என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

##~##

சுடுகாடு விட்டு சாதிசனத்தோட ஊருக்குள்ள போயிக்கிட்டிருந்த கருத்தமாய - காடு 'போ போ’ங்குது; வீடு 'வா வா’ங்குது. என்ன செய்யக் காத்திருக்கானோ தலப்பெரட்டுப் புடிச்ச தலப்பிள்ள? அயிரை மீனுன்னு நெனச்சேன்; விலாங்குச் சேட்டை பண்ணுதே.

 அவன் கையில மண்ணு ஒட்டக் கூடாதுன்னுதான படிக்கவச்சேன்? என் மூஞ்சியிலேயே சேத்த அள்ளிப் பூசுதே களவாணி நாயி.

பெத்ததுகளுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு பிரச்சன முப்பத்து முக்கோடி வருசமா தொப்புள் கொடி மாதிரி தொங்கிக்கிட்டே இருக்கு.

சொத்தை விட்டுறக் கூடாதுன்னு தொடுக்கி நிக்குதுக பிள்ளைக;

சொந்தத்தை விட்டுறக் கூடாதுன்னு இடுக்கி நிக்கிறாக பெத்தவக.

சொத்து முக்கியம்னு நெனைக்கிறவன், கடைசியில கழுத்தைப் புடிக்கிறான்; சொந்தம் முக்கியம்னு நெனைக்கிறவன், கடைசியில காலப் புடிக்கிறான்.

இந்த ரெண்டையும் மாறி மாறிப் புடிக்கிற தனாலதான் முன்ன எட்டுவைக்க முடியாம நின்ன எடத்துலயே நிக்குது மனுசக் கூட்டம்.

இதுல பெத்தவளுக்கோ பெத்ததுகளுக்கோ சின்னதா ஒரு துறவு மனப்பான்மை வந்துருச்சுன்னாத் தொந்தரவு தீந்துரும்.

மூன்றாம் உலகப் போர்

ஆனா வருதா கழுதை? வர மாட்டேங் குது.

இது புத்திக்கு எட்டுது; பொழப்புக்கு எட்டுதா? எட்டல.

எல்லாத்தையும் 'கடந்துபோ’ன்னு மனசு கத்துது. 'கடக்க முடியலையே’ன்னு உடம்பு சொல்லுது. மூணு பசி இருக்கு ஒரு உசுருக்கு. இதயம் - வயிறு - வயித்துக்குக் கீழ உள்ள ஒரு உறுப்பு. இந்த மூணையும் திருப்திப்படுத்தறதுக்கே சென்மம் செலவா கிப் போயிருது.

முத்துமணி - லச்சுமி கல்யாணமாகி அட்டணம்பட்டிக்கு வந்த அன்னைக்கே விழுந்துருச்சு விரிசலுக்கான விதை.

படிக்காத மாமன் - மாமியா ளுக்குப் பத்தாவது பெயிலாப் போன படிச்ச மருமக அமையிறதுன்னா லேசா? அதுலயும் வசதியான வீட்டுப் பிள்ள; கழுத்தடங்காம நகை போட்டு வந்த கழுதை.

மூணு தலைமுறையாப் பொழச்ச பொழப்புக்கு மொதல்மொதலா வீட்டு வாசல்ல வந்து நிக்குது காரு. மொளகாப் பழ நிறத்த வெளியெல்லாம் வீசியடிக்கிற காரு. 'மருமக வீட்டுக் காரு - மகனுக்குப் பாத்தியப்பட்ட காரு. கூடமாட ஒரு ஓரமா நம்மளுக்கும் ஒரு பங்கு இருக்கிற காரு’. கருத்தமாயும் சிட்டம்மாவும் குளுந்துபோனாக குளுந்து.

ஓடியாடி வேலை செய்யிறா; சீலையிலயே தடுக்கி விழுந்துருவா போலயிருக்கு சிட்டம்மா. பழுத்தும் பழுக்காத ஒரு செங்காய வாழைப்பழம்ங்கற பேர்ல எடுத்துக் கையில குடுத்துட்டு, பால் சுடவைக்கப் பாத்திரம் தேடி அலையிறா.

'இதான் உங்க வீடா?’ங்கற மாதிரி புருசனைப் பாத்துப் பொய்யா ஒரு சிரிப்புச் சிரிச்சிட்டு, தாமரைப் பூவைவிட்டுச் சேத்துல விழுந்த லட்சுமி மாதிரி லச்சையா உக்காந்திருக்கா லச்சுமி.

