவை பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதனால் இவர்கள் அனைவரும் புடவை கட்டத் தெரியாத காரணத்தால் வெட்கப்பட வேண்டுமா? உண்மையில் நம் நாட்டைப் பற்றிய விழிப்புஉணர்வு இல்லாமல் பேசியதற்கு நீங்கள்தான் வெட்கப்பட வேண்டும் சப்யாசச்சி' என்று தன் நீண்ட கடிதத்தில் கோபம் நிறைந்த வேதனையைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் ரஜினி.

அடுத்த கட்டுரைக்கு