Published:Updated:

மார்க்ஸ் முக்கியம் மை சன்!

மார்க்ஸ் முக்கியம் மை சன்!
மார்க்ஸ் முக்கியம் மை சன்!

விக்னா சுரேஷ், ஓவியம்: ஹாசிப்கான்

`என்னது, எதிரில் வருவது ஸ்வாதியா?!' என்ற அதிர்ச்சியுடன் இன்றைய நாளை தொடங்கியிருக்கிறேன். என் ஜிம் தோழி. இன்னும் ஒரு பிறவி எடுத்து உடற்பயிற்சி செய்தால் இளைக்க வாய்ப்பு இருப்பதுபோல் இருப்பாள். சமீபமாக, ஆளையே பார்க்க முடிவதில்லை. இன்று கண்ணில் பட்டது அவள்தான். ஸ்வாதி... பாதியாகி இருந்தாள். நோய் எல்லாம் ஒன்றும் இல்லை. மகனுக்குப் பரீட்சையாம். நான்கு மணி நேரம்தான் தூக்கம். இன்னும் பல உடல் வருத்தல்கள், பிரார்த்தனைகள் மற்றும் தியாகங்கள்.

இவள்தான் என்று இல்லை. சில உறவினர்கள் பிள்ளைகளுக்குப் பரீட்சை வந்தால், தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுகிறார்கள். தப்பித்தவறி நேரில் பார்த்துவிட்டால், `போன் வொயர் பிஞ்சு, நாலு மாசம் ஆகுது' என்கிறார்கள். நண்பர் ஒருவர் தன் வீட்டில் டி.வி-யைத் திருப்பி, சுவரைப் பார்த்தபடி வைத்திருந்தார். `எப்படிப் பார்ப்பீங்க?' என்றால், `மகனுக்குப் பரீட்சை' என்றார்.

மார்க்ஸ் முக்கியம் மை சன்!

பயல், அப்படி ஒன்றும் டி.வி-யால் மட்டும் கெட்டுப்போவான் எனத் தோன்றவில்லை. `வேற ஏதாவது விளையாட விடுவீங்களா?' என்றால், `நோ... நோ. அவன் ரூமில் காற்றில்கூட எக்ஸாம் வாசம் வீசும்' என்கிறார். கடிவாளம் கட்டிய குதிரை ஒன்று, பந்தயத்துக்குத் தயார் ஆவதுபோல ஒரு பிரமை தோன்றுகிறது. பேசச் சொன்னால் கனைப்பானோ!

இது பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சைக்கு அல்ல; எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு பரீட்சைக்குத்தான் இந்த பில்டப். எந்தக் கல்யாணமோ, விசேஷமோ மார்ச்  மற்றும் ஏப்ரல் மாதங்களில் வந்துவிடக் கூடாது என்பதுதான் இன்றைய பெற்றோர்களின் மிகப் பெரிய கவலை. எந்நேரம் வேண்டுமானாலும் உயிரை விட்டுவிடக் காத்துக்கொண்டிருக்கும் பெருசுகள், தங்கள் குழந்தைகளுக்குப் பரீட்சை முடிந்தவுடன் `போகட்டுமே' என விரதங்கள் வேறு!

மார்ச் வந்துவிட்டால், அகில இந்திய பெண்கள் பத்திரிகை முதல் `வெஸ்ட் மாம்பலம் 33-வது கிராஸ் டைம்ஸ்’ வரை பரீட்சை நேர உணவுக் குறிப்பு வெளியிடுகின்றன. பரீட்சைக் கால சூப், பரீட்சைக் கால புலாவ், பரீட்சைக் கால ஐஸ்க்ரீம் என, ஹிஸ்ட்ரி பேப்பர்போல பக்கங்கள் நிரப்பப் பட்டிருக்கின்றன. இது எதுவும் அறிந்திருக்கா விட்டாலும், கணக்கு பரீட்சை அன்று தவறாமல் வெண்டைக்காய் சமைத்துப்போட்டு, பரீட்சை அன்றைக்காவது மகனின் மூளை வேகவேகமாகச் செயல்படும் என நம்பும் அம்மாக்களும் இருக்கத்தான்செய்கிறார்கள்.

பெரும்பாலான நாளிதழ்கள், ‘எக்ஸாம் டிப்ஸ்’ வெளியிடுகின்றன. பதற்றம் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வினாத்தாளை 30 டிகிரி கோணத்தில் பிடித்துக்கொண்டு, கண்களை மூடி 27 முறை மூச்சை இழுத்து இழுத்து விடவேண்டும் என்னும் யோசனைகளைப் படித்தால், அடுத்த கணமே நமக்குப் பதற்றம் வந்துவிடுகிறது.

மார்க்ஸ் முக்கியம் மை சன்!