மூன்றாம் உலகப் போர்

அதிரசம், முறுக்கு வச்ச கிண்ணத்த அட்டத்துல வச்ச சிட்டம்மா ''யாத்தே! என் மருமக மூஞ்சி 'குப்பு’ன்னு வேர்த் துருக்கே!''ன்னு சொல்லி மூஞ்சி துடைக்க முந்தானைய ஒதறுனா. அந்தக் 'குப்பு’ங்கற வார்த்தையச் சொல்ல உதடு குவிஞ்சதுல மருமக மூஞ்சியில 'புளிச்’சுன்னு தெறிச்சு விழுந்துபோச்சு வெத்தல எச்சி. அதுல ஒரு பாக்குத் தூள் வேற ஓடி விழுந்துருச்சு லச்சுமி கண்ணுக்குள்ள.

'அய்யய்யோ!’ - துடிச்சுட்டா மருமக. முந்தானையில அழுத்தி மூஞ்சி துடைச்சுவிட்டா மாமியா. சமையலுக்கு உரிச்ச வெங்காயம் குழம்புல கெடக்குதோ இல்லையோ - அவ கொசுவத்துல கெடந்திருச்சு. கண்ணுல உறுத்தல்; மூக்குல எரிச்சல்; ஓங்கி ஒரு தள்ளுத் தள்ளுனா மாமியாள. ஓடி ஒரு சாக்கு மூட்டைல  விழுந்துபோனா சிட்டம்மா.

கண்ணெரிச்சல் தீரல லச்சுமிக்கு.

கழுவுறா கழுவுறா அண்டாவுல அடித் தண்ணி தீருமட்டும் கழுவுறா.

''இந்தா தாயி! இதப் போட்டுக் கழுவு!''

கீழ விழுந்த கெழவி கைய ஊனிக் கால ஊனி எந்திரிச்சு எடுத்தாந்து குடுத்த சோப்ப வாங்கிப் பாத்தான் முத்துமணி.

அது துணிக்குப் போடற சோப்பு.

''ஏ கெழவி! எம் பொண்டாட்டியக் கொல்லப் பாக்குறியா? ஒழுங்கா ஓடிப் போயிரு.''

ஆத்தாள முத்துமணி வேற ஒரு தள்ளுத் தள்ளவும் ஓடி விழுந்தவ ஒக்காந்துபோனா.

சுடவச்ச பால ரெண்டு ஆத்து ஆத்தி நுரையோட கொண்டாந்து குடுக்க வந்தா - புருசன் பொண்டாட்டி ரெண்டு பேருமே இல்ல வீட்ல; கடந்து போயிருச்சு காருன்னு காட்ரோட்ல சொன்னாக.

ருமக முழுகாம இருக்கா.

வம்சம் தழைக்கப்போகுது; வாரிசு வரப்போகுது; பேரன் பெறந்தா என்ன பேரு வைக்கிறது? பேத்தி பெறந்தாப் பேரு என்ன? மண்டைக்குள்ள புழுவு குடையுது கருத்தமாயிக்கு. அதான் சரி - கடைசியா ஒரு முடிவுக்கு வந்துட்டாரு கருத்தமாயி.

பேரன் பிறந்தா 'சீனித்துரை’ன்னு வைக்கிறது முப்பாட்டன் ஞாபகமா. பேத்தி பிறந்தா - அவுக பாட்டி பேரு துலங்கட்டும் - 'சிட்டு’ன்னு வச்சிருவோம் செல்லமா.

தலப் பிள்ளை ஆம்பளப் பிள்ளையாப் பெறக்கவும் தலகால் புரியல கருத்தமாயிக்கு.

'கொழகொழ’ன்னு குழஞ்சு பெறந்த குழந்தையக் காச்சுப்போன ரெண்டு கையிலயும் தூக்கி நெத்தியில மூஞ்சிவச்சு மோந்து மோந்து பாத்து, ''கண்ணும் மூக்கும் எங்கப்பன் சாடை''ன்னு பொங்கிப் பூரிச்சு எறக்கிவிட்டா - கையில சிக்குன தாத்தன் மீசையப் புடிச்சுக்கிட்டு விட மாட்டேங்குது பயபுள்ள.

''ஏலே! உங்கப்பன் புடிச்ச புடியில இருந்தே நான் இன்னும் மீண்டபாடில்ல; நீ வேற புடிச்சு நிக்கிறியா?'' அவராச் சொல்லிச் சொல்லிச் சிரிச்சு விழுந்துபோனாரு கருத்தமாயி.

லேசா விசயத்துக்கு வந்தாரு.

