Published:Updated:

13,000 அடி உயரத்தில் சேலை ஸ்கை டைவிங்.. ‘பத்மஸ்ரீ’ ஷிதல்!

எம்.ஆர்.ஷோபனா
13,000 அடி உயரத்தில் சேலை ஸ்கை டைவிங்.. ‘பத்மஸ்ரீ’ ஷிதல்!
13,000 அடி உயரத்தில் சேலை ஸ்கை டைவிங்.. ‘பத்மஸ்ரீ’ ஷிதல்!

ம்மில் பலருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் வித்தியாசமாகச் சாதிக்கும் கனவு இருக்கும். ஆனால், சிலர் மட்டுமே அந்தக் கனவைச் செயலாக மாற்றி, சாதித்துக் காட்டுகிறார்கள். அப்படியான ஒருவர்தான், புனேவைச் சேர்ந்த ஷீதல் மஹாஜன் ரானே. 35 வயதாகும் இவர், சேலை கட்டிக்கொண்டு ‘ஸ்கை டைவிங்’ செய்திருக்கிறார். 'வரப்போகும் சர்வதேச மகளிர் தினத்துக்கு எனது இந்தச் சாதனை சமர்ப்பணம்' என்று புன்னகைக்கிறார். 

“2004-ம் ஆண்டிலிருந்து ஸ்கை டைவிங் பண்ணிட்டிருக்கேன். ஒரே வருஷத்தில் உலகத்தின் ஏழு கண்டங்களிலும் ஸ்கை டைவிங் பண்ணியிருக்கேன். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். சரி, நாமே ஒரு வித்தியாசத்தை இதில் உருவாக்குவோமே என யோசிச்சு, சேலையில் ஸ்கை டேவிங் பண்ண முடிவெடுத்தேன். நான் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவள். எங்க ஊர் பாரம்பர்ய சேலையான நவ்ஹரி சேலையைக் கட்டிக்க நினைச்சேன். கடைசியாக, நான் அந்தச் சேலை கட்டினது 14 வருஷத்துக்கு முன்னாடி. அதனால், என் பாட்டிக்கும் அம்மாவுக்கும் போன் பண்ணி, 'இந்தச் சேலையை சரியாகக் கட்டுவது எப்படி எனக் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா, ஒரு இடத்துல மிஸ் ஆகியிருந்தாலும் உயிருக்கு ஆபத்து உண்டாகிடுமே'' என்கிறார் அசால்ட்டாக. 

ஆனால், அந்தச் சவாலை முறியடித்து, 13,000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து சாதித்துள்ளார் ஷீதல். இப்படி ஒரே வரியில் சொல்லிவிடும் அளவுக்கு அது எளிதாக இருந்துவிடவில்லை. 

”தாய்லாந்து நாட்டில், ஸ்கை டைவிங் செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. முதல் முறை கேட்டபோது, சேலை அணிந்து ஸ்கை டைவிங் செய்ய மறுத்துவிட்டனர். இரண்டாவது முயற்சியில், என்னால் முடியும் என உறுதியாகச் சொன்னதும் ஒப்புக்கொண்டனர். அப்போது வானிலை சரியாக இல்லாததால், என்னால் போகமுடியவில்லை. மூன்றாவது முறையாக ஒரு ஞாயிற்றுக்கிழமை, சேலை அணிந்து 13,000 அடி உயரத்திலிருந்து, ஸ்கை டைவிங் செய்தேன்” என உற்சாகமாகக் கூறுகிறார் ஷீதல். இவர் ஏற்கெனவே 700 முறை ஸ்கே டைவிங் செய்தவர். 

ஷீதலுக்கும் சாகசங்களுக்கும் பிரிக்கமுடியாத பந்தம் இருக்கிறது. இதற்கு முன்பும் சில வித்தியாசமான சாகசங்களை செய்திருக்கிறார். அன்டார்டிகாவின் நார்த்போலில், மைனஸ் 37 டிகிரி செல்சியஸில் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல், ’பாரா ஜம்ப்’ செய்த முதல் பெண் இவர். ’ஃப்ரீஃபால் ஜம்ப்’ வகை சாகசத்தையும் வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறார். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட விருதுகளைக் குவித்திருக்கும் ‌ஷீதலுக்கு, இந்திய அரசு 2014-ம் ஆண்டு, பத்மாஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. 

ஷீதலுக்கு அடுத்தடுத்த சாகச திட்டங்கள் பல இருக்கின்றன. “ஆஸ்திரியன் நாட்டின் பிரபல ஸ்கை டைவர், ஃபிலிக்ஸ் பம்கர்ட்னர் (Felix Baumgartner) போல, விண்வெளிக்குச் செல்லும் வழியின் பூமி முனையிலிருந்து டைவ் செய்ய வேண்டும். அப்படி டைவிங் செய்யும் முதல் பெண்ணாக நான் பெயரை வாங்க வேண்டும். மற்றொரு கனவு, எவரெஸ்ட் சிகரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்ய வேண்டும். ஆனால், அதற்குச் சரியான ஸ்பான்சர் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்துவிட்டால் தூள் கிளப்பிவிடுவேன்” என உற்சாகமாகக் கூறுகிறார் ஷீதல். 

ஷீதல் இரண்டு மகள்களுக்கு அம்மா என்பது குறிப்பிடத்தக்கது. சாதிக்கும் உறுதி மனதில் இருந்தால், எதுவும் தடையில்லை என்பதற்கு சூப்பர் உதாரணம், ஷீதல்!