Published:Updated:

நீர்மேலாண்மை: உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தமிழ் மன்னனின் தீர்ப்பும்... ஓர் ஒப்பீடு!

நீர்மேலாண்மை: உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தமிழ் மன்னனின் தீர்ப்பும்... ஓர் ஒப்பீடு!
நீர்மேலாண்மை: உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தமிழ் மன்னனின் தீர்ப்பும்... ஓர் ஒப்பீடு!

காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை அறிவித்துள்ளது. 205 டி.எம்.சி, 192 டி.எம்.சி, 177.25 டி.எம்.சி என்று தமிழகத்துக்கான நீர் அளவு குறைந்து கொண்டே இருக்கிறது. ஏற்கெனவே வழங்கவேண்டிய நீரையே கர்நாடகா சரியாக வழங்காத நிலையில், தற்போது அறிவித்துள்ள 177.25 டி.எம்.சி தண்ணீரும் நமக்கு முழுமையாகக் கிடைக்குமா, என்பது சந்தேகமே. இந்நிலையில், தண்ணீர் விவகாரத்தில் கொங்கு சோழன் வீரராசேந்திரனின் தீர்ப்பைக் குறித்து அறிந்து கொள்வோம்.

கல்வெட்டு

கொங்கு மண்டலத்தை எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் முக்கியமானவர் வீரராசேந்திரன். கி.பி.1207-ஆம் ஆண்டு அரியணையேறிய இம்மன்னன், 47 ஆண்டுகள் கொங்கு மண்டலத்தை நிர்வாகம் செய்தார். நிர்வாகச் சீர்திருத்தம், திருப்பணிகள் மற்றும் நீர் மேலாண்மை என்று கொங்கு மண்டலம் இன்றும் செழித்து வளர வீரராசேந்திரனின் பணிகள் இன்றியமையாதவை.

அவரது பணி தொடர்பாகப் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில், தற்போதும் ஒரு கல்வெட்டு உள்ளது. நீர் தட்டுப்பாட்டால் ஊரின் ஒரு பகுதி மக்கள், நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட மன்னனிடம் அனுமதி கேட்டனர். இதையடுத்து, தேவிசிறை என்ற அணை கட்டப்படுகிறது. இதற்கு அனுமதியளித்த மன்னன் வீரராசேந்திரன், "தேவிசிறை அணை மற்றும் அதற்கான வாய்க்காலை வெட்டிக் கொள்ளலாம்.  இதனால், கீழே உள்ள கோளூர் அணைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. மேலும். கோளூர் அணை நிரம்பிய பிறகே, தேவிசிறையில் நீரைத் தேக்கவேண்டும். இதற்கிடையில், யாரேனும் நீரைத் திருப்பும் செயலில் ஈடுபட்டால், அது தண்டனைக்குரிய குற்றம்" என்று அறிவித்தார்.

அதோடு நிற்காமல், அந்த ஊரில் கால்நடை மேய்த்து நாடோடிகளாய் இருந்தவர்களுக்கு விவசாயம் செய்வதற்காக, எல்லையில் உள்ள மாளிகைப் பழநத்தம் என்ற ஊரை, மன்னர் தானமாக வழங்கினார்.  பின்னாளில், அது 'புகலிடங்கொடுத்த சோழநல்லூர்' என்றானது. ஆனால், தானமாகக் கொடுக்கப்பட்டவை புன்செய் நிலங்கள். எனவே, அவை நன்செய் நிலங்களாக மாறும் வரை அவற்றுக்கு 4 ஆண்டுகளுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பிறகு, அந்த நிலத்தின் தன்மை மற்றும் மக்களின் பொருளாதாரத்தைப் பொருத்தே வரிகள் விதிக்கப்பட்டன. ஆனால், தற்போது, எந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும், சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல், மக்கள் மீது வரிகள் திணிக்கப்படுகின்றன.

