Published:Updated:

ஒரு வயது குழந்தைகூட உறுப்பினராகலாம்... ‘மய்யம்’ இணையதளத்துக்கு ஒரு விர்ச்சுவல் விசிட்! #Maiam

ஒரு வயது குழந்தைகூட உறுப்பினராகலாம்... ‘மய்யம்’ இணையதளத்துக்கு ஒரு விர்ச்சுவல் விசிட்! #Maiam
ஒரு வயது குழந்தைகூட உறுப்பினராகலாம்... ‘மய்யம்’ இணையதளத்துக்கு ஒரு விர்ச்சுவல் விசிட்! #Maiam

வெறும் 43 விநாடிகள் மட்டுமே ஓடுகிறது அந்த வீடியோ. கமல் அமர்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது மகிழ்ச்சியாக இருப்பவர்கள், அரசியல் மற்றும் நாட்டு நடப்பில் அதிருப்தி அடையாமல் இருப்பவர்கள், இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் என்கிறார். கிளம்புங்கள் என்று துரத்துகிறார். அப்படி என்னதான் சொல்லப்போகிறார் என்ற ஆர்வத்தில் நிச்சயம் அனைவரும் காத்திருப்பார்கள். "காத்திருக்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் நம் கட்சி. வாருங்கள் களத்திற்கு!" என்று கூறிவிட்டு 'மக்கள்  நீதி மய்யம்' என்ற தன் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று உறுப்பினராக பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். கமல் ரசிகர்களை, மக்களை தன் கட்சியில் உறுப்பினராக்கிக் கொள்ள விரிகிறது 'maiam.com'. கட்சிக் கொள்கைகள் உட்பட அனைத்து அரசியல் பார்வைகளையும் ஓரங்கட்டிவிட்டு, டெக்னிக்கலாக இந்த இணையதளம் எப்படியிருக்கிறது என்று பார்ப்போமா?

புதிய இணையதளமான இது, ஏற்றுக்கொள்ளும்படியான வேகத்தில் முழுவதுமாக லோடாகி நிற்கிறது. மொத்த தளமும், கம்ப்யூட்டர்களில் மட்டும் பயன்படுத்துவது போல இல்லாமல், அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஏற்றவாறு optimize செய்திருப்பது பலம். ஏனென்றால், தற்போது எல்லாம், கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களைவிட, ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துபவர்களே அதிகம். அடுத்து, பொதுவாக முகப்பு பக்கங்களில், நிறுவனத்தின் லோகோ மிகவும் பெரியதாக காட்டப்பட்டிருக்கும். அரசியல் கட்சி ஆனபோதிலும் இங்கே 'மக்கள் நீதி மய்யம்' என்ற லோகோ மிகவும் சிறியதாகவே இருக்கிறது. பொதுவாக எல்லா இணையதளத்திலும் இருக்கும் 'menu' இதில் இல்லை. 'Join Party' என்ற லிங்க் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாகவே, இது ஒரு பக்க இணையதளம் மட்டுமே என்பதால் இப்படி வடிவமைக்கப்பட்டிருக்கலாம். கம்ப்யூட்டரில் ப்ரௌஸ் செய்யும் போது இது ஒரு பெரிய பிரச்னையாக படாது. ஆனால், மொபைல் வழியாகப் பயன்படுத்தும் போது, அவ்வளவு பெரிய பக்கத்தை 'ஸ்க்ரால்' (Scroll) செய்து கீழே வரை படிக்கும் பொறுமை இருக்குமா என்பது தெரியவில்லை. 

