Published:Updated:

இவர்கள் மனதில் இப்படித்தான் இடம்பிடித்திருக்கிறார் ஜெயலலிதா! #Jayalalithaa

இவர்கள் மனதில் இப்படித்தான் இடம்பிடித்திருக்கிறார் ஜெயலலிதா! #Jayalalithaa
இவர்கள் மனதில் இப்படித்தான் இடம்பிடித்திருக்கிறார் ஜெயலலிதா! #Jayalalithaa

பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி, அரசியல் பகடிகளைத் கடந்து, எதிர் சிந்தனைவாதிகளின் மனதிலும் முக்கிய இடம் பெற்றிருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர் மீது தொடர் விமர்சனக் கணைகளை ஏவியவர்களே ஜெயலலிதாவை பாராட்டவும் செய்திருக்கின்றனர். ஒருசிலருக்கு மட்டுமே அது சாத்தியமாகியிருக்கிறது. அந்த ஒருசிலரில் ஜெயலலிதா தவிர்க்கமுடியாதவர். அவரைப் பற்றி அரசியல் ஆளுமைகள் முதல் கலைஞர்கள் வரை பகிர்ந்துகொண்ட கருத்துகள் இவை...

"அரசியல் சார்ந்து எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், தனது கட்சியின் நலனுக்காக துணிச்சலோடு காரியங்களை முன்னெடுத்தவர் ஜெயலலிதா என்பதில் எவருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது. துணிச்சலுக்கு பேர் பெற்ற பெண்மணிதான் ஜெயலலிதா." - கருணாநிதி

"விடா முயற்சிற்கும்,தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாய் திகழ்பவர் ஜெயலலிதா."- ஜி.கே.மூப்பனார்

"வலுவான, தைரியமான, திறமையான, மக்களின நண்பராக கவர்ந்திழுக்கும் தலைவர்தான் ஜெயலலிதா."-மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்)

"சுறுசுறுப்பு மற்றும் துணிச்சலின் அடையாளமாகத் திகழ்ந்தார் ஜெயலலிதா. மதிநுட்பமும், அறிவாற்றலும் கொண்டவர். பெண்களுக்கு அதிகாரமளித்தலின் உருவமாகத் திகழ்ந்தவர். சளைக்காமல் பணியாற்றக்கூடிய உணர்வு மிக்கவர். ஏழை மக்களுக்காகவும், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்காகவும் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்." - வித்யாசாகர் ராவ் (முன்னாள் தமிழக பொறுப்பு ஆளுநர்)

"மிகவும் போற்றுதலுக்குரிய தலைவர். தமிழகத்திற்கு மட்டும் ஜெயலலிதா தலைவர் இல்லை. இந்தியா முழுமைக்குமான தேசிய தலைவர் அவர்." - ராகுல் காந்தி

"எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதில் விடாப்பிடியாக இருந்து, நிறைவேற்றுவதில் தன் உணர்வை எந்த அளவுக்கு அழுத்தமாக வெளிக்காட்டியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே."- மு.க.ஸ்டாலின்

"கோடான கோடி மக்களின் அன்புக்குரியவராய் தாய்மார்களின் பேரன்புக்கு பாத்திரமானவராய் சாதி, மத, எல்லைகளைத் தாண்டி அனைவராலும் மதிக்கப்பட்டவர் ஜெயலலிதா." -திருநாவுக்கரசர் (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்)

"கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மிக மேலாதிக்க அரசியல் ஆளுமை பெற்றவர் ஜெயலலிதா. ஒரு கடின சமரசத்திற்கு இடமில்லாத பாணியில் அரசியலில் ஈடுபட்டவர் அவர்" -ப.சிதம்பரம்

"மிகுந்த துணிவும், தன்னம்பிக்கையும் கொண்ட அவர் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதைத் திறம்பட எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தவர். அவரை தமிழகத்தின் இந்திராகாந்தி என்றால் அது மிகையாகாது." - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