தேவிசிறை அணை

அடிமடைக்கு நீர் கொடுத்தப்பிறகுதான், மேலே தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் ஆட்சி புரிந்த அதே நாட்டில்தான், அடிமடைக்கு நீரின் அளவைக் குறைத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க தேவிசிறை அணையின் தற்போதைய நிலைமை மிகவும் வேதனைக்குரியது. தண்ணீரில் மிதந்த அணை, தற்போது கண்ணீரில் மிதக்கிறது. இதன் ஒரு பகுதி பஞ்சாயத்தின் குப்பை மேடாக மாறியுள்ளது. 540 அடி நீளத்தில் இருந்த அணை, தற்போது 140 அடி நீளத்தில் உள்ளது. பாலம் கட்டுகிறோம் என்று கூறி அணையின் பரப்பளவை சுருக்கிவிட்டனர். பராமரிப்பு என்பது துளியும் இல்லை. தேவிசிறை அணை கல்வெட்டு தொடர்பாகப் பதிவு செய்துள்ள தொல்லியல்துறை, அதைப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளது. ஆனால், இப்படி ஓர் அணை இருப்பது, பல அதிகாரிகளுக்கே தெரியாது கேலிக்கூத்து. முன்பு கோளூர் அணை இருந்த இடத்தில்தான், தற்போது குறிச்சி அணைக்கட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கல்வெட்டு ஆய்வாளர் ஜெகதீசன், நீர் மேலாண்மை தொடர்பாக, "தமிழகத்தில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

பழனியில் உள்ள 11-ம் நூற்றாண்டு கால கல்வெட்டு ஒன்றில், கால்வாயில் இருந்து நிலத்துக்கு நீர்கொண்டு போகும்போது, கடைமடை பகுதிக்கு சென்றபிறகுதான், மற்றப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நீர்களப்பு (திருடுவது) தண்டனைக்குரியது என்றும் கூறப்பட்டுள்ளது. காலங்காலமாகப் பெற்றுவரும் தண்ணீரைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை. புதிதாக டேம்களை கட்டினாலும், வேளாண்மையை விரிவாக்கம் செய்தாலும், கடைமடைக்கு பகுதிக்குத்தான் முதலில் நீர் வழங்க வேண்டும்.

ஆரம்பக் காலகட்டத்தில் இருந்து நாம் பின்பற்றி வரும் நடைமுறை அதுதான். இன்றைக்கும், வேளாண்மை செய்கிற பல இடத்தில் இந்த முறைதான் உள்ளது. வேளாண்மை தேவைக்காக, முன்பிருந்த குடிமராமத்து முறையையும் நாம் அழித்துவிட்டோம். நீர்மேலாண்மையில் தமிழக அரசு மிகவும் மோசமாக உள்ளது. எந்த நீர்நிலைக்கும் முறையான பராமரிப்பு இல்லை. மழைக்காலத்தில், நீரைச் சேமிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருக்கின்ற நீரைக் காப்பாற்றுவதற்கும் இவர்கள் எந்தப் பணியையும் செய்யவில்லை. இதனால், கடைமடைக்கு நீர் செல்வது நின்றுவிட்டது.

தொழில்துறைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், வேளாண்மைக்குக் கொடுக்கப்படுவதில்லை. பாலைவனமாக இருந்த இஸ்ரேல், இப்போது வேளாண்மையில் முக்கிய நாடாக உள்ளது. நீர்ப்பாசனத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்துவம்தான் இதற்குக் காரணம். இருக்கும் நீர்நிலைகளைப் பராமரித்து, சேமித்தாலே, நமது நீர் தேவையை நாமே உருவாக்கிக் கொள்ளமுடியும்" என்றார் தெளிவாக.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், "கர்நாடக அரசு புதிதாக அணைகள், பாசனங்களை

