மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 21

குடி குடியைக் கெடுக்கும் - 21
பிரீமியம் ஸ்டோரி
News
குடி குடியைக் கெடுக்கும் - 21

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படங்கள்: தி.குமரகுருபரன், வீ.நாகமணி

ரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டிய நிலையில் பெற்றோர் எதிர் கொள்ளும் பிரதானமான பிரச்னை, குடி. ‘மாப்பிள்ளை, குடிக்காதவரா இருக்கணும்’ என்பதுதான் பெற்றோரின் ஒரே எதிர்பார்ப்பு. ஆனால், அது பேராசை என்பதை அவர்கள் சில நாட்களிலேயே புரிந்துகொள்கின்றனர். குடிக்காத மாப்பிள்ளைக்கு, திருமணத் தரகர் எங்கே போவார்... அல்லது அந்த மாப்பிள்ளை குடிக்காதவர் என்பதற்கு அவர் எப்படி உத்தரவாதம் தருவார்? தெருவில் செல்லும் பத்து இளைஞர்களில் ஆறு பேர் குடிகாரர்களாகவே இருக்கிறார்கள். சராசரியைவிட அதிக எண்ணிக்கையில் இருக்கும் அந்த ஆறு குடிகாரர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மீதம் இருக்கும் நான்கு பேரைத் தேடி ஓடுகிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள். ஆனால், அது அவ்வளவு எளிது அல்ல என்பதே யதார்த்தம்.

தன் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்க ஒரு வருடமாக மெனக்கெடும் கரூரைச் சேர்ந்த அருணாச்சலம், தன் அனுபவத்தைச் சொல்கிறார்... ‘‘எனக்கு ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க. மூத்தப் பிள்ளைக்குத்தான் இப்ப மாப்பிள்ளை பார்க்கிறேன். எப்படியாச்சும் குடிக்காத பையனா புடிச்சிரணும்னு ஒரு வருஷமா அலையுறேன். ம்ஹூம்... ஒண்ணும் வேலைக்கு ஆகலை. முதல்ல, அரவக்குறிச்சியில ஒரு பையனைப் பார்த்தோம். முன்னாடியே தெரிஞ்சவங்க மூலமா `பையன் எப்படி?'னு விசாரிச்சுட்டுத்தான் போனேன். பையனைப் பிடிச்சிருந்துச்சு. மெட்ராஸ்ல ஒரு கம்பெனியில வேலை பார்க்கிறான். சம்பளமும் ஓ.கே. இருந்தாலும், எனக்கு ஒரு சந்தேகம். இந்தக் காலத்துப் பசங்க ஊர்ல ஒரு மாதிரியாவும், வெளியே ஒரு மாதிரியாவும் இருப்பாங்க. எதுக்கும் ஒருதடவை மெட்ராஸுக்குப் போய் விசாரிப்போம்னு போனேன்.

பையனோட ஆபீஸ் வாசல்ல இருக்கிற டீக்கடையில அரை நாள் காத்திருந்தேன். எப்படியும் டீக்கடைக்கு வருவான்ல? அதே மாதிரி வந்தான். நான் போனது சனிக்கிழமை. நாலஞ்சு பசங்க வந்து நின்னு பேச ஆரம்பிச்சா... பேச்சு முழுக்க குடியைப் பத்திதான் போகுது. எனக்கு அப்படியே ஷாக் ஆகிருச்சு. உடனே கிளம்பி வந்துட்டேன். அதுக்குப் பிறகு, நாலஞ்சு மாப்பிள்ளைங்களைப் பார்த்துட்டேன். எல்லாரும் `நல்ல பையன்'னு சொன்னாலும், எனக்கு மட்டும் சந்தேகம் தீராம விசாரிக்க ஆரம்பிச்சு, ஏதோ ஒருகட்டத்துல உண்மை தெரியவந்து நிறுத்தியிருக்கேன். நான்தான் ரொம்ப ஓவரா பண்றேன்னு என் பொண்டாட்டியே என்னைத் திட்டுறா. ‘ஊர் உலகத்துல வேற யாரும் பொம்பளைப் பிள்ளைங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெக்கலையா? இவரு மட்டும்தான் உலகத்துல இல்லாத பொண்ணைப் பெத்துட்டாரு’னு திட்டுறா’’ என்கிறார்.

