என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

மாறும் வாழ்க்கை... மாறாத கொசுக்கள்!

கவிஞர் மனுஷ்யபுத்திரன்

மாறும் வாழ்க்கை... மாறாத கொசுக்கள்!
மாறும் வாழ்க்கை... மாறாத கொசுக்கள்!

''அபிராமபுரம்... தன்னைச் சுற்றி உள்ள பிரபலமான பல பகுதிகளுக்கு இடையே சிக்கிக்கிடக்கும் ஒரு துண்டுப்பிரதேசம். ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, மைலாப்பூர் ஆகியவற்றின் நீட்சியாகத்தான் இந்தப் பகுதி இருக்கிறது. முன்பு சினிமாகாரர்கள் நிறைய வசித்த, மிகவும் அமைதி சூழ்ந்த இடமாக இருந்திருக்கிறது. பிரமாண்டமான தனி பங்களாக்கள், வீட்டைச் சுற்றி பரந்த காலியிடங்கள் என இருந்த இந்த இடத்தில், இப்போது ஏராளமான அடுக்கு மாடிக் குடியிருப்புகள் வந்துவிட்டன. ஒவ்வொரு அடுக்கு மாடிக் குடியிருப்பு வரும்போதும் இந்த இடம் மேலும் இறுக்கமாவது போன்ற ஓர் உணர்வு!'' - அபிராமபுர வாழ்க்கையைத் தனக்கே உரிய கவித்துவத்தோடுச் சொல்லத் தொடங்கினார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

##~##''மூன்று விதமான வாழ்க்கை முறைகள் வெகு அருகில் நீடித்திருப்பதற்கு இந்த இடம் ஓர் உதாரணம். மந்தைவெளி மத்திய தர மக்களின் வாழ்விடம். அதன் தெருக்கள் எப்போதும் கலகலப்பாக இருக்கும். நெருக்கமான வீடுகள் ஜன நடமாட்டத்தை தெருவில் அதிகரிக்கச் செய்யும். சிறுசிறு உணவகங்கள், டீக்கடைகள், தெருவில் காய்கறி விற்பவர்கள் என எப்போதும் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

பக்கிங்ஹாம் கால்வாயை நெருங்கினால் சேரிப் பகுதி தொடங்குகிறது. பள்ளிக்குப் போகாமல் சுற்றிக்கொண்டு இருக்கும் குழந்தைகள், நைட்டி யோடு தண்ணீர் எடுத்துச் செல்லும் அல்லது டீக்கடையில் நின்றுகொண்டு இருக்கும் பெண்கள், வரிசையாக இருக்கும் அடகுக் கடைகளில் ஏதோ ஒரு லால்சந்திடம் பேரம் பேசிக்கொண்டு இருக்கும் எளிய முகங்கள், 'அரசியல் பேச வேண்டாம்’ என்று போர்டு தொங்கும் டீக்கடைகள், பவானி அம்மன் கோயில், வரசக்தி விநாயகர், ராஜ விநாயகர், ஐஸ்வர்ய விநாயகர், புனித இளைப்பாறி மாதா ஆலயம் ஆகியவற்றைத் தாண்டி சில நிமிட நடையில் அபிராமபுரத்தின் பணக்கார அமைதி தொடங்குகிறது. காலையில் சாரைசாரையாக வீடுகளை நோக்கிச் செல்லும் வீட்டு வேலைக்காரப் பெண்களையும் வீடு களைவிட்டு நாய்களுடன் காலை நடைக்கு கிளம்பும் மனிதர்களையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம்.

மாறும் வாழ்க்கை... மாறாத கொசுக்கள்!

இந்தப் பகுதிக்கு நான் குடியேறிய சமயத்தில்தான் மந்தைவெளி ரயில் நிலையக் கட்டு மானப் பணி தொடங்கியது. அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான குடிசைவாசிகள் அகற்றப் பட்டார்கள். ஒரு பிரமாண்டமான ரயில் நிலையம் பல வருடங்களாக எப்படி உருவெடுக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் பார்த்துவந்தேன். வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு வந்த ஏராளமான தொழிலாளர்கள் அந்த ராட்சதனை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகத் தூக்கி நிறுத்தும் அதிசயம் ஓர் அனுபவமாக இருந்தது. ரயில் நிலைய வேலைகள் முடிந்த பிறகு அவர்கள் கூட்டமாக மறைந்துபோனார்கள். மந்தைவெளி ரயில் நிலையம் அந்தப் பகுதியின் தோற்றத்தையே மாற்றியது. எந்நேரமும் ஏராளமான மக்கள் நுழைந்து வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். நான் மனம் அமைதி யற்றுத் தவிக்கும்போது எல்லாம் இந்த ரயில்நிலை யத்தின் படிக்கட்டுகளில் உட்கார்ந்திருப்பேன்!

அபிராமபுரவாசிகளின் பெரிய கொண்டாட் டம் அறுபத்திமூவர் உற்சவம். சின்ன சந்தோஷம் நாகேஸ்வரராவ் பூங்காவில் ஒரு நடை சுற்றிவிட்டு, திரும்பும்போது அப்படியே 'காபி வேர்ல்’டில் ஒரு காபி குடிப்பது.

புனித மேரி சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம் இந்தப் பகுதி இளைஞர்களின் கலாசார மையம். எந்நேரமும் கிரிக்கெட், வாலிபால், ஃபுட்பால் என்று எதையாவது ஆடிக்கொண்டு இருப்பார்கள். பறந்து வரும் பந்துகள் சில சமயம் சாலைகளில் செல்பவர்களைத் தாக் கும். நானே இரண்டு முறை அடி வாங்கி இருக்கிறேன்.

போக்குவரத்து தொடங்குவதற்கு முன்னதாக மரங்கள் சூழ்ந்த அபிராமபுரம் தெருக்களில் அலைவது மனதை மிகவும் இதமாக்கக் கூடியது. இன்னும் இடிக்கப்படாத பழைய வீடுகளைப் பார்க்கும்போது இந்தப் பகுதியில் இன்னும் ஏதோ ஒன்று மிச்சம் இருப்பதாகத் தோன்றும். அபிராமபுரம் ஒவ்வொரு நாளும் நிறைய மாறிக் கொண்டு இருக்கிறது. அன்றும் இன்றும் என்றும் மாறாமல் இருப்பது அதன் கொசுக்கள் மட்டும் தான்!''

  • இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘மனுஷ்ய புத்திரன் கவிதைகள்’ வெளியானபோது இவருக்கு வயது 16.
  • தேசிய அளவில் வழங்கப்படும் ‘சன்ஸ்கிருதி சம்மான்’ விருது பெற்ற ஒரே தமிழ்க் கவிஞர் இவர்!
     
  • இதுவரை எட்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டு இருக்கிறார்!
     
  • வரும் ஜனவரியில் அடுத்த கவிதைத் தொகுப்பு வெளி யாகிறது. 175 கவிதைகள் இதில் இடம்பெறுமாம்!

-சமஸ்
படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்