உருவாக்கினர். இதன் காரணமாக, கடைமடைக்குக் கிடைக்கவேண்டிய நீர் கிடைப்பதில்லை. தேவிசிறை அணையில் நீர் தேங்கி நிற்கும் பகுதி சுருங்கிவிட்டது. மழைக் காலத்தின்போது, 5 அடி உயரத்துக்கு நீர் செல்லும். தேவிசிறை அணையிலேயே வெள்ளக் குறி (Flood Mark) உள்ளது. நல்ல மழை பெய்தால், மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
  
தேவிசிறை அணை தொடர்பாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, முதல்வரின் தனிப்பிரிவு என அனைவரிடமும் புகார் அளித்துள்ளோம். ஆனால், தற்போதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. முன் உதாரணமாக இருக்கும், அணையை அனைவரும் சேர்ந்து கெடுத்துவிட்டோம். அரசுத்துறைகள் மட்டுமல்லாமல், பொது மக்களுக்கும் அணைகள் குறித்த பொறுப்புணர்வு வேண்டும். நமது முன்னோர்களின் கட்டடக்கலை, நீர் மேலாண்மை, கொடை மற்றும் நீதிக்குச் சாட்சியாக உள்ள இந்த அணையை, பாதுகாப்பது மட்டுமல்லாமல், அடுத்தத் தலைமுறைக்கு கொடுப்பதும் நமது கடமையே. எனவே, தேவிசிறை அணையை மீட்டு, பராமரித்து, அதை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்" என்றார் உறுதியாக.

வெள்ளக் குறி (Flood Mark)

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம், "பாலம் கட்டியது நெடுஞ்சாலைத்துறை, குப்பை கொட்டுவது பேரூராட்சி. அதற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை. குப்பை கொட்டுவது தொடர்பாக, நாங்களே மேலிடத்துக்குப் பலமுறை புகார் கடிதம் அனுப்பியிருக்கிறோம். அரசு நிதி ஒதுக்கினால், அணையை நாங்கள் பராமரிக்கிறோம் " என்றனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். நாம் முதலில் தொடர்பு கொண்ட ஆர்.ஐ, "சார் அது நம்ம லிமிட் இல்ல" என்று கூறி மற்றொரு ஆர்.ஐ நம்பரைக் கொடுத்தார். அந்த ஆர்.ஐ, "சார் இது சம்பந்தமா நான் ஏதும் சொல்ல முடியாது. நீங்க ஏ.டி-க்கிட்ட கேளுங்க" என்று ஏ.டி நம்பர் கொடுத்தார். ஏ.டி-யை தொடர்பு கொண்டோம். "நீங்க சொன்னது சம்பந்தமா விசாரிக்கறேன் சார். எதுக்கும் எஸ்.இ கிட்ட ஒரு வார்த்தை கேட்டுருங்க" என்று கூறி அவரது நம்பரைக் கொடுத்தார். அடுத்த அழைப்பு எஸ்.இ-க்கு.. "சார் இப்படி ஒரு பிரச்னை இருக்கறதே நீங்கச் சொல்லித்தான் தெரியும். நான் என்ன, ஏதுனு விசாரிச்சுட்டு கூப்டறேன்" என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். 

அணையின் கரையில் இருக்கும் குப்பை கிடங்கு

தேவிசிறை மட்டுமல்ல, நொய்யல் முழுவதுமே முறையான பராமரிப்பு இல்லை. அண்மையில் தேவிசிறை அணைப் பகுதி அருகில் காலாவதியான சாக்லெட் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இது குறித்து பேரூர் பஞ்சாயத்து நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டோம்.. "சார் நாங்க பஞ்சாயத்து லிமிட்டுக்கு உட்பட்ட இடத்துலதான் குப்பை கொட்றோம். நீங்க இடத்த தெளிவா சொல்லுங்க" என்றனர். நாம் அனைத்தையும் சொன்ன பிறகு, "சரி சார் பார்க்கறோம்" என்று இணைப்பைத் துண்டித்தனர்.

தமிழக அரசு புதிதாக ஒன்றும் செய்யவேண்டாம். நமது முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதையறிந்து, அதைப் பின்பற்றினாலே, தண்ணீருக்கு அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை வராது.