Published:Updated:

பறக்கும் பல்லி... கருந்தேள்... ராஜநாகங்கள்... அகும்பே - மினி அமேசான்! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 13

அகும்பேவின் அழகும், த்ரில்லிங்கும் அப்படி. செய்திகளை முந்தித் தரும் கூகுளில், அகும்பே என்று அடித்தால் ‘ரெயின் ஃபாரெஸ்ட்’ என்றுதான் வரும்.

அகும்பே
அகும்பே

நம் வாழ்க்கை முழுதும் ஏதோ ஒரு விஷயம் நம்மை அண்டியோ, அரவணைத்தோ வந்து கொண்டே இருக்கும். அதுபோல், தமிழ்நாட்டுக்கு - கர்நாடகா என்று நினைக்கிறேன். ஏதோ வாட்ஸ்-அப் ஃபார்வேர்டு மெசேஜில் படித்ததுபோல் ஞாபகம். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தேவைப்படும்போது கர்நாடகா தேவைப்படுகிறது;  தமிழ்நாட்டுக்கு ஒரு முதலமைச்சரை கர்நாடகாதான் தந்தது; தமிழ்நாட்டில் பிறந்த சசிகலாவுக்கு ஜெயில் தண்டனையைத் தருவதற்கும் கர்நாடகா தேவையாய் இருக்கிறது; இங்கே ஒரு சூப்பர் ஸ்டாரையும் கர்நாடகாதான் தர வேண்டியிருக்கிறது. இந்தமுறை எனக்கும் அது பொருந்திவிட்டதுதான் ஆச்சர்யம். நிற்க! என் ‘ஊர் சுத்தல்’ டைரியின் முதல் பக்கத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு, மிகப் பெரிய த்ரில்லிங் நினைவுகளாக கர்நாடகாவில் உள்ள அகும்பே மழைக்காடுகள், (Agumbe) என் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவில் வெள்ளை ஆம்ப்ளேட் போல் பசுமையாய் இருக்கின்றன.

அகும்பேவின் அழகும், த்ரில்லிங்கும் அப்படி. செய்திகளை முந்தித் தரும் கூகுளில், அகும்பே என்று அடித்தால் ‘ரெயின் ஃபாரெஸ்ட்’ என்றுதான் வரும். அதாவது, இந்தியாவில் சிரபுஞ்சிக்குப் பிறகு அதிகமாய் மழைப் பொழிவு நடக்கும் இடம் அகும்பே என்று கூகுள் சொல்வது உண்மைதான். ஆனால், அதைத் தாண்டி அகும்பேவின் ஸ்பெஷல் - 'கிங் கோப்ரா' எனும் ராஜநாகங்கள். சில கட்சிகளில் தொண்டர்களைவிட தலைவர்கள் அதிகமாய் இருப்பார்கள். அதுபோல்தான் அகும்பே. அகும்பேவின் மொத்த மக்கள் தொகையே 600 முதல் 700தான் என்றார்கள். ஆனால்,  பாம்புகள் ஆயிரக்கணக்கில் உண்டு. அதிலும் ராஜநாகங்கள் எக்கச்சக்கம். ‘‘கனவுல பாம்பு வந்தா நல்லது நடக்கப் போகுதுன்னு அர்த்தம்டா’’ என்று சின்ன வயசில் என் பாட்டி சொன்னது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அகும்பேவில் நான் கண்ட சில ராஜநாகங்கள் இப்போது நினைத்தாலும் மயிர்க்கூச்செறிகின்றன. ராஜநாகங்களின் தலைநகரம் என்று பெயரே எடுத்துவிட்டது அகும்பே. 

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்தான் அகும்பே. பெங்களூருவில் இருந்து 360 கி.மீ. சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 350 கி.மீ. சுற்றிலும் மழைக்காடுகள், விதவிதமான மூலிகை மரங்கள், பழைய காலத்து வீடுகள் என்று யாரோ பிளாக்கில் எழுதியிருந்ததைப் படித்ததுமே பரவசமாகிக் கிளம்பி விட்டேன். 