''ஏப்பா! எம் பேரனுக்குப் பேரு வைக்கணுமே.''

''அதெல்லாம் வச்சாச்சு.''

''வச்சாச்சா..?'' - சிரிப்பு செத்துப்போச்சு கருத்தமாயி மூஞ்சியில.

''பிள்ளை பெறத் தெரிஞ்ச எனக்குப் பேரு வைக்கத் தெரியாதா? வச்சிட்டேன்.''

''என்ன பேரு?''

''அஜய் தேவ்.''

மூஞ்சி இருளடைஞ்சுபோச்சு தாத்தனுக்கு. கான மொளகாச் செடியத் தின்ன கன்னுக்குட்டி மாதிரி தலைசுத்திப்போனா சிட்டம்மா.

'ஜா’ வராது நம்ம சனங்களுக்கு.

'ராஜா’ன்னு சொல்ல மாட்டாக; 'ராசா’ன்னுதான் சொல்லுவாக.

ரோஜான்னு சொல்லச் சொல்லுங்க; ரோசாதான் வாயில வரும்.

'எம்ச்சியார்’, 'சிவாசி’ன்னு சொல்லித்தான் பழக்கம் நம்ம நடிகர்கள.

பேரு வச்சிருக்கான் பாரு பேரு - வாயிலயே நொழையாத பேரு மூளையிலயா ஏறப்போகுது?

பேருன்னா வெறும் பேரா? அதுல ஊரும் மண்ணும் ஒட்டியிருக்கணுமா இல்லையா? பேருல நம்ம ரத்தமும் வேர்வையும் கலந்து ஒரு வாடை அடிக்கணுமா இல்லையா? வம்ச வரலாறு இருக்குடா ஒரு பேர்ல. பேருங்கறது வெறுஞ் சத்தமா? சரித்திரமடா. ஒட்டாத பேரு வச்சா ஒட்டுமா உதட்டுல?

வெள்ளைக்காரன் எவனாச்சும் விருமாண் டின்னு பேரு வைக்கிறானா? டி.வி-யில சொல்றாகல்ல அமெரிக்க சேனாதிபதி ஒபாமான்னு - அந்தாளு பொண்டாட்டி பேரு ஒச்சம்மான்னு வச்சா நல்லாஇருக்கும்ல... வச்சிருக்காளா? சரி, அதைவிடு. வட நாட்ட எடுத்துக்க. பெரியக்கான்னு பேரு வைக்குமா பிரியங்கா? தண்டுச்சாமின்னு வப்பானா டெண்டுல்கரு? அவுக ஊரு மண்ணு பரம்பரையை ஒட்டித்தான வச்சிருக்காக. நாம மட்டும் மாறிப் போனா மூதாக்கமாரு விட்ட மூச்சு வீணாப் போகும்டா.''

சொல்லித்தான் பாத்தாரு கருத்தமாயி. ''சோலியப் பாரு''ன்னுட்டான் முத்துமணி.

அதுக்குப் பெறகு எதுலயும் அவுக தலையிடறதில்ல.

பொட்டப்புள்ள ஒண்ணு பொறந்துச்சு. 'ரூப்கலா’ன்னு பேரு வச்சுக்கிட்டாக.

பேரன் பேத்தி வளந்து வெவரம் தெரிஞ்சு வீட்டுக்கு வாரபோதெல்லாம் ''வாடா தங்கம் அசய்தேவு''ன்னு கூப்புடுவாரு கருத்தமாயி.

பேத்திய ''வாடி என் சக்களத்தி ரூப்பு''ன்னு கூப்புடுவா சிட்டம்மா.

யாரையோ கூப்புடுறாகன்னு நெனச்சுப் 'பெறாக்குப்’ பாத்து நிக்கும் பிள்ளைக.

''என் பிள்ளைக பேரை மாத்திக் கெழவனும் கெழவியும் அசிங்கப்படுத்துறாக''ன்னு வெளிய அழுதுட்டு, வீட்டுக்குள்ள போயிக் கதவடைச்சுச் சிரிப்பா லச்சுமி.

மூன்றாம் உலகப் போர்

தொழுவுல சாணி அள்ளிக்கிட்டிருந்தா சிட்டம்மா. கையில ரொட்டிவச்சுத் தின்னுக்கிட்டே கோழிக் குஞ்சுகள விரட்டி விட்டுக்கிட்டிருந்தா ரூப்கலா.

கோழிக்குஞ்சு மேல கண்ணு பொண்ணுக்கு; அவ கையில வச்ச ரொட்டி மேல கண்ணு பூனைக்கு.