'Join Party' அல்லது 'எங்களுடன் இணையுங்கள்/Please Join Us' பட்டனை கிளிக் செய்தால் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியில் இணைவதற்கான விண்ணப்பம் நம் கண் முன்னே விரிகிறது. இந்த விண்ணப்பம் ஒரு தனிப் பக்கமாக விரிவதால், மீண்டும் முகப்பு பக்கத்திற்கு செல்ல 'back' பட்டனைதான் அழுத்த வேண்டியுள்ளது. வேறு லிங்க்குகள் இல்லை. இதற்குப் பதிலாக, இணையதளத்தின் கடைசியில் இன்னொரு முறை கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தோடு இதை இணைத்திருந்தால் டேட்டா விரயமாவதைத் தடுத்திருக்கலாம். விண்ணப்பத்தில் நம் பெயர், மின்னஞ்சல், மொபைல் எண், போன்ற அத்தியாவசிய தகவல்களுடன் பிறந்த தேதி, அஞ்சல் குறியீட்டு எண், மாவட்டம் போன்றவை கேட்கப்படுகின்றன. வித்தியாசமாக, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தையும் இதில் இணைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், பாண்டிச்சேரிக்குச் சொந்தமான மாஹி  (Mahe) மற்றும் ஏனாம் (Yanam) ஆகியவற்றைத் தமிழக மாவட்டங்களாக இதில் இணைத்திருக்கிறார்கள். மாஹி, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தின் நடுவே இருக்கிறது. ஏனாம், ஆந்திராவில் கிழக்கு கோதாவரியில் அமைந்திருக்கிறது. வெவ்வேறு மாநிலங்களில் இருந்தாலும், இரண்டுமே பாண்டிச்சேரியின் கீழ் வருபவை. இந்த அளவு நுணுக்கத்துடன் செயல்பட்டவர்கள் ஒரு சிறிய விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

'பிறந்த தேதி' என்னும் இடத்தில், இன்று என்ன தேதியோ அது முன்னரே கொடுக்கப்பட்டு இருக்கிறது. நாம் ஒருவேளை, நம் பிறந்த தேதியைக் கொடுக்காமல் விட்டாலும் நம் தகவல்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அது மட்டுமா? நேற்று பிறந்த குழந்தை முதல், பதினெட்டு வயது ஆகாதவர்கள் கூட இதில் பதிவு செய்யலாம். இந்தப் பிரச்னையை சற்று கவனித்து, பதினெட்டு வயதானவர்களின் விவரங்களை மட்டுமே ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைத்துக் கொண்டால் நலம். 'தமிழ்நாட்டின் குடிமகன்' (Resident of Thamizh Nadu) என்ற ஆப்ஷனை 'டிக்' செய்யுமாறு வைத்திருக்கிறார்கள். அதை 'டிக்' செய்தால்தான் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். ஒருவேளை வெளிநாட்டு வாழ் தமிழர் அல்லது வேறு மாநிலத்தவர் என்றால் அதை 'டிக்' செய்யாமல் பதிவு செய்யலாம்.

மொபைல் நம்பர் கட்டாயம் கொடுக்க வேண்டும். பின்பு நமக்கு அனுப்பப்படும் OTP எண்ணைப் பதிவு செய்தால்தான், நம் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் போலி விண்ணப்பங்களைச் சுலபமாக நீராகரித்துவிட முடியும். இணையதளத்தில் இருக்கும் வரிகளில் 'தமிழ் நாடு' என்பதை வழக்கம் போல 'Tamil Nadu' என்று எழுதாமல், 'Thamizh Nadu' என்று உச்சரிப்புக்கு ஏற்றவாறு எழுதி இருப்பது பாராட்டப்பட வேண்டியது. ஆனால், நிறுத்தற்குறிகள், தேவையற்ற இடங்களில் இடைவெளி போன்றவற்றை சற்று கவனித்திருக்கலாம். கீழே, கட்சி பற்றிய இரண்டு வீடியோக்கள், மற்றும் கமல்ஹாசனின் டிவிட்டர் கணக்கின் ஃபீட் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, கட்சி அறிவிப்பு நாள் குறித்த தகவல்கள் தவிர, வேறு எதுவும் கொடுக்கப்படவில்லை. கமல் கூறியது போல, கட்சியின் கொள்கைகள், கமல் மதுரையில் ஆற்றிய உரை போன்றவற்றை விரைவில் சேர்க்கவேண்டும். கட்சியின் கொள்கைகள் என்னவென்றே தெரியாத நிலையில், மக்கள் தொண்டர்களாக இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது எந்த அளவு சரி என்பது புரியவில்லை. அந்த வகையில், 'மக்கள் நீதி மய்யம்' விரைவாகக் காய்களை நகர்த்த வேண்டும்.

குறிப்பிட்ட ஒன்றிரண்டு குறைகளை தவிர, மொத்தத்தில் maiam.com நன்றாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  

அடுத்த கட்டுரைக்கு