காரில்தான் கிளம்பினேன். ஒரே மிதி... பெங்களூர் வந்திருந்தது. வேலூர் வழியில் வாலாஜா பேட்டை டோல்கேட்டுக்கு முந்தைய சாலையில், ஏற்கெனவே நான் உயிர் தப்பித்த கதை தெரியாதவர்களுக்காக... க்ளிக்! குண்டு வெடித்த பிறகு கடுமையாக நடக்கும் சோதனை மாதிரி... கொலை நடந்த பிறகு அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மாதிரி.. அந்த இடத்தில் மட்டும்தான் மிகவும் கவனமாக வந்தேன். ஆனால், நெடுஞ்சாலைப் பயணங்களில் சிக்கல்கள் எந்த ரூபத்திலும் வரும் என்பதை உணர்ந்த தருணம் அது. சரக்கு லாரி ஒன்று வலது பக்க இண்டிகேட்டரைப் போட்டு இடது பக்கத்துக்கு ஒதுங்க, நானும் இடதுபுறத்தில் ஒதுங்க... ‘‘யோவ், அதான் ரைட்ல இண்டிகேட்டர் போட்டு உன்னைப் போகச் சொன்னேன்ல...’’ என்று மேலும் சில எக்ஸ்ட்ரா வார்த்தைகள் போட்டு 80-கள் ஸ்டைலில் அன்பாகத் திட்டினார் லாரி டிரைவர். அதாவது, அவர் வலது பக்கம் இண்டிகேட்டர் போட்டால், நாம் வலது பக்கம் போக வேண்டும் என்று அர்த்தமாம். கொஞ்சம் பழைய புரளிதான்; ஆனா எனக்குப் புதுசாவுல்ல இருக்கு!

பெங்களூருவில் இருந்து அகும்பேவுக்கு இரண்டு வழிகளில் செல்ல முடியும். ஒன்று - சிக்மகளூர் வழி; இன்னொன்று - ஷிமோகா. ‘சிக்மகளூர்’ பெயரே கிக் ஆக இருந்தது. ஸ்கெட்ச் போட்டேன். பெங்களூரு வழியாக வேறு மாவட்டங்களுக்குச் செல்பவர்களுக்கு ஒரு டிப்ஸ். பெங்களூரு டோல்கேட் தாண்டி ‘நைஸ் ரோடு’ வழியாக நுழைந்தால்தான் எந்த இலக்கையும் நைஸாக, ஈஸியாக அடைய முடியும். முதல் டோல் தாண்டி, கொஞ்ச தூரம் சென்று இடதுபுறம் திரும்பினால் நைஸ் ரோடு. மறந்து போய் நேராகப் போனால்... பெங்களூரு டிராஃபிக்கில் சிக்கி ரிட்டர்ன் ஆவதற்குள்... ரஜினி அரசியலுக்கு வரும் காலமே கனிந்துவிட வாய்ப்புண்டு. 

நைஸ் ரோடு டோலுக்கு 165 ரூபாய் கட்டணம் வாங்கினார்கள். கர்நாடகா ஹைவேஸில் பயணிப்பதற்கு ரொம்பவும் பொறுமை வேண்டும். ஹைவேஸ் என்று பெயர் வைத்ததற்குப் பதில் ‘ஸ்பீடு பிரேக்கர்வேஸ்’ என்று வைத்திருக்கலாம். எத்தனை தடதட ஸ்பீடு பிரேக்கர்கள்? விட்டால் வீட்டுக்குள்கூட ஸ்பீடு பிரேக்கர் வைத்திருப்பார்கள்போல! 

செம குளிர் அடித்தது. சிக்மகளூர் வந்திருந்தது. இதுவும் ஒரு அருமையான டூரிஸ்ட் ஸ்பாட்தான் என்றார்கள். சின்ன மகளின் ஊர் என்று அர்த்தமாம். கேப்பைக் களி, சிக்கன் சைட் டிஷ், கட்டஞ்சாயா, லேசான மழைத் தூறல், ஜில் பனி, போஸ்டர்களில் பயமுறுத்திய கன்னட ஹீரோக்கள், மீன் வறுவல்கள் என்று சிக்மகளூர் ‘கிக்’ ஆகவே இருந்தது. இரவு தங்கிவிட்டு மறுநாள் சில் பயணம்.