குழந்தை கவனமெல்லாம் கோழிக்குஞ்சு மேல இருந்த சமயம் பாத்து 'மளார்’னு தவ்வி அவ கையில இருந்த ரொட்டியைப் புடுங்கிருச்சு பூனை.

பயந்து நடுங்கிப்போன குழந்தை 'வீல்’னு கத்தி விழுந்துருது.

''யாத்தே என் பேத்தி!''

விளக்கமாத்தை வீசியெறிஞ்சிட்டுக் கீழ விழுந்த பிள்ளைய ஓடி வந்து தூக்கிட்டா சிட்டம்மா உச்சுனாப்புல. என்னமோ ஏதோன்னு ஆத்தாகாரி உள்ளயிருந்து ஓடி வந்து பாத்தா - பிள்ள உடம்பெல்லாம் சாணி. பேத்தியத் தூக்க ஆத்திரத்துல ஓடி வந்தவ கையக் கழுவிட்டா வர முடியும்?

மாமியாளக் கட்டி ஏறிட்டா மருமககாரி.

''சீ படிக்காத சிறுக்கி! ஒரு நாகரிகம் வேணாம்? என் மக என்ன உன் வீட்டுக் குட்டிச் சுவரா? சாணி தட்டறதுக்கு...''

சிட்டம்மாவுக்கா பேசத் தெரியாது? ஆனா பேசல.

பிள்ளைகளவிடப் பேரன் பேத்திகளத் தொட்டுப் பாக்கத்தான் ஆசைப்படும் கெழடுக. பிள்ளைக ரூவத்துல தங்களப் பாக்கிற மனுசங்க, பேரன் பேத்தி ரூவத்துல தாய் தகப்பனப் பாக்குறாக.

''ஏலே அய்யா... வாடா வாடா வாடா'' - கருத்தமாயி கை நீட்டிக் கூப்புடுவாரு பேரன; வர மாட்டான். உடம்ப ஒரு முறுக்கு முறுக்கி ஓடிப்போவான்.

''ஆத்தா என் கண்ணு... வாம்மா வாம்மா வாம்மா'' - ஆசையாக் கூப்புடு வாரு பேத்திய. ஆளக் கண்டாப் பொந்துக்குள்ள ஓடிப் போகும் பாருங்க நண்டு... அப்படி ஒளிஞ்சுபோவா அவ.

''ஏன் வர மாட்டேங்குது பிள்ளைக?''

நெடுநாளா நெஞ்சு குடைஞ்ச கேள்விக்கான பதிலைப் பொட்டுல அடிச்ச மாதிரி ஒரு நாள் போட்டு உடைச்சிட்டா லச்சுமி.

''சுத்த பத்தமா வளத்து வச்சிருக்கேன்; வீச்சம் எடுக்கிற ஆளுகள அண்டாது எம் பிள்ளைக.''

'திடுக்கு’ன்னு ஆகிப்போச்சு கெழவனுக்கு. அடி வகுத்துல இருந்து கொப்புளிச்சு வந்த கோபம், நெஞ்சுக்குழி வரைக்கும் வந்து ஒடஞ்சு ஒடஞ்சு திரும்பியும் உள்ளயே போயிருச்சு.

''வீச்சமா?''

ரெண்டு கையும் எடுத்து மோந்து மோந்து பாத்துக்கிட்டாரு கருத்தமாயி.

''இருந்தாலும் இருக்குமோ?''

சிட்டம்மா சுட்டுக் கொடுத்த தோசைதான் குடும்பத்தப் பிரிச்சுக் கூறு போட்டுருச்சு.

'நம்மளுக்குத்தான் பழகிப்போச்சு பழைய கஞ்சி; பேரன் பேத்திக்குப் புடிக்குமா?'' ஆசை ஆசையா தோசை சுட்டுக் கொடுத்தா சிட்டம்மா.

அதுல அவளுக்கே தெரியாம நடந்துபோச்சு ஒரு தப்பு.

நேத்து வடை சுட்ட எண்ணெயப் பத்திரப்படுத்தி வச்சிருந்தா பாருங்க பாத்திரத்துல... அதுல சுட்டுட்டா தோசைய.

ஆசை ஆசையாத் தோசை தின்ன பிள்ளைகளுக்குக் கொஞ்ச நேரத்துலயே குடல் குறிகாட்டிருச்சு; மத்தியானமே புடுங்கிருச்சு வயிறு.

