Published:Updated:

`மறைவாகச் செய்யும் தர்மம், கடவுளுக்குத் தெரியவரும்!’ - தவக்கால மேன்மை! #LentDays

`மறைவாகச் செய்யும் தர்மம், கடவுளுக்குத் தெரியவரும்!’ - தவக்கால மேன்மை! #LentDays
`மறைவாகச் செய்யும் தர்மம், கடவுளுக்குத் தெரியவரும்!’ - தவக்கால மேன்மை! #LentDays

கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பது அருள் காலம். கடவுளின் அன்பை அதிகமாக அள்ளிப் பருகும் நாள்கள் அவை. மனிதன் தன்னுடைய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் கடவுளைவிட்டு வெகுதூரம் சென்றிருந்தால் அதை உணர்ந்து, மனம் வருந்தி, மனம் திருந்தி கடவுளிடமே திரும்பி வருவதற்கான காலமாக தவக்காலம் அமைந்திருக்கிறது. இந்தத் தவக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் ஐந்து முக்கியச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறார்கள். அவை, தர்மம், ஜெபம், நோன்பு, மனம் வருந்துதல், மனம் மாறுதல். இந்தச் செயல்பாடுகள் தனிமனிதர் ஒருவரை இறைவனிடம் மீண்டும் அழைத்துச் செல்ல உதவுகின்றன.

தர்மம் செய்வது இறைவனிடமிருந்து வரும் ஓர் அற்புத மதிப்பீடு. இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்துகொள்வது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. தர்மம் செய்வதைப் பற்றி இயேசு `உங்களது வலது கை செய்வது உங்களின் இடது கைக்குத் தெரியாதிருக்கட்டும். மறைவாகச் செய்யும் தர்மம் பற்றி கடவுளுக்குத் தெரியவரும்' என்று கூறுகிறார். இன்றைய நவீன உலகில் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளவும், தர்மம் செய்யவும் தயாராக இல்லை. அப்படியே தர்மம் செய்தாலும், அதைப் பற்றி தம்பட்டம் அடிப்பவர்களாகவே நாம் இருக்கிறோம்.

 `பசியோடு இருப்பவருக்கு உணவும், நோயுற்றோருக்கு ஆறுதல் அளிப்பதும்' தர்மம் செய்வதையே குறிக்கிறது. தன்னுடைய தனிப்பட்ட திறமைகளை திறமை இல்லாதவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் ஒருவிதமான பகிர்தலே. எனவே, ஏழைக்குச் செய்யும் எந்தவொரு சிறு உதவியும், அது கடவுளுக்கே செய்த உதவியாகவே கருதப்படும்.

நோன்பு இருத்தல் எல்லா மதங்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின்போது ஒருவேளையோ அல்லது இரண்டுவேளைகளோ உண்ணாமல் இருந்து இறைவனைக் கண்டுகொள்ள முயற்சியெடுக்கிறார்கள். இயேசுவும் பாலைவனத்தில் 40 நாள்கள் தனியாக இருந்து நோன்பு கடைப்பிடித்து, ஜெபத்தில் ஈடுபட்டார் என்று புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். 