பாதி தூரம் தாண்டிவிட்டேன். ‘என்னடா இது சம்பந்தமே இல்லாம மழை தூறுது; நிக்குது’ என்று அடிக்கடி வைப்பரை மாறி மாறி ஆன்/ஆஃப் செய்தேன். காருக்கே டயர்டு ஆகியிருக்கும். அப்புறம்தான் தெரிந்தது - தென் இந்தியாவில் அதிகமாக மழை பொழியும் இடமான அகும்பேவை நெருங்கிவிட்டேன் என்பது. காரும் மனசும் ஈரமாகவே இருந்தது. காரில் இல்லாமல், பொதுப் போக்குவரத்தில் நீங்கள் அகும்பேவுக்கு ப்ளான் பண்ணியிருந்தீர்கள் என்றால், 54 கி.மீ தூரம் தள்ளியுள்ள உடுப்பி ரயில் நிலையம்தான் உங்களுக்கு பெஸ்ட். 

அகும்பே வந்துவிட்டது. சில் வெயிலும், ஜில் மழையும், ஜிவ் காற்றும்... அந்நியன்/ரெமோ/அம்பி போல் மாறி மாறி பெர்ஃபாமென்ஸ் காட்டியது. ஒரு முடிவுக்கே வர முடியவில்லை. வித்தியாசமாக இருந்தது க்ளைமேட். அகும்பேவில் உள்ள ‘மழைக்காடுகள் ஆராய்ச்சி நிலையம்’ போக வேண்டிய இடம். மூலிகைக் குணங்கள் நிறைந்த செடி கொடிகள், மலர்கள், மரங்கள் என்று வெரைட்டியாகப் பராமரித்து வருகிறார்கள்.

 ‘அனகோண்டா’ படத்தில் வரும் ரத்த மஞ்சரிப் பூக்கள் மாதிரி ஒரு பூ பார்த்தேன். சிவப்பு வண்ணத்தில் சாதாரண சாமந்தி போல்தான் இருந்தது. ஆனால் மூலம், இதய நோய்கள், காச நோய் என்று எல்லாவற்றுக்கும் இதன் இதழும் வேரும் மருந்து என்று அடுக்கினார்கள். ‘ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்’ என்பதுபோல், ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு ஹீலிங் குணம் இருந்தது.

அகும்பேவில் மிகப் பழைமையான ஒரு வீடு இருக்கிறது. அகும்பே வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மராமத்துப் பணிகள் எதுவும் நடைபெறாமல், பழைமை மாறாமல் அப்படியே இருக்கிறது. மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மணனின் சகோதரர் ஆர்.கே.நாராயணன் எழுதிய ‘மால்குடி டேய்ஸ்’ எனும் புகழ்பெற்ற டி.வி. சீரியல் இந்த வீட்டில்தான் படமாக்கப்பட்டது என்றார்கள். ஓட்டினால் வேயப்பட்ட கூரை, வதவதவென வீட்டைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள், அகன்ற திண்ணை, கைவினைப் பொருட்கள், மாட விளக்குத் தூண்கள் என்று 1800-களுக்கு நம்மைக் கொண்டு செல்கிறது வீட்டின் அமைப்பு. 

அகும்பேவின் பெயர் சொல்லும் முக்கியமான நான்கு அருவிகள் இங்கே உண்டு. பர்கானா அருவி... கூட்லு தீர்த்த அருவி... ஓநேக் அபி அருவி... ஜோகி கவுண்டி அருவி.. (Jogi gundi) கர்நாடகாவில் இதை வேறு மாதிரி உச்சரிக்கிறார்கள்.

