என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : ஏ.ஆர்.முருகதாஸ்நா.கதிர்வேலன்,படங்கள் : கே.ராஜசேகரன்

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''அம்புலி மாமா... அணில் இரண்டையும்தான் சின்ன வயதில் படிச்சேன். அப்புறம் விவரம் தெரிய வளர்ந்த பிறகு வாசித்தது விகடன். பக்கத்து வீட்டில்தான் விகடன் வாங்குவாங்க. அவங்க படிச்சு முடிச்சு அடுத்த வாரம்தான் எங்ககைக்குக் கிடைக்கும். சிவகுமாரி அக்கா, விஜய லட்சுமி அக்கா, யோகலட்சுமி அக்கா மூணு பேருக்கும் யார் முதலில் விகடன் படிக்கிறதுனு அடிதடி சண்டையே நடக்கும். அவங்கதான் எனக்கு விகடனில் இருக்கும் விஷயங்களைப் படிச்சு, எனக்குக் கதை மாதிரி சொல்வாங்க. நான் ஜோக்ஸ் படிப்பேன். பக்கத்து வீட்ல இருந்து இரவல் வாங்கிட்டு வர்றதால், விகடனை ஒரு நாள்தான் வெச்சிருக்க முடியும். அட்டை டு அட்டை அக்காக்கள் படிச்சுப் புரட்டிய பிறகு, என் கைக்கு வர ராத்திரி ஆயிடும். எட்டாவது படிக்கும்போது நான் எழுதிய ஒரு ஜோக் விகடனில் வந்தது.

கோயில் வாசல்ல நின்னு ரெண்டு பேர் பேசிட்டு இருப்பாங்க...

''கோயிலுக்குள்ள போயிட்டு வர்றதுக்குள்ள நல்ல செருப்பு காணாமப் போச்சுங்க!''

''அச்சச்சோ... அப்புறம் என்ன சார் பண்ணீங்க?''

''வேற வழி... என் செருப்பையே போட்டுட்டு வந்துட்டேன்!''

நானும் விகடனும்!

எனக்கு சந்தோஷம் தாங்கலை. அரை மணி நேரத்துக்குள் அந்த ஜோக்கை ஆயிரம் தடவை படிச்சுப் படிச்சு சிரிச்சுட்டே இருந்தேன். தொடர்ந்து பரிணாம வளர்ச்சியா ஒரு கதை எழுதி அனுப்பிவெச்சேன். 10 நாட்களில் 'பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்’னு பதில் வந்தது. அதையும் ஒரு சாதனையா, 'இந்த மாதிரி விகடன் ஆபீஸில் இருந்து லெட்டர் வந்திருக்கு’னு எல்லார்கிட்டயும் பெருமை பேசிட்டு இருந்தேன்.

மனம் தளராத விக்ரமாதித்யன் மாதிரி 'வாழும் வரை போராடு’னு மறுபடியும் ஒரு கதை எழுதி அனுப்பினேன். 'ஏ.முருகதாஸ்’ என்ற பெயரில் மூணு பக்கம் கதை பிரசுரமாகி இருந்தது. 30 விகடன் புக் வாங்கிட்டு வந்து, வர்றவங்க, போறவங்கனு எல்லார் கையிலும் அப்பா கொடுத்தார்.

அப்பா காலமான 10 வருஷங்களுக்குப் பிறகு, நானும் அக்காக்களும் சேர்ந்து அவரோட பழைய டிரங்க் பெட்டியைக் குடைஞ்சோம். வீட்டுக் கணக்கு, பத்திரங்கள், செலவு விவரங் கள், சட்டைத் துணி மணி எல்லாத்துக் கும் இடையில் எனது கதை வெளியான விகடனும் இருந்தது. அட்டையில் 'என் மகன் கதை வெளி வந்த இதழ்’னு அவருடைய கையெழுத்தில் எழுதி இருந்தது. அத்தனை வருஷம் கழிச்சு அப்பா என் பக்கத்துல நின்னு தோள்ல தட்டிக் கொடுக்கிற மாதிரி இருந்தது. கண்ணீரில் கரைஞ்சு உருகி நின்னேன். இப்படி சென்னைக்கு வர்றதுக்கு முன்னாடியே மறக்க முடியாத எமோஷனல் பந்தம் எக்கச்சக்கம்  உண்டு விகடனுக்கும் எனக்கும்!

நானும் விகடனும்!

சென்னைக்கு வந்து சினிமாவில் என்ட்ரி ஆனது தனிக் கதை. அதை எல்லாம் கேட்டால், சென்டிமென்ட் சினிமாவைவிட உருக்கமா இருக்கும். ஒருவழியா வாய்ப்புக் கிடைச்சு 'தீனா’ படம் பண்ணிட்டேன். அதோட நிறுத்திக்குவோம். படத்துக்கு 41 மார்க் போட்டது விகடன். விகடனின் மார்க், விமர்சனம் இரண்டையும் ரொம்பவும் ரசிப்பேன். சரியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தடவையும் என் படங்களுக்கு நான் நினைச்சுவெச்சிருக்கிற மார்க் மட்டும்தான் வந்திருக்கு.