"பகைவென்று சாதனைகளைப் படைத்த ஒரு மகத்தான தலைவராக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பெருமைக்குரியவர் ஜெயலலிதா. சாதி, மதம், மொழி, இனம் போன்ற வளையங்களை மீறி அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்கிற பேராற்றலைக் கொண்டவராக விளங்கியவர். கட்சியையும், கட்சித் தொண்டர்களையும், தமிழக மக்களையுமே தனது குடும்பமாகக் கருதி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்." - தொல்.திருமாவளவன்

"இந்திய அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை இந்திராகாந்திக்கு அடுத்து நிரூபித்த தலைவர் ஜெயலலிதா ஆவார். அறிவுக்கூர்மையும், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒருமுறை கூறியவுடன் அதை முழுமையாக புரிந்து கொள்ளும் திறனும் பெற்றவர் ஜெயலலிதா." -அன்புமணி ராமதாஸ்

"127 திரைப்படங்களில் தாரகையாக மின்னிய ஜெயலலிதா, ஓய்வு அறியாத படிப்பாளியாகத் திகழ்ந்தவர்." -வைகோ

"ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர், வென்று காட்டியவர். அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்ட முடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால், எந்த நிலையிலும் அவர் தன் கர்வப் பெருமையைக் கரைத்துக் கொண்டதில்லை." -வைரமுத்து

"மாநிலங்களின் உரிமை என்று வருகிறபோது, அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. தான் டெல்லிக்குச் செல்லாமல், டெல்லியை இங்கு வரவைத்தவர் ஜெயலலிதா." -கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

"தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த தலைவி. ஒடுக்கப்பட்ட பெண்களின் நம்பிக்கைக்கு அடையாளமாக திகழ்ந்தவர். அரசியல் சூழலில் அவர் எடுத்த ஒவ்வொரு முடிவும் வரலாற்றில் சிறப்பானது." -சீமான் (நாம் தமிழர் கட்சி)

"தமிழ்நாட்டின் வாழ்வுரிமை பிரச்னைகளிலும், தமிழினத்தின் உரிமை பிரச்னையிலும் அயராது குரல் கொடுத்தவர். நம் காலத்தே வாழ்ந்த வீரமங்கை வேலுநாச்சியாராக திகழ்ந்தவர். உலகத் தமிழினத்தின் பெருநம்பிக்கை ஆலமரமாகத் திகழ்ந்தவர்." - தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி)

"தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே பணியாற்றியவர். குறிப்பாக தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவற்றுக்கு நீதிமன்றத்தின் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா."- ஜி. கே.வாசன்

"துணிச்சல் மிக்க, மனிதாபிமானமிக்க தலைவர். ஒரு பெண் அரசியல்வாதியாக முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபமான காரியம் அல்ல. அடித்தட்டு மக்களின் தலைவியாக இருந்தவர்." - தமிழிசை சௌந்தரராஜன்

"வரலாற்றில் பதிக்கவேண்டிய ஒரு அடையாளம், எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் தனித்துவமாக நின்று, அரசியலில் போராடி வெற்றி பெற்ற ஒரு பெண்சிங்கம் ஜெயலலிதா." - இயக்குநர் பாரதிராஜா

"தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தைரியமான முடிவுகளை எடுப்பதற்கும், எந்த ஒரு சூழ்நிலையை சமாளிப்பதற்கும் ஒரு மிகப்பெரிய துணிச்சலையும், தைரியத்தையும் கொடுத்தவர் ஜெயலலிதா." - நடிகர் விவேக்

"சிறியவர் முதல் தாய்மார்கள் வரை என அனைவரின் இதயங்களிலும் இடம்பிடித்தவர் ஜெயலலிதா. தமிழக மக்களின் உணர்வுகளோடு கலந்தவர்." - டி. ராஜேந்தர்

"ஒரு வைரத்தோட மதிப்பு எவ்வளவு அதிகமோ, அதனை விட மதிப்பு மிக்கவர் ஜெயலலிதா." - நடிகர் கார்த்திக்

"மக்களை பொறுத்தவரைக்கும் 'எம்.ஜி.ஆர்' மூன்றெழுத்து, 'அம்மா' மூன்றெழுத்து. இவர்கள் மண்ணில் புதைக்கப்படுபவர்கள் அல்ல, மக்கள் மனதில் புதைக்கப்படுபவர்கள்." - இயக்குநர் கே.பாக்யராஜ்