‘அருவியில தலை காட்டிட்டு டிரெஸ் சேஞ்ஜ் பண்ணிட்டு வந்திடலாம்’ என்று சட்டு புட்டென நினைத்த மாத்திரத்தில் இந்த அருவிகளுக்குக் கிளம்பி விட முடியாது. விக்ரமாதித்யன் கதைகளில் வரும் கிளியின் உயிர் ஏழு கடல்; ஏழு மலை தாண்டி இருக்குமே... அது மாதிரி ஒவ்வொரு அருவிகளுக்கும் குறைந்தது 3 கி.மீ-யாவது காடு, மலைகளில் ட்ரெக்கிங் போய்த்தான் வர வேண்டும். 

பர்கானா அருவி, தூரத்தில் இருந்து பார்த்தாலே மிரட்சியாகவும், பரவசமாகவும் இருந்தது. சுற்றிலும் பச்சைப் பசேல் மலைகள்... நடுவே வெள்ளை நிறத்தில் மெல்லிசான கோடுபோல் பர்கானா அருவி விழும் அழகு மெஸ்மரிசம் பண்ணுகிறது. கன்னாபின்னாவென உயரத்தில் இருந்து விழும் இதில் தலை என்ன... விரல்கூடக் காட்ட முடியாது. ஆனால், பர்கானாவில் இருந்து பிரிந்து விழும் கிளை அருவி நீர் விழும் இடத்தில், கெட்டிக் கிடக்கும் நீரில் குளிக்கலாம். இது எல்லா அருவிகளுக்கும் பொருந்தும்.

காரை நிறுத்திவிட்டு, கால் வலிக்க, மனம் லயிக்க 4 கி.மீ காட்டுக்குள் நடந்து சென்று ஜோகி கவுண்டி அருவியை அடைந்தேன். அருவி எங்கிருந்து விழுகிறது என்றே தெரியவில்லை. ஆனால், பாறை இடுக்குகளிலுந்து பொத பொதவென வந்து விழுந்தபடி இருந்தது தண்ணீர். ‘‘இப்போ நான் ஆள் அரவமே இல்லாத.. பாம்புகள் நிறைஞ்சிருக்கிற ஜோகி கவுண்டி அருவிக்கிட்டே இருக்கேன்’’ என்று ‘பியர் கிரில்ஸ்’ மாதிரி ஒரு வீடியோ பைட் போட்டால்... லைக்ஸ் பிய்ச்சுக்கொண்டு போகலாம். ‘அருவித் தண்ணியில் குளிக்கும்போது, பாம்புகள் ஜாக்கிரதை’ என்று ட்ரெக்கிங் போகும் முன்னே பற்றி எச்சரிந்திருந்தார்கள். நிஜம்தான். பாறைகளுக்கு இடுக்கில்... அருவி நீரில்... புதர்களுக்கு மறைவில்.. ஏகப்பட்ட பாம்பு பிரதர்களைப் பார்த்தேன். 

ஜோகி கவுண்டிக்குப் பக்கத்தில் ஒரு குகைக்குக் கூட்டிச் சென்றார் கைடு. கொஞ்ச காலத்துக்கு முன்பு இது விலங்குகளின் குகையாக இருந்ததாகவும், ராஜநாகங்கள் விலங்குகளை விரட்டி விட்டு அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டதாகவும் புராணக் கதை சொன்னார் கைடு. குகைக்கு அருகில் பயத்தை மறைத்தபடி ஒரு செல்ஃபி எடுத்து வைத்துக் கொண்டேன். 

126 அடி உயர கூட்லு தீர்த்த அருவிக்குப் பக்கத்தில் குட்டி ராஜநாகமெல்லாம் பார்த்தேன். பிறவிப் பயனே அடைந்ததுபோல் இருந்தது. சீதா நதிக்கு இந்த அருவிதான் ஆதாரம் என்கிறார்கள். கூட்லு தீர்த்தம் குளிப்பதற்கேற்ற அருவி என்றார் கைடு. ஆனால், நல்ல நீச்சல் தெரிந்தவர்கள்தான் இங்கே ஸ்விம் பண்ண முடியும். அகழியின் ஆழம் மழைக் காலங்களில் கிட்டத்தட்ட 40 முதல் 50 அடி வரை இருக்குமாம். ஓநேக் அபி அருவிதான் சுற்றுலாவாசிகளின் செல்லம். இங்கே படிகளெல்லாம் அமைத்திருக்கிறார்கள். எனவே, படி ஏறிச் சென்று ஓநேக் அபியில் அதகளம் பண்ணலாம். 

