Published:Updated:

"ரெஜினாவுக்கு 'காலிங் பெல்', அப்பளம் விற்ற ஹ்ரித்திக், 'செக்ஸி துர்கா'வுக்கு சென்சார்..." #WoodBits

"ரெஜினாவுக்கு 'காலிங் பெல்', அப்பளம் விற்ற ஹ்ரித்திக், 'செக்ஸி துர்கா'வுக்கு சென்சார்..." #WoodBits
"ரெஜினாவுக்கு 'காலிங் பெல்', அப்பளம் விற்ற ஹ்ரித்திக், 'செக்ஸி துர்கா'வுக்கு சென்சார்..." #WoodBits

அப்பளம் விற்ற ஹ்ரித்திக் ரோஷன்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவருடைய வாழ்க்கை வரலாறாக உருவாகிவரும், 'சூப்பர் 30' படத்தில் நடித்து வருகிறார் ஹ்ரித்திக் ரோஷன். ஆனந்த் பீகார் மாநிலத்தை சேர்ந்த 30 ஏழை எளிய மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருபவர். சாதாரண குடும்பத்திலிருந்து வந்த இவரது வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இப்படத்தை விக்கி பாஹல் இயக்குகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஹ்ரித்திக் ரோஷனின் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. ஹ்ரித்திக்கை யாருக்கும் அடையாளம் தெரியாத வண்ணம் சமீபத்தில் பீகாரின் சாலைகளில் அப்பளம் விற்றுக்கொண்டிருக்கும், இவரது புகைப்படங்கள் ஆன்லைனில் பதிவிடப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றன.    

ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கவுள்ள டேனி பாய்ல்

2008- ம் ஆண்டு 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தை இயக்கியதன் மூலம் இந்தியத் துணை கண்டத்திற்கே பரிச்சயமானவர் இயக்குநர் டேனி பாய்ல். '127 ஹவர்ஸ்', 'ஸ்டீவ் ஜாப்ஸ்', 'டிரெயின்ஸ்பாட்டிங்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார் டேனி பாய்ல். தற்போது டேனியல் க்ரெய்க் நடிக்கும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கவுள்ளார். 2012- ம் ஆண்டு முதல் வந்த இரண்டு 007 படங்களையுமே பாய்ல் இயக்குவதாக இருந்தது. அது தள்ளிப்போகவே இப்படத்தை இயக்குவதில் பெரும் ஆர்வமாய் இருக்கிறார். இப்படத்தை இவர் இயக்குவது உறுதியானால், நம்ம ஊரு ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் இசையமைப்பாளர்கள் லிஸ்டிற்கு பரிந்துரைக்கப்படலாம் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து இருக்கிறார்கள். 

இந்திப் படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா

'கேடி பில்லா கில்லாடி ரங்கா' தொடங்கி 'ராஜதந்திரம்', 'மாநகரம்', 'சரவணன் இருக்க பயமேன்' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர்,  ரெஜினா கெஸன்ட்ரா.  கோலிவுட் மட்டுமில்லாமல் டோலிவுட்டிலும்  நடித்து வரும் ரெஜினா, தனக்கென ரசிகர்களைக் கொண்டுள்ளவர். தற்போது 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'பார்ட்டி', 'மிஸ்டர் சந்திரமௌலி' ஆகிய படங்களில் நடித்துவரும் இவருக்கு பாலிவுட்டிலிருந்து காலிங் பெல் அடித்திருக்கிறார்கள். இந்தியில் ராஜ்குமார் ராவ், சோனம் கபூர் நடிக்கும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

'நோ' சொன்ன ஷாருக் கான்

'பத்மாவத்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து ஷாருக் கானுடன் இணைந்து படம் தயாரிப்பதாக இருந்தது. 'பாஜி ராவ் மஸ்தானி', 'பத்மாவத்' படங்களைப் போன்ற ஒரு கதையும், அதனுடன் இன்னொரு கதையையும் ஷாருக்கிடம் கூறியுள்ளார். இவை இரண்டிற்கும் 'நோ' சொன்ன ஷாருக், விண்வெளி வீரர்  ராகேஷ் ஷர்மாவை மையப்படுத்தி உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.         

சனல் குமார் சசிதரன் படம்

மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் இயக்கியுள்ள திரைப்படம், 'எஸ்.துர்கா'. இப்படத்தை தணிக்கை செய்யும்போது தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது.    

'செக்ஸி துர்கா' என்ற பெயரை 'எஸ் துர்கா' என மாற்றவும், சில இடங்களில் 'மியுட்'களும் வழங்கப்பட்டன. சர்வதேச பட விழாக்களில் பல அங்கீகாரங்களைப் பெற்ற 'எஸ்.துர்கா' கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடல் மறுக்கப்பட்டு, பின் கேரள உயர்நீதி மன்றத்தின் குறுக்கிட்டு திரையிட உத்தரவிட்டது. இருப்பினும் சனல் குமார் சசிதரன் விதிகளை மீறியதாக மத்திய தணிக்கைக் குழுவால் 'எஸ் துர்கா'  படத்தின் தணிக்கை சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. தணிக்கை தீர்ப்பாயத்தால் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு மீண்டும் யு/ஏ சான்றிதழே வழங்கப்பட்டுள்ளது.