நோன்பு இருத்தல் என்பது பசியோடு இருப்பது மட்டுமல்ல. மாறாக, தான் விரும்பி உண்ணும் உணவு வகைகளையும், தீய பழக்க வழக்கங்களான குடி, புகைத்தல் போன்றவற்றையும் ஒதுக்கி வைப்பது. நோன்பு இருக்கும்போது உடல் வாடும். பசியின் வலியை உணர முடியும். பசியோடு உறங்கச் செல்பவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதன் வழியாக பசியோடு அழும் ஏழைகள் மத்தியில், அழுதுகொண்டிருக்கும் இறைவனைக் கண்டுகொள்ள முடியும். அதுதான் தவக்காலம் செய்யும் ஒரு மாபெரும் அற்புதம்.
ஜெபம் செய்வது என்பது தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் செய்யும் இன்னொரு முக்கியமான செயல்பாடு. `மற்ற நாள்களில் ஜெபம் செய்வதில்லையா?’ என்ற கேள்வி எழலாம். மற்ற நாள்களைவிடச் சிறப்பான நேரம் ஒதுக்கி, பல்வேறு ஆலயங்களுக்கு நடந்தே சென்று ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதாவது, இயேசுவுடன் கூடுதல் நேரம் ஒதுக்கி ஜெபம் செய்யும்போது இயேசுவின் விழுமியங்கள் ஆழமாக நம்மில் பதியும். உதாரணமாக, இயேசு கொண்டிருந்த கீழ்ப்படிதல், ஏழைகளின் மீதான பரிவிரக்கம், பாவிகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல், தொழுநோயாளர்களைத் தொட்டுக் குணப்படுத்துதல், பகிர்வு மனப்பான்மை, பாரபட்சமற்ற தன்மை... எல்லாம் நமக்குள்ளும் வரும். மேலும், `இவர் இறைமகனாக இருந்தும் ஏன் பாவப்பட்ட மனித உடல் எடுத்து சிலுவைச் சாவை ஏற்க வேண்டும்?’ என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். இந்த மண்ணுலகில் உள்ள எல்லா மனிதர்களையும் நிபந்தனையின்றி அன்பு செய்தார் என்ற உண்மையும் ரகசியமும் புரியும்.

கிறிஸ்தவர்கள் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துதல் இந்த தவக்காலத்தில் அதிகமாக நடைபெறுகிறது. தன்னுடைய பாவ மனநிலைகளை ஒவ்வொன்றாக உணர்ந்து பார்த்து, அதன் ஆணிவேரைக் கண்டுபிடித்து அதற்காக மனம் வருந்துவது முதல் கட்டம். இரண்டாவதாக, பாவம் செய்வதற்கான சூழ்நிலைகளை ஆராய்ந்து எந்தளவுக்குக் கடவுள் கொடுத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை அறிவது. மேலும், நாம் செய்வது பாவம் என்பது அறியாமல்கூட இருந்த தருணங்களை உணர்வது. இந்த நவீன காலத்தில் பிறரின் பெயரைக் கெடுப்பது, பிறரின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது, நல்ல உறவுகளை உடைப்பது, மன்னிக்க மறுப்பது, கடவுள் மீதுள்ள நம்பிக்கையை இழப்பது, உடல் இன்பத்துக்கு அழுத்தம் தருவது போன்ற பாவங்களில் விழுந்துகிடக்கிறார்கள். இதையெல்லாம் உணர்ந்து பார்ப்பதன் மூலம், அதற்காக மனம் வருந்தவும், மனம் மாறுவதற்கான தொடக்கப் புள்ளியை பிடிக்க முடியும் என்பதிலும் ஐயமில்லை.


மனம் மாறுதல் என்பது இந்த தவக்காலத்தில் ஏற்படுகிற முக்கியமான நேர்மறைத் தாக்கம். நான் மனம் மாறிவிட்டேன் என்று கடவுளிடம் மார்தட்டிக் கூறுவதற்கல்ல. அதைச் செயல்பாடுகளில் காட்ட வேண்டும். அன்பு செய்வதிலிருந்து தவறி வெகுதொலைவு சென்றிருந்தால், அன்பைச் செயல்களில் காட்ட வேண்டும். மன்னிக்க முடியாமல் இறுமாப்புடன் இருந்தால் அதிலிருந்து மாறி மற்றவர்களை மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும். இதைத்தான் இயேசு, "பழியை அல்ல; நான் இரக்கத்தையே விரும்புகிறேன்" என்று கூறுகிறார். ``எனக்கு காணிக்கை செலுத்த வரும்போது, உன் சகோதர சகோதரிகளோடு மனத்தாங்கல் இருந்தால், அதை முதலில் சரிசெய்துவிட்டு பின்னர் வந்து காணிக்கை செலுத்து’’ என்று கூறுகிறார். எனவே, மனம் மாறுதல் என்பது சகமனிதரோடும், இயற்கையோடும் ஒப்புரவு ஆக வேண்டும். அப்போதுதான் இறைவனோடு உள்ள உறவு பூப்போல மலரும். இதைத்தான் தவக்காலம் நமக்கு உணர்த்துகிறது.