சாதாரண நாட்களைவிட வெயில் காலத்தில் சருமத்தைக் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். கோடை வெயிலை எதிர்கொள்வதற்கான சருமப் பாதுகாப்பு வழிகள் மற்றும் பாதிப்படைந்த சருமத்துக்கான ஹோம்மேட் சிகிச்சைகளை வழங்குகிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

அடுக்களையிலேயே அழகாகலாம்!  3

“இந்த சப்ஜெக்ட்டுக்கு நான் தேர்ந்தெடுத்திருப்பது, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள். குறிப்பாக, பாலைவிட வெயில் காலத்துக்கு தயிர் மிகவும் நல்லது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கவல்லது என்பதோடு, வெளிப்புற அழகுக்கும் தயிர் பெஸ்ட் சாய்ஸ்’’ என்ற ராஜம் முரளி வழங்கிய தலை முதல் பாதம் வரைக்குமான வெயில்கால அழகுக் குறிப்புகள் இங்கே...

தலையில் வியர்க்கிறதா? 

முந்தைய நாள் இரவு இரண்டு டீஸ்பூன் தயிரில் வெந்தயம், துவரம்பருப்பு தலா 2 டீஸ்பூன் சேர்த்து ஊறவிடவும். மறுநாள் காலை வெதுவெதுப்பான நீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதில் சிறிது வெந்நீீர் சேர்த்துக் கலந்து வடிகட்டவும். வடிகட்டிய சாற்றை தலையில் தடவிக் குளிக்கவும்.

வெந்தயம், முடியை மிருதுவாக்குவதுடன் வெயிலால் சூடாகும் தலையைக் குளிரச் செய்யும். துவரம்பருப்பு, வெயிலால் வியர்த்து மாசடைந்திருக்கும் தலை மற்றும் கேசத்தை நன்கு சுத்தம் செய்யக்கூடிய அழுக்கு நீக்கியாகச் செயல்படும். தயிரில் உள்ள ஈஸ்ட், கேசத்தைப் பளபளப்பாக்கும்.

வாரம் இருமுறை இந்த ஹேர் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டால், கேசம் நன்கு வளர்வதுடன் வியர்வையினால் ஏற்படும் தலை அரிப்பும் கட்டுப்படும்.

கன்றிப்போன முகம்!

தினமும் சோப் குளியலை முடித்தவுடன், காய்ச்சிய வெதுவெதுப்பான பால் 2 டீஸ்பூனுடன், பொடித்த கஸ்தூரி மஞ்சள்தூள் 2 டீஸ்பூன் சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தேய்த்துக் குளிக்கவும். வெயிலினால் கறுத்து மற்றும் கன்றிப்போன சருமத்தை இது மீட்கும். தினசரி உபயோகிக்க, சரும நிறம் வெளுக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுக்களையிலேயே அழகாகலாம்!  3

முகத்துக்கான ஸ்பெஷல் பேக்: பூலாங்கிழங்கு, வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள் தலா 100 கிராம் எடுத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டீஸ்பூன் வெண்ணெய் மற்றும் 2 சிட்டிகை பச்சைக் கற்பூரம் சேர்த்து, ஒரு கிண்ணத்தில் வைத்து விரலால் தேய்த்துக் கலந்தால், க்ரீம் போன்ற பதத்துக்கு வரும். வெயில் நேரத்தில் வெளியே கிளம்பும் முன் இந்த க்ரீமை பூசிக்கொண்டால் அடுத்த 6 மணி நேரத்துக்கு வியர்த்துக் கொட்டாமல் இருக்கும். இதை தினசரி முகத்துக்கு பூசி வாஷ் செய்தால், நாளடைவில் முகம் பளபளவென்று டாலடிக்கும். 

பாடி வாஷ்!

100 மில்லி சூடான பாலில், 20 பன்னீர் ரோஜாவின் இதழ்களைப் போட்டு மூடிவிடவும். இரண்டு மணி நேரத்தில், ரோஜா எசன்ஸ் முழுவதும் பாலில் இறங்கியிருக்கும். இப்போது ரோஜா இதழ்களை பாலில் இருந்து எடுத்துவிட்டு, அந்தப் பாலுடன் கடலை மாவு, பயத்தம் மாவு, வெந்தயத்தூள் இவற்றில் ஏதாவது ஒன்றைக் கலந்து உடல் முழுவதும் பூசி, தேய்த்துக் குளிக்கவும். இது வியர்வை துர்நாற்றம் நீக்கி, நறுமணத்தைக் கொடுக்கும். பிளீச்சிங் ஏஜென்டான பால், சரும நிறத்தை மெருகேற்றும்.

பாடி கூல் பேக்!

கடலை மாவு 5 டீஸ்பூனுடன் 5 டீஸ்பூன் பன்னீர் சேர்க்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த `ஜில்'லென்ற பாலில் இந்தக் கலவையைக் கலந்து உடல் முழுவதும் பூசி 10 நிமிடங்களுக்குப் பிறகு குளித்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதுடன், உடல் புதுப்பொலிவு பெறும்.

பட்டுப் பாதங்களுக்கு! 

ஒரு டீஸ்பூன் கடுகை, 2 டீஸ்பூன் பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். குளிக்கும்போது பாத வெடிப்பின்மேல் இதைத் தேய்த்துக் குளித்துவந்தால் நாளடைவில் வெடிப்புகள் மறைவதுடன் பாதம் மிருதுவாகும்.
 

இந்துலேகா.சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism