Published:Updated:

தமிழக மேலவைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி, பிப்.21,2011

தமிழக மேலவைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ##~~##

தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமைக்க ஜனாதிபதியும், நாடளுமன்றமும் ஒப்புதல் வழங்கி உள்ளது. 

இதையடுத்து, மேலவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இந்தத் தேர்தலை நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
பாரதிய ஜனதாவை சேர்ந்த வக்கீல் வானதி சீனிவாசன், திண்டிவனம் ராமமூர்த்தி உள்பட 11 பேர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடை செய்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் வானதி சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், மேலவை உருவாக்குதல் சட்டம், மக்கள் பிரதி நிதித்துவ சட்டம் ஆகியவற்றின்படி தமிழக மேலவை தொகுதி வரையறை செய்யப்படவில்லை. மேலவை தொகுதி சீரமைப்பு செய்யப்பட்ட பின் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று, அதை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெறவேண்டும்.

ஆனால், தமிழக மேலவை தேர்தல் ஏற்பாடுகள் ஜனாதிபதி ஒப்புதல் பெற்றதும் தொடங்கி விட்டது. நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படவில்லை. ஆசிரியர்கள், பட்டதாரிகள் சான்றிதழ்கள் நேரடியாக ஆய்வு செய்யப்படவில்லை. அவசரமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கெனவே உள்ள எம்.எல்.ஏ.க்களை கொண்டு மேலவை தேர்தலை நடத்துவது சரியல்ல.

எனவே தமிழக மேலவை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பிலும், தேர்தல் கமிஷன் சார்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற சு நீதிபதிகள் கோகுலே, பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தமிழகத்தில் மேலவைத் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

மேலும், அடுத்தக்கட்ட விசாரணை தேதியையும் பின்னர் அறிவிப்பதாக கூறி, இவ்வழக்கைத் தள்ளிவைத்து.

இந்த உத்தரவு குறித்து வழக்கறிஞர் வானதி சீனிவாசன் கூறுகையில், "தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தபிறகு மேலவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது பாரதிய ஜனதாவின் கோரிக்கை.

ஆனால் அவசரமாக மேலவை தேர்தலை, தேர்தல் ஆணையம் மூலம் நடத்த முயன்றனர். தற்போது மேலவை தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது, பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி," என்றார்.