குடி குடியைக் கெடுக்கும் - 21

இந்தக் கருத்தை, அவருடைய மனைவி மட்டும் சொல்லவில்லை; தன் பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிக்கும் பலரும், சில மாதங்களிலேயே இந்த மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். ஊரே தீப்பற்றி எரியும்போது தாங்கள் மட்டும் பாதுகாப்பான படகில் ஏறிவிட முடியாது என்ற யதார்த்தம் அவர்களுக்குப் புரிகிறது. கடைசியில், ‘வேற வழி இல்லை. குடிக்காதவனா தேடினா, நம்ம பொண்ணுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது. குடிச்சிட்டு எங்கேயாவது விழுந்து கிடக்காம, ஏதோ வெளியே தெரியாம, அப்பப்போ குடிக்கிறவனா இருந்தா பரவாயில்லை’ என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் அந்த மருமகன், திருமணம் ஆகும்போது எந்த அளவுக் குடித்துக்கொண்டிருந்தாரோ, அதே அளவுக்குத்தான் தொடர்ந்து குடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குடியின் இயல்பே, அது குடிப்பவரை தன் குணத்துக்கு ஏற்ப பழக்குவதுதான். அதனால் அந்த மருமகன் திருமணத்துக்குப் பிறகு கட்டிங் அடிப்பாரா, மனைவியின் தாலியை அடகு வைத்துக் குடிப்பாரா என்பதை எல்லாம் முன்கூட்டியே முடிவுசெய்வது கடினம்.

பொதுவாக, சாதி, ஜாதகம், பொருளாதாரச் சமநிலை ஆகிய மூன்றும் தமிழகக் கல்யாண சந்தையில் முக்கியமான கருதுகோள்கள். கூடுதலாக, குடியும் சேர்ந்துகொண்டிருக்கிறதே அல்லாமல் இவற்றுக்கு மாற்றாக அல்ல. அதாவது, குடிக்காத ஒரு மாப்பிள்ளை வேறொரு சாதியைச் சேர்ந்தவர் என்றால், அதைப் பெற்றோர் ஏற்றுக்கொள்வது இல்லை. குடிக்காத மாப்பிள்ளை, பொருளாதாரத்தில் தங்களைவிட கீழ் நிலையில் இருந்தால் ஏற்பது இல்லை. குடிக்காத மாப்பிள்ளையின் ஜாதகத்தில் கோளாறு இருந்தால் தயங்கத்தான் செய்கின்றனர். எனவே, மாப்பிள்ளை குடிக்காதவராக இருக்க வேண்டும் என்பது, தமிழகப் பெற்றோர்கள் திருமணத்துக்கு முன்வைக்கும் கூடுதல் நிபந்தனையாகச் சேர்ந்திருக்கிறது. குடிக்காத மாப்பிள்ளை வேண்டும் எனத் தேடும் எந்தப் பெற்றோராவது, ‘மாப்பிள்ளை, குடிக்காதவரா இருக்கணும்; எந்த சாதியா இருந்தாலும் பரவாயில்லை’ எனச் சொல்கிறார்களா? ஏன் சொல்வது இல்லை என்றால், அவர்களுக்கு குடி போதையைவிட சாதி போதை முக்கியம். இதில் உள்ள இகழத் தகுந்த மனநிலையை நாம் கவனத்துடன் குறித்துக்கொள்ள வேண்டும்.

இந்த நடைமுறை யதார்த்தத்தின் விளைவு என்னவெனில், குடிக்காத பையன்களுக்கான சந்தை மதிப்பை அதிகரித்துவிடுகிறது. பொருளாதாரச் சந்தையில் ஒரு பொருளின் உற்பத்தி குறைந்தால் அல்லது விளைச்சல் வீழ்ச்சி அடைந்தால் அந்தப் பொருளுக்கான சந்தை மதிப்புக் கூடும். குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், குடிக்காத மாப்பிள்ளைக்கு கிராக்கியாகிவிட்டது. அவர்கள் வரதட்சணைப் பணம், நகை, சீர் வரிசைப் பொருட்களை கூடுதல் அழுத்தத்துடன் கேட்கின்றனர். ‘என் பையன் மத்தப் பையன் மாதிரி குடிச்சிட்டு தெருவுல விழுந்து கெடக்கிறவன் கிடையாது. உங்க பொண்ணை ராசாத்தி மாதிரி வெச்சு வாழ்வான்’ என, தகுதியைத் தனித்துச் சொல்லி கொசுறு கேட்கின்றனர் மணமகனின் பெற்றோர். எனினும் குடியால் கெடும் குடிகள் ஏராளம். சில சம்பவங்களைப் பார்க்கலாம்.