அகும்பே போன்ற காட்டுப் பகுதியில் தங்குவது ஒரு கிக்கான விஷயம். நான் அகும்பேவில் தங்கியதற்குக் காரணம், கௌரிஷங்கர். பட்டுக்கோட்டை பிரபாகர், தஞ்சாவூர் கவிராயர் என்று ஊர்களைப் பிரபலப்படுத்தும் பிரபலங்கள்போல், கௌரிஷங்கரும் அகும்பேவைப் பிரபலப்படுத்தும் ஒரு பிரபலம். ‘அகும்பே கௌரிஷங்கர்’ என்றால்தான் எல்லாருக்கும் தெரிகிறது. ‘‘இல்லையென்றால், ராஜநாகம் கௌரிஷங்கர் என்றும் சொல்லலாம்’’ என்றார் கௌரிஷங்கர். இதற்குக் காரணம் இருக்கிறது. ‘ஆகாயம் இல்லாத இடம் ஏது’ என்பதுபோல், ‘நாடோடிகள் இல்லாத ஊர் ஏது’ என்பதை நிரூபிப்பவர் கௌரிஷங்கர். ராஜநாகங்களிடம் இருந்து அகும்பேவைக் காக்கும் நாடோடி. ஆம்! ஏற்கெனவே சொன்னபடி அகும்பேவின் மொத்த மக்கள் தொகையைவிட ராஜநாகங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், புலிகளிடம் இருந்து கிராமத்தைக் காக்கும் புலிமுருகன்போல், அந்த ஊரைக் காக்கும் நாடோடியாக வலம் வருகிறார் கௌரிஷங்கர். ‘‘அதுக்காக பாம்புகளைக் கொன்று மக்களைக் காப்பாத்துவேன்னு நினைச்சுடாதீங்க’’ என்று சொல்லும் கௌரிஷங்கருக்கு, ‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்போல் ஏழு மொழிகள் தெரியுமாம். 

‘‘நம்ம மனைலி ஹாமு (பாம்பு) பந்துருத்து!’’ என்று வீட்டுக்குள் ராஜநாகம் புகுந்தவர்கள், முதலில் அழைப்பது கௌரிஷங்கரைத்தான். சேவை அமைப்பு வைத்திருக்கும் கௌரிஷங்கர், பாம்புகளைப் பிடித்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திவிட்டு, திரும்பவும் காட்டுக்குள்ளேயே கொண்டு போய் விட்டு விடுகிறார். ஆராய்ச்சிக்காகவென்றே காட்டுக்குள் தனி இடம் வாங்கி, ‘டேட்போல்’ எனும் குட்டித் தவளைப் பண்ணையே வைத்திருக்கிறார் கௌரிஷங்கர். கல்லூரி மாணவர்கள், பாம்புகளைப் பற்றியும் காடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள இன்டர்ன்ஷிப்பெல்லாம் வருகிறார்கள் என்றபோதே அவரின் அனுபவம் புரிந்தது. எனக்கு கைடாக வந்ததே கௌரிஷங்கரிடம் இன்டர்ன்ஷிப் வைத்திருக்கும் மாணவர்தான். 