அம்மாக்களின் வாட்ஸ்அப்பில் பள்ளி, கல்லூரிக் கால தோழிகள் பின்னுக்குப் போய், சக அம்மாக்கள் முன்னுக்கு வருகிறார்கள். மீண்டும் முதலில் இருந்து அ, ஆ முதல் அரித்மெடிக்  வரை கற்றுக்கொள்ளும் பாக்கியம் அம்மாக்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியது. `தேமா, புளிமா வேற என்னமா சாம்பார்ல போடணும்?' எனத் தூக்கத்தில்கூட பிதற்றுகிறார்கள். சர்வ வல்லமை பெற்ற இந்திய கிரிக்கெட் வாரியம்கூட, பல அப்பாக்களின் மன உறுதிக்கு முன்னர் தோற்றுப்போகிறது.

பரீட்சை என்றதும் மாணவர்கள் பதற்றமாவது, தற்போது பெற்றோருக்கு மாறியிருக்கிறது. தேர்வு நேரத்தில் யார் வீட்டுக்காவது உறவினராகப் போவேன் என நீங்கள் அடம்பிடித்தால், அதன் பின்னர், உங்கள் நம்பர் அவர்கள் மொபைலில் இருந்து ஒரேயடியாகத் தூக்கப்பட்டுவிடும். ரயில்வே டைம் டேபிளோடு, நீங்கள் விடுமுறைக்குப் போகும் வீட்டில் குழந்தைகளின் பரீட்சை டைம் டேபிளும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

இதன் முற்றிய பாதிப்பாக, `தேர்வுக் காய்ச்சல்' என்ற ஒன்று இருக்கிறது. சரியாக, முதல் நாள் அல்லது தேர்வு அன்று காலை பிள்ளைகளைத் தாக்குகிறது. கை-கால் எல்லாம் நடுங்கி, வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லா உருண்டை ஒன்று உருளும். நோய்க்கான தீர்வாக `பரீட்சைக்குப் போகாமல்விடுவதுதான் சரி' எனப் பிள்ளைகளும், `போனால் சரியாகிவிடும்' என அம்மாக்களும் பிடிவாதம் பிடிப்பார்கள் என்பது அதன் சிறப்பு. எல்லாப் பிள்ளைகளுமே ஏதோ ஒருவகையில் திறமைசாலிகள்தான். சிலர் திறமையைப் படிப்பதிலும், சிலர் மூணு சென்டிமீட்டர் ரப்பருக்குப் பின்னால் முப்பது ஃபார்முலா எழுதி எடுத்துப்போவதிலும் காட்டுகிறார்கள்.

முட்டிமோதிக்கொண்டு வருடம் முழுவதும் படிக்கும் பெண் பிள்ளைகளும், பரீட்சைக்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் புத்தகத்தைக் கண்டுபிடிக்கும் பையன்களும் எப்படிக் கிட்டத்தட்ட ஒரே மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்பது எல்லாம் உலக அளவில் ஆராய்ச்சி செய்யப்படவேண்டிய விஷயம். காதலுக்கும் வடாம் காயவைப்பதற்கும் உதவிக்கொண்டி ருக்கும் மொட்டைமாடிகள், பரீட்சைக்கும் உதவும் என பையன்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தேர்வு எழுதுவதில் உள்ள மிகப் பெரிய சந்தோஷம், கடைசி பரீட்சை முடிந்ததும் கிடைக்கப்போகும் விடுமுறைதான். ஆனால், விடுமுறையில் என்னென்ன செய்ய வேண்டும், எங்கெங்கே ஹேண்ட்ரைட்டிங், ஹேண்டி கிராஃப்ட்ஸ், செல்ஃப் டெவலப்மென்ட் கிளாஸ் எடுக்கிறார்கள் எனத் தேடிப்பிடித்து பிள்ளைகளை அடைப்பதில் சிலருக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

எந்தப் புத்திசாலியோ தற்போது சி.பி.எஸ்.சி முறையில் முழுப்பரீட்சை முடிந்து பத்து நாட்கள் லீவும், அடுத்த வகுப்பை ஆரம்பித்த ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் விடுமுறை வருவது போலவும் மாற்றியிருக்கிறார். பரீட்சை முடிந்ததும் நீண்ட விடுமுறை என்பது, மாணவப் பருவத்து `குட்டி சொர்க்கம்' என அவர்கள் தலையில் குட்டி சொல்ல வேண்டும்.

`அம்மா, இன்றைக்கு கஷ்டமான பரீட்சை நிறைய வேண்டிக்கோ!’ எனச் சொல்லிவிட்டுப் போகிறாள் மகள். சுலபமான பரீட்சை என்றால், `கொஞ்சம் வேண்டிக்கொண்டால் போதும்' என்பாள். மிச்சத்தை அவளே பார்த்துக் கொள்வாள். திருப்பதி பெருமாளுக்கு, கணக்குப் பரீட்சை என்றால் ஒரு ரூபாயும்; இந்திப் பரீட்சை என்றால் ஐந்து ரூபாயும் முடிந்துவைக்கிறேன். லஞ்சத்தில்தான் எத்தனை வகை?
ஸ்வாதியை, மறுபடியும் ஜிம்மில் பார்க்க முடிந்தால் கேட்க வேண்டும், ‘பையன், மூன்றாம் வகுப்பில் பாஸாகிவிட்டானா?’ என்று!

அடுத்த கட்டுரைக்கு