** தேனி மாவட்டம் போடி புதூரைச் சேர்ந்த செல்லபாண்டி என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுதா என்கிற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. வீரபாண்டி கண்ணீஸ்வர முடையார் கோயிலில் திருமணம். மணமகன் மணமேடையில் அமர்ந்திருக்க, மணமகள் வந்து அமர்ந்தார். தள்ளாடிக்கொண்டே தாலியை எடுத்துக் கட்டினார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுதா, ‘என்னால இவர்கூட வாழ முடியாது. இத்தோட விட்டுருங்க. நான் போயிடுறேன்’ என அழ, சூழல் பரபரப்பானது. எல்லோரும் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த, குடிப்போதையில் இருந்த மணமகன் கோபத்தில் மாலையைக் கழட்டி வீச... வாக்குவாதம் ஏற்பட்டு, போலீஸில் புகார் அளித்து... வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

** சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும், நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் திருமணம். சிதம்பரம் அருகே ஒரு மண்டபத்தில் கல்யாணம். இதே போன்று ராஜாவின் தம்பி மோகனுக்கும், ரஞ்சனியின் தங்கை மோனிகாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்யாணமும் இதே மண்டபத்தில்தான். ராஜா-ரஞ்சனி திருமணத்துக்காக உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து குவிந்த நிலையில், அண்ணனின் திருமணத்தைக் கொண்டாடிய தம்பி மோகன், குடிபோதையில் மண்டபத்துக்கு வந்தார். பெண் வீட்டாருக்கு அதிர்ச்சி. ‘தம்பி மட்டும்தான் குடிப்பாரா அல்லது இன்று திருமணம் நடக்கவிருக்கும் அண்ணனும் குடிப்பாரா?’ எனத் தெரியாமல் பெண் வீட்டார் திகிலடைந்தனர். இது தொடர்பாக உறவினர்கள் கேட்க, அது இரு தரப்பு சண்டையானது. கல்யாண மண்டபப் பரபரப்பு போலீஸை எட்ட... அவர்கள் வந்து சேர்ந்தனர். இரண்டு கல்யாணம் தொடர்பான சிக்கல் என்பதால், முதலில் இரு தரப்பிடமும் சமரசம் செய்துபார்த்தார்கள். ஆனால், பெண் வீட்டார் உறுதியாக நின்றார்கள். ‘திருமணம் வேண்டாம். நிறுத்துகிறோம்’ எனச் சொல்ல... கல்யாணக் கோலத்தில் தயாராக இருந்த மணமகன் ராஜா, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு உறவினர்கள் புடைசூழச் சென்றார். தனக்கும் ரஞ்சனிக்கும் திருமணம் செய்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அங்கும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. பெண் வீட்டார் கறாராக மறுத்துவிடவே, இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைக்கப் பட்டனர்.

**  தூத்துக்குடி மாவட்டம் நரையான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி. இவருக்கும் தூத்துக்குடி திரவியபுரத்தைச் சேர்ந்த அறிவழகனுக்கும் திருமணம். பத்து பவுன் நகையும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பேசி முடிக்கப்பட்டது. கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க... மணமகன் வீட்டில் இருந்து இரண்டு வேன்களில் மணமகள் வீடான நரையான் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தனர். திருமண நாளில் மாப்பிள்ளை அறிவழகனை மணமேடைக்கு அழைத்து வர... அவர் தள்ளாடியபடியே வந்தார். பெண் வீட்டார் அதிர்ச்சி அடைய... அந்தக் காட்சியைக் கண்டு, ‘இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்’ என மணப்பெண் கதறி அழ... திருமணம் நின்றுபோனது. கொடுத்த ரொக்கப் பணத்தை போலீஸ் தலையிட்டு மீட்டுக்கொடுத்தது. கல்யாண வீடு, சோக வீடானது. ஆக்கிய சோறு அப்படியே கொட்டப்பட்டது.