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். கௌரிஷங்கருக்கு, பாம்பைக் கண்டால் உற்சாகம் பொங்கிவிடும். ராஜநாகங்களுக்கும் கௌரிஷங்கருக்கும் அப்படி ஒரு பிணைப்பு. உலகிலேயே கொடூர விஷம் கொண்ட ‘கிங் கோப்ரா’ ராஜநாகங்கள் பற்றி அவர் சொன்ன தகவல்கள் ‘பக் + கிக்’ ரகம். ஆசியாவில், அதுவும் இந்தியாவில் மட்டும்தான் ராஜநாகங்கள் இருக்கின்றன. ஊர்வன இனத்தில் கூடு கட்டி முட்டை பொறிக்கும் இனமும் ராஜநாகம் மட்டுமே! பாம்பு முட்டைகளுக்குக் குளிர்ச்சி ஆகாது; எனவே முட்டைகளை பிரமிடுபோல் அடுக்கி வைத்து, மூங்கில் கழிகள், சருகுகள் போன்றவற்றைத் தனது உடலால் இறுக்கி முறுக்கி, சற்று மேடான இடங்களில் ராஜநாகம் வீடு கட்டும் அழகை இரவில் மட்டும் அகும்பேவில் பார்க்கலாமாம். எத்தனை செ.மீ மழை பெய்தாலும் இந்தக் கூட்டினுள் ஒரு செ.மீ மழை நீர்கூட உள்ளே புகாத வண்ணம் இது வீடு கட்டும் சாதுர்யம்... வாவ்! சிவில் இன்ஜீனியர்ஸ்... நோட் பண்ணுங்கப்பா!

அதேபோல் யானை, புலி, சிங்கத்தையெல்லாம் விலகிப் போகச் செய்யும் ராஜபார்வையைக் கொண்டவை ராஜநாகங்கள். ராஜநாகத்துக்குக் கோபம் வந்துவிட்டால், 8 முதல் 10 அடி வரை எழுந்து நின்று படமெடுத்து மிரட்டுமாம். லேசாக விஷம் தெளித்தால், 20 நிமிடங்களுக்குள் யாராக இருந்தாலும் க்ளோஸ்! அகும்பேவில் 15 வருடங்களுக்கு முன்பு ஒருவர் ராஜநாகம் கடித்து இறந்ததாகவும், அதற்குப் பிறகு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் சொன்னார் கௌரிஷங்கர். காரணம், பாம்புகளுக்குச் சும்மா கோபம் வராது. பயமுறுத்தினாலோ, தொந்தரவு செய்தாலோ மட்டும்தான் நாக்குக்கு மேல் கோபம் வருமாம். எனவே, ராஜநாகங்களைக் கண்டால் மிரண்டு ஓட வேண்டியதில்லையாம். மேலும் ராஜநாகங்கள் பாம்புகளை மட்டும்தான் உணவாகச் சாப்பிடும். பெரும்பாலும், ‘ரேட்டில் ஸ்நேக்’ எனும் வகை பாம்புகள்தான் ராஜநாகங்களின் ஃபேவரைட் டிஷ். பாம்புகள் உணவாகக் கிடைக்காத பட்சத்தில், சின்ன சைஸ் ராஜநாகங்களையே லபக்கிவிடுமாம் பெருசுகள். ராஜநாகங்களைத் தவிர சாரை, புடையன், கண்கொத்தி, கண்ணாடி விரியன், ரேட்டில், பச்சைப் பாம்பு, சுருட்டை என்று இங்கே மொத்தம் 9 வகையான பாம்பு வகைகள் இருப்பதாகவும் சொன்னார். 

கதை கேட்ட எனக்கு, பாம்புச் சட்டைபோல் ‘கூஸ் பம்ப்’ ஆகிவிட்டது. அன்றிரவு ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அகும்பே நடுக்காட்டில் டென்ட் அடித்துத் தங்கினோம். 'யார்ரா இவன் ஏரியாவுக்குப் புதுசா' என்று வெரைட்டியாக பல உயிரினங்கள் டென்ட்டுக்கு அருகில் வந்து எங்களை விஸிட் அடித்துவிட்டுப் போயின. கருந்தேள், சிலந்திப் பூச்சி, ஓணான், மரவட்டைகள், படா சைஸ் விட்டில்கள், குண்டு குண்டாக வண்டுகள், குட்டிக் குட்டியாய் பாம்புகள்...! காதில் துணி அடைத்துப் படுக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது.