வயித்தாலயாப் போகுது. வாசல் பூரா மஞ்சத் தண்ணி தெளிச்ச மாதிரி மாறி மாறி உக்காந்து எந்திரிக்குது பிள்ளைக; கழுவி முடிக்கு முன்ன கழியுதுக பாவம்.

இன்ன பேச்சுன்னு இல்ல - கத்திக் குடியக் கெடுத்துப்புட்டான் முத்துமணி:

''பேரன் பேத்தியக் கூட்டிக்கிட்டு வான்னு புலம்பறீகளே... உங்கள நம்பிக் கூட்டிக்கிட்டு வந்தா, என் பிள்ளைகளப் பொணமாத்தான் தூக்கிட்டுப் போகணும் போலயிருக்கே. எனக்கு நீங்க ஒண்ணும் சொத்து சொகம் சேத்துவைக்கல; வண்டி வாகனம் வாங்கித் தரல. இந்த ஓட்டுக் கூரையைத் தவிர ஒண்ட வீடு இல்ல. சரி - வீடுகூடக் கட்ட வேணாம்... வீட்டுக்குள்ள ஒரு கக்கூசாவது கட்டிவச்சிருக்கியா?''

''கக்கூசா?'' - பதறிப்போனாரு கருத்தமாயி.

''கக்கூசு கட்டுனா வீட்டுக்குள்ள லச்சுமி இருக்க மாட்டாடா'' - குடும்ப நம்பிக்கையச் சொல்லிக் கோவிச்சுட்டா சிட்டம்மா.

''கக்கூசு இல்லாத வீட்டுல என் பொண் டாட்டி லச்சுமி இருக்க மாட்டா.''

பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு,வயித் தால போன பிள்ளைகள சட்டைகிட்ட போடவிடாமத் தரதரன்னு இழுத்துக் கிட்டு அன்னைக்குப் போனவன்தான் முத்துமணி.

''எழுதிக் கொடு வீட்டை''ன்னு இன்னைக்கு வந்திருக்கான்.

''தம்பி முத்துமணி நீ படிச்சவன். அரசாங்க உத்தியோகம் பாக்கிற ஆளு. தரும நியாயம் தெரியும் உனக்கு. வீட்டை முழுசாக் கேட்டாக் கெழடுகட்டைக எங்க போகுங்க? நீ இருந்த வகுத்துலதான உன் தம்பியும் இருந்து வந்தான்; அவனுக்கும் ஒரு பங்கு இருக்கா இல்லையா? அதனால, பாதி வீட்டுல அப்பன் ஆத்தா இருக்கட்டும்; மீதி வீட்டுல நீ இருப்பா.''

மகன் கடனைத் திருப்பிக் கேட்டப்ப கருத்தமாயி பக்கம் இருந்த ஊரு, அவன் வீட்டைக் கேக்கறப்ப அவன் பக்கம்            சாஞ்சிருச்சு.

முழங்கால்ல தலைய வச்சு நிமிந்து பாக்காம நெஞ்சுக்கூடு வெந்து உக்காந்திருந்த கருத்தமாயி மனசுல மூணு கேள்விக ஓடுது:

மூன்றாம் உலகப் போர்

பாதி வீட்டை இந்தப் பய பிரிச்சுக்கிட்டான்னா - மாடு கன்டு கட்டத் தொழுவுக்கு எங்க போவேன்? கோழி குருமான அடைக்கத் தாவாரத்துக்கு எங்க போவேன்? வெளிய இத்த போர்வை பொத்திச் சீக்காளியாப் படுத்துக்கெடக்கானே எங்கண்ணன் சுழியன்... அவன் படுக்கிற திண்ணைக்கு எங்க போவேன்?

எனக்குப் பெறந்தவன் வீட்டை ரெண்டாப் பிரிக்கிறான்; எங்கூடப் பெறந்தவன் - நெலத்த ரெண்டாப் பிரிச்சுப்புட்டான். என் உசுரத்தான் உடம்பவிட்டுப் பிரிக்காம இன்னம் விட்டுவச்சிருக்கு கடவுளு!

இத்தன கூத்துக்கும் ஆடாம அசையாம சாக்குல கட்டிவச்ச சக்கரவள்ளிக் கெழங்கு மாதிரிகெடக்கு கூடப்பெறந்த அந்தக் கெழட்டு உசுரு.

அண்ணன் சுழியன் கதைய நெனச்சா - ஐப்பசியில ஊத்தெடுக்கிற காட்டோடை மாதிரி கதகதகதன்னு கண்ணீர் ஊறுது கருத்தமாயிக்கு.

- மூளும்