** திருக்கழுக்குன்றம் அருகே ஈச்சங்கரனை கிராமத்தைச் சேர்ந்த சபாபதி என்பவருக்கும், கல்யாப்பக்கம் பகுதியைச் சேர்ந்த லட்சுமிக்கும் திருமணம். முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும் பெண்ணும் சிரித்துக்கொண்டே போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, இரவு உணவை சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். அடுத்த நாள் காலையில் மண்டபத்தில் கல்யாணம். தாலி கட்டுவதற்கு முன்பான சடங்குகள் மணமேடையில் நடந்து கொண்டிருந்தன. மணமகள் காத்திருந்தார். ஆனால், சபாபதியைக் காணவில்லை. அழைத்து வருவதற்காகச் சென்ற அவரது பெற்றோரையும் காணவில்லை. ‘நேரம் ஆகுது... நேரம் ஆகுது’ என அய்யர் சொல்லிக்கொண்டே இருக்க... ஒருகட்டத்தில் பொறுமை இழந்த மணப்பெண் உறவினர்களுடன் மாப்பிள்ளை அறைக்குச் சென்றார். அங்கு மாப்பிள்ளை, இரவு அடித்த சரக்கின் போதை தெளியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார். அவர் எங்கிருந்து தாலி கட்டுவது. தாலியைக் கட்டிக்கொண்டு இவர்தான் விழுந்து கிடப்பார். இரு வீட்டார் இடையே சண்டையாகி, சாலை வரைக்கும் சண்டை நடந்து... திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் கொடுத்து திருமணம் நின்றுபோனது.

குடி குடியைக் கெடுக்கும் - 21

(மேற்கண்ட நான்கு சம்பவங்களிலும் மணப்பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

- இவை எல்லாம் தினசரி செய்தித்தாள்களில் அன்றாடம் நாம் படிக்கும் செய்திகளில் சில. இப்போது எல்லாம் இத்தகைய செய்திகள் நமக்கு எந்தவித அதிர்ச்சியையும் கொடுப்பது இல்லை. அது நமக்குப் பழகிவிட்டது. எப்படி சமூகத்தின் இதர சீரழிவுகள் இயல்பு என ஏற்றுக்கொண்டிருக் கிறோமோ, அப்படி இதையும் ஏற்க தொடங்கி விட்டோம். ஆனால், எல்லா மணமகனும் குடித்துவிட்டு மணமேடைக்கு வருவது இல்லை. அன்று ஒருநாள் மட்டும் குடிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, அடுத்த நாளில் இருந்து ஆட்டத்தைத் தொடங்குவார்கள். ஒரு திருமணத்தில், பெண்ணுக்கு எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருக்கும். கணவர் குறித்த கனவுகள் இருக்கும். அவை எல்லாம் நொறுங்கிப்போய் ஒவ்வொரு நாளும் நரகத்தை கண்முன் காட்டும் நபராக கணவன் மாறினால், அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?

குடிகாரக் கணவனிடம் சிக்கி சீரழியும் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்றால், ஆரம்ப சில மாதங்கள் அல்லது சில வருடங்களுக்கு, தன் கணவனின் குடியை வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைக்கப் பார்க்கிறார்கள். குறிப்பாக, தன் பெற்றோருக்குத் தெரியாமல் மறைத்து, தான் ஒரு மகிழ்ச்சியான வாழ்வையே வாழ்வதாகக் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், இதெல்லாம் எத்தனை நாளைக்கு? உண்மை ஒருநாள் தெரியவரும்போது அவர்கள் எளிதில் திரும்பி வர முடியாத தூரத்துக்குச் சென்றுவிடுகிறார்கள். அதற்குள்ளேயே உழன்று, அதையே அனுபவித்து சிதைகிறார்கள். ‘பிள்ளை முகத்துக்காகப் பார்க்கிறேன். இல்லைன்னா நான் எல்லாம் என்னைக்கோ...’ என்ற வார்த்தையை நினைக்காத... உச்சரிக்காத குடிகாரக் கணவர்களின் மனைவிகள் ஒருவரும் இல்லை. குழந்தையின் பிஞ்சு முகத்தில் வெளிப்படும் பால்சிரிப்பில், பேரொளியில் தங்கள் உயிரின் வாதைக்கு மருந்திட்டுக் கொள்கிறார்கள்.

- போதை தெளிவோம்...