நீளமாக எதைப் பார்த்தாலும் எனக்கு பாம்புபோலவே தெரிந்தது. பாட்டியின் ஆசை நிறைவேறியது. இரவு ராஜநாகங்கள் கனவில் மொத்தமாக வந்தன. கூடவே புலியின் உறுமல் சத்தமும் கேட்டது. ஆனால், ‘இது நிஜம்’ என்று எழுப்பிச் சொன்னார் மாணவ கைடு. திகிலாக இருந்தது. விடிந்து பார்த்தபோது, ‘‘இந்தப் பக்கம் காட்டெருமை போயிருக்கு’’ என்று காலடித் தடங்களை வைத்துச் சொன்னார் கைடு. மரத்தில் ஓணான் போன்ற ஒன்றை போட்டோ எடுத்தபோது, "அது ஓணான் இல்லை; பறக்கும் பல்லி" என்று ஆச்சரியப்படுத்தினார் கைடு. மரம் விட்டு மரம் பறந்து பறந்து போனது அந்தப் பறக்கும் பல்லி. ஏதோ அமேசான் காட்டுக்குள் வந்ததுபோலவே இருந்தது. ‘‘சீக்கிரம் கிளம்புங்க... சன்ரைஸ் பார்க்கலாம்’’ என்று கிளப்பினார்.

ஒரு காலத்தில் மிகப் பெரிய ஆன்மிக ஸ்தலமாக விளங்கியதாம் அகும்பே. அதற்குச் சாட்சியாக குந்தாத்ரி எனும் மலைக்கோயில் இருக்கிறது. கொல்லிமலை போல் கண்டமேனிக்கு இருந்த கொண்டை ஊசிகள் வழியே 20 கி.மீ தூரம் பயணித்தால் வருகிறது குந்தாத்ரி மலைக்கோயில். பாதையா பாம்பா என்று குழப்பமாக இருந்தது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெயின் கோயிலான இங்கிருந்து சூரிய உதயம், அஸ்தமனம் எல்லாம் பார்ப்பது... வர்ணிக்க முடியாத அழகு. நீல வானமும் பச்சைப் புல்லும்தான் குந்தாத்ரி கோயிலுக்குப் பாதுகாப்பாய் இருந்தது. திருமயம் கோட்டைபோல் அகழியெல்லாம் இருந்தது. ‘கடிக்காத நாய் உண்டு; குடிக்காத வாய் இல்லை’ என்பதுபோல், யாரோ சிலர் பீர் பாட்டில்களை உடைத்துச் சிதறடித்து மகிழ்ச்சியாய்க் கொண்டாடி இருப்பார்கள் போல!  வருத்தமாக இருந்தது. 

கார் ஓட்டும்போது ரொம்பவும் கவனமாகவே கார் ஓட்டினேன். நம்ப மாட்டீர்கள்; சிக்னலில் மனிதர்கள் கிராஸ் ஆவதுபோல்... சாலையில் பாம்புகள் அடிக்கடி கிராஸ் ஆன சம்பவம் திகிலாக இருந்தது. அகும்பேவில் மெதுவாகவே கார் ஓட்டச் சொல்லி அட்வைஸ் செய்கிறார்கள். ‘‘அதுங்க இடத்துல நாம் இருக்கோம். தயவுசெஞ்சு எந்தத் தொந்தரவும் பாம்புங்களுக்கு வராமப் பார்த்துக்கோங்க!’’ என்று சொல்லியிருந்தார் கௌரிஷங்கர். 

ஆம் டைம் மழை, பச்சைப் புல்வெளிகள், ஜங்கிள் ட்ராக்ஸ், அருவிக்கெல்லாம் அருவிகள், பெயர் தெரியா உயிரினங்கள், மாறிக் கொண்டே இருக்கும் க்ளைமேட், பாதையெல்லாம் திரிந்த பாம்புகள்... அகும்பே நினைவுகள் என்னை இப்போதும் பாம்புபோல் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.

மற்ற பாகங்கள்