ஜோக் வந்திருக்கு. கதையும் பிரசுரம் ஆகியிருக்கு. பேட்டி கொடுத்தாச்சு. விமர்சனங்கள் சரியா வந்திருக்கு. ஆனால், 'விகடன் அட்டையில் நான் எப்போது?’னு ஒரு ஆசை இருந்தது. 'கஜினி’ செய்யும்போது அமீர் கான் சென்னைக்கு வர, ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் அவரைச் சந்தித்தேன். அமீர் கான், ஏ.ஆர்.ரஹ்மான், நான்... மூணு பேரும் இருக்கும் படம் விகடன் அட்டையில் வந்தது. யாரோ வேற ஆள் மாதிரி அந்த அட்டையை நான் பார்த்துக்கிட்டே இருந்தேன்.

எனக்கு இன்னொரு கனவும் இருக்கு. விகடன் வருஷா வருஷம் பட்டியலிடும் டாப் 10 மனிதர்களில் நான் இடம்பிடிக்க வேண்டும். எப்போதும் என் பையில் ஸ்க்ரிப்ட், லேப்டாப்புக்கு மத்தியில் 2010 டாப் 10 வெளியான இதழும் இருக்கும். சூர்யா உட்பட எல்லோருக்கும் இது தெரியும். அதற்காகவே நான் உழைச்சுக்கிட்டு இருக்கேன். மிகச் சிறந்த வெற்றிகளின் மூலமே அது சாத்தியம். அதற்கான முயற்சிதான் என் 'ஏழாம் அறிவு’. இன்னொரு பேராசையும் எனக்கு உண்டு. சினிமாவில் இருந்து நான் ஓய்வு பெறும் முன், விகடனில் அதிக மார்க் வாங்கியது ஏ.ஆர்.முருகதாஸின் படம்தான்கிற பெயரைச் சம்பாதிக்கணும். அது ஒண்ணும் முடியாத காரியம் இல்லை. நிச்சயம் சாதிப்பேன்!

விகடனில் எனக்குப் பிடித்தது சினிமா பேட்டிகள். மிகவும் நாகரிகமாகவும் அடுத்தவரின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்காத கண்ணியத்துடனும் இருக்கும். அதனால்தான் வெளிநாட்டில் இருந்தாலும் விகடனைத் தேடிப் பிடித்து வாங்கிப் படிக்கும் உற்சாகம் இப்பவும் தொடருது!

விகடன் அரசியலை அணுகுவது மாதிரி இப்போ யாரும் அணுகுவது இல்லை. சமயங்களில் கறாராகச் சொல்வார்கள். 'சரிதான்’ என்று படிக்கும்போது மனசு சொல்லும். வட மாநிலங் களில் பத்திரிகைகள் மேல் இருக்கிற பயம், இங்கே யாருக்கும் கிடையாது. வட மாநிலத்தில் பத்திரிகைகளை நெருங்கவே, அவர்களது கேள்விகளை எதிர்கொள்ளவே பயப்படுவார்கள். இங்கே அப்படி இல்லை! 'இதை யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே’ என நான் நினைக்கிறதை விகடன் கேட்கும். அதனால்தான் அதற்கு மரியாதை. 'மன வருத்தம் அடைவாங்களே... மிரட்டுவாங்களே...’ - அப்படி எந்தப் பயமும் விகடனுக்கு இதுவரை கிடையாது.

விகடனில் சுஜாதா சார் எழுதியது எல்லாம் எனக்கு அத்துப்படி. அனுபவிச்சு வாசிச்சிருக்கேன். எல்லோருக்குமான ஓர் இலக்கியத்தை அவர் எழுதியதை அருமையாக அனுமதிச்சது விகடன். நிறையப் பேர் சுஜாதாவின் ஷொட்டு கிடைக்கணும்னு நல்லா எழுத ஆரம்பிச்சாங்க. அதில் தீவிரமான படைப்புகள்கூட வந்தன. மற்றொரு அம்சம் பொக்கிஷம். அந்தப் பகுதிக்கு இப்படி ஓர் அழகான பெயர் கண்டுபிடிச்சது எவ்வளவு பொருத்தம்? என்னுடைய காலத்துக்குப் பிறகும் என்னைப்பத்தி எழுதுவாங்க, படிக்கலாம்னு இருக்கிறது எவ்வளவு அழகா இருக்கு? ப்ளீஸ்... 1992-ல் வந்த என் சிறுகதையை

நானும் விகடனும்!

பொக்கிஷத்தில் போடுங்களேன்... ப்ளீஸ்!

திடீர்னு ஒரு இதழைப் படிச்சுப் பார்த்தா, மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் ப.திருப்பதிசாமி, சுசி கணேசன், தாமரை,  எஸ்.பி.ஹோசிமின், கரு.பழனியப்பன், பிருந்தா சாரதினு திரைக் கலைஞர்கள் பெயர்கள் எல்லாம் இருக்கு. எவ்வளவு ஆச்சர்யங்கள் தர முடியுது விகடனால்!

இவ்வளவு நாள் காப்பாத்திட்டு வர்ற நேர்மையை எதை முன்னிட்டும் விகடன் இழக்கக் கூடாது. எங்களைப் போன்ற வாசகர்கள் விகடனின் பின்னால் அணிவகுத்து இருக்கோம். யாருக்குப் பின்னும் செல்லாமல், எந்த வர்ணங்களையும் பூசிக்கொள்ளாமல் விகடன் முன் செல்லணும். அதுதான் தமிழர்களின் விருப்பம்!''